Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்..

பகுதி 2

ஒவ்வொரு குழந்தையும் கருவில் உதிக்கும்போது, முந்தைய ஜென்மங்களில் செய்த செயல்களையும், அதனால் வரக்கூடிய பாபங்களையும், அந்தப் பரம்பொருள் பட்டியலிடுவார். அதை உணர்ந்த குழந்தை, தன் பாவச் செயல்களுக்கு வருந்தி, இனி நல்வாழ்க்கை வாழ சங்கல்பம் செய்யும். ஆனால், குழந்தை பிறக்கும் சமயம், ‘ஷடவாயு’ எனப்படுவது தோன்றும். ஒவ்வொருவரின் பிறப்பின் எண்ணத்தையும் மாற்றி, தான் ஏற்ற சங்கல்பத்தை உதிர்த்து, மீண்டும் பாவச்செயல்கள் செய்யத் தூண்டிவிடும். ஆனால், நம்மாழ்வார் பிறக்கும்போதே, ஷடவாயுவை அடக்கி ஒடுக்கியவர். அதனால் அவரை ``சடகோபன்’’ என்றே அழைப்பர். குழந்தை பிறந்த நாள் முதல், பால் அருந்தாமல், எந்த ஒரு அசைவுமின்றி இருந்தது.

தவம் செய்து பெருமாள் அருளிய பிள்ளை, ஆடாது, அசையாது, உண்ணாமல் இருப்பதைப் பார்க்கப் பார்க்க, பெற்றோர் மனம் வெதும்பினார்கள். உலக இயல்பிற்கு மாறாக இருந்த குழந்தைக்கு ‘மாறன்’ எனப் பெயரிட்டார்கள். இந்தக் குழந்தையைப் பெருமாள்தான் காத்தருள வேண்டும் என முடிவெடுத்தனர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, மாறனை அந்தக் கோயிலின் புளிய மரத்தினடியிலேயே விட்டுச் சென்றனர். பின் வந்த காலங்களில், அந்தப் புளியமரத்தை ஆதிசேஷனின் அம்சமாகக் குறிப்பிடுவர்.

கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள், மதுரகவி நம்மாழ்வாரைத் தரிசிக்கும் வரையிலும், நம்மாழ்வார் மெளனமாகவே இருந்தார். கண் திறந்து பார்த்ததுமில்லை, வாய் திறந்து பேசியதுமில்லை. என்றுமே குருதானே சீடனைத் தேர்ந்தெடுக்கிறார். நம்மாழ்வார், மதுரகவியைத் தேர்ந்தெடுத்தார். வானில் ஒளி வழிகாட்ட, மதுரகவிக்கு வாழ்வில் ஒளியேற்றினார் நம்மாழ்வார். மதுரகவியை தேர்ந்தெடுக்க, மதுரகவியின் தவமும், பெருமாளின் அளப்பரிய ஆசியுமே காரணம். மதுரகவி நம்மாழ்வாரின் அணுக்கத் தொண்டரானார், நம்மாழ்வார் மனதில் நினைப்பதை, தன் உள்ளுணர்வில் அறிந்துகொண்டு, செயல்படுத்தும் திறன் மதுரகவிக்குக் கைவந்தது. வேதங்களைத் தமிழ் செய்யும் பெருஞ்செயலை நம்மாழ்வார் துவங்கினார்.

அவரின் ஒவ்வொரு பாசுரத்தையும் படிவெடுக்கும் பணியில் மதுரகவி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ரிக் வேதம், திருவிருத்தமாக வடிவெடுத்தது. யஜுர் வேதம், திருவாசிரியம் என்றானது. சாம வேதம், திருவாய்மொழியாக மலர்ந்தது. அதர்வண வேதம், பெரிய திருவந்தாதியாக உருக்கொண்டது. பெருமாளின் திருவாயிலிருந்து உதித்ததாகவே நம்மாழ்வாரின் பாசுரங்கள் அமைந்தன.

