Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோயாளியா? மருத்துவரா? தீர்மானிக்கும் பாவகம் இதுதான்!

ஜாதகத்தின் 12 பாவகங்களுமே முக்கியமானவை. ஒவ்வொரு பாவகத்திலும் நல்ல விஷயங்களும் உண்டு. வேண்டாத விஷயங்களும் அல்லது எதிர்மறை விஷயங்கள் என்று நாம் நினைக்கக்கூடிய விஷயங்களும் உண்டு. பொதுவாகவே நல்ல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் இருக்கக்கூடிய எதிர்மறை விஷயங்களைக் களைய வேண்டும். அதற்காகத்தான் ஜோதிட சாஸ்திரம். ஜோதிட சாஸ்திரத்தை நாம் முறையாகப் புரிந்து கொண்டாலே நம்முடைய பிரச்னைகளில் பாதி தீர்ந்துவிடும். நம்மிடையே ஜோதிட சாஸ்திரத்தைப் புரிந்து கொள்பவர்களை விட குழப்புபவர்கள் அதிகமாக இருப்பதால், அதைப் பற்றிய தெளிவும் அதனுடைய எல்லைகளைப் பற்றியும் பலருக்குப் புரிவதில்லை. அதில் ஒன்றுமே இல்லை என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அது சர்வநிவாரணி என்று எல்லாவற்றுக்கும் அதுதான் என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு நிலைமைக்கு மத்தியில்தான் ஜோதிட சாஸ்திரம் இருந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது ஆறாம் பாவகம் வந்துவிட்டோம். ஆறாம் பாவகம் என்பதை யாரிடம் கேட்டாலும், இது கடனைக் குறிக்கும் பாவகம். நோயைக் குறிக்கும் பாவகம். பகையைக் குறிக்கும் பாவகம் என்பார்கள். அதாவது ‘‘ருண ரோக விரோதி ஸ்தானம்” என்று சொல்லுவார்கள்.ஆனால், உண்மையில் இதில் கடன்தான் இருக்கிறதா? நோய்தான் இருக்கிறதா? பகைதான் இருக்கிறதா? என்றால், கடனை எதிர்க்கக் கூடிய சக்தியும், நோயை எதிர்க்கக்கூடிய சக்தியும், பகையை எதிர்க்கக்கூடிய வீரமும் இந்த ஆறில்தான் இருக்கிறது.வழக்கில் ஒருவன் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் ஆறாம் பாவகம் வலிமையாக இருக்க வேண்டும். இங்கே வலிமை என்பது சுபத் தன்மையைக் குறிப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.எண் கணித சாஸ்திரத்தில் ஆறு (6) சுக்கிரனுக்குத் தந்தார்கள். நான் ஒரு முறை ஒரு ஜோதிட நண்பரிடம் வேடிக்கையாகச் சொன்னேன், சுக்கிரன் செல்வத்துக்கும் பொருள்களுக்கும்காரகன்.

செல்வம் இல்லாத நிலை வறுமை. கடன்

வறுமை. கடன் இரண்டும் இருந்தால் ஒருவருக்கு நோய் தானாக வந்துவிடும். சுக்கிரன் செல்வத்தைக் குறிப்பதால் செல்வம் பகையைக் இழுத்துக் கொண்டு வந்து விடும். எனவே, ஆறாம் எண்ணை சுக்கிரனுக்கு வைத்தார்களோ என்னவோ என்று வேடிக்கையாகச் சொன்னேன்6ம் பாவகம் வாழ்க்கையில் வரும் சவால்களையும் அதனைச் சமாளிக்கும் சக்தியையும் ஒரே நேரத்தில் காட்டும் ஒரு முக்கியமான பாவகமாகும். இது கஷ்டங்களை மட்டும் தருவதில்லை; அவற்றை வெல்லும் தைரியத்தையும் தருகிறது. 6ம் பாவகம் பலமாக இருந்தால், மனிதன் எந்தப் பிரச்னையையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவான். பலவீனமாக இருந்தால், நோய், கடன், எதிரிகள் போன்ற சிக்கல்கள் அதிகரிக்கும். அதனால், 6ம் பாவகத்தை “கஷ்ட பாவகம்” என்று மட்டும் பார்க்காமல், “வெற்றி தரும் போராட்ட பாவகம்” என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய், கடன், வறுமை, வம்பு வழக்கு, எதிரி போன்ற பிரச்னைகளை குறிப்பிடுவதாக நாம் படித்திருப்போம். ஆனால், ஆறாம் இடத்தின் வாயிலாக ஒருவருக்கு நிரந்தரமாக அமையக்கூடிய வேலை என்ன என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், ஆறாம் பாவகம் என்பது அடிமை உத்யோகத்தினைக் குறிக்கும். ஆறாம் பாவகத்தின் வாயிலாக ஜாதகருக்கு எந்த வகையில் வருமானம் வரும் என்பதை அறிந்து கொள்ள இயலும். காரணம் ஆறாம் பாவகம் தனஸ்தானமான இரண்டாமிடத்திற்கு திரிகோண பாவகமாக விளங்கும். அதோடு தொழில் ஸ்தானமான பத்தாம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானமாக வரும். 6ம் பாவகம் மறைவு ஸ்தானமாக இருந்தாலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி மற்றும் வேலையில் முன்னேற்றத்தையும் குறிக்கும். 6-ம் பாவகம் வலுவாக இருந்தால் (சுபத் தன்மையோடு), எதிரிகளை வெல்லும் திறனும், கடன் நிவர்த்தியும் உண்டாகும். 6-ம் அதிபதி பலவீனமாக இருந்தால், நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.

