Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -9

இந்த உலகத்திற்குத் தமிழில் பூமி என்றும், வடமொழியில் ப்ருத் என்றும் பெயர். ப்ருத்வி என்றால் பூமி. ஆனால் பூமிக்கு ஏன் ப்ருத்வி என்ற பெயர் வந்தது? அதற்குப் பின்னால் மிக அழகான புராணக் கதை இருக்கிறது. விஷ்ணு புராணத்தில் ப்ருது மகாராஜாவின் சரித்திரமாக இந்தக் கதை சொல்லப்படுகிறது.

துருவனுடைய சரித்திரத்தை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?

அந்த துருவனுடைய வம்சத்தில் பல தலைமுறைகளுக்குப் பிறகு அங்கன் என்ற ஒரு அரசன் பிறந்தான். அவனுக்கு சுநீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு வேனன் என்ற மகன் பிறந்தான்.சுநீதா தாய்வழிப் பாட்டன் ஒருவன் தீயவனாக இருந்தான். அந்தத் தீய குணம் வேனனிடமும் எப்படியோ ஒட்டிக்கொண்டது. வேனன் அரசனானவுடன் அவனிடம் இருந்த தீய குணங்கள் அனைத்தும் வெளிப்படத் தொடங்கின. அரச பதவி கிடைத்தவுடன் அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

இந்த நாட்டில் என்னைத்தான் வணங்க வேண்டும். ரிஷிகள் யாகம் செய்யக்கூடாது. யாகம் செய்வதாக இருந்தால் என் பெயரில்தான் செய்ய வேண்டும்.”ரிஷிகள் அவனிடம் மிகவும் நிதானமாக எடுத்துச் சொன்னார்கள்.யாகங்களுக்கு அதிபதி மகாவிஷ்ணு. அவருக்குத்தான் யாகத்தின் பலன் சேர வேண்டும். ராஜா என்பவன் மகாவிஷ்ணுவின் அம்சமாக இருப்பதால், அந்த யாகத்தின் பலன் அரசனுக்கும் கிடைக்கும். ஆகவே உனக்காகத் தனியாக யாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் வேனன் அதைக் கேட்கவில்லை.நான் அரசன். எனக்கு மேலே வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள் சொல்லுகிற ஹரி யார்? சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? பஞ்ச பூதங்களும் அரசனுடைய உடம்பில் இருக்கின்றன என்று சொல் கின்றன அல்லவா? அப்படியானால் அந்தப் பஞ்ச பூதங்களும் என்னிடம் தானே இருக்கின்றன? பெண்கள் கணவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப் போல, நீங்கள் அரசனான என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.” என்று அவன் வாதிட்டான்.இங்கேதான் வேனனுடைய வீழ்ச்சி ஆரம்பமாகிறது.

அரச பதவி அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரம் அவனுக்குள் இருந்த அகங்காரத்தை அழிக்கவில்லை. மாறாக, அதை இன்னும் பெரிதாக்கியது.அரசன் என்றால் எல்லாவற்றுக்கும் மேலானவன் என்று நினைத்தான். தர்மத்துக்கும் மேலாகவும், இறைவனுக்கும் மேலாகவும் தன்னுடைய அதி காரத்தை வைத்துக் கொண்டான்.ரிஷிகள் இதை உணர்ந்தார்கள்.இவன் உயிரோடு இருந்தால் உலகத்துக்கே கஷ்டம் வரும் என்று தெரிந்து கொண்டு, தங்களுடைய பிரார்த்தனையின் வலிமையால் வேனனை அழித்தார்கள்.ஆனால், அதன் பிறகு இன்னொரு பிரச்னை ஏற்பட்டது.

அரசன் இல்லாத நாடாகிவிட்டது. அராஜகம் ஏற்பட்டது. காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை. கொள்ளையர்கள் மக்களைத் தொந்தரவு செய்தார்கள். மக்கள் பாதுகாப்பில்லாமல் தவித்தார்கள்.

அப்போது ரிஷிகள் வேனனுடைய உடம்பிலிருந்து ஒரு உருவத்தை உருவாக்கினார்கள். வேனன் உடலைத் துடைத்துத் தூய்மைப்படுத்திய போது, அவனது இடது தொடையிலிருந்து குள்ளமான, கருப்பான தோற்றமும், சிவந்த கண்களும் கொண்ட ஒரு மனித உருவம் வெளிப்பட்டது.

அவன் அச்சமடைந்து முனிவர்களிடம் ‘‘நான் என்ன செய்யட்டும்?” (நிஷீத - உட்கார்/அமைதியாக இரு) என்று கேட்டதால், அவனது சந்ததியினர் நிஷாதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேனனிடம் இருந்த தீ குணங்களும் பாவங்களும் இவர்களிடம் சென்று விட்டது. தர்மநெறி தவறிய கொடூர மன்னனான வேனனின் வலது கையை கடைந்தபோது பிருது தோன்றினான். வேனனின் தீய குணங்கள் நிஷாதனாக வெளிப்பட்டுவிட்டதால், பிருது முழுமையான தர்மவானாகவும் நற்குணங்கள் நிறைந்தவனாகவும் பிறந்தான். அந்த உருவம் அழகு, தேஜஸ், வீரியம் எல்லாம் கொண்டதாக இருந்தது.

