Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நிம்மதியான வாழ்வருளும் நிர்மனசா யோகினி

‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்று இறைவனை ஞானிகள் சொல்கிறார்கள். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். பேரானந்த வடிவில் இருக்கிறான். இப்படி எங்கும் இருக்கும் இறைவனை நம்மால் பார்க்கமுடிகிறதா? இல்லை. ஆனந்த வடிவாய் இறைவன் உலகம் எங்கும் பரவி இருக்க, நம்மால் ஏன் அந்த ஆனந்தத்தை உணர முடியவில்லை? காரணம், மனதும் அதில் இருக்கும் எண்ணங்களும்தான்.

இந்த மனம், உலகம் அனைத்தும் இறைவனே என்ற உணர்வை ஏற்பதில்லை. இறைவனே உலகமாக இருந்தாலும், அவனே இறைவனின் ஒரு சிறு துளியாக இருந்தாலும், அவன் இதை உணர்வதில்லை; அங்கீகரிப்பதில்லை. ஒரு மனிதனுக்கு, அவனை அல்லாத மற்றொருவரால்தான் ஆபத்து வரும், கவலை வரும், கஷ்டம் வரும்.

ஆனால், உண்மையில் அனைத்துமே இறைவன் என்று இருக்கும் போது, மனிதனுக்கு எப்படி கவலையும் சங்கடமும் வரும்? எனில் மனிதன் இறைவனே எல்லாம் என்ற எண்ணத்தை உணர வேண்டும். தன்னை வேறாக நினைக்கும் அவனுடைய மனது அவனை விட்டு அகல வேண்டும். அப்போதுதான் நிலையான முக்தி, அன்பு கிடைக்கும்.

தண்ணீர் தனித்து இருக்கும் போதுதான் அது அசுத்தங்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். கடலில் கலந்துவிட்டால் அசுத்தம் ஏது? இறைவனோடு கலந்துவிட்டால் துன்பம் ஏது? இப்படி இறைவனை அடைவதில் தடையாக இருக்கும் மனதை, நான் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்வதால் இந்த யோகினி நிர்மனசா யோகினி என்று அழைக்கப்படுகிறாள்.

தவளை முகமும் ரத்த கபாலமும்

இந்த யோகினி விசித்திரமாக பெண்ணின் உடலும், தவளையின் முகமும் கொண்டிருக்கிறாள். தவளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தாவிக்கொண்டே இருக்கும். ஆதிசங்கரர் ‘சிவானந்த லஹரி’யில் ஓர் அழகான ஸ்லோகத்தை சொல்கிறார். `‘எப்போதும் மோகம் என்னும் காட்டில், யுவதிகள் மார்பு என்ற மலைகளில் ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு தாவிக்கொண்டும், போகங்கள் என்னும் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருக்கும் எனது மனம் எனும் குரங்கை, கபாலியே, பிட்சாண்டவராக நீர் பிச்சை எடுக்கச் செல்லும் போது, கூடவே எடுத்துச் செல்லுங்கள்.

குரங்கைக் கூட்டி வந்து விந்தை செய்தால் உமக்கு நல்ல பிட்சை கிடைக்கும். எனது மனம் என்ற குரங்கும் உங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கும்’’ என்று சுவைபட சொல்லி இருக்கிறார். அதாவது மனம் எனும் குரங்கை கட்டுப்படுத்த இறைவனை அடைவதுதான் ஒரே வழி என்பதை மிகமிக அழகாக கவிதைத் திறன் பொங்க சொல்லி இருக்கிறார் சங்கரர். அந்த வகையில் மனிதன் மனமும், பொன், பெண், மண், மக்கள் என்று நிமிடத்துக்கு நிமிடம் தாவிக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட தாவும் மனதை கட்டுப்படுத்த உதவும் யோகினி என்பதால், இவளுக்கு தவளை முகம்.

அதே போல, இவள் ஒரு கையை உயர்த்தி, அதை தனது மார்பில் வைத்திருக்கிறாள். இதுவும் மனதைக் கட்டுப் படுத்தும் தன்மையை குறிக்கிறது. இதய கமலத்தில் குடி இருக்கும் ஆன்மாவை, இறைவனை உணர வேண்டும் என்று காட்டிக் கொடுக்கிறது இந்தத் திருக்கரம். மற்றொரு திருக்கரத்தில் இந்தத் தேவி ஒரு கபாலத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள். அதில், ரத்தம் நிறைந்து வழிகிறது. காலியான கபாலம், நான் என்ற அகந்தை மொத்தமாக அழிந்த மனிதனின் மனதைக் குறிக்கிறது. அந்தக் காலி கபாலத்தில் பொங்கி வழியும் ரத்தம், நான் என்ற ஆணவம் அழிந்த மனதில் அளவற்ற பிரபஞ்ச ஆற்றல், தானே பொங்கிவரும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது.