மதுரகவிக்கு ஒவ்வொரு நாளும் திருநாளாகவே அமைந்து போனது. ஒவ்வொரு நாள் அந்திப் பொழுதில், நம்மாழ்வாரின் பாதங்களின் அருகில் அமர்ந்து, மதுரகவி, பாசுரங்களைப் பாடலாய்ப் பாடுவார். அதற்குத்தான் புரிந்து கொண்ட பொருளை விளக்குவார். தன் குருவின் தலையசைவும், புன்முறுவலும் கண்டு நெகிழ்வார்.

திருவாய்மொழியின் முதல் பாடல்

`‘உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே’’

- என அமைந்தது.

‘என் மனமே! தன்னைவிட மேன்மையுடையவர் இல்லை என்று கூறும்படியாக உயர்ந்த நற்குணங்கள் கொண்டவன்! அறியாமை நீங்குமாறு, தெளிவுடன் கூடிய சிந்தனைத் திறனை அருளித் தந்தவன்! சோர்வு, மறதி என்றிவைகள் சிறிதும் இல்லாத இறவா வரம்பெற்ற தேவர்களின் தலைவன்! என இத்தகைய பெருமை வாய்ந்தவனுடைய, துயர்துடைக்கும், ஒளிபொருந்திய திருவடிகளை வணங்கி வழிபடுவாய்!’ என்று பொருள் கூறிவிட்டு, நம்மாழ்வாரின் பாதம் தொட்டார்.

‘தங்களுக்கு உயர்வற உயர்நலம் உடையவன் பெருமாளாக இருக்கட்டும். எனக்குத் தாங்கள்தான் உயர்வற உயர்நலம் உடைய பெருமாள்.’ மதுரகவி மனதுக்குள் நினைத்து நெகிழ்ந்தார். அதைப் புரிந்ததுபோல நம்மாழ்வார், மதுரகவியின் சிரசை வாஞ்சையுடன் தொட்டு ஆசிர்வதித்தார். மதுரகவி வயதில் மூத்தவரான பொழுதும், குருவின் மேல் அவர் கொண்ட பக்தியும், மரியாதையும் அலாதியானது. நம்மாழ்வாரின் ஒவ்வொரு பாசுரமும் அமிர்தமாக இனித்தது. அடுத்து ஒரு பாசுரத்தைப் பாடினார்;

`‘நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்

என்றும் ஓர் இயல்வொடு நின்ற

எம் திடரே’’

என்று மதுரகவி பாடி முடித்தபொழுது, நம்மாழ்வார் படுத்திருந்தவர், எழுந்து அமர்ந்தார். அவர் பார்வை, இந்தப் பாசுரத்திற்கு மதுரகவி எப்படி பொருள் சொல்லப் போகிறார்? என்பது போல இருந்தது. தன்னைத் தன் குரு உற்று நோக்கும்பொழுது, ஒரு வித பதட்டம் இருந்தபோதிலும், மதுரகவி தனக்குள் பெருமிதமும், மகிழ்வும் கொண்டார்.``நிற்பவரும், அமர்ந்து கொண்டு இருப்பவரும்,

படுத்துக் கிடப்பவரும், திரிபவரும், நிற்காதவரும், உட்காராதவரும்,

படுத்துக் கிடக்காதவரும்’’

என்று இதைக் கூறும் பொழுது மதுரகவி கொஞ்சம் அழுத்தமுடன் சொல்ல, பொருள் புரிந்து நம்மாழ்வார் குலுங்கிச் சிரித்தார். மதுரகவி தொடர்ந்தார்;

