Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடராஜப்பத்தின் அபூர்வ தத்துவ விளக்கம்

பகுதி 2

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

6. அபயப் பிரதானம் (The Call for Absolute Protection)

வழிகண்டு உன்னடியைத் துதியாத

போதிலும் வாஞ்சை யில்லாத போதிலும்,

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்

வஞ்சமே செய்த போதிலும்,

மொழியெகனை மொகனையில் லாமலே

பாடினும் மூர்க்கனே முகடாகினும்,

மோசமே செய்யினும் தேசமேகவரினும்

முழுகாமியே யாகினும்,

பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ

பார்த்தவர்கள் சொல்லார்களோ,

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ

பாலனைக் காக்கொணாதோ,

எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ

யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

மனித மனத்தின் எஞ்சியுள்ள விலங்குத்தன்மையால் நான் கீழான செயல்கள் செய்துவிடலாம். நான் எந்த பாதாளத்துக்கும் செல்லும் நிலை வரலாம். அவற்றையெல்லாம் ஒரு காரணமாக்கி என்னை நீ காணாமல் விட்டுவிடாதே என அபயப் பிரதானமாக கேட்கிறார். என்னைக் காப்பாற்றி மேலெடுத்து வா என்பதே அவருடைய கேவலாக உள்ளது. விலங்கு மனத்தால் நான் உன்னை துதிக்காமல் இருந்திடலாம். என் மனதில் வாஞ்சை இல்லாமல் ஆகிடலாம், ஆலய வழிபாடில்லாமல், மூர்க்கனாகி, முழு காமியாகவே நான் இருந்தால் கூட என் தந்தையான உனக்கல்லவா இழிபெயர் வரும் என உருகுகிறார்.

உன் பெயரையே அரற்றி வரும் நான் இவ்வாறாகிவிட்டால் என்னை ஏசுவதோடல்லாமல் உன்னையுமல்லவா ஏசுவார்கள் என்கிறார். விலங்குப் பதிவுகளாலான மனம் எவ்வாறு இருக்கும் என்று நமக்கு கோடிட்டுக் காட்டுகிறார். அண்டங்களை அடுக்கியவனே, பாதியுடலை அன்னைக்கு ஈன்றவனே என்னைச் சீராக்குவது எளிய செயல்தானே உனக்கு என்கிறார். அண்டங்களை அடுக்குதல், பாதியுடலை பார்வதிக்கு அளித்தல் என்பனவெல்லாம் தத்துவத் தரிசனங்களன்றி வேறென்ன? அதனைச் சொன்னபின் பக்தஉள்ளம் மேலெழுந்து வருவதைக் காணலாம்.

7. மரண பயம் நீங்கல் (Transcending the Fear of Mortality)

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்

கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,

அல்லாமல் நான்முகன்

தன்னையே நோவனோ

ஆசை மூன்றுக் கழுவனோ,

முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ

என்மூட வறிவுக் கழுவனோ,

முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ

முத்திவரு மென்றுணர்வனோ,

தன்னைநொந் தழுவனோ உன்னை

நொந்தழு

வனோ தவமென்ன வென்றழுவனோ,

தையலர்க் கழுவனோ மெய்வளர்க்

கழுவனோ

தரித்திர திசைக்கழுவனோ,

இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு

வனோ யெல்லாமுரைக்க வருவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற

தில்லைவாழ் நடராசனே.

அடுத்து யாவருக்கும் வரக்கூடிய பெரும் சிக்கல் மரணம். இப்படியே உன்னைக் காணாமலே நான் இருந்துவிட்டால் என்னுடைய மரணம் எப்படியானதாக இருக்கும்? என்னுடைய மரணம் எத்தகைய பயமுடையதாக இருக்கும்? அறிந்தவர்களுக்கு அருட்பார்வை கிடைத்தவர்களுக்கே மரணபயம் இல்லாமல் இருக்கும். நான் அப்படி இருக்கவேண்டுமே? இவ்வாறு சொல்லி இந்த ஏழாவது பாடலை மரணபயம் நீங்குவதற்காகப் படைத்துள்ளார். மரணத்தைப் பற்றிய பார்வையை விசாலமாக்குகிறார்.

