ஒரு மழை நாள். நண்பர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். வெளியே மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. அறையின் சுவர்களில் பல படங்கள். பழைய நினைவுகளையும், அவருடைய ரசனையையும் சொல்லிக் கொண்டிருந்த அந்தப் படங்களைப் பார்த்தபடி, நானும் நண்பரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.
நண்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், அவரிடம் நான் மதிக்கும் ஒரு குணம் உண்டு. அவர் வெறுப்பினால் நாத்திகர் அல்ல. கேள்விகளால் நாத்திகர். தெளிவாகச் சிந்திப்பவர். நல்லவர். தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பவர். ஆனால் எதிரில் இருப்பவ ருடைய கருத்தையும் கேட்கத் தயாராக இருப்பவர்.
நாங்கள் எப்போது சந்தித்தாலும் உரையாடல் ஒரு கட்டத்தில் வாதமாக மாறிவிடும். சார்வாக மதம் முதல் கடவுள் சித்தாந்தம் வரை... நடைமுறை வாழ்க்கை முதல் கோயில்கள் வரை... கோயில் போன்ற புனிதமான இடங்களில் நடக்கும் சில தவறான செயல்கள் முதல் ஆன்மிக நம்பிக்கைகள் வரை...உற்சவங்களின் பின்னால் இருக்கும் தத்துவம் முதல் நம்முடைய வாழ்வியல் சடங்குகள் வரை... அவர் கேள்விகளை வீசிக் கொண்டே இருப்பார். என்னால் இயன்ற அளவுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
அவர் ஒரு கேள்விக்கான பதிலை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று நினைத்தால், உடனே அதிலிருந்து இன்னொரு கேள்வியை உருவாக்கி விடுவார். அன்றும் அப்படித்தான். தேநீரை மெதுவாக உறிஞ்சியபடி திடீரென்று என்னைப் பார்த்தார்.
“நான் ஏன் கடவுளை நம்ப வேண்டும்?”
நான் சிரித்தேன்.
“கடவுளை நம்புவதோ, நம்பாததோ உன்னுடைய விருப்பம். நான் எப்போதும் ‘கடவுளை நம்பு’ என்று உன்னை வற்புறுத்தியது கிடையாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நாம் கடவுளை நம்பு கிறோமா, நம்பவில்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.கடவுள் நம்மை நம்பும் படியாக நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும்.”
அவர் சற்றே நின்றார்.பிறகு சிரித்தார்.
“இதோ பார். நீ நேரடியாகப் பதில் சொல். உன் சாஸ்திரம் என்ன சொல் கிறது என்று சொல். நேரில் பார்க்க முடியாத, வெறும் ஊகங்களால் மட்டுமே பேசப்படுகிற, உலகத்தில் நடக்கும் இத்தனை அநியாயங்களையும் பார்த்துக் கொண்டே சும்மா இருக்கிற ஒரு கடவுளை நான் எப்படி நம்புவேன்?
அது வெறும் மூடநம்பிக்கை!”
நான் உடனே பதில் சொல்லவில்லை.
சிறிது நேரம் வெளியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தேன்.
“நீ கேட்கிற கேள்வி புதிதல்ல.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் இதே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்.‘கடவுள் இருந்தால் ஏன் துன்பம்?’ ‘கடவுள் இருந்தால் ஏன் அநியாயம்?’ ‘நல்லவன் ஏன் கஷ்டப்பட வேண்டும்?’ ‘தீயவன் ஏன் சில சமயம் நன்றாக வாழ வேண்டும்?’இவை நாத்திகருடைய கேள்விகள் மட்டுமல்ல. ஆன்மிக வாதியினுடைய கேள்விகளும்தான்.”
அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ஆனால் இங்கே ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. நீ கேட்கிறாய் - ‘கடவுள் இருந்தால் ஏன் அநியாயத்தைத் தடுக்கவில்லை?’ நான் கேட்கிறேன் - ‘அநியாயம் என்றால் என்ன?’நீ சொல்வாய் - ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவது அநியாயம். நான் கேட்பேன் - ஏன்? ‘அது தவறு’ என்பாய்.
அவருக்கான பதிலையும் நானே சொல்லி மேல் கேள்வி எழுப்புவதை அவர் ரசித்தார்.
நான் தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு தொடர்ந்தேன்.
