Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெருமாள் அருள் பொழியும் புரட்டாசி

அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் ஸ்ரீமந் நாராயணன். சுமார் ஆறாயிரம் ஆண்டு களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகத்திலே `சப்தகிரி’ என போற்றப்படும் ‘ஏழுமலையிலே’ ஸ்ரீ வெங்கடாஜலபதியாக எழுந்தருளியிருக்கிறார். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் எழுந்தருளியுள்ள திருக்கோலத்திலேயே, தமிழ்நாட்டில் ஏழு திருத்தலங்களில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அவ்வாறு ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஏழு திருத்தலங்களை சுருக்கமாக இங்கே காண்போம்.

அரியக்குடி: திருமலை திருப்பதிக்குச் சென்று திருவேங்கடவனை வழிபடும் பழக்கத்தை விரதமாகக் கொண்டிருந்த சேவுகன் என்பவர், வயது மிகுதியால் திருப்பதிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது சப்தகிரி வாசன், ஸ்ரீநிவாசன் அவரது மனக்கண் முன்தோன்றி ‘தள்ளாத வயதில் இனியும் தன்னை நாடி வரவேண்டாம்’ என்றும் அன்பரின் இருப்பிடமான ஊரிலேயே எழுந்தருளுவதாகவும் கூறினார். அவர் குறிப்பால் உணர்த்தியபடி துளசி வனத்தில் புதையுண்டு கிடந்த திருமேனிகளை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர். திருவரங்கத்திலிருந்து விக்ரகமும், திருப்பதியிலிருந்து சடாரியும், திருமெய்யத்திலிருந்து அக்னியும் கொண்டு வந்து இங்கே நிறுவப்பட்டுள்ளது.

கருங்குளம்: கருங்குளம் என்று அழைக்கப்படும் சிற்றூரில் வகுளகிரி என்ற சிறுகுன்றின் மீது உச்சியில் ஸ்ரீநிவாசப் பெருமாளின் திருக்கோயில் உள்ளது. இங்கு கருவறையில் மூலவராக விளங்குவது இரு சந்தனக்கட்டைகளே! இவற்றை மருந்துக் கலவைகளாலான பீடத்துடன் இணைத்துள்ளனர். சந்தனக் கட்டைகள் மீது ஆடை ஆபரணங்கள், திருக்கரங்கள், திருநாமம் சார்த்தி திருமலை வேங்கடவனைப் போலவே அலங்காரங்கள் செய்து காட்சி அளிக்கச் செய்கின்றனர்.

திருவண்ணாமலை: விருதுநகர் மாவட்டம் தென் திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் ஆதிசேடனே பர்வத வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். சுமார் 250 அடி உயரமுள்ள சிறுகுன்றின் மீது பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேங்கடவன், மனம் மகிழ்ந்து இங்கே கோயில் கொண்டதாகக் கூறுகிறார்கள். வட திருப்பதியில் பத்மாவதித் தாயாருக்காக எழுந்தருளியது போல், கோதை நாச்சியாருக்காக இந்த தென் திருப்பதியில் திருவேங்கடவன் எழுந்தருளியிருப்பதாகச்

சொல்லுகிறார்கள்.

திருவல்லிக்கேணி: சென்னை மாநகரில் நடுநாயகமாக விளங்கும் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள வேங்கடகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். வலது திருக்கரம் பாஞ்சஜன்னியடம் என்ற சங்கை ஏந்தியுள்ளது. இடது கரம் கீழ் முகமாக ஞான முத்திரையை வெளிப்படுத்துகிறது. வரதஹஸ்தமான இந்த ஞான முத்திரையை வெளிப்படுத்தும் அதே கை, தனது பாதத்தைச் சுட்டிக் காட்டுவது சிறப்பு அம்சமாகும். குருக்ஷேத்ரப் போரில் பீஷ்மரின் வில்லால் கண்ணனுக்கு ஏற்பட்ட காயங்களை இன்றைக்கும் உற்சவ மூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம். கிருஷ்ணர், குடும்ப சமேதராக எழுந்தருளியிருப்பதும் இங்கேதான்.