எல்லாம் இருந்து என்னய்யா ஆகப்போகுது? போகத்தானே போறோம்? அந்த மரணத்தை புரிஞ்சுக்குவோம். தாயார் இருந்து என்ன? தந்தையும் இருந்து என்ன? நம்மோட பிறவி உறவு கோடி இருக்கும். எத்தனை செல்வம் வச்சிருந்தென்ன என்ன? என்ன பெயர் எடுத்தென்ன? எதுவுமே உதவாது என்று இன்றைய சாமானியனும் புலம்புவதுபோல் உள்ளது. எமன் வந்து கை போடும் பொழுது, எமனுடைய ஓலை என் வீட்டில் வந்து விழும்பொழுது, யார் வந்து என்னைக் காக்க முடியும்? இப்போது வராவிட்டாலும் அந்நேரத்தில் வந்துவிடய்யா என்று வேண்டுகிறார். இறுதிப் பொழுதில் தில்லைவாழ் நடராஜர் மட்டுமே துணைக்கு வருவார் என்கிற இந்த நூலாசிரியர் முனுசாமி முதலியாரின் சரணாகதி, அவரது ஆழமான ஆன்மிகத் தேடலையும், நம்பிக்கையையும் காட்டுகிறது.

8. கர்மவினைக் க்ஷயம் (The Burning of Prarabdha Karma)

காயாகும் முன் மரம்மீது பூ பிஞ்சு அறுத்தனோ

கன்னியர்கள் பழிகொண்டனோ,

கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்

தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,

தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,

தந்தபொரு ளிலையென்றனோ,

தானென்று கெர்வித்துக் கொலைகளவு

செய்தனோ தவசிகளை யேசினனோ,

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,

வானவரைப் பழித்திட்டனோ,

வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ

வந்தபின் என் செய்தனோ,

ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ

எல்லாம் பொறுத்தருளுவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

எட்டாவது பாடல் தொகை கர்மவினை க்ஷயம். கர்மத்தின் வலி கெடல். நம்முடைய அறியாமையின் போக்கில், ஆணவ மலத்தினுடைய மறைப்பினால் நாம் செய்த செயல்களின் வினை நம்மைச் சூழ்ந்து அழுத்தும். அது நம்மைச் சூழ்ந்து அழுத்தும் வலிமையை, எடையை, வேகத்தைக் குன்றச்செய்தல் குறித்தே பாடியுள்ளார். இவ்வளவு ஏங்கியும், நற்செயல்கள் செய்தும் நமக்கு இறை தரிசனம் கிடைக்கவில்லையென்றால், எங்கேயோ அது நம்முடைய வல்வினை, தொல்வினையின் விளைவாக இருக்கலாம். நாம் அவ்வாறு செய்ததென்ன? ஏன் இறைவனுடைய அருட்பார்வை இன்னும் முழுமையாக கிட்டவில்லை? மனம் ஒரு குறுக்காய்வு செய்கிறது இப்பாடலில். தன்னுடைய கடந்த காலத்தை, தன்னுடைய செயல்களை ஐயமுற்று முனுசாமி அடுக்குகிறார்.

நான் என்ன கொலைகளவு செய்தேனா? அவர் கேட்பது அவருக்கு பொருந்துகிறதோ தெரியவில்லை. ஆனால் நம்முடைய இன்றைய வாழ்வை, மனப்போக்கினை எடுத்துக்காட்டி நம்மை எச்சரிக்கிறது. உண்மையாக வாழ்ந்திருக்கக்கூடிய தவசியர்களை எல்லாம் திட்டினேனா? வாயார பொய் சொல்லி விட்டேனா? நிறைய பேர்களின் பொருளைப் பறித்து வாழ்ந்திட்டேனா? உதவ வருகிற மேலான மனநிலை கொண்டவர்களை எல்லாம் பழி பேசிட்டேனோ?

