அட்டைப் படத்தில் இடம்பெற்ற கிருஷ்ணபரமாத்மாவின் படத்தை பார்த்தவுடன், கண்களில் ஒற்றிக் கொண்டேன். நேரில் காண்பது போல் பேரானந்தம் அடைந்தேன். அத்துடன், வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் பூஜை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் பண்டிகை என இணைப்பாக ஆவணி மாதம் ராசிபலன். என பக்தி ஸ்பெஷல் இதழ் எப்பவும் கிரேட்தான்.
- கோ.செல்வமுத்துகுமார், சிதம்பரம்.
தேஜஸ்வி பதிலில், நாம ஸ்மரணம் பற்றிப் படித்ததும், ``நாரண நாமம் என் ஜீவனம். நமன் வரும் போதும் வரவேண்டும் ஹரி நாம ஸ்மரணம்’’ என, எஸ்பிபி பாடிய கோவிந்த ஹரி நாம சங்கீர்த்தனம் பாடல், என் நினைவிற்கு வந்தது. மேலும், கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் பண்டிகைகளை ஒட்டி கிருஷ்ணர் சிறப்பிதழாக மலர்ந்த இந்த இதழில், எல்லா கட்டுரைகளையும்
படித்தேன், ரசித்தேன்.
- ஸ்ரீ காந்த், பிச்சாண்டார் கோயில் - திருச்சி
சிற்பமும் சிறப்பும் கட்டுரையில், ``திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்’’ சிற்பங்களைக் கண்டேன். 10-ஆம் நூற்றாண்டில் கட்டிய இத்திருக்கோயிலைப் பற்றிய செய்திகள் அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது. அதேபோல், ``கிருஷ்ணர் அருள்பாலிக்கும் தலங்கள்’’ என்னும் தலைப்பில் கட்டுரை கண்டேன். கிருஷ்ணனுக்கு இத்தனை பெயர்கள் இருக்கிறதா! என ஆச்சரியமாக இருந்தது. மேலும், தலையங்கத்தில் கிருஷ்ணம் என்பது நீலம், கறுப்பு, இரண்டையும் குறிக்கும். அதுமட்டுமல்ல கிருஷ்ணன் என்றாலே ஆகர்ஷிக்கக்கூடியது என்று கூறியது
இதயத்தை புல்லரிக்கச் செய்தது.
- வண்ணை கணேசன், சென்னை.
கிருஷ்ண ஜெயந்தியும், ஓணம் பண்டிகையும் இணைத்து ஈடு இணையற்ற வகையில் முத்துக்கள் முப்பது கோர்ப்பாகத் தொகுத்திருப்பது, தனிச் சிறப்பு! பத்து பக்கங்களும் முத்தான ஆன்மிகச் சொத்துதான்!
- ஆர்.உமா காயத்ரி, நெல்லை.
வரத்தை அருளுகின்ற இறைவனாய் விளங்கும் வில்லியனூர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் மகத்துவங்களை விவரித்த கட்டுரை + வண்ணப்படங்கள் இரண்டும், வெகு அற்புதமாக ஆனந்தமாக இறைத் தரிசன அனுபவமாக சிலிர்க்க வைத்தது.
- த.சத்தியநாராயணன், சென்னை.
அட்டைப்படத்தில் நீலநிற கிருஷ்ணன் அழகோ அழகு! பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டியது. கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வெளியான `‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’’ கட்டுரை படிக்கப் படிக்க பஞ்சாமிர்தம் சாப்பிட்டதுபோல் இனித்தது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஓணம் பண்டிகை பற்றி அறியாத பல தகவல்களை தெரிந்து ஆனந்தம் கொள்ள உதவியது `‘முத்துக்கள் முப்பது’’ கட்டுரை.
நன்றிகள்!
- சுந்தரராஜன், ஸ்ரீ ரங்கம்.
``மாரியம்மன் தரிசனம்’’ என்னும் கட்டுரை, ஒரே ஒரு பக்க கட்டுரையாக இருந்தாலும், தகவல்கள் அறியாதவையாக இருந்தன. குறிப்பாக, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டால், பக்தர்கள் நீலகிரி குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மனை வேண்டுவார்கள் என்றும், வேண்டிய பின்பு உடனே பெருமழை பொழியத் தொடங்கும் என்ற செய்தி சிலிர்ப்பூட்டும் விதமாக அமைந்தது. அதேபோல், ஒருபக்க கட்டுரையான ``மன்னர்கள் சூடிய மகேசனின் பெயர்கள்’’ என்னும் கட்டுரையும்
அருமையாக இருந்தது. வாழ்த்துகள்!
- கலைச்செல்வி, நாகை.
``கலைமணம் கமழும் கிருஷ்ணர் கோயில்’’ கட்டுரையில், அடடா... சிற்பங்களும், புகைப்படங்களும் மிக அழகாக இருந்தன. அந்த கோயில்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் படிக்கப்படிக்க அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்கின்ற ஆவலைத் தூண்டியது. அதற்கு மிக்க நன்றிகள்.
- வித்யா ராகவேந்திரன், அரசூர் - விழுப்புரம்.


