Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கம்பீரமும் தைரியமும் தரும் மிருகசீரிஷம்

வேத ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களின் வரிசையில் ஐந்தாவது நட்சத்திரமாகத் திகழ்வது மிருகசீரிஷம் (மிருகசீரிடம்) ஆகும். இது நவகிரகங்களில் தளபதியான செவ்வாயின் ஆதிக்கத்தில் வரும் முதலாவது நட்சத்திரமாகும்.

இந்நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் சுக்கிரனின் ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் புதனின் மிதுன ராசியிலும் அமைந்துள்ளன. செவ்வாயின் வீரம், சுக்கிரனின் அழகு, புதனின் புத்தி கூர்மை ஆகிய மூன்றும் இணைந்த ஒரு மேன்மையான நட்சத்திரமாக இது விளங்குகிறது.

இயல்பான குணங்கள், தோற்றம்

செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இவர்களிடம் இயல்பாகவே அதிக தன்னம்பிக்கை, எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியம், கம்பீரமான தோற்றம் மற்றும் பேச்சில் ஒருவிதமான ஆளுமை நிறைந்திருக்கும். வம்பு சண்டைக்குத் தானாகச் செல்ல மாட்டார்கள்; ஆனால் வந்த சண்டையை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தேடலும், ஆராயும் குணமும் இவர்களிடம் எப்போதும் இருக்கும்.

தேவதை - விருட்சம்

தேவதை: மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிதேவதை சந்திரன் (சோமன்) ஆவார். இதனால் இவர்களிடம் வீரம் மட்டுமே இன்றி, மென்மையான உணர்வுகளும், ஆன்மிகத் தேடலும் கலந்திருக்கும்.

விருட்சம்: இந்நட்சத்திரத்திற்குரிய மரமாக கருங்காலி மரம் திகழ்கிறது. கருங்காலி மரத்தை வளர்ப்பதும், கருங்காலி மாலையை அணிவதும் அல்லது அதன் நிழலில் தியானிப்பதும் செவ்வாயின் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி,

வெற்றியைத் தரும்.

நான்கு பாதங்களின் நவாம்சப் பலன்கள்

முதல் பாதம்  (ரிஷப ராசி - சிம்ம நவாம்சம்):

முதல் பாதம் சிம்ம நவாம்சத்தில் விழுகிறது. சூரியன் செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால், இவர்களிடம் சூரியனின் ஆளுமையும் செவ்வாயின் தைரியமும் இணைந்து மிகக் கம்பீரமான தோற்றத்தையும், அசைக்க முடியாத ஆத்ம பலத்தையும் தரும். சகோதரர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பார்கள். ராணுவம், காவல்துறை, காவல் துறை உயர் பதவிகள் மற்றும் நிர்வாகத் துறையில் பெரிய இடத்திற்கு வரும் ஆற்றல் பெற்றிருப்பார்கள்.

எச்சரிக்கை: ஜாதகத்தில் செவ்வாய் பலமிழந்து அல்லது 6, 8, 12 ஆகிய இடங்களில் கெட்டுப்போய் இருந்தால், இவர்களிடம் முரட்டுப் பிடிவாதமும், தேவையற்ற வழக்கு, வம்பு மற்றும் கோபத்தால் சிக்கல்களும் ஏற்படும்.

இரண்டாம் பாதம் (ரிஷப ராசி - கன்னி நவாம்சம்):

இரண்டாம் பாதம் புதனின் கன்னி நவாம்சத்தில் விழுகிறது. இவர்களுக்குக் கோபம் வந்தாலும் அதை அறிவோடும், திட்டமிட்டும் கையாளும் திறன் இருக்கும். பகைவர்களை எதிர்த்துப் போராடுவதை விட, தன் புத்திசாலித்தனத்தால் அவர்களை வீழ்த்தும் கலையைக் கற்று வைத்திருப்பார்கள். இவர்களது ஆகர்ஷண சக்திக்கு மயங்கிப் பலர்

நண்பர்களாவார்கள்.

மூன்றாம் பாதம் (மிதுன ராசி - துலாம் நவாம்சம்):

மூன்றாம் பாதம் சுக்கிரனின் துலாம் நவாம்சத்தில் விழுகிறது. இதனால் இவர்களிடம் இனிமையும் கம்பீரமும் சம அளவில் கலந்திருக்கும். கலைகளில் அதிக ஆர்வமும், எதையும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.

