ராஜகோபுர தரிசனம்!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பழமையான வரலாற்றுப் பகுதிகளில் ஒன்று பரம்பையூரில் அமைந்துள்ள சோழகேரளீசுவரமுடைய நாயனார் கோயில். கோயிலின் மையக் கருவறையில் மிகப் பழமையான கல்வெட்டு மூலம் கி.பி. 11ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இத்தலம் செயல்பாட்டில் இருந்ததை உறுதி செய்கிறது. அதன் மூலம் ராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயில் இருந்துள்ளது என்று கல்வெட்டு மூலம் உறுதி செய்யப்படுகிறது. அதே சமயம் ராஜேந்திர சோழன் இத்தலத்தினை கட்டினார் என்று உறுதியாக கூற முடியாது. மேலும், கோயில் கட்டட அமைப்பினை பார்த்தால் பிற்காலப் பாண்டியர் பாணியை தழுவியதாக உள்ளது. சோழர் காலத்தில் இருந்த ஆலயம் பின்னர் பாண்டியர் காலத்தில் மாற்றம் பெற்றிருக்கலாம்.
இந்தக் கோயிலின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டுக்குள் அடக்க முடியாது. இதன் ஆரம்பகால வரலாறு குறைந்தபட்சம் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை செல்கிறது. ராஜேந்திர சோழன் காலத்திற்குப் பின்னர் குறிப்பாக முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகளும் இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பாண்டியர் கால பதிவுகளும் உள்ளன.
கோயிலின் கருவறை அழகிய அடுக்குமுறை அலங்காரத்துடன் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தூண் அமைப்புகள் அடிப்பகுதியில் சதுர வடிவத்திலும், மேல்பகுதியில் பலகோண வடிவத்திலும் அமைந்துள்ளன. தூண்களின் அடிப்பகுதியில் நாகபதம் காணப்படுகிறது. கருவறை சுவர் மேற்பகுதியில் உள்ள தேவகோஷ்டங்களைச் சுற்றிய பகுதிகளில் பஞ்சரம் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. மேல்பகுதியில் ஒற்றை வளைவு கொண்ட கொர்னீஸ் அமைப்பும், அதில் குடு வடிவ அலங்காரங்களும் அமைந்துள்ளன. சில குடுக்களின் மையத்தில் வட்ட வடிவ அமைப்பும், அதன் உள்ளே உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது.
கருவறைக்கு முன்பாக அமைந்துள்ள அர்த்தமண்டபமும் கோயிலின் பழமையான கட்டிட அமைப்பில் முக்கியப் பகுதி. கருவறையை போலவே அர்த்தமண்டபமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய ராஜகோபுரம் கொண்ட கோயில் என்ற தோற்றத்தைவிட, மண்டபம், கருவறை, சுற்றுச்சுவர் மற்றும் அதனுடன் இணைந்த கட்டமைப்புகள் முக்கியமாக காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள திருமதிலின் உட்புறம் அமைந்துள்ள தூண்கள் கோயிலின் சுற்றுப்பகுதியை முழுமையாகச் சுற்றி அமைந்திருந்தது.
இந்தக் கோயிலின் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு அதன் கல்வெட்டுகள். மொத்தம் பன்னிரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவை கோயிலின் வரலாற்றை அரசர்களின் கால வரிசையோடு மட்டும் அல்லாமல், உள்ளூர் தலைவர்கள், ஊர் மக்கள், நிலக்கொடைகள் மற்றும் சமூக வாழ்வோடும் இணைத்துக் காட்டுகின்றன.
குன்றுசூழ் நாட்டு பரம்பையூர் சோழகேரளீசுவரமுடைய நாயனார் கோயில், புதுக்கோட்டை பகுதியின் நீண்டகால கோயில் வரலாற்றில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான தலம். ஆயிரம் ஆண்டுகளை கடந்து வரலாற்றின் பல அடுக்குகளை தன்னுள் தாங்கி நிற்கும் இந்தப் பரம்பையூர் கோயில், ஒரு வழிபாட்டுத் தலம் என்பதைக் கடந்து, அந்தப் பகுதியின் அரசியல், சமயம், கட்டிடக்கலை மற்றும் சமூக வரலாற்றை வாசிக்க உதவும் முக்கியமான வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது.
திலகவதி