ஏமாற்றுவது அநியாயம், தவறு என்றால் அடுத்த கேள்வி, ஏன் தவறு? அதற்குப் பின்னால் ஏதோ ஒரு அறநெறி இருக்கிறது. அந்த அறநெறி எங்கிருந்து வந்தது?மனிதன் உருவாக்கிய ஒப்பந்தமா? சமூகத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்ட விதியா?அல்லது மனிதனைவிட உயர்ந்த ஒரு தர்ம உண்மையா? இதுதான் நம்முடைய விவாதத்தின் ஆழமான இடம்.”
நண்பர் உடனே குறுக்கிட்டார்.
“நீ சொல்வது எல்லாம் சரிதான்.. அதற்காக கடவுள் இருக்கிறார் என்று எப்படி முடிவு செய்ய முடியும்?”
“முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.’’
“நான் உன்னை ஒரு கணிதச் சமன்பாட்டைப் போல கடவுளை நிரூபிக்கச் சொல்லவில்லை.” ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் சிந்தித்துப் பார்.இந்த உலகத்தில் மனிதன் வெறும் உயிரியல் இயந்திரம் என்றால், ‘நல்லது’, ‘கெட்டது’, ‘நியாயம்’, ‘அநியாயம்’, ‘தியாகம்’, ‘கருணை’, ‘தர்மம்’ என்ற வார்த்தைகளுக்கு இறுதி அர்த்தம் என்ன?
பலமானவன் பலவீனமானவனை அழித்துவிட்டால், இயற்கையின் விதிப்படி அது நடந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். ஆனால் மனித மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அப்பாவி குழந்தை பாதிக்கப்படும்போது, ‘இது இயற்கையின் ஒரு நிகழ்வு’ என்று மட்டும் நம்மால் கடந்து செல்ல முடியவில்லை.நம்முள் ஏதோ ஒன்று எழுகிறது.‘இது நடக்கக்கூடாது’ என்று. அந்த ‘கூடாது’ எங்கிருந்து வருகிறது? அதுதான் என்னுடைய கேள்வி.”
நண்பர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். “அப்படியென்றால் துன்பத்தை எப்படி விளக்கப் போகிறாய்?”
“சாஸ்திரம் துன்பம் இல்லை என்று சொல்லவில்லை. மாறாக, இந்த உலக வாழ்க்கையே நிலையற்றது என்றும், கர்மத்தின் விதி இருப்பதாகவும், ஒவ்வொரு செயலுக்கும் விளைவு இருப்பதாகவும் சொல்கிறது. ஆனால், அதையும் தாண்டி இன்னொரு விஷயத்தைச் சொல்கிறது. நமக்குக் கிடைத்த வாழ்க்கையை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நீ கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதத்தில் நான் உன்னை வெல்ல விரும்பவில்லை. ஆனால், ஒரு கேள்வி கேட்கிறேன். நீ கடவுளை நம்பவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் நீ நம்பும் மனிதநேயம் உன்னை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது?
ஒருவன் கடவுளை நம்புகிறான். ஆனால் அவன் பிறரை ஏமாற்றுகிறான். அவனுடைய பக்தியால் என்ன பயன்? இன்னொருவன் கடவுளை நம்பவில்லை.ஆனால் பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறான். துன்பப்படுகிறவனைத் தாங்குகிறான்.தன்னால் முடிந்தவரை யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறான். அவனுடைய மனிதநேயம் மதிக்கப்பட வேண்டியதுதானே?”
நண்பர் தலையசைத்தார்.
“அதைத்தான் நான் முதலில் சொன்னேன்.கடவுளை நாம் நம்புவது ஒருபுறம் இருக்கட்டும். கடவுள் நம்மை நம்பும் படியாக நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும்.
இதுதான் ஆன்மிகத்தின் முதல் படி.
கோயிலுக்குச் செல்வது மட்டும் ஆன்மிகம் அல்ல. நெற்றியில் திருமண் இட்டுக்கொள்வது மட்டும் ஆன்மிகம் அல்ல. நூறு ஸ்லோகங்களைச் சொல்வதும் மட்டும் ஆன்மிகம் அல்ல. ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நேர்மையாகச் செய்வது. தனக்கு அதிகாரம் இருந்தாலும் பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பது. தனக்கு வாய்ப்பு இருந்தாலும் அநியாயமான வழியில் முன்னேறாமல் இருப்பது. தன்னைவிட பலவீனமான ஒருவனைப் பார்த்தால் அவனுக்கு உதவுவது. இதுதான் இறைவனுக்குப் பிடித்த வாழ்க்கை என்று நம்முடைய சாஸ்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன.”
