Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனதேவதைகள் வழிபாடு பற்றி..?

?வனதேவதைகள் வழிபாடு பற்றி..?

- டி.நரசிம்மராஜ், மதுரை.

இயற்கையை வணங்க வேண்டும், இயற்கை என்பதே இறைவன் நமக்களித்த மிகப்பெரிய சொத்து, அந்த இயற்கையைக் காக்கும் பணியைச் செய்யும் வனதேவதைகளை சிறப்பான முறையில் வழிபட வேண்டும் என்பதை நமது தர்மம் வலியுறுத்துகிறது. சாக்த முறையில் வனதுர்கா வழிபாடு என்பது உண்டு. தேனும் பேரீச்சம்பழமும் கலந்து நைவேத்யம் செய்து வழிபட்டாலே போதுமானது. ரிக் வேதத்தில் அரண்யானி

சூக்தம் என்ற மந்திரமே தனியாக உள்ளது. வனதுர்கை வழிபாட்டின்போது இந்த உயரிய மந்திரம் ஆனது ஜபிக்கப்படுகிறது. காட்டு வழி பயணம் மேற்கொள்ளும்போதும், வனப்பகுதியில் நிலம் வாங்கும்போதும், மரம் வெட்டும்போதும் இந்த மந்திரத்தை ஜபித்து பூஜை செய்ய வேண்டும். வனதேவதை வழிபாடு என்பது வேத சாஸ்திரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

?தாய், தந்தை இருப்பவர்கள் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது என்கிறார்கள். சமயத்தில் அருகில் வசிக்கும் குடும்பத்தில் அல்லது உறவினர்கள் மத்தியில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு உதவ சுடுகாடு வரை செல்ல நேரிடுகிறது. இதற்கு என்ன செய்ய?

- பிரேம்குமார், பிட்சாண்டார்கோவில்.

தாய், தந்தை இருப்பவர்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்று சொல்வதெல்லாம் அறியாமையே. தாராளமாகச் செல்லலாம். சுடுகாடு என்பது ருத்ர பூமி. சிவபெருமானின் ஆதிக்கம் பெற்ற ஒரு இடம். மஹாஸ்மசானம் அதாவது மிகப்பெரிய சுடுகாடு என்று காசிக்குப் பெயர். அப்படி சுடுகாட்டையும் ஒரு புனிதமான இடமாகத்தான் நம்முடைய சாஸ்திரமானது சொல்கிறது. சுடுகாட்டில் பேய் இருக்கும் என்று கருதுவதும் மூடநம்பிக்கையே. இறைவன் வாசம் செய்யும் இடத்தில் பேய் எவ்வாறு இருக்கும்? திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வந்தால்தான் செல்ல வேண்டும். ஆனால் மரணச் செய்தியைக் கேட்டவுடன் அவர்கள் அழைத்தாலும் சரி அழைக்காவிட்டாலும் சரி, எதிரியாக இருந்தாலும் கூட உடனடியாகச் சென்று துக்கத்தில் பங்கேற்க வேண்டும். பெற்றோர் இருப்பவர்கள் கூட தாராளமாக இறந்தவர்களின் சவ ஊர்வலத்தில் பங்கேற்பதோடு சுடுகாடு வரை சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை எந்தவிதமான தயக்கமுமின்றிச் செய்யலாம். அவ்வாறு மரணம் நடந்த வீட்டில் உதவி செய்பவர்களுக்கு நூறு யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பதுதான் நிஜம். இதில் எந்தவிதமான தயக்கமோ பயமோ தேவையில்லை. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். கோடிபுண்ணியம் கிட்டும்.

?இந்த இந்த ராசிக்காரர்கள் இன்னின்ன கோவில்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் மீறிச் சென்றால் தடைகள் ஏற்படும் என்றும் சில ஜோதிடர்கள் கூறுகிறார்களே? உண்மையா?

- சூர்யா, சென்னை.

அப்பட்டமான பொய். இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பும் மனிதர்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்பதே மெய்.

?உறவினர் ஒருவருக்கு உடலில் வெள்ளை தழும்பு உள்ளது. அதற்கு என்ன பரிகாரம் செய்தால் சரியாகும்?

- கே.எம். ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.

மருத்துவரின் ஆலோசனையை முறையாகப் பின்பற்றி வருவதோடு அரசமரத்தடி நாகருக்கு நீருற்றி அபிஷேகம் செய்து அந்த நாகர்சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டு வரச் சொல்லுங்கள். விரைவில் தோல் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கக் காண்பார்கள்.

?சுபகாரியங்கள் விலக்கப்பட வேண்டிய கரிநாள் அன்றுதானே இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் வருகிறது? என்ன செய்வது? கொண்டாடாமல் இருக்க முடியுமா?

- மா.பா.சங்கரநாராயணன், புதுக்கோட்டை.

சுபகாரியங்கள் என்பது வேறு, பண்டிகைகள் என்பது வேறு என்ற புரிதல் தங்களுக்குத் தேவை. பொங்கல் பண்டிகை என்பது கரிநாள் அன்றுதான் வரும். தை மாதத்தின் முதல் மூன்று நாட்களுமே கரிநாட்கள் தான். தை மாதம் ஒன்றாம் தேதி தான் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். தை மாதத்தின் இரண்டாம் தேதி அன்று மாட்டுப் பொங்கலையும் மூன்றாம் தேதி அன்று காணும் பொங்கலையும் சிறப்பான முறையில் கொண்டாடுகிறோம். அதற்காக அந்த நாட்களில் சுபகாரியங்கள் என்று அழைக்கப்படும் திருமணம், புதுமனைப் புகுவிழா போன்றவற்றைச் செய்வதில்லையே. அதே போல கிருஷ்ண ஜெயந்தி என்பதை தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஸ்ரீ ராமநவமி என்பதை வளர்பிறை நவமி நாளிலும் கொண்டாடுகிறோம். நவராத்திரியில் வரும் அஷ்டமி நாளில் துர்காஷ்டமி பண்டிகை, நவமி நாளில் சரஸ்வதி பூஜை முதலான பண்டிகைகளை சிறப்பான முறையில் கொண்டாடுகிறோம். அந்த நாளில் தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள் ஆன திருமணம், கிரகபிரவேசம் (புதுமனை புகவிழா)போன்றவற்றைச் செய்வதில்லையே. பண்டிகைகள் என்பது இறைவழிபாடு சம்பந்தப்பட்டது. இறைவனைப் பொறுத்த வரை எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான். தனிப்பட்ட மனிதன் தன் வாழ்வில் நடத்திக் கொள்வதே சுபகாரியங்கள். இந்த சுபகாரியங்களுக்குத்தான் நல்ல நாள், நட்சத்திரம், லக்னம் எல்லாவற்றையும் பார்த்துச் செய்ய வேண்டும். எல்லா சுபமுகூர்த்த நாட்களிலும் எல்லோரும் அந்த சுபநிகழ்ச்சிகளைச் செய்துவிட முடியாது. அந்த நிகழ்வினைச் செய்யும் எஜமானருக்கு தாராபலன், சந்திரபலன் போன்றவை உள்ளதா என்று கணக்கிட்டுப் பார்த்துத்தான் சுபநிகழ்ச்சிகளைச் செய்ய இயலும். ஆக பண்டிகைகள் என்பது வேறு, சுபநிகழ்ச்சிகள் என்பது வேறு என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.