Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா..!

*விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அருகில் உள்ள துலுக்கன் குறிச்சி எனும் ஊரில் முருகப் பெருமான் வாழைமர முருகன் என்ற வித்தியாசமான பெயரில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வாழைமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் முருகப் பெருமான் வாழை மரத்துடன் அருள்பாலிக்கிறார்.150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த கோயிலின் தலவிருட்சமும் வாழை மரம்தான். இங்கே வைகாசி விசாகம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பால் குடம் எடுத்து முருகப் பெருமானை வழிபட, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெண்ணெய் மலை. இந்த மலையின் மீது முருகப் பெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். தனது மனைவியரான வள்ளி - தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் முருகப் பெருமான், வேல் இல்லாமல் காட்சிதருகிறார். இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வந்து வேலவனைத் தரிசித்தால், திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.

*சேலம் உடையார் பட்டிக்கு அருகில் உள்ளது கந்தாஸ்ரமம். இங்கு முருகப்பெருமானுக்கு தண்டாயுதபாணி தோற்றம். எதிரில் அம்பிகை 18 கரங்களுடன் கருணையே வடிவாக முருகனைப் பார்த்தவண்ணம் இருக்கிறார். இவர் சக்தி வடிவம், கந்தன் ஞான வடிவம் எனவே விசேஷ நாட்களில் முருகனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்செய்கிறார்கள். வலப்புறம் ஆணாகவும், இடப்புறம் பெண்ணாகவும் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

*பெரம்பலூரில் இருந்து 18கி.மீ., தொலைவில் உள்ளது செட்டிகுளம். இங்குள்ள மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது தண்டாயுதபாணி திருக்கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான், வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்திய படி காட்சி தருகிறார். இந்த சிறப்பு வேறு எந்த முருகன் கோயிலிலும் இல்லாதது. கடம்பவனத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அசுரர்களை முருகப் பெருமான் தன் வேலால் வீழ்த்தி வெற்றி கொண்டார். அதனால்இவ்வூரில் உள்ள காமாட்சியம்மன் செங்கரும்பை வழங்கி முருகப் பெருமானை வாழ்த்தினார். அதன் நினைவாக இந்த கோலத்தில் இங்குள்ளதாக ஐதீகம். இங்கு வைகாசி விசாகம் அன்று சங்கு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

*திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் எனும் ஊர் இங்குள்ள சாமவேதீஸ்வரர் கோயில். சண்டிகேஸ்வரர் தனது சாபம் தீரப்பெற்ற இடம் என்பதால் சுவாமி சந்நதியின் இருபுறமும் விநாயகரும், சண்டிகேஸ்வரரும்காட்சியளிக்கிறார்கள். இதை வேறு எங்கும் காணமுடியாது. அதேபோல் இக்கோயில் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ஒரு சிறிய கோயிலில் முருகப் பெருமான் கல்யாண சுப்ரமணியன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் தனது துணைவியாரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் தனியாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாதது.

*திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது செஞ்சேரிமலை மந்திரகிரி ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வேலாயுதசுவாமியும், உற்சவராக முத்துகுமாரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் 12 கைகளுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். இக்கோயிலில் ``பூக் கேட்டல்’’ என்ற பழக்கம் ஒன்று உள்ளது.பக்தர்கள் முருகனின் 12 கைகளில் வலது ஒன்றும் இடது ஒன்றுமாக ஏதாவது இரண்டு கைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் பூவை வைக்கின்றனர். ஐந்து நிமிடத்தில் வலது கரத்தில் உள்ள மலர் கீழே விழுந்தால் நினைத்தது நடக்கும். தாமதமாக பூ விழுந்தால் காரியம் மிக தாமதமாக நடக்கும். இடது புறத்தில் உள்ள பூ விழுந்தால் நினைத்த காரியம் நடக்காது என்று அறிந்து கொள்கின்றனர்.

*நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருக்கும்.

*நாகர்கோவிலில் இருந்து15 கிலோமீட்டர் தொலைவில் வேளிமலைச் சாரலில் அமைந்துள்ளது குமாரகோவில். இதன் புராணப்பெயர் வேள்வி மலை என்பதாகும். இங்குள்ள மூலவர் குமாரசாமி 10 அடி உயரத்தில் நீண்ட காதுகளுடன் காட்சி தருவது அபூர்வமானது. முருகப் பெருமான், வள்ளியம்மனுக்கு திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை இது என்று கூறப்படுகிறது. இந்தக் குமாரக் கோயிலில் வெள்ளிக் கிழமை தோறும் கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனை வாங்கிக் குடித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த கஞ்சி பிரசாதம் வெள்ளிக் கிழமை மட்டுமே வழங்கப்படும். தலவிருட்சமான வேங்கை மரத்திற்கு என தனி சந்நதி அமைந்துள்ள தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் 6ம் நாள் விழா அன்று வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்கள் ஆலய ஊழியர்களால் வாசிக்கப்படுகின்றன.