Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பங்குனி உத்திரமும் திருமணங்களும்!

பன்னிரண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணியத் திருநாளே பங்குனி உத்திரம்.ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய நாளாக இருக்கும். பங்குனி மாத பெளர்ணமியன்று வரும் பங்குனி உத்திரத்துக்குரிய நாள் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய சிறப்பு நாளாக கருதப்படுகிறது.

முருகன் கோயில்களில் கொடியேற்ற உத்ஸவத்துடன் ஆரம்பித்து பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். பக்தர்கள் விரதமிருந்து, காவடி எடுத்து, பாதயாத்திரையாக ஆறுபடை வீடு கோயில்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் 10 நாட்கள் விசேஷமாக நடைபெறும். சென்னையில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் விழா நடத்தி கபாலீஸ்வரருக்கும், கற்பகாம்பாளுக்கும் திருமண விழா, தேரோட்டம் நடைபெறும்.

பங்குனி உத்திர நாளில் பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது.பங்குனி உத்திரத்தன்று பல கோயில்களில் தீர்த்த யாத்திரை மற்றும் கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்திர நாளில் பல தெய்வங்களுக்கு திருமணம் செய்யப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.சிவனும்-பார்வதியும், சோமசுந்தரர்-மீனாட்சி, மீனாட்சி-சுந்தரேஸ்வரராக திருநாமம் தாங்கி மணம் புரிந்த நாளே பங்குனி உத்திர நாளில்தான்.

முருகப்பெருமான்-தெய்வானையை திருமணம் புரிந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம். ஸ்ரீ ராமன்-சீதாதேவி, பரதன்-மாண்டலி, லட்சுமணன்-ஊர்மிளை, சத்ருக்கனன்-சருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்ற நாளும் பங்குனி உத்திர நன்நாளில்தான்.படைப்புக் கடவு ளான பிரம்மா- ஸ்ரீசரஸ்வதி தேவியை தமது நாவில் அமர்த்தியது பங்குனி உத்திர நாளில்தான்.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்து மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் நாளாகவும், லட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றிய நாளாக கூறப்படுகிறது.ஈசனின் தவத்தை கலைத்த மன்மதன் எரிக்கப்பட்டு, ரதியின் வேண்டுதலால் மீண்டும் உயிர் பெற்ற நாளும் இதுவே.காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த தினமும் இந்நாளே. இந்த நாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் தானம் தருவது மிகவும் புண்ணியமாகும்.பங்குனி உத்திர நாளில் தான, தர்மம் போன்ற புண்ணிய காரியங்களில் ஈடுபட்டால் நம் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.