வெளியே மழை இன்னும் விடவில்லை.
நண்பர் தன்னுடைய தேநீர் கோப்பையை மேசையில் வைத்தார்.
“ஆனால் ஒரு சந்தேகம் இருக்கிறது.
கடவுள் இருந்தால், அவர் ஏன் நம்மை இப்படிப் படைத்தார்? ஏன் தவறு செய்யும் வாய்ப்பையே கொடுத்தார்?”
நான் சிரித்தேன்.
“அதுதான் சுதந்திரம்.
நல்லதைச் செய்யும் சுதந்திரம் இருக்கும்போது, தவறைச் செய்யும் சுதந்திரமும் இருக்கும்.
தவறு செய்ய முடியாத மனிதனை நல்லவன் என்று எப்படி அழைப்பது?
கையில் கத்தி வைத்திருக்கிறவன் ஒருவனை கொல்லாமல் இருப்பது ஒரு தேர்வு. கையில் கத்தி கொடுக்கப்படவே இல்லை என்றால், அது தர்மம் அல்ல.
மனிதனுக்குத் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வுகளின் வழியாகத்தான் அவனுடைய குணம் உருவாகிறது. அதனால்தான் சாஸ்திரம் வாழ்க்கையை ஒரு பரீட்சை போலவும், ஒரு வாய்ப்பு போலவும் பார்க்கிறது.”
அவர் என்னைப் பார்த்தார்.
“அப்படியென்றால் கடவுளை நிரூபிக்க உன்னிடம் ஆதாரம் இல்லையா?”
“உனக்கு எந்த ஆதாரம் வேண்டும்?”
“கண்ணால் பார்க்க வேண்டும்.”
“காற்றைக் கண்ணால் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை.”
“ஆனால் அதன் விளைவை உணர்கிறாய்.
அன்பைக் கண்ணால் பார்த்திருக்கிறாயா?
நம்பிக்கையை? மனசாட்சியை? நீதியை? அவற்றை எடையிட்டுப் பார்த்திருக்கிறாயா?
‘‘இல்லை.’’
‘‘ஆனால், அவை இல்லை என்று சொல்லிவிட முடியுமா?’’
கடவுளை நிரூபிப்பது என்பது ஆய்வகத்தில் ஒரு பொருளை வைத்து காட்டுவது போன்றது அல்ல. அது ஒரு அனுபவம். ஒரு தேடல். ஒரு வாழ்க்கைப் பயணம்.”
நண்பர் சிரித்தார்.
“சரி. நான் கடவுளைத் தேடிப் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். எங்கே தொடங்குவது?”
நான் சொன்னேன்:
“முதலில் கோயிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. முதலில் உன்னிடமிருந்து தொடங்கு. உன் மனசாட்சியிடம் ஒரு கேள்வி கேள். நான் யாருக்கும் அநியாயம் செய்யாமல் வாழ்கிறேனா?’’
அதற்குப் பிறகு இன்னொரு கேள்வி.
‘என்னால் ஒருவருக்கு நன்மை செய்ய முடிந்தபோது செய்தேனா?’
அதற்குப் பிறகு...
‘என்னுடைய சுயநலத்தைத் தாண்டி இன்னொருவருக்காக நான் ஏதாவது செய்திருக்கிறேனா?’
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடத் தொடங்கு.
ஒருவேளை நீ கடவுளைத் தேடிக் கொண்டிருக்கும்போது...
கடவுள் உன்னுள் ஏற்கனவே தேடிக்கொண்டிருப்பதை உணரலாம்.”
நண்பர் எதுவும் பேசவில்லை.
வெளியே மழை சற்றே குறைந்திருந்தது.
சுவரில் இருந்த ஒரு படத்தைப் பார்த்தபடி அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அன்று எங்களுடைய விவாதத்தில் யார் வென்றார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர் நாத்திகராகவே இருந்திருக்கலாம். நானும் என் நம்பிக்கையில் இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த மாலை ஒரு விஷயம் மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. கடவுளைப் பற்றிய மிகப் பெரிய விவாதம், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல. கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவன், அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்கிறானா என்பதுதான்.
ஏனென்றால்... நாம் கடவுளை நம்புகிறோமா என்பது கடவுளுக்கு ஒரு
கேள்வியாக இருக்காமல் இருக்கலாம்.
ஆனால்...
கடவுள் நம்மை நம்பலாமா என்பது நம்முடைய வாழ்க்கைக்கே ஒரு கேள்வி.



