ஸ்ரீ மகாவிஷ்ணு வைகுண்டவாசனாக காஞ்சிபுரம், மாங்காடு, உத்திரமேரூர், திருப்பனந்தாள், கோயம்பேடு, மானாம்பதி அகரம் என தமிழகமெங்கும் பலப் பலத் தலங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தில், திருத்தணிக்கு அருகில் நெமிலி என்ற கிராமத்தில், ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் அனைத்து வகையான துன்பங்களையும் போக்கி நல்வாழ்வு அருளி வருகிறார். முற்காலத்தில், இவ்வூர் “திருநெல்மலை” என்றே அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் மருவி “நெமிலி” என்று தற்போது அழைக்கப்படுகிறது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கடைசி பல்லவ மன்னரான அபராஜித வர்ம பல்லவனால் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இவருக்குப் பின்னர், கி.பி.961ல் ராஷ்டிரகூட மன்னரான கன்னார தேவனால் இக்கோயிலுக்கு திருப்பணிகள் நடத்தப்பட்டுள்ளன என்பது கல்வெட்டுக்களின் மூலம் அறியமுடிகிறது. இத்தலமானது, கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. இத்தலத்திற்கு சோழர்களும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்கள். ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து திருப்பதி செல்லும் வழியில், உடையவர் ஸ்ரீ ராமானுஜர் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார். எனவே இது, அபிமானஸ்தலமாகவும் திகழ்கிறது. இவ்வாறாக பல சரித்திரப் பெருமைகள் வாய்ந்த இத்திருக்கோயில் கோபுரங்கள், தங்கவர்ணம் பூசப்பட்டு ஜொலிக்கிறது. இனி இத்தலத்தைப் பற்றிய வரலாற்றைப் பார்ப்போமா!
முன்னொரு காலத்தில், இந்த கிராமத்தில் கடும் மழை பொழிந்தது. அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி வழியத் தொடங்கின. ஊருக்குள் வெள்ளம் வரத் தொடங்கியது. அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் செய்வது அறியாது திகைத்த நேரத்தில், பெருமாளை வேண்டினார்கள். அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து காக்கும் கடவுளாகிய பெருமாள், அக்கணத்தில் உடைப்பெடுத்த இடத்தில் அணையாக அமர்ந்தார். சற்று நேரத்தில் மழை நின்று வெள்ளம் வடிந்தது.
வெள்ளத்தில் மூழ்காமல் ஊர் காப்பாற்றப்பட்டது. மதுராந்தகத்தில், ராமபிரானாக வந்து ஏரியைக் காத்த மகாவிஷ்ணு, இத்தலத்தில் வைகுண்டநாதனாகத் தோன்றி, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, நெமிலி மக்களைக் காத்தார்.நாரதமாமுனிவர், திருமலை ஸ்ரீ நிவாசனை சேவிக்கும் போது, பெருமாளிடம் அமர்ந்த திருக்கோலத்தில், ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு வேண்டிக்கொண்டதற்கு இணங்க, இத்திருத்தலத்தில் ஸ்ரீ வைகுண்டவாசன் என்ற திருநாமத்தில் திருவடியில் ஆதிசேஷனுடன் பிரயோக சக்கரத்துடனும் புன்னகை ஸ்வரூபத்துடனும் பக்தர்களுக்கு சேவை சாதித்து அருள்பாலிக்கின்றார். மூலவர் ஸ்ரீ வைகுண்டவாசர், தன் கரத்தில் ஒரு நெல்மணி வைத்திருக்கிறார்.
