Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நலமும் வளமும் தரும் நவராத்திரி

எல்லோரும் கொண்டாடும் நவராத்ரி

நவராத்திரி விழா இந்திய சமய மரபின் மிக முக்கியமான மூன்று பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு விழா. சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே நவராத்திரி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச் சிறப்பு பெற்றது. உத்தரபிரதேசத்தில் ராமலீலா, மேற்கு வங்காளத்தில் காளி பூஜை,துர்கா பூஜை, கர்நாடகத்தில் தசரா பண்டிகை, என்று பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது, மூன்று சமயப் பிரிவுகளுக்கும் உரிய பண்டிகையாக இருந்தாலும், இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நவராத்திரி கொண்டாட்டங்களில் வேறுபாடு

நவராத்திரிப் பெருவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் கொண்டாட்ட முறைகளிலும், கலாச்சார வெளிப்பாடுகளிலும் சுவாரஸ்யமான பல வேறுபாடுகள் உள்ளன. வடமாநிலங்களில் (குறிப்பாக உத்திரப்பிரதேசம், தில்லி, குஜராத் போன்ற இடங்களில்) நவராத்திரி என்பது ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது நாள்களும் `ராமலீலா’ என்ற பெயரில் ராமரின் கதைகள் நாடகங்களாக நடத்தப்படுகின்றன. பத்தாம் நாளான விஜய தசமியன்று, ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் பெரிய பொம்மைகளை எரியூட்டும் `ராவண தஹனம்’ மிகச் பிரம்மாண்டமாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்குப் பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் பாரம்பரிய உடைகளில் ஒளிரும் தடிகளுடன் (டாண்டியா) வட்ட வடிவில் பாடி ஆடும் `கர்ப்பா’ நடனம் நவராத்திரியின் முக்கிய அடையாளமாகும். மேற்கு வங்கத்தில் சாரதா நவராத்திரி `துர்கா பூஜை’ என்ற பெயரில் மிகப் பிரமாண்டமான கலைநயமிக்க பந்தல்கள் அமைக்கப்பட்டு, மகாசஷ்டி முதல் தசமி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தென்னாட்டின் கொண்டாட்ட முறைகள்

தென்னகத்தில் (குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா) நவராத்திரியின் மையப் புள்ளியாக அமைவது `கொலு’ ஆகும். ஒன்பது படிகளில் மரப் பொம்மைகள், புராணக் கதாபாத்திரங்கள், கொலு பொம்மைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் படைப்புத் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் படிகளாக அடுக்கி வைப்பார்கள். தமிழகத்தில் அம்மன் வழிபாட்டோடு சேர்ந்து, இல்லங்களிலும் கோயில்களிலும் தேவார திருவாசகம், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பாசுரங்கள் பாடி இறைவனை வழிபடும் வழக்கம் தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்குத் தனித் தனியாக ஒன்பது விதமான சுண்டல்கள், பாயசங்கள், பாரம்பரியப் பிரசாதங்கள் செய்யப்பட்டு, மாலையில் கொலு பார்க்க வரும் பெண்களுக்குத் தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கும் சமூகப் பண்பாடு தென்னகத்தின் தனிச்

சிறப்பாகும்.

எப்போது ஆரம்பித்தது?

மார்க்கண்டேய புராணத்தில் உள்ள `தேவி மகாத்மியம்’ (துர்கா சப்தசதி) எனப்படும் நூலின்படி, அசுரர்களின் அரசனான மகிஷாசுரனை அழிக்க மும்மூர்த்திகளின் சக்தியால் அன்னை ஆதிசக்தி தோன்றி, அவனுடன் ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் உக்கிர போர் புரிந்தாள். பத்தாம் நாளான விஜயதசமியன்று அன்னை அவனை வதம் செய்தாள். இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில்தான் நவராத்திரி வழிபாடு தோன்றியது. இதிகாச காலத்தில் ராவணனை வதம் செய்வதற்கு முன்பு, ராமர் தன் வெற்றிக்காக நவராத்திரி விரதத்தைத் தொடங்கினார் என்று ஒரு செய்தி உண்டு.