அவருடைய ஏக்கம் மேலிட மேலிட அவருக்கு சிறிய தவறுகளெல்லாம் கூட பெரிதாகத் தோன்றுகின்றன. பூ பிஞ்செல்லாம் அறுத்துவிட்டேனா? மரம் காய்க்காமல் இருக்கும்போது, அது தன்னுடைய வம்ச விருத்திக்காக பூவை ஈனும்போது அந்தப் பிஞ்சை நான் அறுத்து விட்டேனா எனக் கேட்கிறார். பூப்பிஞ்சுகளை கொய்வதெல்லாம் பெருந்தடையாக வருமா என்று நான் சிந்திப்பதுண்டு. ஒன்று அந்த செயலின் விளைவு கொடுக்கும் தாக்கம், மற்றொன்று அப்படி ஒரு செயலைச்செய்ய ஒருவரை அனுமதிக்கும் அறியாமை. இரண்டுமே இறைவனைக் காணத் தடைகளாய் எழும். இறை சிந்தனை வாராவண்ணம், வாழ்வின் துயரக் கதியிலும் , மாயத் துரத்தல்களிலும் , புறஉலகுச் செயல்பாடுகளிலும் மனம் செல்லுமாறு சூழலில் இருத்தி அழுத்தியிருக்கும். ஊழின் பெருவலியது.

இறைவனை அடைய வேண்டும் என்கிற ஏக்கம் தன்னுடைய எந்தச் செயல்கள் மீதும் ஒரு பெருத்த சந்தேகம் கொண்டு அவரைப் பார்க்க வைக்கிறது. அப்படி குறுக்காய்வு செய்து பார்க்கிறார். இப்படி நான் எப்படி இருந்தாலும் உன்னுடைய கடைக்கண் பார்வை அது போதுமே! இவ்வளவு கர்மத்தையும் அறுத்தெடுக்க இது போதுமே! நீ ஏன் பாரா முகமாய் இருக்கிறாய்? நீதானே எனக்கு யாதும்! நீயே பார்க்கவில்லையெனில் எப்படி? இயலாமை வெடித்துக் கிளம்புகிறது அவருள்.

9. ஆத்ம நிவேதனம் (Shattering the Intellect’s Pride)

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி,

தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்

தென்ன, தாரணியையாண்டு மென்ன,

சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன

சீடர்களிருந்து மென்ன,

சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்,

ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க,

உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று

தான் உன்னிருபாதம் பிடித்தேன்,

யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்

பார்வை யதுபோதுமே,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற

தில்லைவாழ் நடராசனே.

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ

இரும்போ பெரும்பாறையோ,

இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ

இதுவுனக் கழகுதானோ,

என்ன மோகமோ இதுவென்ன சாபமோ

இதுவேவுன் செய்கைதானோ,

இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ

ஆனாலும் நான் விடுவனோ,

உன்னை விட்டெங்கு சென்றாலும்

விழலாவனோ

நான் உனையடுத்துங் கெடுவனோ,

ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை

யுற்றுப்பார் பெற்றவையோ,

என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்

இனியருளளிக்க வருவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே.

ஒன்பதாவது பாடல் தொகையை ஆத்ம நிவேதனம் என்கிறார்கள். இன்னும் நான் சொல்ல வேண்டுமா? உன் உளம் என்ன கல்லா? இரும்பா? பெரிய பாறையா? உன் காதுகள் கேட்கவில்லையா? இப்படி நான் கேட்டும் அதனைக் கேட்காமல் இருப்பது உனக்கு அழகா? அனைத்து அறிவுப்பூர்வமான கேள்விகளும் தொலைந்தபின் தனிமனிதத் தாக்குதல் போல அவருள்ளம் சென்றுள்ளது.

எதற்கு அழ என்றுகூடத் தெரியாமல் உள்ளேன் என்று பட்டியலிடுகிறார். சொன்னபின், எனக்கு பதில் வேண்டும் வந்து சொல் என்று உரத்து ஓலமிடுகிறார் என்றே எனக்குத்தோன்றுகிறது. இத்தொகையில் இயலாமை பொங்க அவருள்ளம் துவண்டு சரணடைகிறது நடராஜரிடம்.