வேனனுடைய உடம்பிலிருந்து ஒரு நல்ல மகன் தோன்றியதால் வேனனுக்கும் புண்ணியம் கிடைத்தது. அவன் சொர்க்கத்தை அடைந்தான் என்று புராணம் கூறுகிறது. ப்ருது மகாராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கடல்களும் நதிகளும் ரத்தினங்களைக் கொண்டு வந்து கொடுத்தன. பிரம்மாவும் ஆங்கிரசர் முதலான தேவரிஷிகளும் அவருக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள். அவருடைய வலது கையில் இருந்த சக்கர ரேகையைப் பார்த்த பிரம்மா, இவர் மகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர் என்று கூறினார். எல்லோரும் மகிழ்ந்தார்கள். தந்தையால் மக்கள் கஷ்டப்பட்டார்கள். இனி மகனால் மக்கள் சுகப்படுவார்கள்.

ப்ருது மகாராஜா பிறந்தவுடன் அவருடைய புகழ் எட்டுத் திக்குகளிலும் பரவியது. அவர் சத்தியம் பேசுபவராக இருந்தார். தானம் செய்பவராக இருந்தார். செய்யக்கூடாத செயல்களைச் செய்வதற்கு வெட்கப் படுபவராக இருந்தார். எல்லோரிடமும் நட்புடன் பழகினார்.பொறுமை கொண்டவராகவும், தேவையான இடத்தில் கண்டிப் பானவராகவும் இருந்தார். செய்ந்நன்றி மறக்காதவராகவும் இனிமையாகப் பேசுபவராகவும் இருந்தார். யாகங்களைச் செய்தார். மக்களின் நன்மைக்காக யாகசாலைகளை அமைத்தார். அவருடைய ஆட்சியில் நாடு மீண்டும் ஒழுங்குக்கு வரத் தொடங்கியது. ஆனால் ஒரு பெரிய பிரச்னை அவருக்கு முன்னால் இருந்தது.

வேனனின் ஆட்சிக்காலத்தில் தர்மம் அழிந்தது; யாகங்களும் வழிபாடுகளும்நின்றன. இதனால் பூமிதேவி தன் வளங்கள் (தானியங்கள், மூலிகைகள்) தவறானவர்களின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவற்றைத் தனக்குள்ளேயே ஒளித்துக்கொண்டாள்.அத்துடன், பூமிதேவி தாய்மையின் வடிவம். அநியாயக்கார மன்னன் வேனனின் கொடுங்கோன்மையாலும், உலகின் சீர்கேட்டினாலும் ஏற்பட்ட பாவத்தைத் தாங்க முடியாமலும், உயிர்களுக்குப் பாலூட்டும் தாயைப் போல வளங்களைச் சுரக்க வேண்டும் என்பதை உணர்த்த

பசுவின் வடிவம் கொண்டு மறைந்தாள்.

நாடு முழுவதும் வறண்டுபோயிருந்தது. மக்கள் பசியால் தவித்தார்கள். அவர்கள் ப்ருது மகாராஜாவிடம் சென்றுமுறையிட்டார்கள். ப்ருது மகாராஜா தன்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு பசுவின் வடிவம் கொண்ட அவளைப் (பூமாதேவி) பின்தொடர்ந்தார்.அப்போது பூமாதேவி அவரிடம் சரணடைந்தாள்.என்னுடைய வயிற்றில் எல்லா வளங்களும் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் என்னுள் ஜீரணமாகிவிட்டன. அவற்றை மீண்டும் வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு முறையை ஏற்படுத்த வேண்டும். தகுந்த கன்றைக்கொண்டு பால் கறந்தால், அந்தப் பாலின் மூலமாக நான் என்னுடைய வளங்களை மீண்டும் உலகத்துக்குக் கொடுப்பேன்.

ஆனால், அதற்கு முன்பு நிலம் மேடு பள்ளமாக இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கிடைக்கும் வளங்கள் வீணாகி விடும்” என்று கூறினாள். ப்ருது மகாராஜா அதன்படி செய்தார். பெரிய நிலப்பரப்புகளைச் சமப்படுத் தினார்.கிராமங்களையும் நகரங்களையும் அமைத்தார். மக்களுக்கு வாழ் வதற்கான வழிகளை உருவாக்கினார். பல்வேறு தொழில்களை ஏற்படுத்தினார். குடியிருப்புகளை அமைத்தார். விவசாயத்தை வளர்த்தார்.மக்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்.

பூமி மீண்டும் வளம் பெற்றாள்.பசுக்கள் பால் கொடுக்கத் தொடங்கின. விவசாயம் செழித்தது. நாடு செழிப்படைந்தது. இங்கே புராணம் ஒரு மிக அழகான குறியீட்டைப் பயன்படுத்துகிறது.