``திரியாதவரும், எப்போதும் இதுதான்

இவருடைய சுபாவம் என்று நம்மால்

உறுதியாக நினைக்க முடியாதவரும்,

தன் சுபாவத்திலிருந்து என்றும் மாறாத எம்பெருமான்’’ இத்தனையும் பெருமாளுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தங்களுக்கு முற்றிலும் பொருந்தும். பெருமாளே பெருமாளைப் பற்றிப் பாசுரம் செய்தால், இப்படித்தானே இருக்க முடியும். என்று சொல்லிமுடித்து, நம்மாழ்வார் திருமுகத்தை மதுரகவி உற்று நோக்கினார். மதுரகவியை அருகில் அழைத்து, அவரது முதுகில் பாராட்டும் வண்ணம் நம்மாழ்வார் தட்டிக் கொடுத்தார். ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு இனிய அனுபவத்தை அளித்தது. மதுரகவி தன் மனதில், ‘இவர் அன்னம், ஆகாரம், ஏன்? நீர்கூட பருகாமல் எப்படி இருக்கமுடிகிறது?’ என நினைத்த மாத்திரத்தில் நம்மாழ்வார் ஒரு பாசுரத்தைக் குறிப்பிட்டார். இவருக்கு உண்ணும் சோறு, பருகும் நீர், வெற்றிலை என எல்லாமுமே அந்தக் கண்ணன் என்பது தெரிந்து, மதுரகவிக்கு வார்த்தைகள் வரவில்லை.

நம்மாழ்வார் பாசுரங்கள் எழுதுகின்ற காலகட்டத்தில், நூற்றியெட்டு திவ்ய தேசங்களின் பெருமாள்களும் வரிசையில் வந்து நின்று, நம்மாழ்வாரிடம் பாசுரங்கள் பெற்றுச் சென்றதாக ஐதீகம் உண்டு. ஒரு நாள் நம்மாழ்வார், மதுரகவியை அருகில் வர அழைத்தார்.

`‘நூற்றி ஒன்பதாவது திவ்ய தேசம் எதுவென்று தெரியுமா?’’

`‘நூற்றியெட்டு தெரியும். நூற்றி ஒன்பதா?’’

`‘இந்தப் பாசுரத்தைப் பாடு! புரியும்’’

`‘தஞ்சமாகிய தந்தை தாயொடு தானு மாய் அவை அல்லனாய்

எஞ்சல் இல்அமரர் குல முதல் மூவர் தம்முளூம் ஆதியை

அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்! அவனிவன் என்று கூழேன்மின்

நெஞ்சினால் நினைப்பான் எவன்?

அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே!’’

பாசுரத்தின் அர்த்தம் உள்வாங்க, மதுரகவிக்குக் கண்ணீர் பொங்கியது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பொருள் சொன்னார்.`‘தந்தையாய், தாயாய், தானுமாய், அல்லாத மற்றைப் பொருள்களுமாய், மேன்மையான தேவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாய், மூவருள்ளும் முதல்வனாய் இருக்கின்றவன் நம் பெருமாள். அசைக்க முடியாத நம்பிக்கையுடன், நாம் எந்த உருவத்தில் நம் பெருமாளை நம் நெஞ்சில் வைத்துத் துதிக்கின்றோமோ, அந்த வடிவுகொண்டு நம்மைக் காப்பான். நம் நெஞ்சம்தான் அந்த நூற்றி ஒன்பதாவது திவ்ய தேசமாகும்’’ எனச் சொல்லி முடிக்கையில் நம்மாழ்வார், மதுரகவியை நோக்கி, இரு கரங்களையும் உயர்த்தி ஆசிர்வதித்தார்.

`‘என் நெஞ்சில் தாங்கள். தங்கள் நெஞ்சில் அந்தப் பரந்தாமன். நான் தங்களைவிட பாக்கியவான்’’ என மதுரகவி கூறியதைக் கேட்டு நம்மாழ்வார் தனக்குள் சிரித்துக் கொண்டார். இப்படியாக, ஒவ்வொரு நாளும் ஒரு திருநாளாகவே அமைந்தது. அன்றொரு நாள், வழக்கத்தைவிட மிகுந்த பொலிவுடன் நம்மாழ்வாரின் திருவுருவம் திகழ்ந்தது. மதுரகவியிடம், `‘என் பணி முடிவடைந்தது. நான் வைகுண்டம் செல்லும் நாள் நெருங்கியாயிற்று’’

`‘நானும் தங்களுடன்... என்னையும்

தாங்கள்’’ என மதுரகவி முடிக்கும் முன்பே,

``உன் பணி எல்லோருக்கும் திராவிட வேதத்தைப் பரப்புவது. அதை நிறைவேற்றியபின், என்னை அடைவாய்’’ குருவின் வார்த்தைகளை வேதம்போல, மதுரகவி ஏற்றுக்கொண்டார்.

