Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழனி பிள்ளைத்தமிழ்...

இதுவரை...

அதே வினாடியில் அங்கே அதிசயம் நடந்தது! தேர் தானாகவே உருண்டது. கண்ட சின்னப்பர் கண்களில் கண்ணீர் வழிய,

``பழனித்துரையே! முத்துக்குமாரா! எளியேன் பாடல் கேட்டு மகிழ்ந்தாயா? இரக்கம் கொண்டு வந்தாயா? வாரும்! வாரும்! பிரபுவே வாரும்! வாரும்!’’ என்று வாழ்த்தினார்.

அவரைப் பின் தொடர்ந்து, ஆடி அசைந்து வந்தது, அருமையான அந்தத் தேர்.

இனி…

(இதற்கு முன்னால் சேந்தனார் பல்லாண்டு பாட திருத்தில்லையில் திருத்தேர் ஓடியது அல்லவா? அதேபோல, முருகப் பெருமான் திருத்தேர் பழனியில் ஓடிய அருமையான வரலாறு இது)தேர்வலம் வந்து நிலை நின்றதும் சின்னப்பர் தேரில் இருந்த தெய்வத்தைத் தானே இறக்கினார். கோயிலுக்குள் தூக்கிச் சென்றார். அபிஷேகம் முதலியவைகளை செய்ய அங்குதான் அர்ச்சகர்கள் யாருமே இல்லையே! கதறி அழுதார் சின்னப்பர். அப்போது ஆகாயத்தில் இருந்து ஓர் அசரீரி கேட்டது;

``பக்தா! முன் பாடியது தேர்ப் பருவம். அப்படியே மற்ற பருவங்களையும் பாடு! அதுவே எமக்குத் தைலம், மஞ்சள் காப்பு, பால், தயிர், தேன், நெய், கருப்பஞ்சாறு, இளநீர், சுகந்தப் பொடி, விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். அதுவே எமக்குப் பரமதிருப்தி’’ என்றது. சின்னப்பர் உள்ளம் உருகினார்;``முருகா! வேதநாதத்தை விரும்புவதைப் போல, எளியேன் பாடலும் உமையாள் மகனே! உமக்கு விருப்பமானதா! பாடுகிறேன் ஐயா! பாடுகிறேன். நீ பாட வைத்தால் பாடாதவர்கள் இருக்கிறார்களா?’’ என்று உள்ளம் குளிர்ந்து உருகிப் பாடினார்.

ஆரம்பத்தில் காப்பு பருவம், பிறகு இப்படியே ஒவ்வொரு பருவங்களாகப் பாடி, அங்கே சிறுதேர் பருவம் ஏற்கனவே பாடினார் என்று சொன்னோம் அல்லவா? அதையும் சிறுதேர் பருவம் எனும் பகுதியில் இணைத்துப் பழனி பிள்ளைத் தமிழைப் பாடி முடித்தார் சின்னப்பர். அதே நேரம், பழனி ஆண்டவனின் சந்நதியில் இருந்து, `கலகல’ என்று ஒரு சிரிப்பொலி கேட்டது. விழுந்து வணங்கினார் சின்னப்பர்; ஆலயத்தை விட்டு வெளியே வந்தார்.

கும்பினிக்காரர்கள் பழனியைச் சுற்றி ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். சின்னப்பரையும் அறியாமல் ஓர் ஆவேசம் அவருக்குள் பிறந்தது. பழனி அடிவாரத்திற்கு விரைந்த அவர் அங்கு தயாராக இருந்த குதிரை மீது தாவி ஏறினார்; ``முருகா! முருகா!’’ என்று உருவிய வாளும் கேடயமும் ஏந்திக் கடும் கோபத்துடன் சென்றார். குதிரையின் குளம்பொலி அதிர்ந்தது; கும்பினிக்காரர்களை நோக்கி வெகுவேகமாகப் போனது குதிரை.

`` என்ன இது? பலம் மிகுந்த எதிரிகள் முன்னால், இவர் தனியாகப் போகிறாரே என்று, அங்கே ஒளிந்து கொண்டிருந்த ஒரு சில ஊர்க்காரர்கள் பார்த்தார்கள்; நடுங்கினார்கள்.ஆனால், அதே சமயம் அந்தக் கும்பினிக்காரர்கள் திடீரென்று புறம் காட்டி ஓடினார்கள். காரணம்? சின்னப்பருக்கு பின்னும் இருபுறமும் பெரும் சேனை வெள்ளம் - ஏராளமான வீரர்கள் அப்படியே பெருகி வருவதைக் கண்டு நடுங்கினார்கள், அந்தக் கும்பினிக்காரர்கள். அதன் காரணமாகவே ஓடினார்கள். தன்னை மறந்த தனி நிலையில் சின்னப்பர் ஆவேசம் கொண்டு, கண்ணிற்கு எட்டிய தூரம்வரை அவர்களைத் துரத்தினார். சிதறி ஓடி மறைந்த அவர்களை இன்னும் தேடுவது தகாது திரும்பு என்று அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது.

