தேவலோகப் பசு காமதேனு கயிலை முக்கண்ணனிடம் வழுவாத பக்தி கொண்டாள். அவன் தன்னை பூவுலகில் நிலைத்துக் கொண்ட தலமான ஊத்துக்காடு கயிலாநாத ஆலயத்தில், தன் அன்புக் குழந்தைகளான நந்தினியையும், பட்டியையும் விட்டுச் சென்றாள். பசுக்கன்றுகள், மலர்ச் சோலைகளில் புகுந்து ஈசனுக்குரிய மலர்களைப் பறித்து பரமேஸ்வரனின் தாளில் சேர்த்தன. அருகே இருந்த அழகிய மடுவை தென்றல் வருடிச் சென்று பசுக்களை தழுவும்போது, பசுக்கள் தன் வயமிழந்து தவித்தன. அதனாலேயே அந்த மடுவின் மீது முகவாய் வைத்து சிற்றலை மோதி தெறிக்கும் நீர்த்திவலைகளை ஆவலோடு பார்த்துக்கிடந்தன. ஏனோ அப்பசுக்களுக்கு அந்த நீரினூடே செல்லும் காற்று கண்ணன் புல்லாங்குழல் இசைப்பதைப் போல இருக்கும்.
கண்ணன் வரமாட்டானா என்று ஏங்கிக் கிடப்பார்கள். பூக்கள் பறிக்கும் பசுக்களைப் பார்த்து, நாரதர் வியப்பார். ஒருநாள்.. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பு அரக்கனின் சிரம் மீது நர்த்தனம் ஆடி அவனின் ஆணவத்தை அடக்கிய கதையை அந்தப் பசுக்களுக்குச் சொன்னார். காளிங்க நர்த்தனம் செய்தபோது, கிருஷ்ணனுக்கு ஐந்து வயதுதான் இருக்கும் என்று குறிப்பிட்டபோது, நந்தினி, பட்டி எனும் இரு பசுக்களும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டன. குழந்தை கிருஷ்ணன் எப்படியெல்லாம் போராடியிருப்பார்.
எத்தனை கஷ்டப்பட்டிருக்கும் அந்தப் பிள்ளை என்று வெள்ளந்தியாக அழுதன. இதை கவனித்த கண்ண பெருமான், பசுக்களை ஆட்கொள்ள நினைத்தார். பூலோகத்தினுள் புகுந்தார்.
ஊத்துக்காட்டில் புல்லாங்குழலை இசைத்து தன் வருகையை அந்த மடுவிற்கு குறிப்பால் உணர்த்தினார். மடு, இப்போது பாற்கடல்போல உருக் கொண்டது. மடுவின் மையத்தில் பெரிய நீர்ச்சுழற்சியொன்று உருவாகியது.
பசுக்கள் தலைதூக்கி சுழற்சியையே இடைவிடாது கவனித்தன. மெல்லிய புல்லாங்குழல் நாதமும் உடன் சேர, கிருஷ்ணன் இங்கேதான் அருகே இருக்கிறான் என்பது உறுதியாயிற்று. சட்டென்று காளிங்கனின் சிரசில் தம் திருவடியை வைத்து அழுத்தியவாறு மேலெழுந்தான் கிருஷ்ணன்.
பசுக்கள், குளம்பால் தரைகீறி தாங்கொணா தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அவன்தான் காளிங்கனை எத்தனை அநாயசமாக அடக்கியிருக்கிறான் என்பதைப் பார்த்து, பசுக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.
இதே கோலத்தில், அர்ச்சாதவதாரம் எனும்படியான திவ்ய விக்கிரக வடிவத்தில் தன்னை நிறுத்திக் கொண்டான், கண்ணன். காமதேனுவின் சுவாசமாக இத்தலம் விளங்கியதால் ``தேனுசுவாசபுரம்’’ என்றும், ``மூச்சுக்காடு’’ எனும் பெயர் பிற்காலத்தில் ஊத்துக்காடு என்றும் திரிந்ததாக ஒரு கருத்து உண்டு. அது காமதேனுவின் குழந்தைப் பசுக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதால் கூட மூச்சுக்காடு என்றொரு பெயர் வந்ததாகவும் கூறுவர். எது எப்படியோ.. பசுக்களின் பாசம் கண்ணனை நமக்கு இங்கு அழைத்து வந்திருக்கிறது.
அடுத்து ஒரு கவியையும் கொடுத்தது. அது பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னார்குடியில் அவதரித்த அந்தக் குழந்தை வெங்கடசுப்பய்யனை கண்ணன் இத்தலத்திற்கு அழைத்தான்.
