Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாம்பணையின் மீது பெருமாள் உணர்த்தும் தத்துவம் என்ன?

படைப்பதை அழிப்பதும், அழித்ததை ஒடுக்கிக் கொள்வதும் மீண்டும் பிரபஞ்சமாக விரிப்பதும் அவனின் இடையறாத லீலைகள். பாம்பணையின் மீது பள்ளி கொண்டருளும் எம்பெருமானின் நினைப்பில் உலகம் உருவாகிறது. யோக நித்திரையில் சர்வமும் ஒடுங்கி பிரளயம் வெளியாகிறது. பிரபஞ்சத்திலுள்ளதும், பஞ்ச பூதங்களாலும் பிணைக்கப்பட்டதுமான விஷயங்கள் தனித் தனியாக கிடந்தன. பிரிந்து கிடந்தவை மகாபிரளயத்தின்போது ஒன்றையொன்று விழுங்கி தனக்குள் கரைத்துக் கொள்கின்றன. மண்ணாகி சிதைந்ததை பிரளய ஜலம் கரைத்து விடுகிறது. அக்னி நீரை ஜீரணிக்கிறது. அக்னியை காற்று அணைத்து விடுகிறது. காற்று ஆகாயத்தில் ஒடுங்கும். ஆகாயமும் அழிந்த நிலை சூட்சுமமானது. அதுவே எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமாக விளங்குகிறது.

எல்லா ரூபங்களும் எங்கிருந்து தோன்றியதோ, எங்கு சென்று ஒடுங்குகிறதோ, எல்லா அழிவுக்குப் பிறகும் ‘சேஷம்’ என்று சொல்லும்படியான எதுவொன்று மிச்சப்படுகிறதோ அதற்கு ஆதிசேஷன் என்று பெயர். ‘சேஷம்’ எனில் மிச்சம், மீதி என்று பொருள். இங்கு ஆதி என்பதற்கு எப்போதும் இருக்கக் கூடியதுமான வஸ்து என்று பொருள்.

அந்த பாம்பணை என்ன அவனுடைய நித்திரைக்காக வைக்கப்பட்டுள்ள பொருளா என்ன. இல்லையே, அந்த ஐந்து தலை நாகமே மூலபிரகிருதி. அதாவது விருட்சத்தின் விதைபோல, சகல பிரபஞ்சத்தின் சூட்சும நிலையை தனக்குள்ளே தேக்கியிருக்கும் சொரூபமே ஆதிசேஷனாகும். வெளிப்பட வேண்டிய அண்ட, சராசரங்களுக்கும், ஜீவாத்மாக்களின் பூத சொரூபங்கள். அவையே ஐந்து தலை பாம்பாக காட்டப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றையும் தன்னிடத்தில் ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சாட்சி மாத்திரமாக விளங்குகிறான் நாராயணன்.

பாம்பணையின் மீது பள்ளிகொண்டருளும் இதை சச்சிதானந்தம் என்கிற சத்திய சொரூபமாகக் கொண்டால், பாகவதத்தில் இவனையே சேஷ சாயி என்றும், அனந்த பத்மநாபன் என்றும், அரங்கா என்றும் கொண்டாடுகிறார்கள், பாகவதர்கள். ஒரு மகாஞானியின் நிலையும் அதுதான். மகாவிஷ்ணுவாகவே மாறிவிட்ட நிலை அது. எனவே, அவனே மாயையை வலைபோலப் போடுகிறான். மீண்டும், வலையிலிருந்து விடுவித்தும் விடுகிறான். பக்தி உயர உயர தத்துவம் தானாகப் புரியும்.

யோக நித்திரையில் கிடந்த நிலையில் அவனுக்கு கருணை சுரக்கிறது. ஏன், தெரியுமா தன்னிடத்தில் ஒடுங்கியிருக்கும் ஜீவன்கள் மீண்டும் நாராயணனை அறிந்துகொள்ள, தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமே என தீராத கருணை உந்த கண் விழிக்கிறான்.

அந்த தாமரை கண்கள் ஒரு சுழல் சுழல பிரபஞ்சம் முழுதும் சர்வ வியாபியாகி விடுகிறான். நீங்கள், நான், அது, கங்கை, மலை, அவை.... என விரிகிறது. பிரம்மன் மகாவிஷ்ணுவின்

நாபியிலிருந்து தோன்றுகிறார்.

பிரளயத்தின் மையத்தே தான் எங்கிருக்கிறோம் என தேட ‘தப’ எனும் குரல் கேட்கிறது. தவம் செய். உனக்குள் தேடு என்றது. பிரம்மனும் தனக்குள் ஆழ எம்பெருமான் அவருக்குள்ளும் சயனித்துக் கிடந்தார். அதைப் பார்த்த பிரம்மன் பிரமித்தார். சங்கு சக்ர கதாதரனாக பெருமாள் விஸ்வரூபம் காட்டினார். வேத சொரூபமான பிரம்மா மிகுந்த ஸ்நேகத்தோடு நீங்கள் நினைத்தீர்கள், நான் வந்தேன் என்றார். எம்பெருமான் பிரபஞ்சப் படைப்பை தொடங்கு என்று ஆணையிட்டார். முதலில் தன்னிடமிருந்து நான்கு வேதங்களையும் கொண்டு பிரம்மா உலகைப் படைத்தார்.

கிருஷ்ணா