வாசி யோகமும் நிர்மனசா யோகினியும்

யோகத்தின் முதல் நிலை மனதைக் கட்டுப்படுத்துவது. மனதைக் கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும் அதில் மூச்சுப்பயிற்சி இன்றியமையாதது. எரிகின்ற நெருப்பை ஓர் ஊது குழாய் வைத்து ஊதி, பெரிதுபடுத்துவது போல, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை நரம்புகள் என்று சொல்லப்படும் ஊதுகுழாயில், மூச்சுக்காற்று என்ற காற்றை செலுத்தி எழுப்ப வேண்டும். இப்படி இடைவிடாத யோகப் பயிற்சியின் மூலம், பிராண வாயுவை குறிப்பிட்ட நாடியில் செலுத்தி, பயிற்சி செய்யும் போது, மனிதனின் உடல் இரும்பைப் போல ஆகிறது.

ஆகவே அவனுடைய ஆயுளும் கூடுகிறது. பொதுவாகவே நாம் மூச்சை அதிகம் விடவிட நமது ஆயுள் குறைகிறது என்று யோக சாஸ்திரம் சொல்கிறது. ஆகவேதான் யோகிகள் மூச்சைக் கட்டுப்படுத்தி, தங்கள் ஆயுளை வளர்க்கிறார்கள். பொதுவாகவே, நீண்ட நாட்கள் வாழும் உயிரினமான ஆமை, தேரை, தவளை இவை எல்லாமுமே மிகமிக மெதுவாகவும் அளவாகவும் மூச்சை விடக் கூடியவை.

ஆகவே இவை நீண்ட நாட்கள் வாழ்கின்றன. அதேபோல, வேகவேகமாக மூச்சை இழுத்து விடும் நாயின் ஆயுளோ குறைவாகவே இருக்கிறது. ஆகவே நமது பிராண சக்தியை வீணடிக்காமல் மூச்சைக் கட்டுப்படுத்தும்போது, நமது ஆயுளும் அதிகரிக்கிறது. இதை உணர்த்தவே, நீரிலும், நிலத்திலும் வாழ்ந்து மூச்சை விடுவதும், நீண்ட நாட்கள் வாழ்வதும், தனது சருமத்தால் சுவாசிக்கும் தவளையின் முகத்தை இந்த யோகினி கொண்டு இருக்கிறாள்.

கிணற்றுத் தவளையும் நிர்மனசா யோகினியும்

கிணற்றுக்குள்ளே வாழும் தவளை, கிணறு மட்டுமே உலகம் என்று எண்ணிக் கொண்டிருக்கும். அது போல நாமும் நமது கண்களுக்குத் தெரியும் இந்த உலகமே நிரந் தரம் என்று எண்ணி, நமது வாழ்வை வீணடிக்காமல் முக்தி என்னும் உயர்ந்த லட்சியத்தை அடைய செயல்பட வேண்டும் என்று காட்டவே இந்த யோகினி தவளை முகத்தோடு காட்சித் தருகிறாள்.

தவளை, ஒரு தண்ணீர்ப் பானையில் விழுந்து விட்டது, அந்தப் பானையை அடுப்பில்இருந்தது, அந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏறஏற, அந்த சூட்டுக்கு ஏற்ப தன்னுடைய உடலின் தட்ப வெப்ப நிலையை மாற்றிக் கொண்டு அதிலேயே நீந்திக் கொண்டிருக்கும். அப்படியே பொறுத்திருந்து பொறுத்திருந்து, இறுதியில் அந்தத் தண்ணீர் கொதி நிலைக்கு வந்து இருக்கும்.

ஆனால், அதுவரையில் தமது சக்தி அனைத்தையும், தண்ணீரின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய உடலை மாற்றிக்கொள்வதிலேயே அனைத்து சக்தியையும் செலவிட்டு இருந்த தவளை, இறுதியில் அந்தத் தண்ணீர் கொதிநிலைக்கு வரும் போது, அதிலிருந்து வெளியே குதிக்கக்கூட சக்தி இல்லாமல் அதிலேயே அப்படியே வெந்துபோகும். மனிதனும் இப்படித்தான். தனக்கு இன்னமும் நிறைய ஆயுள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், இறைவனை மறந்துவிட்டு திரிகிறான். ஆனால், கடைசியில் அவனது ஆயுள் முடிந்து யமன் வரும் போது, அவனுக்கு இறைவனின் நினைப்பு வராமலே போய்விடுகிறது.

காரணம் என்ன? அவன் ஆயுளோடு இருக்கும்போது இறைவனை நினைத்தால்தானே ஆயுள் பிரியும்போது, இறைவனின் நினைப்பு வரும்? இப்படி மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தி மனதை அடக்கி, இறைவனடி சேர வழி செய்பவள் இந்த யோகினி.

ஜி.மகேஷ்