Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நரசிம்மர் உண்ட நஞ்சு

பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சை, பரமசிவன் அருந்தினார். தெரிந்ததுதான்! அதேபோலத் தன் அடியார்க்காக நரசிம்மர் நஞ்சை அருந்திய நிகழ்வு இதோ!கும்பகோணத்தில் மகான் ஒருவர் இருந்தார். நம்மை அறியாமலே மூச்சு விடுவதைப் போல, அந்த மகான் தன்னை அறியாமலே பகவான் நாராயணரை நினைத்துக் கொண்டிருந்தார். அந்த அளவிற்குப் பக்குவம் பெற்றவர் அவர்.

ஒருநாள்... காசியில் இருந்து கங்காதர பண்டிதர் என்பவர், கும்பகோணத்திற்கு வந்தார். வந்தவர், மகான் இருந்த இடத்திற்கு வந்து, ‘‘நான் காசியிலிருந்து வருகிறேன்; பெரும்பண்டிதன்! ஏராளமானவர்களை வாதத்தில் வென்றிருக்கிறேன். என்னை எதிர்க்க யாருமில்லை. உங்களோடு போட்டிபோட்டு உங்களை வெல்வதற்காகவே, இங்கே கும்பகோணத்திற்கு வந்திருக்கிறேன்’’ என்றார். மகானைச் சுற்றி இருந்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மகானோ,‘‘தாராளமாக! உங்கள் அறைகூவலை ஏற்கிறேன் நான்’’ என்று அமைதியாகச் சொன்னார். நாள் குறிக்கப்பட்டது. காசி பண்டிதருக்கும் கும்பகோண மகானுக்குமான அந்த வாதத்தில், அப்பைய தீட்சிதர் என்ற மகான் நடுவராக இருந்தார்.

காசி பண்டிதர் அதிவிரைவாகத் தோற்றார். என்ன நடக்குமோ என்றிருந்த சபையினர், சற்று நிம்மதி அடைந்தார்கள். காசி பண்டிதரும் எதிர்பாராத தன் தோல்வியை எண்ணி, நிலை குலைந்திருந்தார். அப்போது, ‘‘காசி பண்டிதரே! முடியாத பட்சத்தில் என்னைக் கொல்வதற்காகக் கொடிய விஷத்தைக் கொண்டுவந்து, அதை மறைத்து வைத்திருக்கிறீர்களே! அதை எடுங்கள்! நானே சாப்பிடுகிறேன்’’ என்று மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னார் மகான். கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் திகைத்தார்கள். சபையில் மெள்ளச் சலசலப்பு எழுந்தது.

அனைவர் பார்வையும் காசி பண்டிதர் மீதே இருந்தது. பண்டிதர் நடுங்கியபடியே, மகானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘‘சுவாமி! என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்! தங்கள் ஞான அனுபவத்தை நேருக்குநேராகக் கண்டு அனுபவித்த பின்னும், அந்தப் பாவத்தைச் செய்ய என் மனம் துணியுமா? மன்னியுங்கள்! என்னை மன்னியுங்கள்!’’ என்று மறுபடியும் மகானின் திருவடிகளில் விழுந்து வணங்கி வேண்டினார்.

மகானோ உறுதியாக இருந்தார்; ‘‘நீங்களோ, உங்கள் செய்கைகளோ என்னைப் பாதித்திருந்தால் அல்லவா, நான் உங்களை மன்னிக்க வேண்டும்? எடுங்கள்! நீங்கள் கொண்டு வந்த நஞ்சைக் கொடுங்கள்!’’ என்று வற்புறுத்தி, காசி பண்டிதர் மறைத்து வைத்திருந்த நஞ்சை வாங்கி, குடித்து விட்டார். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பதறிப்போய், ‘‘ஆ! ஆ!’’ எனக் கூச்சலிட்டார்கள். அதே சமயம், விஷமருந்திய மகான் உடம்பு கறுப்பாக மாறத் தொடங்கியது. மகான், பகவானைத் தியானித்தபடியே நரசிம்ம அஷ்டகம் பாடினார். அவர் பாடப்பாட, அவர் திருமேனியில் படர்ந்திருந்த கறுப்பு மெள்ளமெள்ள மறையத் தொடங்கியது.

ஒருசில விநாடிகளில் மகானின் திருமேனி, முன்பை விடப் பிரம்ம தேஜசுடன் ஜொலித்தது. காசி பண்டிதர் உட்பட அனைவரும் வியந்தார்கள். அன்று பூஜையின் போது மகான், தாம் பூஜை செய்யும் நரசிம்ம விக்கிரகத்தை எடுத்து, பக்தர்களுக்குக் காட்டினார். அந்த விக்கிரகத்தின் கழுத்து, நீல நிறமாகி இருந்தது. பக்தருக்காகப் பகவான், தானே நஞ்சை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைப் பக்தர்கள் புரிந்து கொண்டார்கள். அந்த விக்கிரகம், இன்றும் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மடாதிபதியிடம் பூஜையில் உள்ளது. தன் பக்தியால், நரசிம்மரை நஞ்சு ஏற்க வைத்த அந்தக் கும்பகோண மகான், `ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகள்’ (கி.பி.1539 - கி.பி.1595).

V.N.சுந்தரி