Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பிரதோஷத்தில் பிரார்த்தித்தால் பெறாதது இல்லை!

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷவிரதம் மிகவும் முக்கியமானது. பல வகையான பிரதோஷவிரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம்.

நித்திய பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ, அவர்களுக்கு ``முக்தி’’ நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

மாதப் பிரதோஷம்

பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் ``திரயோதசி’’ திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் ``பாணலிங்க’’ வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ``சுயம்பு லிங்கத்தைத் தரிசனம்’’ செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள், இரட்டைப் பலனை அடைவார்கள்.

திவ்யப்பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ``திவ்யப் பிரதோஷம்’’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் ``வ’’ வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, ``சப்தரிஷி மண்டலம்’’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் அருள்புரிவான்.

மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக் கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ``மகா பிரதோஷம்’’ ஆகும். இந்த மகாபிரதோஷத்தன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், ``மகா பிரதோஷம்’’ எனப்படும்.

ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே `ஏகாட்சர பிரதோஷம்’ வரும். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு `அர்த்தநாரி பிரதோஷம்’ என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகாபிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும்போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாபவிமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கிநன்மைகளை அடையலாம்.

அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகாபிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகாவனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகாவன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகாபிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகாபிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகாபிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால், சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.

குடந்தை நடேசன்