ஒரு சமயம், விவசாயி ஒருவர் தன் நிலத்தில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால், விளைச்சலில் ஒரு பகுதியை பெருமாளுக்குத் தருவதாக வேண்டிக் கொண்டார். பெருமாளின் கருணையினால் வழக்கத்தைவிட அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டது. ஆனால், விவசாயியின் மனமோ திடீரென்று மாற்றமடைய, பெருமாளுக்குரிய பங்கைத் தராமல் ஏமாற்றினார். விவசாயியின் பேராசையைப் போக்க விரும்பிய பெருமாள், அங்கிருந்த நெல் முழுவதையும் கூழாங்கற்களாக மாற்றினார். தன் தவறை உணர்ந்த விவசாயி, பெருமாளிடம் மன்னிப்பு கோர, அவர் ஒரே ஒரு நெல்மணியை மட்டும் எடுத்துக் கொண்டு, கல்மணிக் குன்றினை மீண்டும் நெல்மணிக்குன்றாக மாற்றினார். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாளின் அபயஹஸ்தத்தில் ஒரு நெல்மணி வடிவத்தை பஞ்சலோக சிலையில் நேரடியாகக் காணமுடியும்.
கோயிலுக்கு வெளியில், சந்நதியில் அனுமன் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். இந்த சந்நதியின் முன்னால் விளக்குத் தூண் காட்சி அளிக்கிறது. அஞ்சனையின் மைந்தனை வணங்கிய பின்னர், ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், முதலில் தென்படுவது பலிபீடம். இடதுபுறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ நரசிம்மர் சந்நதிகள் அமைந்துள்ளது. பெருமாளின் கரத்தில் உள்ள சக்கரத்தை, சக்கரத்தாழ்வார் என்று அழைப்பது வழக்கம். பெருமாள் இந்த ஆயுதத்தை ஏவி பக்தர்களின் இன்னல்களைத் தீர்த்தருளுவார். இந்த சக்கரத்தை வழிபட துன்பங்கள் உடனடியாக அகலும்.
நரசிம்மரும் தன் பக்தர்களின் துன்பங்களை நாளை என்றில்லாமல் அக்கணமே அகற்றியருளுவார். இதன் அடிப்படையில்தான், பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக அமைத்து சந்நதியை எழுப்புகிறார்கள். இருவரையும் ஒருசேர வழிபடுவது சிறப்புக்குரியதாகும். முன்மண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். பெரியதிருவடியை வணங்கி உள்ளே நுழையும் போது, நுழைவாயிலில் அமைந்துள்ள துவாரபாலகர்களை வணங்கிக் கடந்தால், கருவறையில் மகாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்டநாதனாக நெற்றியில் பச்சைக் கற்பூர திருமண் காப்பு சேவையுடன் பிரம்மாண்ட திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி ஸ்ரீ தேவி பூதேவியோடு அமர்ந்து அழகாக காட்சி தருகிறார்.
சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கும் வைகுண்டப் பெருமாள், தனது வலது திருக் கரத்தினை அபயஹஸ்த நிலையில் வைத்தும், இடது திருக்கரத்தில் ஒரு நெல்மணியுடனும் காட்சி தருகிறார். இத்தலத்து இறைவனின் திருக்கரத்தில் இருக்கும் சக்கரம், பிரயோக நிலையில் தெற்கு திசை நோக்கி காட்சி தருவது அபூர்வம். மூலவரின் திருக்கரங்கள் ரேகைகளோடு அமைந்திருப்பது காணக்
கிடைக்காத அதிசயம். ஸ்ரீ வைகுண்டப் பெருமாளின் இடதுபாதத்தின் கீழ், ஆதிசேஷன் அமைந்துள்ளார். இதனால், இத்தலம் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள். இந்த உற்சவர் திருமேனிக்கு தினமும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. நித்ய கல்யாணப் பெருமாள் திருமணத்தடைகளை அகற்றி அருள்பாலிக்கிறார். ஸ்ரீ காளிங்க நர்த்தனர், ஸ்ரீ நவநீதக் கிருஷ்ணன், ஸ்ரீ வேணுகோபாலன், அச்சுதர் மற்றும் சுதர்சனர் ஆகியோர் மூலவருக்கு முன்னால் உலோகத்திருமேனிகளாக அமைந்து அலங்கரிக்கிறார்கள். வைகுண்டநாதனை வணங்கி வெளித்திருச் சுற்றுப் பகுதிக்கு வந்தால், அங்கே ஸ்ரீ சீதாதேவி சமேத சுகபோக ராமபிரான் சந்நதி அமைந்துள்ளது.
