பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தவம்
பகுதி -10
பிருது மகாராஜாவின் காலம் முடிந்தது. அவர் சாதாரண அரசர் அல்ல. மக்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்வதே அரசனின் கடமை என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர். அவருடைய ஆட்சிக்குப் பிறகு, அவரது வம்சம் எப்படிச் சென்றது?
விஷ்ணுபுராணம் அந்த வம்சத்தைத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. பிருதுவுக்கு இரண்டு புதல்வர்கள். அந்தர்தானன், பாலி.அந்தர்தானனுக்கு சிகண்டினி என்ற மனைவியின் மூலம் பிறந்தவர் ஹவிர்தானன். ஹவிர்தானனுக்கும் அக்னி வம்சத்தைச் சேர்ந்த திஷணைக்கும் ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் முதல்வர் பிராசீனபர்ஹிஸ். இவர்தான் இந்தக் கதையின் முக்கியமான மனிதர்.
யாகங்களில் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் புல்லை அதன் நுனிகள் கிழக்கு நோக்கி இருக்குமாறு பரப்பியதால் அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாக விஷ்ணுபுராணம் விளக்குகிறது. பிராசீனபர்ஹிஸ் ஒரு பெரிய அரசர். அரசனாக இருந்ததோடு, பிரஜாபதி என்ற பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனிதர்கள் பெருக வேண்டும்.உலகம் உயிர்களால் நிறைய வேண்டும். அதற்காக அவர் பெரும் தவங்களை மேற்கொண்டார். அவரது வாழ்க்கையில் அரசாட்சியும் இருந்தது; யாகமும் இருந்தது; தவமும் இருந்தது.
அவருடைய வாழ்க்கையின் நோக்கம் தனக்காக அல்ல. தனக்குப் பிறகு உலகம் தொடர வேண்டும் என்பதே அவர் நோக்கம். அவர் கடுமையான தவத்தை முடித்த பிறகு, சமுத்திரத்தின் மகளான சவர்ணையை மணந்தார். அவர்களுக்கு பிறந்தவர்கள் பத்து புதல்வர்கள்.அவர்கள் அனைவரும் சேர்ந்து பிரசேதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வீரர்கள். வில்லாற்றலிலும் சிறந்தவர்கள். ஆனால் அவர்களுடைய உண்மையான சிறப்பு ஆயுதத்தில் இல்லை. தவத்தில் இருந்தது.
ஒருநாள் பிராசீனபர்ஹிஸ் தனது பத்து புதல்வர்களையும் அழைத்தார். “பிள்ளைகளே!பிரம்மா என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். உலகில் உயிர்கள் பெருக வேண்டும். மக்கள் பெருக வேண்டும். நீங்கள் அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும்.”பிரசேதர்கள் தந்தையின் வார்த்தையைக் கேட்டார்கள்.
“தந்தையே, நாங்கள் அதைச் செய்வோம்.ஆனால் அதை எப்படிச் செய்வது?” என்று கேட்டார்கள்.அப்போது பிராசீனபர்ஹிஸ் அவர்களுக்கு ஒரு முக்கியமான பதிலைச் சொன்னார்.“விஷ்ணுவை வழிபடுங்கள்.” அதைக் கேட்ட பிரசேதர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
உலகத்தைப் பெருக்க வேண்டிய பணிக்கு ஏன் முதலில் இறைவனை வழிபட வேண்டும்? பிராசீனபர்ஹிஸ் அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.“அறம் வேண்டுமா? செல்வம் வேண்டுமா? இன்பம் வேண்டுமா? மோட்சம் வேண்டுமா? எதை விரும்பினாலும் பரம்பொருளைச் சரணடைவதே வழி. அவனைத் தொழுது தொடங்கும் செயல் வெற்றி பெறும்.” என்று அவர் அறிவுறுத்துகிறார்.பிரசேதர்கள் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்று தவம் செய்யத் தொடங்கினர். ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வருடம், பத்து வருடம், இப்படி காலம் நகர்ந்தது.பத்தாயிரம் ஆண்டுகள் அவர்கள் நாராயணனை நினைத்து தவம் செய்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.