திருவிண்ணகரம்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில் எனும் திருவிண்ணகரம், திருமால் பூமாதேவியைத் திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகும். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மார்க்கண்டேய முனிவர், தேவர்கள் முன்னிலையில் பூமாதேவியை வைகுந்தவாசனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்ததாகக் கூறுவார்கள். இத்தலத்தில் துளசியும் திருமாலின் அருளைப் பெற்று அவரது திருமார்பை அலங்கரிக்கும் பெருமையை அடைந்தாள். அதனால் துளசி வனம், துளசிக்ஷேத்திரம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. வைகுண்டத்துக்கு சமமான ஸ்தலம் இது. வட வேங்கடம் செல்ல இயலாதவர்கள், அந்த வேங்கடவனுக்குச் செய்ய வேண்டிய பிரார்த்தனையை இங்கு செலுத்தலாம். உப்பிலியப்பன் தரிசனம், வாழ்க்கையில் எளிதில் கிடைக்காத ெபரும் பேறாகும்.

திருநாங்கோயில்: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில் இது. திருவேங்கடநாதர் எனப் பெயர் பெற்றுள்ள இத்தலத்தைத் ‘தென் திருப்பதி’ என்றே கூறுவார்கள். திருப்பதி வரை பயணம் செய்ய முடியாதவர்கள், திருவேங்கடனுக்குரிய காணிக்கைகளை இங்கே செலுத்துகிறார்கள். இக்கோயிலின் பிரதான சந்நதி சிறுகுன்றின் மீது அமைந்திருந்த போதிலும், உள்ளே செல்லும் போது ஏழு வித உயரங்களில் படிப்படியாக ஆலயம் அமைந்து, ஏழாவது நிலையின் முகப்பில் திருவேங்கடவன் திருப்பதியில் குடிகொண்டுள்ளதைப் போலவே ஏழுமலையானாகக் காட்சியளிப்பது இத்தலத்துக்கே உரிய சிறப்பு.

திருமலை வையாவூர்: செங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை வையாவூர் வைணத்தலங்களுள் ‘வராகக்ஷேத்திரம்’ எனக் குறிப்பிடப்படும் பெருமைக் குறியது. திருமாலை லட்சுமி வராகர் கோலத்தில் தரிசனம் செய்ய விரும்பிய பிருகு முனிவர், கடுந்தவம் புரிய இங்கு வந்தார். தவமிருந்து திருமாலின் ஆசிகளைப் பெற்றார். திருமகள், பிருகு முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றும்படி நாராயணனை வேண்டிக் கொண்டார். அவ்வாறே மகாவிஷ்ணுவும் லட்சுமி மூர்த்தியாக இத்திருத்தலத்தில் பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தார். அவரே ஆதிக்ஷேனை பர்வதமாக உருவாகுமாறு கட்டளையிட்டார். பின்னர் அந்த மலையின் உச்சியில் எழுந்தருளினார். எனவே இத்தலம் வராகக்ஷேத்திரம் எனப்படுகிறது.

மேற்குறித்த ஏழு திருத் தலங்களிலும் திருமலையில் திருவேங்கடனாக எழுந்தருளியிருப்பது போலவே எழுந்தருளியுள்ளார், திருவேங்கட முடையான்!

குலதெய்வங்களுக்கெல்லாம் தலையாய தெய்வமாகத் திகழும் வெங்கடாஜலபதியைப் புரட்டாசி மாதத்தில் தரிசிப்பதும், வணங்குவதும் புண்ணியங்களை அள்ளித்தரும். திருவேங்கடமுடையானின் திருநட்சத்திரம் திருவோணம். புரட்டாசியின் திருவோண நட்சத்திர நாளில், தொண்டைமான் சக்ரவர்த்திக்கு காட்சி தந்தருளினார் திருமால். ஆகவே மற்ற மாதத்தில் வருகிற திருவோணத்தைவிட, புரட்டாசி திருவோணத்துக்கு மகத்துவம் அதிகம் புண்ணியம் தரும். புரட்டாசி சனிக் கிழமைகளில் திருவேங்கடவனை வழிபட்டால், பூரண அருளைப் பெறலாம். புரட்டாசி மாதம் என்பது விரத மாதம். ஆகவே இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், பெருமாளை சேவிப்பதும் விசேஷத்துக்கு உரியது!