6ம் பாவகம் குறிப்பது என்னென்ன தெரியுமா?

*உடலில் ஏற்படும் நோய்கள், குறிப்பாக சிறு குடல், ஜீரணக் கோளாறுகள், தோல் நோய்கள் மற்றும் காயங்கள்.

*வாங்கிய கடன், கடனைத் திருப்பிச் செலுத்துதல், பண இழப்பு மற்றும் கஷ்டங்கள்.

*எதிரிகள், வழக்குகள், போட்டி மனப்பான்மை, தடைகள் மற்றும் கள்ளத்தனமான செயல்கள்.

*வேலையாட்கள், ஊழியர்கள், சிறிய வேலைகள் மற்றும் தினசரி பணிகள்.

*தாய் மாமன், வளர்ப்புப் பிராணிகள், வீண் வம்பு, சண்டை மற்றும் சிறை தண்டனை.

இது சிறிய லிஸ்ட்தான். அனுபவத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு.

எல்லா நோய்களுக்கும் தாய் வயிறுதான். அந்த வயிற்றைக் குறிப்பது ஆறாம் பாவகம் என்பதால் நோய் பாவகமாக - நோய்களைக் குறிகாட்டும் பாவகமாக 6 ம் பாவகத்தை வைத்தார்கள். வயிற்றுப் பகுதி, நாடி, குடல், மற்றும் செரிமான உறுப்புகள் 6-ம் பாவகத்தின் கீழ் வருகின்றன. தவறான உணவுப் பழக்கம், அஜீரணம், குடல் புண்கள் மற்றும் கிருமித் தொற்றுகளால் ஏற்படும் நோய்களைக் குறிக்கிறது. நோய் வருவதற்கு முதற்காரணம், வயிற்றுக்கு அனுப்பப்படும் உணவே ஆகும். அவ்வாறு அனுப்பப்படும் உணவானது சில நேரத்தில் நச்சாக மாறுவதும், அல்லது உட்கொள்ளும் உணவே நச்சுத்தன்மை கொண்டதாக இருப்பதும் அல்லது உணவுடன் சேர்ந்து வேறு நோய்க் கிருமிகள் உடலினுள் செல்வதும் நோய் வருவதற்கு முதற் காரணமாகும்.

6ம் பாவகத்தில் ஒரு ஆறுதல் உண்டு. இந்த பாவகம் நோயைக் குறித்தாலும், மருந்துகளாலும் மருத்துவத்தாலும் விரைவில் தீரும் நோய்களை காட்டுகிறது. ஆறாம் பாவகத்திற்கு மூன்றாம் பாவகமான எட்டாம் பாவகம் தீராத நோய்களையும், (chronic) பன்னிரண்டாம் பாவகம் அதனுடைய அடுத்த பரிணாமத்தையும் காட்டுகிறது.

ஆறாம் பாவகம் என்பது நோய்கள். 12-ஆம் பாவகம் என்பது மருத்துவமனையையும் குறிக்கும். ஆறாம் பாவகத்துக்கு நேர் எதிர் பாவகமாக 12 ஆம் பாவகத்தை வைத்திருக்கிறார்கள். இங்கே நோயில் விழுந்தால் அங்கே மருத்துவமனையில்(hospitalisation) சேர வேண்டும்.

நோய்கள் என்று ஆறாம் பாவகத்தைச் சொல்லிவிட்டால், அந்த நோய்களோடு சதாசர்வகாலமாக பழகுகின்றவர்களையும் அது காட்டும் அல்லவா. நமக்கு நோய் வந்து மருந்து சாப்பிட்டு வைத்தியம் செய்து கொண்டால் உடனே ஆரோக்கியம் ஆகிவிடும். ஆனால் தினசரி, நோய்களோடு பழகுகின்றவர் மருத்துவர் அவர் நோயாளி அல்ல.

நோயாளி வருவார் போவார். ஆனால் மருத்துவர் தினசரி நோயாளிகளோடு (6ம் பாவகாரகத்தோடு) பழகிக் கொண்டிருக்க வேண்டும். நோய்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும். எனவே, சதா நோய்களோடு போராடும் மருத்துவர் மற்றும் மருந்துகளையும் ஆறாம் இடம் குறிப்பிடுகிறது.

ஒருவர் மருத்துவர் ஆக வேண்டும் என்று சொன்னால் ஆறாம் பாவகத் தொடர்பு அவருக்கு வலுவாக இருக்க வேண்டும். 6ம் இடம் உத்தியோக ஸ்தானம் என்பதாலும், நோய் ஸ்தானம் என்பதாலும், ஆறாம் இடம் வலுவாக இருந்தால் மருத்துவப் பணி செய்யும் வாய்ப்பு அமையும்.