செல்வமும் நற்குணங்களும்

அறியாமை நீங்கிய மனத்தில் நற்குணங்களையும், ஆன்மிகச் செல்வங்களையும் நிலைநிறுத்துவதே இடை மூன்று நாள்களின் கிரியா சக்தி (செயல்பாட்டுச் சக்தி) வழிபாடாகும். வெறும் லெளகீகச் செல்வம் (தங்கம், பணம்) மட்டுமல்லாமல், அமைதி, கருணை, பொறுமை, மனநிறைவு மற்றும் நற்பண்புகள் ஆகிய உன்னதமான செல்வங்களை அன்னை மகாலட்சுமி இந்த நாள்களில் அள்ளி வழங்குகிறாள். மனக் குப்பைகளை அகற்றிய பின், அங்கே தெய்வீகச் செல்வம் குடியேறவும், குடும்பத்தில் ஐசுவரியம் பெருகவும் லட்சுமி தேவியை மனதார வழிபடும் காலம் இது.

ஒன்பது நாள் போர் சொல்லும் தத்துவம்

மகிஷாசுரனுக்கும் அன்னை துர்கா தேவிக்கும் இடையே கடுமையான போர் தொடர்ச்சியாக ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் நடைபெற்றது. மகிஷாசுரன் பல்வேறு விலங்கு வடிவங்களை எடுத்து தேவியை ஏமாற்ற முயன்றான். இறுதி நாளில், எருமை உருவத்தில் இருந்த மகிஷாசுரனின் மீது அன்னை தன் சூலாயுதத்தால் பாய்ந்து அவனது அகந்தையை அடக்கி வதம் செய்தாள். இதனால் தேவிக்கு `மகிஷாசுர மர்த்தினி’ (மகிஷாசுரனை அழித்தவள்) என்ற திருநாமம் கிடைத்தது. இது வெறும் கதையா? இல்லை இந்த கதை நமக்கு சில அற்புதமான செய்திகளை சொல்கிறது.

1. எருமை மாடு என்பது ஆன்மிகத்தில் மடமை (அறியாமை), சோம்பல், அடம் மற்றும் மந்தமான குணங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

2. மனிதனின் உள்ளே இருக்கும் ஆணவம், பேராசை, தீய எண்ணங்கள் மற்றும் `நான்’ என்ற அகந்தைதான் மகிஷாசுரன்.

3. இந்தத் தீய குணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருகும்போது மனிதனின் ஆன்மா அழிவை நோக்கிச் செல்கிறது.

4. தேவியின் கைகளில் உள்ள ஒவ்வொரு ஆயுதமும் மனிதனின் மனத்திலிருக்கும் தீமைகளை அழிக்கத் தேவையான விவேகம், விடாமுயற்சி மற்றும் ஆன்மிக அறிவைக் குறிக்கின்றன.

5. நம்முள் இருக்கும் அறியாமை மற்றும் தீய குணங்களைச் சக்தி வாய்ந்த பக்தி மற்றும் ஞான ஒளியைக் கொண்டு முற்றிலும் அழித்துவிட்டு, உள்ளத்தில் அமைதியையும் தூய்மையையும் நிலைநாட்டுவதே மகிஷாசுர வதத்தின் உண்மையான உட்பொருளாகும்.

வேறு விதமாக 9 நாள் அலங்காரமும் தத்துவமும்

முதலாம் நாள் அலங்காரம்: சைலபுத்ரி வடிவம் - மலைகளின் மகளாகவும், சாந்த சொரூபமாகவும் காட்சி தருதல்.

இரண்டாம் நாள் அலங்காரம்: பிரம்மச்சாரிணி வடிவம் - தவக்கோலம் மற்றும் துறவறத்தின் மேன்மையை உணர்த்துதல்.

மூன்றாம் நாள் அலங்காரம்: சந்திரகாந்தா வடிவம் - நெற்றியில் சந்திரப் பிறையுடன் வீரம் மற்றும் கருணையை வெளிப்படுத்துதல்.