அவர்கள் வெறும் விருப்பத்துக்காக தவம் செய்யவில்லை.தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தவம் செய்தார்கள். இதுதான் இந்தக் கதையின் முதல் பெரிய வாழ்வியல் செய்தி.பெரிய பொறுப்பை ஏற்கிறவன், அதற்கேற்ற உள்ளத் தயாரிப்பையும் பெற வேண்டும். இன்று நாம் ஒரு வேலையைத் தொடங்குகிறோம். உடனே பலன் வேண்டும். ஒரு முயற்சி. ஒரு வெற்றி. ஒரு நாள் உழைப்பு. ஒரு நாள் பிரார்த்தனை.ஆனால் பிரசேதர்களின் கதை சொல்வது வேறு.பெரிய பலன்களுக்கு நீண்ட பொறுமை தேவை.அவர்கள் கடலுக்குள் இருந்தபோது, விஷ்ணுவைத் துதித்தனர். அவர்களுடைய துதி மிகவும் ஆழமானது.எல்லாச் சொற்களுக்கும் நிலையான ஆதாரமாக இருப்பவனே! உன்னை வணங்குகிறோம்.
எல்லாக் காரியங்களுக்கும் ஆதிகாரணமாக இருப்பவனே! வார்த்தைகளால் முழுமையாக எடுத்துச் சொல்ல முடியாதவனே! உன்னை வணங்குகிறோம்.நாம் எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு இறைவனைப் பற்றிப் பேசினாலும், அந்த வார்த்தைகள் அவரை முழுமையாகப் பிடிக்க முடியாது. அதே நேரத்தில் எல்லா வார்த்தைகளும் இறுதியில் சுட்டுவது அவனையே.“இறைவனை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று உபநிடதங்கள் கூறும் அதே சிந்தனை இங்கும் ஒலிக்கிறது. “காரியங்களுக்குக் காரணம்” என்ற கருத்தும் இந்தச் ஸ்லோகத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-
இனியறிந்தேன் காரணன் நீ, கற்றவை நீ,
கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ
நன்கறிந்தேன் நான்! (நான்முகன் திருவந்தாதி-96)
மற்றொரு முக்கியமான விஷ்ணு புராண ஸ்லோகம்
கார்யாணாம் காரணம் பூர்வம்... என்று தொடங்குகிறது.
எல்லாக் காரியங்களுக்கும் ஆதிகாரணம் நீயே. எல்லா வார்த்தைகளும் சுட்டிக்காட்டும் உயர்ந்த பொருளும் நீயே. எல்லா யோகங்களும் அடைய வேண்டிய பரம சித்தியும், உயர்ந்த இலக்கும் உன் திருவடிகளே. இந்த ஸ்லோகத்தில் ஒரு பெரிய வேதாந்தக் கருத்து அடங்கியிருக்கிறது:
உலகில் நாம் பார்க்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணங்களுக்கெல்லாம் பின்னால் இருக்கும் ஆதிகாரணம் இறைவன். அதனால் பிரசேதர்கள் “எங்களுக்கு ஒரு வரம் கொடு” என்று இறைவனை வேண்டவில்லை.“உலகத்தின் ஆதாரமே நீ; எங்கள் முயற்சியின் இறுதி இலக்கும் நீயே” என்று துதிக்கிறார்கள். இந்தச் ஸ்லோகம் பின்னாளில் வைணவ வேதாந்த விளக்கங்களில் முக்கியமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்த பிரசேதர்களுக்கு இறுதியில் திருமால் காட்சி தந்தார்.
அவர்களின் மனம் ஒரே இடத்தில் நாராயணனிடம். கருடன்மீது எழுந்தருளி வந்தார்.பிரசேதர்கள் தலை வணங்கினர்.
விஷ்ணு அவர்களிடம், “உங்களுக்கு என்ன வேண்டும்?”என்று கேட்டார்.அவர்களுக்கு வேண்டியது தனிப்பட்ட செல்வமல்ல. அரசாட்சியல்ல. அழியாத புகழல்ல. தந்தை கொடுத்த கடமையை நிறைவேற்றும் சக்தி. உயிர்கள் பெருக வேண்டும்.உலகம் தொடர வேண்டும். அதற்கான வரத்தை அவர்கள் பெற்றனர்.இங்கேயும் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம் இருக்கிறது. இறைவனிடம் கேட்பதிலும் மனிதனுடைய மனநிலை முக்கியம். எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்பது ஒரு நிலை. என்னால் உலகத்திற்கு என்ன கிடைக்கும்? என்று கேட்பது இன்னொரு நிலை. பிரசேதர்கள் இரண்டாவது நிலையைத் தேர்ந்தெடுத்தவர்கள்.