`‘தங்களின் உருவச்சிலையில் தங்களை ஆவாஹனம் செய்து நான் வழிபட தாங்கள் அருள வேண்டும். என்னை வழிநடத்த, என் பணிச் சிறக்க, என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்ய, அருளத்தான் வேண்டும். என்னுடன் தாங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும்’’ அவரின் ஆசியுடன் சிலை உருவானது.

அந்த முதல் சிலை நம்மாழ்வாரின் உருவத்துடன் ஒத்து இருக்கவில்லை. புன்னகையுடன் இரண்டாவதாய், மற்றுமொரு சிலை செய்யப் பணித்தார். நம்மாழ்வார், மதுரகவி கொணர்ந்த அந்தச் சிலையைக் கையில் வைத்து, கண்ணில் ஒற்றிக்கொண்டு, மனதில் பிரார்த்தித்தார். தன் கன்னத்தோடு கன்னமாக வைத்துக் கொண்டார். தலை முதல் பாதம் வரையிலும், ஒவ்வொரு அங்குலமாய், தொட்டு ஆசிர்வதித்தார். பார்த்துக் கொண்டிருந்த மதுரகவி பாசுரம் பாடினார்.

`‘எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்

சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்

எந்தை எம் பெருமான் என்று வானவர்

சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே’’

- பாசுரம் முடிந்தது.

மதுரகவி நமஸ்கரித்தார்.

`‘தாங்கள் பிறந்ததே பாசுரங்கள் இயற்றத்தான். அதுவும் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாய்!! யாரால் இது சாத்தியம்? பெருமாள் திருவாய்மொழியில்,

`‘ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி,

என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி,

தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன,

மா முதல் மும்மதத்தால் மதம் வீழும்,

கா முதல் கள்விப் பிணைப்புண்டு கிடந்தேன்,

தே முதல் தேனே! உன்னை ஒருநாளும் பிரியேனே!’’

``ஆயிரம் கவிகள் தோன்றியுள்ளனர். லட்சம் கவிகள் இன்னமும் தோன்றுவர். தாங்களே எல்லாக் கவிகளுக்கும் முதல்வன்!’’ நம்மாழ்வார், ‘`நான் பிறந்ததன் காரணம் எதுவோ? நானறியேன். ஆனால், மதுரகவி! நீ பிறந்தது எனக்காக மட்டுமே!’’ மதுரகவி, மதுரகவியாழ்வாராக ஆசிர்வதிக்கப்பட்டார். தனது முப்பத்தியாறாம் வயதில், ஒரு அதிகாலையில், நம்மாழ்வார், தனது வலது கரத்தில் சின்முத்திரை பதித்த வண்ணம், இடது கரத்தில் தன் உருவச் சிலையை நெஞ்சோடு அணைத்த வண்ணமுமாக இருந்தார்.

வதனத்தில் புன்னகை தவழ்ந்தபடி, மதுரகவியாழ்வாரை கண்களால் ஆசிர்வதித்தார். நம்மாழ்வார் புளிய மரத்தினடியில் அமர்ந்திருந்த கோலம், ஆதிசேஷன் மேல் பெருமாள் இருந்த கோலத்தை மதுரகவிக்கு அளித்தது. சில நொடிகளில் நம்மாழ்வார் பெருமாளின் திருவடியடைந்தார்.

கோதண்டராமன்