Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பக்தர்களை காக்கும் பாதூர் பெருமாள்

உளுந்தூர்பேட்டையிலிருந்து 14கி.மீ. தொலைவில் பாதூர் என்ற ஒரு அழகான சிறிய கிராமம் உள்ளது. முன்னொரு காலத்தில், வேதங்கள் படித்த பல வைதீகப் பிராமணர்கள் குடியிருந்த இடம். பசுமை நிறைந்த சுபிட்சமான இடமாகவும், செல்வம் நிறைந்த இடமாகவும் இருந்தது. தற்போது இந்த இடம், காலப்போக்கில் சற்று மாற்றம் அடைந்துள்ளது. இருந்த போதிலும், இங்குள்ள ஸ்ரீனிவாசக் கோயில் மட்டும் பழமை மாறாது அப்படியே காட்சியளிக்கிறது. அக்கோயிலைப் பற்றிய சிறுத் தொகுப்பை காணலாம்.

நின்றுபோன பூஜை

இந்த கிராமம், சேஷ நதி தென்கரையில் அமைந்துள்ளது. ``ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’’ என்கின்ற திருநாமத்தைக் கொண்டு அருள்பாலிக்கிறார். இக்கோயிலை, சோழ அரசர்களில் ஒருவரான மங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு, கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. சில காரணங்களால், சில காலம் பூஜையில்லாமல் இருந்தது. அந்த சமயம் எலவனாசூர் துக்கடி தாசில்தார் ஒருவர், வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க வந்தபோது, இத்திருக்கோயில் பூஜையில்லாமல் இருந்ததைக் கண்டு வருத்தமடைந்து, அங்கிருந்த வைணவப் பெரியோர்கள் எல்லாரையும் அழைத்து, சமரசம் பேசி பூஜையை நன்றாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஊரில் இருந்த வைணவப் பெரியவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, அனைவரும் தங்களுக்குச் சொந்தமான பல நிலங்களை கோயிலுக்குத் தானமாக வழங்கி, தினமும் பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்தனர். இவைகளெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவமாகும். ஆயினும், அன்றிலிருந்து இன்றுவரை முறைப்படி பூஜைகளும், உற்சவங்களும் தவராமல் நடக்கின்றன.

கோயிலின் சிறப்புகள்

இக்கோயில், 1898-ஆம் ஆண்டு திருக்கோவிலூர் ஸ்ரீதேகளீசப் பெருமாள், இக்கோயிலில் தங்கியிருந்தார் என்பதால், அபிமான ஸ்தல திருக்கோயிலாகத் திகழ்கிறது. அது மட்டுமல்ல, பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரமாகவும் விளங்கும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் வடமேற்கில், ஸ்ரீ அஹோபில மடம் 36வது பட்டம் ஜீயர் ஸ்ரீஸ்ரீனிவாச மஹாதேசிகன் ஸ்வாமிகளின் பிருந்தாவனம் (சமாதி) அமைந்துள்ளது.

முதலில் முன் மண்டபத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ கருட பகவான், பெருமாளை கைகூப்பி சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறார். அவரை தரிசித்து விட்டுத் திரும்பினால் ஆழ்வார், ஆச்சாரியர்கள் சந்நதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இவர்களையும் தரித்துவிட்டு, ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளையும், தாயார் அலர்மேல்மங்கையையும் கண்கொள்ளா காட்சியைக் கண்டு மகிழலாம்.

தாயின் தயை இல்லாமல் தழைக்குமோ பூமி. இக்கோயிலின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், இத்திருக்கோயிலை வலம் வருபவர்கள், மனதில் வேண்டிக்கொண்டு, சகல சௌபாக்யங்களையும், சத்புத்திரர்களையும் பெற்று பலன் அடைந்திருக்கின்றனர் என்பது உண்மை. மேலும் இக்கோயிலில், வைகானச ஆகம முறைப்படி மூன்று கால பூஜைகள் நடந்து வருகிறது.

உற்சவங்கள்

இக்கோயிலில், ஆண்டு முழுவதுமே உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பிரம்மோற்சவ சமயத்தில் பாட்டுக் கச்சேரி, மேளக் கச்சேரி, உபன்யாசம் என மிக விசேஷமாக நடக்கும். சித்திரை வருடப் பிறப்பு, அட்சயதிருதியை ஆகிய தினத்தில் கருடசேவையும், அதே போல், வைகாசி மாதம் விசாகத்தில் கருடசேவையும், ஆனி மாதத்தில் தாயார் ஊஞ்சல் உற்சவம், ஆடி மாதத்தில் திருக்கல்யாணம், ஆவணி மாதம் - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி உற்சவம், புரட்டாசியில் பிரம்மோற்சவம் மற்றும் திருத்தேர், ஐப்பசியில் பவித்ரோற்சவம், கார்த்திகையில் சிறப்பு அலங்காரங்கள், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா, தை மாதத்தில் ஆண்டாள் கனா உற்சவம், பங்குனியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இவைத் தவிர, பிரதி வெள்ளிக் கிழமை அன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் மாலை 7.30 வரை திறந்திருக்கும்.

எப்படி செல்வது: உளுந்தூர்பேட்டையிலிருந்து 14கி.மீ. தொலைவில் பாதூர் இருக்கிறது. இங்கிருந்து நடக்கும் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், பரிக்கல் நரசிம்மர் கோயிலில் இருந்து 12கி.மீ. தொலைவிலும் இக்கோயிலை அடையலாம்.

கனகவல்லி ரங்கராஜன்