கிருஷ்ணனின் பிரேம அமுதம் வெங்கடரை நிறைத்தது. வேதநாராயணப் பெருமாள் எனும் கோயிலிலேயே தம் நேரத்தைச் செலவிட்டார். மடுவில் நடுவில் தோன்றிய காளிங்க நர்த்தன கிருஷ்ணன், இப்போது கோயிலின் கருவறையில் திவ்யமங்கல விக்கிரமாக எழுந்தருளியிருந்தான். கோயிலின் துளசிச் செடியருகில் சலங்கையின் சப்தம் ஜல்.. ஜல்.. என்று கேட்டது. அங்கு கண்ணன் புல்லாங் குழலை வாசித்தபடியே நின்றிருந்தான். வெங்கடர், தன்னை மறந்து பிரமித்துக் கிடந்தார்.
குழலின் இசையால் முழுதும் அவருக்குள் நாதப்பிரம்மத்தை செலுத்தினான், கண்ணன். உள்ளுக்குள் தளும்பிகிடந்த இசை அமுதம், அவரறியாது அவரது நாவில் பாடலெனும் அருவியாக கொட்டியது. இவர் பாடப்பாட கிருஷ்ணன் மெல்ல வந்து அவர் மடியில் அமர்ந்து கொள்வானாம். அவனுக்கு வலிக்குமே என்று அவர் தாளம் போடுவதை நிறுத்திக் கொள்வாராம்.
இதுபோன்று இன்னும் பலநூறு நெகிழ்ச்சியான நிகழ்வுகளை இத்தலத்திலேயே அனுபவித்தார், வெங்கடர். அதனாலேயே வெங்கடசுப்பையர், ஊத்துக்காடு வெங்கடகவி எனும் பெரும்பேறு பெற்றார். இவர் பாடல்கள் பட்டி தொட்டிகளில் உள்ளவர்களுக்குக்கூட பாடுவதற்கு எளிதாக அமைந்தது.
இவர் பாடிய பாடல்களில், ``அலைபாயுதே கண்ணா’’, ``ஆடாது அசங்காது வா கண்ணா’’, ``குழலூதி மனமெல்லாம்’’, ``தாயே யசோதா உந்தன்’’, ``சுவாகதம் கிருஷ்ணா’’, `‘பால்வடியும் முகம்’’ ஆகிய பாடல்கள் உலகப்பிரசித்தி பெற்றவை.
ஊத்துக்காடு வெங்கடகவிக்கு மரியாதை செய்யும் விதத்தில், தனி சந்நதியில் கிருஷ்ணபகவானை நோக்கி அவர் எழுந்தருளியுள்ளார்.
தேவி, பூதேவி சமேத வேதநாராயணபெருமாள் எனும் திருநாமத்தோடு மூலவராக எழுந்தருளியுள்ளார், கண்ணன். ருக்மணி சத்தியபாமா சமேதராக காளிங்கநர்த்தன பெருமாள், உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். ஜென்மம் முழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கத் தூண்டும் பேரழகு மூர்த்தி இது. ஒரு கையை அபயஹஸ்தமாகக் கொண்டு, மறுகையில் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார்.
காளிங்கனின் வாலில் பகவானின் கட்டைவிரல் மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்கள் தொடாமலேயே இருக்கும். ஆக, வாலிலும் பிடிமானமில்லை. அவர் பாதத்திற்கும், காளிங்கனின் தலைக்கும் ஒரு சுண்டுவிரல் அளவு இடைவெளியும் உள்ளது. மற்றொரு பாதத்தை நர்த்தனக் கோலத்தில் தூக்கியபடி உள்ளார். ஆனாலும், இவ்வளவு அநாயசமாக, காளிங்க நர்த்தனராக, கிருஷ்ணர் எப்படி நிற்கிறார் என்பதை அவர் மட்டுமே அறிவார். அந்தப் பிஞ்சுக் கால்களில் காளிங்கன் உரசியதால் உண்டான தழும்பைக் காணும்போது, நம் உடல் பதறுவதைத் தவிர்க்க முடியாது.
கோயிலின் முன்பு விழுந்து வணங்கி நிமிரும்போது, காளிங்க நர்த்தனன் கண்ணனின் காற்சலங்கை அகச்செவியில் அமுதமாகப் பாய்ந்து நிறைக்கிறது.
ஊத்துக்காடு, கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ., தூரத்தில், கும்பகோணம் - ஆவூர் - தஞ்சை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்திலிருந்தும் செல்லலாம்.