10. நவகிரஹ சாந்தி -சித்தியடைதல் (Cosmic Alignment and Ultimate Grace)

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு

சந்திரன் சூரியனிவரை,

சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்

சமமாய் நிறுத்தியுடனே,

பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்

படுத்திப் பின்னால்,

பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்

வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,

கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற

கசடர்களையுங் கசக்கி

கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்

தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி

இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை

யாள்வதினி யுன்கடன்காண்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற

தில்லைவாழ் நடராசனே.

அடுத்து நவகிரக சாந்தியென்றும் சித்தி அடைதல் என்றும் இப்பாடல் தொகையைக் கூறுகிறார்கள். இந்த சனி, ராகு, கேது, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சந்திரன், சூரியன் ஆகியோரையும், ராசி பன்னிரண்டையும் சமமாய் நிறுத்தி, பணியொத்த நட்சத்திரங்கள் இருபத்து ஏழும் பக்குவப்படுத்தி பின்னால் பதினோரு கிரணங்களையும் நிறுத்தி என்று நம் சிந்தனைக்கு எட்டாத் தளத்திலிருந்து நம்மை ஆட்டிப்படைக்கும் விண் கதிர்களின் நிலைமையை தன்மையை விவரிக்கிறார்.

கர்மவினைகளை பூமியில் செயல்படுத்த இறையறிவு படைத்துள்ள நவகிரக அதிபதிகளை நட்சத்திராதிபதிகளை, ராசிமண்டலங்களை தன்னை தெய்வீக நிலையிலிருந்து இப்புவிக்குள் அடுக்கடுக்காக தூலமாக கொண்டு வந்து சேர்த்த கிரணங்கள் என அறிவிக்கிறார். அவரது விண் ஞானம் இங்கு வெளிப்படுகிறது. நாம் சுமந்துள்ள கர்ம மூட்டைக்கேற்ப வினையின் தொகுப்புக்கேற்ப எப்போது, எங்கு, எத்தனை ஆயுளோடு, எப்படிப் பிறந்தால் அவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும் என்கிற திட்டத்தை அறிவிப்பதே இந்த வானியல் நிலைகளாகும்.

இறைவனினுடைய ஏற்பாடான இத்தனை அம்சங்களும் நமக்கு சரியாக அமைய வேண்டுமே? இவ்வழியில் மேலேறுவதற்கு இவையும் பக்குவம் ஆகவேண்டுமே? என்று சொல்லி அவற்றை சீராக்கிக்கொடு என வேண்டுகிறார். இப்படி கதிபெற்ற தொண்டருக்கு தொண்டராய் என்னை ஆக்கி இனி அருள் அளிக்க வருவாய் என்கிறார். அடியார்களாக இருப்பதே பல ஜாதகக் குற்றங்களை நீக்கிவிடும் என்று சொல்லாமல் சொல்கிறார்.இந்த நடராஜப் பத்து பாடல்கள் அனைத்துமே நிறைய பார்வைகளைக் கொடுத்து நம்மை விரிவுபடுத்துகின்றன. தத்துவ விசாலம் கொண்ட அறிவின் உதவியால் அவர் பெற்ற பார்வையை இப்பாடல் அனைத்தும் கொண்டுள்ளன.

ஆனால் ஒவ்வொரு பாடலினுடைய இறுதி அடியிலும் ஒரு பக்த மனநிலை, ஒரு சரணாகதி உளநிலை, ஏங்கித் தவிக்கும் ஒரு சாதகனுடைய மனநிலை வெளிப்படுவதை நாம் எளிதாக உணரலாம்

நடராஜப் பத்து என்பது வெறும் அறிவு சார்ந்த தத்துவ வெளிப்பாடாக மட்டும் அல்லாமல், அறிவின் உச்சக்கட்டத் தெளிவில் பிறக்கும் தூய சரணாகதியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வெளிப்படும் அந்த ஏக்கம், இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற அந்தத் துடிப்பு, பக்தியையும், ஞானத்தையும் இணைக்கும் ஓர் அற்புதப் பாலமாகத் திகழ்கிறது. முனுசாமி முதலியாரின் ஆழமான இந்த தரிசனம், ஒவ்வொருவரையும் ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் திறன் கொண்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

மெய்யோகம் ரகுராம்