பூமி பசுவாக மாறுகிறாள்.ப்ருது மகாராஜா அவளிடம் இருந்து பாலை கறக்கிறார்.அந்தப் பால் என்பது வெறும் பால் அல்ல. பூமிக்குள் மறைந்திருக்கும் எல்லா வளங்களையும் குறிக்கும் ஒரு குறியீடு.ப்ருது மகாராஜா பூமியை வெறுமனே ஆட்சி செய்யவில்லை. அவளைப் பாதுகாத்தார். அவளுடைய வளங்களை வெளிக்கொண்டு வந்தார். மக்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்கினார்.

அதனால்தான் பூமாதேவி ப்ருது மகாராஜாவைத் தன்னுடைய தந்தையாகக் கருதினாள். ப்ருது மகாராஜாவால் காப்பாற்றப்பட்டதால் பூமிக்கு ப்ருதிவி என்ற பெயர் வந்தது என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.இந்தக் கதையை வெறும் புராணக் கதையாகப் பார்த்துவிட்டுப் போய்விட முடியாது. இதற்குள் மிகப்பெரிய அரசியல் தத்துவமும், சமூகச் சிந்தனையும் இருக் கிறது. முதலில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்படுகிறது.

மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு அரசன் வேண்டும். அந்த அரசன் நல்லவனாக இருக்க வேண்டும். மக்களை வழிநடத்த வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும். அரசன் இல்லாத நாடு காடாகி விடும். அரசன் இருந்தும் தர்மம் இல்லாத நாடும் காடாகிவிடும்.வேனன் இருந்தான். ஆனால், அவன் மக்களைக் காப்பாற்றவில்லை. அதனால் நாடு அழிந்தது. வேனன் இறந்தபிறகு அரசன் இல்லாமல் போனது.

அப்போதும் நாடு அழிந்தது.இதில்தான் ஒரு பெரிய உண்மை இருக்கிறது.அரசன் இருப்பது மட்டும் போதாது. நல்ல அரசன் இருக்க வேண்டும்.தர்மம் தவறிய நாட்டில் பூமியும் தன்னுடைய வளங்களை வெளிக் கொண்டு வராது என்பதுதான் அடுத்த குறியீடு.நாட்டில் ஒழுங்கு இருக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். விவசாயம் செய்ய வேண்டும். நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்க வேண்டும். தொழில்களை வளர்க்க வேண்டும். மக்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவற்றைச் செய்யாமல் ஒரு நாட்டை வெறுமனே ஆட்சி செய்து கொண்டிருந்தால் அந்த ஆட்சி அரசாட்சி அல்ல.

ப்ருது மகாராஜா இதைத்தான் செய்தார்.காடாகிக் கிடந்த நிலத்தை நாடாக்கினார். மேடு பள்ளமாக இருந்த நிலத்தைச் சமப்படுத்தினார். விவசாயத்தை உருவாக்கினார். குடியிருப்புகளை உருவாக்கினார். தொழில்களை உருவாக்கினார். மக்களுக்கு வாழ்வதற்கான வழிகளை உருவாக்கினார்.அதனால்தான் அவர் ராஜா என்று அழைக்கப்பட்டார்.ராஜா என்றால் மக்களை ஆள்பவன் மட்டும் அல்ல. மக்களை வாழ வைப்பவன்.மக்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்துபவனே ராஜா. அதனால்தான் ப்ருது மகாராஜாவின் வருகைக்குப் பிறகு பூமி வளம் பெற்றதாக புராணம் சொல்கிறது.

வேனனுடைய ஆட்சியில் பூமி தன்னுடைய வளங்களை மறைத்துக்கொண்டாள்.ப்ருதுவுடைய ஆட்சியில் அதே பூமி தன்னுடைய வளங்களைத் திறந்து கொடுத்தாள்.இந்தக் கதையின் மிக அழகான முடிவு என்ன தெரியுமா? பூமி ப்ருது மகாராஜாவைத் தன்னுடைய தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். ஒரு நாட்டை ஆளுகிறவன் அரசன். ஆனால், அந்த நாட்டில் வாழும் மக்கள் அவனைத் தந்தையாக உணரும்படி வாழ்பவனே உண்மையான அரசன்.மக்களுடைய பசியைப் போக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும். அப்படி மக்களுக்காகத் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறவனையே பூமி தன்னுடைய மகனாக ஏற்றுக் கொள்கிறாள்.

அதனால்தான் இந்த உலகத்துக்கே ப்ருத்திவி என்று பெயர் வந்தது. ப்ருது மகாராஜாவின் பெயரால் பூமிக்கு வந்த பெயர் அது.பூமி என்பது வெறும் மண் அல்ல. அது நம்மை வாழவைக்கும் தாய். அந்தத் தாயை பாதுகாத்து, அவளுடைய வளங்களை மக்களுக்குக் கொண்டு வந்து, மக்களை வாழ வைப்பவன்தான் உண்மையான ராஜா. இதுதான் ப்ருது மகாராஜாவின் சரித் திரம் நமக்குச் சொல்லும் மிகப்பெரிய செய்தி.

முனைவர் ஸ்ரீ ராம்