உடனே குதிரையைத் திருப்பினார். `பளபள’ என்று பழனி மலை மின்னிக் கொண்டிருந்தது. அந்த ஒளியில், திரும்பு கோலத்தில் மாபெரும் சேனைகள் தோன்றி மறைந்தன. அதைப் பார்த்த சின்னப்பர்,``எம்பெருமான் முருகப் பெருமான் திருவருள் இருந்தவாறு இவ்வாறோ’’ என்று விதிர்விதிர்த்து, அப்படியே உடம்பெல்லாம் வியர்த்து ஆலயத்தை அடைந்தார். முருகப் பெருமான் சந்நதியைத் தேடிச் சென்று உள்ளே நின்று பாடினார்.

``தனித்துப் பரிமேல் தகவொடு செல்வி செல்கென்று

செனித்த படை சூழச்செய்தே - பனித்தவர்கள்

வாவிச்செலச் செய்தே வாழ்வித்த நின்னடியில்

தாவுகின்றது என் உளமே தான்’’

- என்று அங்கே கண்ணீர் சிந்திப்பாடித் துதித்து, தன் இருப்பிடத்தை அடைந்தார்.

ஊர்மக்கள் விவரம் அறிந்தார்கள். மிகுந்த குதூகலத்தோடு சின்னப்பரையே தெய்வம் என்று கொண்டாடினார்கள். சின்னப்பர் அதைத் தடுத்தார்;``நான் தனி மனிதன். மற்றொரு வகையில் பக்தர்களின் பாதத் தூளி. நீங்கள் இந்த அளவிற்கு என்னைப் போற்றுவது பெரும் பிழை. முருகப் பெருமானின் தேரை நடத்தியது இந்தப் பிள்ளைத் தமிழ். இதுதான் வீம்பு கொண்டு வந்த அந்தத் தீயவர்களை விரட்டியது.

வேண்டுமானால் இதை மனப்பாடம் செய்து, முருகன் திருமுன் பாடுங்கள்!’’ என்று பழனி பிள்ளைத் தமிழை அவர்களிடம் கொடுத்தார். அதே நேரம், அங்கிருந்து ஓடிய கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் அவ்வளவு பேர்களுடைய கனவிலும், சின்னப்பரின் கம்பீரமான உருவம் தோன்றி, பயங்கரமாக சிரிக்க, அவரோடு வந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களை விரட்டி விரட்டி அடித்தார்களாம். இப்படிக் கனவுகண்ட அவர்கள் விழித்தார்கள்; எல்லாம் தெரிந்துகொண்டார்கள்; தகுந்த ஆட்கள் மூலம் சின்னப்பரிடம் மன்னிப்பு வேண்டினார்கள்.

அதுமட்டுமல்ல; தங்கள் பெயராலே கும்பினி வேலாயுதர் எனும் ஒரு முருகப் பெருமானையும் அங்கே தோற்றுவித்தார்கள்; ஆராதனைக்கென்று ஏராளமான பொருளை வாரி வழங்கினார்கள். சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் சின்னப்பரின் கனவில் முருகப் பெருமான் எழுந்தருளி,``பத்தா! பிறவி அந்தகன் ஒருவன் அடிவாரத்தில் என்னை வழிபட வேண்டும் என்று அழுகிறான். உன் கையால் அவன் கண்ணைத் தொடு!’’ என்று சொல்லி மறைந்தார்.

கனவு கலைந்ததும், உடனே சின்னப்பர் அடிவாரத்திற்கு ஓடிப்போய், அந்த அந்தகன் அன்பரைச் சந்தித்து அவர் அன்பை பக்தியை அறிந்தார்; கட்டித்தழுவி அவர் கண்ணைத் தடவினார். அதே வினாடியில் அந்த அடியாருக்கு பார்வை தெரிந்தது அவரிடம் சின்னப்பர் அன்பனே இது உனக்கும் எனக்கும் மட்டும் இருக்கட்டும் ஊரெங்கும் இதை பறைசாற்றாதே என்றார்.

பழனி ஆண்டவரிடம் பக்தி மிகுந்து, பழனி பிள்ளைத்தமிழ் பாடிய சின்னப்பர் முருகன் திருவடிகளை அடைந்தார். பழனி பிள்ளைத் தமிழ் இன்று வரை ஒரு சில இடங்களில் இருக்கிறது. அற்புதமான சந்தங்களையும் தமிழின் ஆற்றலையும் விளக்கக் கூடியது; பக்தி மயமானது. ஆகவே, ஒரு முறையாவது அந்நூலைப்படித்துப் பார்த்தால், நம்மை அறியாமலேயே நமது மனத்திலும் பக்தி பிறக்கும்! பன்னிருகை பரமன் அருள் சிறக்கும்!

பி.என்.பரசுராமன்