Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பரிவர்த்தனா சக்ர யோகம்

ராஜயோகங்கள் மற்றும் விபரீத ராஜயோகங்களை விட மிகவும் பலம் பொருந்திய ராஜயோகம் என்பது பரிவர்த்தனா சக்ர யோகமாகும். இது போன்ற ராஜ யோகங்கள் சிலருக்கு மட்டுமே ஏற்படுகின்றது. அவர்களின் வாழ்வில் ஏற்படும் ஏற்றங்களும் மாற்றங்களும் மிகவும் விந்தையான செயல்களும் சந்திப்புகளும் அடங்கியதாக உள்ளது என்பது பல ஜாதகங்களின் ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாகும். இது போன்ற ஜாதகங்கள் பார்ப்பது என்பதே அரிதாகத்தான் உள்ளது. சில நேரங்களில் கணிப்புகளும் மிகப் பிரம்மாண்டத்தை கொடுக்கின்றன. இதில், இரண்டு கிரகங்களின் பரிவர்த்தனைகள் ஒரு பலனையும், மூன்று கிரகங்கள் பரிவர்த்தனை மற்றொரு பலனையும், நான்கிற்கு மேற்பட்ட கிரகங்கள் பரிவர்த்தனை மற்ெறாரு பலனையும் கொடுக்கின்றது. இந்த பரிவர்த்தனையால் ஏற்படும் செயல்களும் கிரக இயக்கத்தின் மீது மற்றொரு இயக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றால் மிகையில்லை. இது போன்ற ஜாதகப் பிறப்புகள் ஆயிரத்தில் ஒன்று பிறப்பெடுக்கும் என்பது நிதர்சன உண்மை...

பரிவர்த்தனா சக்ர யோகம் என்றால் என்ன?

ஒரு ராசிக்கு அதிபதியான கிரகம் மற்றொரு ராசிக்கும் மற்றொரு ராசிக்கு அதிபதியான கிரகம் பரிவர்த்தனையான கிரகத்தின் ராசிக்கும் மாறிக் கொள்வதற்குப் பரிவர்த்தனா சக்ர யோகம் ஆகும். இந்த கிரகங்கள் தங்களின் சொந்த வீட்டிற்குள் பரிவர்த்தனை பெறுவதால் ஆட்சி, உச்சம், நீசபங்கம் ஆகிய அமைப்புகளை ராசியின் பாவகங்களில் நிற்காமலே அந்த சக்தியை பெறுகின்றன என்பது நிச்சயமான உண்மை. இந்த கிரகங்கள் சுழற்சிக்குள் ஒரு பரிவர்த்தனை ஏற்படுவதால் அது சில சமயங்களில் வேகமான அமைப்பை ஏற்படுத்தி சக்ரம் போன்று சுழல்கிறது.

பரிவர்த்தனா சக்ர யோகங்களின் சிறப்புகள் யாவை?

லக்ன கேந்திரங்களாகிய கிரகங்கள் (1,4,7,10) மட்டும் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனை செய்யப்படுவது மஹாராஜ யோக கேந்திர பரிவர்த்தனா சக்ர யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

திரிகோணங்களில் உள்ள கிரகங்கள் (1,5,9) மட்டும் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனை செய்யப்படுவது மஹாராஜ யோக திரிகோணப் பரிவர்த்தனா சக்ர யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் (6,8,12) மட்டும் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனை செய்யப்படுவது மஹாராஜ தைன்ய யோகப் பரிவர்த்தனா சக்ர யோகம் என்று அழைக்கப்படுகிறது.

இது போன்ற கிரகப் பரிவர்த்தனைகளில் மஹாராஜ தைன்ய யோகப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது உறுதி.

பரிவர்த்தனா யோகங்களில் ராசிக் கட்டத்தில் நான்கு மூலையில் உள்ள ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பரிவர்த்தனைகள் சிறப்பாக இருக்காது என சாஸ்திரம் சொல்கிறது.

பரிவர்த்தனா சக்ர யோகத்தின் பலன்கள்

* பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் சில ராசிகளில் ராஜயோகப் பலன்களைத் தருகின்றன. சில தோஷங்களும் பெரிதளவில் இருப்பதில்லை.

* ஒரு கிரகம் நீசமானால் அந்த கிரகம் நீச பங்கம் ஆகி அந்த ராசி பாவகத்திற்கு ராஜயோகப் பலன்களை தருகின்றன.

* ஜாதகர் திடீரென முன்னேறுதல், எதிர்பாராத வெற்றிகளைப் பெறுதல், ஆச்சர்யம் அளிக்கும் நபர்களை சந்தித்தல், ஆச்சர்யமான வாழ்வின் மாற்றங்கள் யாவும் பரிவர்த்தனா சக்ர யோகத்தில் உண்டு.

* லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ நான்காம் (4ம்) அதிபதியும், பத்தாம் (10ம்) அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றால் அதற்கு நிஷ்கல யோகம் என்று பொருள். இந்த யோகம் புதையல் போன்ற பெரும் தனத்தை ஏற்படுத்துகின்றது.

* இதில் மறைவிடங்களில் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனையானால் மறை பொருள் கிடைத்தல் அல்லது மறை பொருள் தென்படுதல் மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாக ஏதேனும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துதல் ஏற்படுகின்றது.

* ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பரிவர்த்தனை ஏற்படும்போது அனைத்து திசா, புத்திகளும் மகத்தான சக்தியைப் பெறுகின்றது என்பதாகும்.

பரிவர்த்தனா சக்ர யோகத்திற்கான பரிகாரங்கள் என்ன செய்யலாம்?

* பரிவர்த்தனா பெற்ற கிரகங்களின் தானிய வஸ்துக்களை இரண்டு தனித்தனி டப்பாக்களில் நிரப்பி வைத்துக் கொண்டு அதனை பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு மாற்றி வைத்தால் அந்த கிரகங்கள் இயக்கங்களுக்கு உட்பட்டு நற்பலன்களைத் தருகின்றது. அவ்வாறு பரிவர்த்தனை செய்யும் கிழமைகள் முதலில் ஒரு கிரகத்திற்கு உரிய நாட்களிலும் மறுமுறை மற்றொரு கிரகத்திற்கு உரிய நாட்களிலும் செய்வது சாலச் சிறந்தது.

* கோயிலுக்குச் சென்று நவகிரகங்களில் உள்ள பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் தேவதைகளுக்கு உண்டான தானிய வஸ்துக்களை கொடுத்து அதற்குரிய நாளிலும் மற்றொரு கிரகத்திற்கு அதற்குரிய நாளிலும் அபிஷேகம் செய்தோ, அர்ச்சனை செய்தோ வழிபட்டால் சில தோஷங்கள் குறையும். மேலும், கிரகங்கள் பரிவர்த்தனை செய்வதால் அந்த கிரகங்களின் ஆசிக்கு உட்படுகிறீர்கள் என்றும் கொள்ளலாம்.

* கிரகங்களுக்குரிய பெயர்கள் உங்கள் உறவுகளில் இருக்குமாயின் அவர்களை சந்தித்துக் கொள்ளும் அந்த கிரகங்கள் நகர்வுகளுக்கோ அல்லது இயக்கத்திற்கோ உட்படுகின்றன என்பது ஜோதிடத்தின் சூட்சுமம் ஆகும்.