Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருமண மேடையில் தாய்-தந்தையின் பாதங்களைமண மக்கள் பூஜை செய்வதின் ஐதீகம் என்ன?

?கணவனின் பாவம் புண்ணியம் மனைவியைச் சேருமா? அதுபோன்று மனைவியின் பாவம் புண்ணியம் கணவனுக்குச் சேருமா?

- வண்ணை கணேசன், சென்னை.

கணவன் செய்யும் பாவத்தின் மொத்த பலனும் கணவனுக்கு மட்டுமே சேரும், அவன் செய்யும் புண்ணியத்தில் சரிபாதி பங்கு என்பது மனைவியைச் சென்று சேர்ந்துவிடும். மாறாக மனைவி செய்யும் பாவத்தில் சரிபாதி பங்கு என்பது கணவனைச் சென்று சேரும் என்றும் மனைவி செய்யும் புண்ணியத்தின் மொத்த பலனும் அவளை மட்டுமே சேரும் என்றும் சாஸ்திரம் உரைக்கிறது. நம்முடைய தர்மத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் என்பது உண்டு.

?குருசந்திர யோகம் என்றால் என்ன? அதன் சிறப்பம்சம் என்ன?

- பி. கனகராஜ், மதுரை.

யோகம் என்றால் இணைவு என்று பொருள். குருவும் சந்திரனும் ஜாதகத்தில் ஒரே ராசியில் இணைந்து அமர்ந்திருந்தால் அதனை குருசந்திர யோகம் என்ற பெயரில் சொல்வார்கள். ஜோதிடத்தைப் பொறுத்த வரை இது ஒரு நல்லயோகமாக பார்க்கப்படுகிறது. இந்த யோகத்தினைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பார்கள். லக்னத்திலேயே குருவும் சந்திரனும் இணையப்பெற்றவர்கள் மனிதநேயத்துடன் கூடிய நல்ல மனிதர்களாகவும் இரண்டில் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல சொல்வாக்குடன் செல்வாக்கினையும் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு இந்த இரண்டு கிரஹங்களும் ஒன்றாக இணைந்து லக்னத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு நற்பலன்களைத் தருவார்கள். சிறப்பான பலன்களைத் தரும் அரசயோகங்களில் ஒன்றான இந்த குருசந்திரயோகம் என்பது பார்க்கப்படுகிறது.

?பூஜையின்போது மணியடிப்பது அவசியமா?

- என். இளங்கோவன், மயிலாடுதுறை.

மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ராக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள். மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல, பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும் முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுக்களை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மணிஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனத்தை செலுத்துகிறோம். சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு.

?இந்த பாவம் செய்தால் இந்த நோயின் தாக்கம் இருக்கும் என்று ஏதேனும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா?

- ராமன், கரூர்.

இதுகுறித்து கருட புராணமும் பல இடங்களில் விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக கருட புராணத்தின் ப்ரேத கல்பத்தில் பாபங்களின் அறிகுறிகள் பகுதியில் உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கிறது. பசுவைக் கொன்றால்- கூன் மற்றும் அறிவுக் குறைவு, கன்னிப் பெண்ணைக் கொலை செய்தால் - குஷ்ட ரோகம், குருவின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் கண்டால் - தோல் நோய், ஆசார்யரை அவமதித்தால்- வலிப்பு நோய், சாஸ்திரத்தை அவமதித்தால் - மஞ்சள் காமாலை, பொய் பேசி அதனால் மற்றவர்களுக்கு கேடு விளைந்தால் - திக்குவாய், பொய்சாட்சி சொன்னால் - ஊமைத்தன்மை, பொய் எனத் தெரிந்தும் அதனை ஏற்றுக் கொண்டால் - செவிட்டுத்தன்மை, பசுவை காலால் உதைத்தால் - உடல் ஊனத்துடன் விகாரமாக பிறத்தல், தங்கத்தை திருடினால்- நகங்களில் நோய் என்று கருடபுராணத்தில் இந்த பட்டியல் நீள்கிறது.

?திருமண மேடையில் தாய்-தந்தையின் பாதங்களைமண மக்கள் பூஜை செய்வதின் ஐதீகம் என்ன?

- ஜெ. மணிகண்டன், வேலூர்.

இந்த நிகழ்விற்கு பாதபூஜை என்று பெயர். வாழ்க்கையில் இல்லற தர்மம் என்ற அதிமுக்கியமான காலத்திற்குள் நுழையும்போது தன்னைப் பெற்றவர்களை வணங்கி அவர்களின் அனுமதியோடும் ஆசீர்வாதத்துடனும் நுழைய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை மணமக்கள் புரிந்துகொண்டு தங்கள் வாழ்வினைத் துவக்கும்போது அந்த வாழ்வானது முழுமையான சந்தோஷத்துடன் அமைகிறது. எதிர்காலத்தில் இந்த தம்பதியர்க்கு பிறக்கும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி அவர்களின் திருமணத்தின்போது இவர்களுக்கு பாதபூஜை செய்யும்போது தாங்கள் வாழ்ந்த வாழ்வின் பூரணத்துவத்தை இவர்கள் அனுபவித்து உணர்வார்கள்.

?நான்கு திசைகளில் ஓரிரு திசைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது ஏன்?

- டி. நரசிம்மராஜ், மதுரை.

பொதுவாக பூஜைகளைச் செய்யும்போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். இறைவன் ஒளிவடிவானவன் என்பதாலும் அந்த ஒளியைத் தரும் சூரியன் கிழக்குத் திசையில் உதிப்பதாலும் குறிப்பாக சூரிய உதயத்தில் இருந்து சூரியன் உச்சிக்கு வருவதற்குள் பூஜைகளைச் செய்துவிட வேண்டும் என்பதாலும் அந்த நேரத்தில் சூரியன் கிழக்கில்தான் இருப்பார் என்பதாலும் இந்த விதியைக் கட்டாயமாக்கினார்கள். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் எல்லா திசைகளுமே முக்கியத்துவம் பெற்றவைதான். சந்தியாவந்தனத்தின்போது எல்லா திசை களையும் வணங்குவார்கள். மிகப்பெரிய ஆலயங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு திசையில் அமைந்திருக்கும் துவாரமும் (நுழைவு வாயில்) ஒவ்வொரு வேதத்தினைக் குறிக்கிறது. ஆக வேத சாஸ்திரத்தின் அடிப்படையில் எல்லா திசைகளுமே முக்கியத்துவம் பெற்றவைதான். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.