சுகபோக ராமர், சதுர்புஜனாக அமைந்து வலது திருக்கரத்தினில் சங்கும், இடது திருக்கரத்தினில் சக்கரமும் மற்றொரு வலது திருக்கரத்தினில் அம்பு, இடது திருக்கரத்தினில் வில்லையும் ஏந்தி ஸ்ரீ சீதாதேவியை இடது தொடையின் மீது அமர்த்திய கோலத்தில் அமைந்து, அற்புதமாக காட்சி தருகிறார். அருகில் இளையபெருமாள் லட்சுமணர், திருக்கரங்களில் வில்லையும் அம்பையும் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
முன்னால், ஸ்ரீ ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் உற்சவத் திருமேனிகளாக அமைந்துள்ளார்கள். சுகபோக ராமபிரானை வணங்கி கடந்து சென்றால், இத்தலத்தின் ஸ்தலவிருட்சமான அரசமரத்தைக் காணலாம். அரசமரத்தைச் சுற்றி அமைந்துள்ள மேடையின் மீது சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் ஆகியோர் சிலாரூபத்தில் அமைந்து அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீ வைகுண்டப் பெருமாளின் உடல் வியர்க்கும் அதிசயமும் இத்தலத்திற்கே உரியது.
பக்தர்கள் பெருமாளை தரிசிக்கும் போது, அவருக்கு அதிகமாக வியர்ப்பதாகவும் கூறப்படுகிறது. பக்தர்கள் செய்யும் பாவங்கள், அகல்வதற்காக பெருமாளின் உடல் வியர்ப்பதாகக் கூறப்படுகிறது. தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் விழா, பங்குனி உத்திர விழா, வைகாசி விசாகம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் 5 வாரங்கள் விழா, ஸ்ரீ ராம நவமியில் பத்துநாட்கள் விழா மற்றும் வைகுண்ட ஏகாதசி முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்தில், ஸ்ரீ வைகானச ஆகம முறை பின்பற்றப்படுகிறது. ஸ்ரீ காளிங்கநர்த்தன கண்ணனுக்கு ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரோகிணி நட்சத்திரத் திருநாளன்று, இத்தலத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். சந்தான பாக்கியம் இல்லாதவர்கள், ஒவ்வொரு மாதமும் வருகின்ற ரோகிணி நட்சத்திரம் அன்று நடைபெறும் விசேஷ திருமஞ்சன ஆராதனையில் கலந்து கொண்டு, ஆலிலைக் கண்ணனை ஊஞ்சலில் தாலாட்டி தரிசிக்க அவர்களின் குறைகள் தீர்கின்றது. அதே ரோகிணி தினத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில், திருமணத்தடைகள் உள்ளவர்களுக்கும் சங்கல்பம் செய்து கொண்டு காளிங்கநர்த்தனர், ஆலிலைக்கண்ணன், மூலவர் ஸ்ரீ வைகுண்டவாசன், ஸ்ரீ நித்யகல்யாணரையும் சேவித்தால், தடைபடுகின்ற திருமணம் கைகூடும்.
திருமணமாகாதவர்கள், திருமணம் விரைவில் கைகூட இரண்டு மாலைகளுடன் இத்தலத்திற்கு வந்தால், ஒரு மாலை ஸ்ரீ காளிங்க நர்த்தனருக்கும் மற்றும் எல்லா பெருமாளுக்கும் சமர்ப்பிக்கப்படும். மற்றொரு மாலையை வேண்டுதல் உள்ளவருக்கு அணிவிக்கப்படும். திருமணம் விரையில் கைகூட சங்கல்பம் செய்து கொண்டு பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டால், மூன்று மாதங்களில் பகவத் கிருபையால் திருமணம் கைகூடும் அற்புதத்தலமாகக் கருதப்படுகிறது. திருமணம் முடிந்ததும் மீண்டும் தம்பதிகளாக இத்தலத்திற்கு வந்திருந்து, ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாளை வணங்கிச் செல்ல வேண்டும்.