நான்காம் நாள் அலங்காரம்: கூஷ்மாண்டா வடிவம் - பிரபஞ்சத்தைப் படைத்த அமுதச் சுடராகத் தோன்றுதல்.

ஐந்தாம் நாள் அலங்காரம்: ஸ்கந்தமாதா வடிவம் - முருகனின் (ஸ்கந்தன்) தாயாகக் கையில் குழந்தையுடன் அன்னை அருள்புரிதல்.

ஆறாம் நாள் அலங்காரம்: காத்யாயனி வடிவம் - கோபமும் கருணையும் கலந்த மகரிஷி காத்யாயனரின் மகளாகக் காட்சி அளித்தல்.

ஏழாம் நாள் அலங்காரம்: காலகாத்ரி வடிவம் - அச்சுறுத்தும் தோற்றத்தில் தீய சக்திகளை முற்றிலும் அழிப்பவளாகத் திகழ்தல்.

எட்டாம் நாள் அலங்காரம்: மகாகௌரி வடிவம் - தூய்மையின் அடையாளமாகவும், பசுமை மற்றும் அமைதியின் வடிவமாகவும் இருத்தல்.

ஒன்பதாம் நாள் அலங்காரம்: சித்திதாத்திரி வடிவம் - சகல சித்திகளையும், வரங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் கருணை வடிவம்.

ஒன்பது படி நிலைகள்

நவராத்திரி என்பது ஒன்பது அம்மன்களை தனித் தனியாக வணங்குவது மட்டும் அல்ல. அது மனிதனுடைய ஆன்மிகப் பயணத்தை ஒன்பது படிகளாகக் காட்டுகிறது.

1. முதல் நிலை - தூய்மை.பாலா திரிபுரசுந்தரி.

2. அடுத்த நிலை - உயிரைக் காப்பது.அன்னபூரணி.

3. பின்னர் - அறிவைப் பெறுவது.காயத்ரி.

4. அறிவுடன் அன்பும் கருணையும் வளர்வது.லலிதா.

5. தீமையை எதிர்க்கும் துணிவு வருவது.சண்டிகை.

6. வாழ்க்கைக்குத் தேவையான வளம் கிடைப்பது.மகாலட்சுமி.

7. அந்த வளத்தையும் அறிவையும் நல்ல வழியில் பயன்படுத்துவது.சரஸ்வதி.

8. உள்ளிருக்கும் பயத்தை வெல்வது.துர்க்கை.

9. கடைசியில் அகங்காரத்தை அழிப்பது.மகிஷாசுரமர்த்தினி.

அதன் பிறகுதான் விஜயம். அதனால்தான் பத்தாம் நாள் விஜயதசமி.

குங்கும அர்ச்சனையும் லலிதா சகஸ்ரநாமமும்

நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குங்குமம் மங்களத்தின் அடையாளம். அம்மனின் திருவடிகளில் குங்குமத்தைச் சமர்ப்பித்து, ஒவ்வொரு நாமத்தையும் சொல்லி அர்ச்சனை செய்வது, மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு வழிபாட்டு முறையாகும். இதனுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நவராத்திரி வழிபாட்டில் இன்னும் சிறப்பு. அம்மனின் ஆயிரம் திருநாமங்களும் அவளுடைய பல்வேறு சக்திகளையும் குணங்களையும் எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு நாமத்தையும் சொல்லும்போது, ஒரு குங்குமப் பொட்டினை அம்மன் திருவடிகளில் அல்லது அர்ச்சனைத் தட்டில் சமர்ப்பிப்பது வழக்கம். கூட்டாகச் சேர்ந்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, குங்கும அர்ச்சனை செய்யலாம். குங்குமம் ஒரு சிறிய பொருள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் எண்ணம் பெரியது.

ஒரு நாமம் - ஒரு மலர்.ஒரு குங்குமம் - ஒரு பிரார்த்தனை.ஆயிரம் நாமங்கள் - ஆயிரம் நல்ல எண்ணங்கள்.

“எனக்கு மட்டும் நன்மை வேண்டும்” என்ற பிரார்த்தனையிலிருந்து, எல்லோரும் நலமாக வாழ வேண்டும்” என்ற பிரார்த்தனைக்கு மனம் உயர்வதே கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பு.