நான்காம் பாதம் (மிதுன ராசி - விருச்சிக நவாம்சம்):

நான்காம் பாதம் செவ்வாயின் சொந்த நவாம்சமான விருச்சிகத்தில் விழுவதால், செவ்வாயின் சொந்த வீட்டின் பலன் கூடும். கம்பீரமும், ஆராய்ச்சி

மனப்பான்மையும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை: இந்த நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் ராசி

நாதனோ அல்லது லக்னாதிபதியோ கெட்டுப்போயிருந்தால், இவர்கள் போடும் திட்டங்களும், கடின உழைப்பும் ‘‘விழலுக்கு இறைத்த நீர்” போல

வீணாகும் அபாயம் உண்டு.

கல்வி நிலை

மிருகசீரிஷ நட்சத்திரத்தினர் கற்கும் கல்வியில் ஆழமான அறிவு படைத்தவர்களாக இருப்பார்கள். கணிதம், அறிவியல், பொறியியல் (Engineering), நிலவியல், மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முதன்மை பெறுவார்கள். மிதுன ராசியில் விழும் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் தொடர்பியல், ஊடகம் மற்றும் வணிகக் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

உத்தியோகம் மற்றும் தொழில்

இவர்கள் அடிமைத் தொழில் செய்வதை விட, அதிகாரமிக்க பதவிகளையே விரும்புவார்கள்.

ராணுவம், காவல்துறை (Police), தீயணைப்புத்துறை, பாதுகாப்பு படைகள்.அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons), நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில், சிவில் இன்ஜினியரிங். ஆராய்ச்சித் துறை, விண்வெளித் துறை, மற்றும் அதிகாரமிக்க அரசுப் பதவிகள் (IAS/IPS). சூரியன், புதன், குரு ஆகிய மூன்று சுபச் சுடர்களின் தொடர்பு அல்லது சேர்க்கை ஒரு ஜாதகருக்கு மிகச் சிறந்த அறிவுத் திறனையும், சமூகத்தில் மாபெரும் மதிப்பையும் தேடித்

தரும் ‘சாரஸ்வத யோகம்’ மற்றும் ‘பிரம்ம யோகத்தின்’ அங்கமாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களின் இணைப்போ அல்லது பரஸ்பர தொடர்போ ஒருவரை வெற்றிகரமான ஆசிரியராகவோ அல்லது வழக்கறிஞராகவோ (வாதிடும் வல்லமை கொண்டவராகவோ) மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உறவுகளோடு எப்படி இருப்பார்கள்?

இவர்கள் குடும்பத்தின் மீது அதிக பற்றும், சகோதர-சகோதரிகளிடம் ஆழமான பாசமும் கொண்டிருப்பார்கள். ஆனால், இவர்களுடைய நேர்மையான, வெளிப்படையான பேச்சு மற்றும் பிடிவாதக் குணத்தால் சில நேரங்களில் உறவினர்களிடையே சிறு மனக்கசப்புகள் வரக்கூடும். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக இருந்தாலும், தங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

வணங்க வேண்டிய திருக்கோயில்

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய மிக முக்கியத் தலம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம் அக்னீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இந்நட்சத்திர நாளில் இக்கோயிலுக்குச் சென்று இறைவனுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது மாபெரும்

யோகத்தைத் தரும்.

பலன்கள் அதிகரிக்க பரிகாரங்கள்

தெய்வ வழிபாடு: செவ்வாய்க்கிழமை களில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி, கந்த சஷ்டி கவசம்

பாராயணம் செய்வது சிறப்பு.

தானம்: செவ்வாய்க்கிழமை தோறும் துவரம்பருப்பு, சிவப்பு நிற ஆடைகள் அல்லது மாதுளம் பழங்களை ஏழை

எளியோருக்குத் தானமாக வழங்கலாம்.

விலங்கு - பறவை வழிபாடு: சிவப்பான காளை மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது தட்டப்பயறு வழங்கி வருவது செவ்வாயின் தோஷங்களைப் போக்கி, சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும்.