Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர். இதில் நாம் அனைவரும் வழிப்போக்கர்களே. “ஜனனம்” என்பது ஓர் உயிர் தனக்கான ஓர் அங்கியை (உடலை) அணிந்து கொள்ளும் தொடக்க விழா என்றால், “மரணம்” என்பது அந்த அங்கியைக் களைந்து விட்டுப் புறப்படும் ஒரு விடுதலைப் பயணம். இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் நாம் வாழும் காலமே ‘வாழ்க்கை’ என்று அழைக்கப்படுகிறது.

​ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்பது இயற்கையின் விதி. ஒரு விதை மண்ணில் விழுந்து செடியாக முளைப்பது ஜனனம் என்றால், அது மீண்டும் மண்ணோடு மண்ணாவது மரணம். மனித வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.

​ஒரு ஆன்மா தனது கர்ம வினைகளைத் தீர்க்கவோ அல்லது புதிய அனுபவங்களைப் பெறவோ ஓர் உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் புள்ளி ஜனனம்.

​உடல் தேய்ந்து போகும்போதோ அல்லது அதன் ஆயுள் முடியும் போதோ, உயிர் தன்னைத் தளைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் நிகழ்வு மரணம். ​தொடக்கத்தைப் புரிந்து கொள்ளும் நாம், அந்தத் தொடக்கம் எங்கே முடிகிறது என்பதையும் உணர வேண்டும். ஏனெனில், முடிவு தெரிந்தால்தான் பயணத்தின் ஆழம் புரியும்.

​வாழ்க்கையின் இந்த ரகசியத்தை கவியரசு கண்ணதாசன் தனது வரிகளில் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார்:

“எங்கே வாழ்க்கை தொடங்கும் - அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது!”

​இந்த நான்கு வரிகள் ஒட்டுமொத்த மனித வாழ்வின் சாரத்தையும் பிழிந்து கொடுத்து விடுகின்றன. நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம் என்பது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இந்தப் பயணத்தின் வரைபடம் (Map) நம்மிடம் இல்லை என்பதுதான் இதில் உள்ள சுவாரசியம்.

வாழ்க்கை ஏன் ஒரு புதிராக இருக்கிறது? ஒருவேளை நமது மரணம் எப்போது, எப்படி நிகழும் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டால், அந்த வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத அந்தத் தவிப்பும், எதிர்பார்ப்பும் தான் நம்மை ஓட வைக்கிறது.

​வாழ்க்கை என்பது ஒரு நதி போன்றது. அது எங்கே உற்பத்தியாகிறது என்பது தெரியும், ஆனால், அது கடலில் கலக்கும் வரை இடையில் சந்திக்கப்போகும் பாறைகளும், பள்ளங்களும் ரகசியமானவை. அந்த ரகசியங்களைக் கடந்து செல்வதில்தான் வாழ்வின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

​வாழ்க்கை என்பது வெறும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அளவு மட்டுமல்ல; அது நாம் இந்த உலகில் விட்டுச் செல்லும் தடம். தொடக்கமும் முடிவும் நம் கையில் இல்லை, ஆனால், அவற்றுக்கு இடைப்பட்ட பயணத்தை எப்படி வாழ்வது என்பது நம் கையில் இருக்கிறது.

​இந்த ரகசியத்தின் சுவாரசியத்தை ரசித்துக் கொண்டே, பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதே ஒரு சிறந்த வாழ்விற்கு இலக்கணம். நாம் எங்கே முடிகிறோம் என்பதை விட, எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

ஆன்மா அல்லது உயிர் என்பது அழிவற்றது. ஆனால், உடல் என்பது ஒரு தற்காலிகமான கருவி மட்டுமே என்பதைப் பல்வேறு தத்துவங்களும் சமயங்களும் ஏகோபித்த குரலில் உறுதிப்படுத்துகின்றன. பகவத் கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், “பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை மனிதன் உடுத்துவது போல, ஆன்மா தேய்ந்துபோன உடல்களை விட்டுவிட்டு புதிய உடல்களை ஏற்கிறது” என்று கூறுகிறார்.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய

நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணானி

அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

(ஜீர்ணானி- நைந்த, வாஸாம்ஸி , உடைகளை, யதா- எவ்வாறு, விஹாய - களைந்து, நர: - மனிதன், அபராணி- வேறு, நவானி- புதியவைகளை, க்ருஹ்ணாதி- எடுத்துக் கொள்கிறானோ, ததா- அவ்வாறே, ஜீர்ணானி - நைந்த சரீராணி - உடல்களை, விஹாய - விடுத்து, அன்யானி -இதர, நவானி- புதிய சரீரங்களை, தேஹீ- ஜீவன் , ஸம்யாதி-அடைகிறான்) அதாவது மரணம் என்பது பழைய உடலை விட்டுப் புதிய உடல் எடுப்பதே. அது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடை உடுப்பது போன்று எளிதானதே என்கிறார். இது வயதான பின் வரும் மரணத்திற்கு ஒருவாறு சரியாக இருக்கலாம். அப்போது சரீரத்தை ஜீர்ணம் அல்லது நைந்து போனதாகக் கூற முடியும். ஆனால், இளவயதிலோ சிறுவயதிலோ ஏற்படும் மரணத்திற்கு இது எவ்வாறு ஒத்து வரும் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? மேலும், பழைய உடைகளைக் களைந்து புதியன உடுப்பது என்பது மகிழ்ச்சியைத் தருவது. மரணம் என்பது துன்பமாக அல்லவா இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த உதாரணம் எப்படிப் பொருந்தும்?

ஜீர்ணம் என்பதற்குப் பழையது, நைந்தது என்பதல்ல பொருள். முன்வினைப் பயனாக அந்த சரீரம் எடுத்ததன் காரணம் முடிந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள கர்மாவை கழிக்க இந்த உடல் பயன்படாது என்பதால் ஜீவன் வேறு உடல் எடுத்துக் கொள்கிறது. துன்பம் என்பது ஞானிகளுக்கல்ல.

ஒரு தாய் குழந்தையின் அழுக்கடைந்த ஆடையைக் களைந்து வேறு உடுத்தும்போது அந்தக் குழந்தை அதை விரும்பாமல் அழலாம். ஆயினும் அது அந்தக் குழந்தையின் நன்மைக்காகவே என்று உணர்ந்த தாய் அதைப் பொருட்படுத்த மாட்டாள். அதைப்போலவே இறைவனும் இந்த சரீரத்தை எடுத்து வேறு சரீரத்தை நம் கர்மத்தைக் கழிப்பதற்காகக் கொடுக்கிறான்.

உயிர் ஏன் உடலைப் பிரிகிறது என்பதற்கான காரணங்களையும் விரிவான விளக்கங்களையும் இங்கே காணலாம்:

உடலின் மீதான வெறுப்பு (Vairagya or Detachment)

​வாழ்க்கையின் சலிப்பு அல்லது உலகியல் இன்பங்களின் மீதான பற்று விலகும்போது, ஆன்மா அந்த உடலை ஒரு சுமையாகக் கருதத் தொடங்குகிறது. நீண்ட கால நோய், முதுமை அல்லது மனரீதியான போராட்டங்களால் ஏற்படும் இந்த வெறுப்பு, உயிருக்கு அந்த உடலைத் தொடர்ந்து தாங்கும் பிடிப்பைத் தளர்த்துகிறது. இது ஒருவித ‘மனமுதிர்ச்சி’ சார்ந்த பிரிவாகும்.

வாழ்வின் நோக்கம் நிறைவேறுதல் (Fulfilment of Purpose)

​ஒவ்வொரு உயிரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இந்தப் பூமியில் அவதரிக்கிறது. சில ஆன்மாக்கள் ஒரு குறிப்பிட்ட ஞானத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு பெரும் நற்செயலைச் செய்வதற்காகவோ வருகின்றன. அந்த நோக்கம் நிறைவேறியவுடன், அந்த உடலுக்கு இனி வேலை இல்லை என்ற நிலையில் உயிர் திருப்தியுடன் விடைபெறுகிறது. இதை நாம் ‘நிம்மதியான மரணம்’ என்கிறோம்.

(இன்னும் பார்ப்போம்)