கொலு - தத்துவம்

நவராத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது கொலு. படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது வெறும் அலங்காரம் அல்ல. அதன் பின்னால் நம் முன்னோர்கள் அழகான ஒரு தத்துவத்தை வைத்திருக்கிறார்கள். கொலுவில் மேலிருந்து கீழாகப் படிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் படைப்பின் படிநிலைகளை நினைவுபடுத்துவதாக பார்க்கப்படுகின்றன. மேல்நிலையில் தெய்வங்களையும், அதற்குக் கீழே முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல வகையான உயிரினங்களையும், தாவரங்களையும் அமைப்பது வழக்கம். இதன் மூலம் உலகில் உள்ள அனைத்தும் ஒரே பரம்பொருளின் படைப்புகள் என்ற எண்ணம் வெளிப்படுகிறது. மனிதன் உயர்ந்தவன் என்று பெருமை கொள்ள முடியாது. அவனுடைய வாழ்க்கைக்கு தாவரங்கள் உணவையும் காற்றையும் தருகின்றன.

விலங்குகள் இயற்கைச் சமநிலையில் பங்கு வகிக்கின்றன. பறவைகள் விதைகளைப் பரப்புகின்றன. இவ்வாறு பார்த்தால், ஒவ்வொரு உயிருக்கும் இந்த உலகத்தில் ஒரு இடமும் ஒரு பயனும் இருக்கிறது. கொலுவின் படிகளில் பொம்மைகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே கொலுவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், தேவர்கள் என்று தோற்றத்தில் வேறுபட்டாலும், அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றோடு ஒன்று இணைந்திருக் கின்றன. கொலுவில் வைக்கப்படும் விவசாயக் காட்சிகள், திருமணக் காட்சிகள், கிராம வாழ்க்கை, சந்தை, பள்ளி, கோயில் போன்ற சிறிய பொம்மைகள் நம் சமூக வாழ்க்கையையும் நினைவுபடுத்துகின்றன. குழந்தைகள் அவற்றைப் பார்த்து விளையாடுவதோடு, வாழ்க்கையைப் பற்றியும் கற்றுக் கொள்கிறார்கள்.

அம்பு போடுதல் - விஜயதசமியின் சிறப்பு

விஜயதசமி வெற்றி தரும் நாள். இந்த நாளில் புதிய கலைகள், கல்வி மற்றும் தொழில்களைத் தொடங்கலாம்; மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்குக் கோயில்களிலும் கல்வி நிலையங்களிலும் அரிசியில் ``ஹரி ஓம்’’ ``ஹரிஸ்ரீ ’’ எழுதி கல்வியைத் தொடங்கலாம். சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்களை விஜயதசமி காலையில் எடுத்து முறைப்படி வாசிக்கத் தொடங்கலாம். இந்த நாளில் சில ஆலயங்களிலும் ஊர்களிலும் வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். இது ஒரு பழமையான மரபு. தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுபடுத்தும் அடையாளமாக இது கருதப்படுகிறது. அம்பு என்பது வெறும் ஆயுதம் அல்ல. அது நமது குறிக்கோளையும், அதை நோக்கிச் செல்லும் உறுதியையும் குறிக்கிறது. வில் இலக்கை நோக்கி வளைந்து நிற்பது போல, மனிதனும் தனது மனதை ஒரு நல்ல இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்த வேண்டும்.

அம்பு இலக்கை நோக்கிப் பாய்வது போல, நமது எண்ணங்களும் செயல்களும் தர்மத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஒன்பது நாட்கள் அம்மனை வழிபட்டு மனத்தைத் தூய்மைப்படுத்திய பிறகு, பத்தாம் நாளில் அம்பை இலக்கை நோக்கி செலுத்துவது போல, நல்ல எண்ணத்தை செயலாக மாற்ற வேண்டும் என்பதே இந்த மரபின் உள்ளார்ந்த பொருள். “தீமை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், தர்மத்தின் பக்கம் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது நவராத்ரி பண்டிகை!