Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருமண வரமருளும் நல்லாத்தூர் பெருந்தேவி தாயார்

நல்லாத்தூர் இயற்கை அன்னை தாலாட்டும் செழிப்பு மிக்க செல்ல பூமி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை வண்ணம் பூசி பூமித்தாய் பளிச்சென்று இருக்கிறாள். இதமான அமைதி எப்போதும் சூழ்ந்திருக்க, பூஞ்சோலைகள் சுற்றிலுமிருக்க மையமாக அமைந்துள்ளது வரதராஜர் ஆலயம். சிறிய ஆலயம் தான். ஆனால், சக்தியிலும், கீர்த்தியிலும் இணையற்ற கோயில்.

நல்லோர்கள் நிறைந்ததாலும், ஆறுகள் பாய்ந்து வளமுற்றதாலும், வரதராஜனும், ஸ்ரீராம பாதமும் அமைந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தியதாலும் நல்லாத்தூர் எனப் பெயர் பெற்றதாக கூறுகின்றனர்.

கொடிமரத்திலிருந்து நேரே பார்த்தால் சற்று உள்ளுக்குள் மூலவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜராக அருள்பாலிக்கிறார். அந்த பச்சைக் கற்பூர வாசமும், துளசியின் மணமும் நாசியை வருட, அந்த வரதனின் சாந்நித்தியம் இதயத்தை சிலிர்க்க வைத்து, ஆத்மாவின் பூர்வஜென்ம, அடுத்த ஜென்ம பந்தங்களுக்கும் பாலமாக அமைவதை உணரமுடிகிறது. நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் வரதராஜர். அபய வரத ஹஸ்தத்தோடு அருள்பாலிக்கிறார். அவர் நேர் பார்வை நம் கவலைகளைக் கரைக்கின்றன. மூலவருக்கு அருகிலேயே ஸ்ரீதேவியும், பூதேவியும் வரதனுக்கு இணையாக நின்று அருள்பாலிக்கிறார்கள். நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலேயே நம்மிடம் சேர்த்து விடும் வரதராஜரின் ஆற்றல் புரிகிறது. உற்சவமூர்த்திகள் பேரழகு. விசேஷ நாட்களில் மலர்களின் நடுவே அவர் வீற்றிருக்கும் கோலம் கண்ணிமைக்காது, பார்வையை நகர்த்தாது நம்மை நிலைகுத்தவைக்கும் என்பதும் அனுபவ உண்மை.

மூலவருக்கு முன்புறம் லட்சுமி நாராயணரின் மிகப் பழமையான சிலை ஒன்று உள்ளது. இது ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கான ஆதாரச் சிலை. வைகுண்டத்திற்கு ஏகும் முன்பு எல்லோருக்கும் அவ்விருவரும் காட்சி தந்த கோலம். குலோத்துங்கச் சோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட கருவறை என்றும், லட்சுமி நாராயணருக்கு கொடுத்த சில நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டும் இங்கு உள்ளதாக சொல்கிறார்கள். அர்த்த மண்டபத்தில் இவர் திரிபங்கி ராமர் எனும் திருநாமத்தோடு காட்சி தருகிறார். முழங்கால், இடுப்பு, கழுத்து எனும் மூன்று இடங்களையும் சற்றே ஒயிலாக வளைத்து பேரழகராக ஜொலிக்கிறார் ஸ்ரீராமர். விநய ஆஞ்சநேயர், ராமருக்கு அருகே அமர்ந்து இடது கையில் ராமரின் சூரிய வம்சக் கொடியை ஏந்தியும், வலது கையால் வாய் மூடி பணிவாகவும் இருக்கிறார்.

கருவறையிலிருந்து அர்த்தமண்டபம் வந்து பிராகாரத்திலுள்ள தாயார் சந்நதியை சேவிக்கிறோம். பெருந்தேவித் தாயார் எனும் திருநாமம் பூண்டு பேரழகாக அமர்ந்திருக்கிறாள் அன்னை. எல்லோரையும் காத்தருளும் ஆதி மாதாவானதாலும், கருணை புரிவதில் நிகரில்லாதவளாக விளங்குவதால், பெருந்தேவித் தாயார் எனும் திருப்பெயரைக் கொண்டிருக்கிறாள் போலும். வரதனை மணந்த நாணம் முகமெங்கும் பரவியிருக்கிறது.

இந்த ஆலயத்தின் பிரதான விஷயமே எட்டு வெள்ளிக்கிழமைகள் பெருந்தேவி தாயாரை தரிசித்து அர்ச்சித்துச் சென்றால் உடனே திருமணமாகும் என்பது இங்கு கண்கூடான விஷயம். அப்படி திருமணமானவர்கள் தம்பதியாக வந்தும் சேவித்து விட்டுச் செல்கிறார்கள்.

நல்லாத்தூருக்கு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

புதுச்சேரி - கடலூர் வழியில் தவளகுப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவும், புதுச்சேரி - விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ளது.