தவம் என்பது இறைவனிடம் நமக்குத் தேவையானதைப் பெறுவதற்கான முயற்சி மட்டும் அல்ல. தவம் செய்துகொண்டே போகும்போது, “எனக்கு என்ன வேண்டும்?” என்ற கேள்வி மாறி, “உண்மையில் எது வேண்டும்?” என்ற கேள்வி பிறக்கிறது.பிரசேதர்களுக்கும் அதுதான் நடந்தது.அதனால்தான் அவர்களுடைய துதி, வரம் கேட்கும் மனிதனின் குரலாக இல்லாமல், உண்மையை உணர்ந்த ஞானியின் குரலாக இருக்கிறது.
தவம் முடிந்தது.பிரசேதர்கள் கடலிலிருந்து வெளியே வந்தார்கள்.ஆனால், அவர்கள் பார்த்த உலகம் உலகமாக இல்லை.மரங்கள் பூமியை முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. காடுகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்திருந்தன.காற்று வீச முடியவில்லை. வானத்தையே மரங்கள் மறைத்திருந்தன.மக்கள் வாழவும் உழைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. பிரசேதர்கள் இதைப் பார்த்ததும் கோபமடைந்தார்கள்.
அவர்களுடைய வாயிலிருந்து காற்றும் நெருப்பும் புறப்பட்டன. காற்று மரங்களை வேரோடு பிடுங்கியது. நெருப்பு காடுகளை எரித்தது. பெரும்பாலான மரங்கள் அழிந்தன. இங்கே கதை வேறு ஒரு பாடத்தைத் தருகிறது.இயற்கை அழிவதும் தவறு; இயற்கை கட்டுப்பாடின்றி வளர்வதும் பிரச்னை. மனிதனுக்கு மரம் தேவை.
ஆனால், எல்லா இடத்தையும் காடு மூடிவிட்டால் மனித வாழ்க்கை பாதிக்கப்படும். அதேபோல் மனிதன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டால் உலகமே பாதிக்கப் படும். எனவே வாழ்க்கையின் அடிப்படை விதி: வளர்ச்சி வேண்டும். ஆனால், சம நிலையுடன் இருக்க வேண்டும்.
அப்போது மரங்களின் அதிபதியாகக் கருதப்படும் சோமன், அதாவது சந்திரன், பிரசேதர்களிடம் வந்தார்.
“அரசர்களே! உங்கள் கோபத்தை நிறுத்துங்கள்.எல்லா மரங்களையும் அழித்து விடாதீர்கள். இயற்கையோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்.” என்று கூறினார். அவர்களிடம் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார். அவள் மரிஷா. மரங்களோடு தொடர்புடையவள்.
அவளை பிரசேதர்களுக்கு மணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்தின் மூலம் தட்சன் பிறந்தான். விஷ்ணு புராணம் தட்சனைப் பிரஜைகளைப் பெருக்கும் முக்கியமான ஆளாகக் காட்டுகிறது.
அதாவது, பிரசேதர்கள் அழிக்கத் தொடங்கிய இடத்தில் சோமன் வந்து சமாதானத்தை ஏற்படுத்துகிறான். அழிவுக்குப் பதிலாக மீண்டும் படைப்பு தொடங்குகிறது. இதுதான் இந்தப் பகுதியில் இருக்கும் மிக அழகான கருத்து.
அழிப்பது எளிது. அழிவுக்குப் பிறகு வாழ்க்கையை மீண்டும் உருவாக்குவ துதான் பெரிய பணி. இதனால்தான் புராணக் கதைகள் வெறும் பழைய கதைகள் அல்ல.ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு “எப்படி வாழ வேண்டும்?” என்று சொல்லி வைக்கும் குறியீடுகளாகவும் அவை இருக்கின்றன. பிரசேதர்களின் கதை சொல்லும் மிகச் சுருக்கமான வாழ்க்கைத் தத்துவம் இதுதான்:
கடமை வந்தால் தவம் வேண்டும்.
தவம் இருந்தால் பொறுமை வேண்டும்.
வெற்றி வந்தால் கோபம் கூடாது.
இயற்கையை அழிக்காமல் காக்க வேண்டும்.
அழிவுக்கும் படைப்புக்கும் இடையே சமநிலை வேண்டும்.
தனக்காக அல்ல; உலகத்துக்காக வாழ வேண்டும்.
அதனால்தான் பிருது மகாராஜாவின் வம்சத்தில் பிரசேதர்களின் கதை ஒரு சிறிய வம்ச வரலாறாகத் தொடங்கி, மனிதன் - இயற்கை - இறைவன் - படைப்பு என்ற நான்கு பெரிய கேள்விகளுக்கான புராண பதிலாக முடிகிறது.
முனைவர் ஸ்ரீ ராம்


