Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகத்தான புண்ணியம் தரும் மாசி மகம்

மாசி மாத பெயர்

மாசி என்பது கும்ப ராசியில் சூரியன் பிரவேசித்து நிற்கும் மாதம். கும்ப ராசி என்பது காற்று ராசி. காலச் சக்கரத்தின் 11வது ராசி. சனிக்கு உரிய வீடு கும்பம். அங்கே சனியின் தந்தையான சூரிய பகவான் உள் நுழைந்து இருக்கும் காலம்தான் மாசி மாதம். முதலில் இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம். சாந்த்ரமான முறை என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. மாதங்களின் பெயரை சாந்த்ரமான ரீதியில்தான் அமைத்திருக்கிறார்கள். அந்த மாத பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் நிகழ்கிறதோ அதை வைத்து மாதங்களின் பெயரை நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மக நட்சத்திரத்தில், சிம்ம ராசியில் சந்திரன் பிரவேசிக்க, அதன் நேர் ராசியில் அதாவது கும்ப ராசியில் சூரியன் இருக்க பௌர்ணமி ஏற்படும். இந்த பௌர்ணமி மக நட்சத்திரத்தில் ஏற்படுவதால் இதற்கு மாகம் என்று பெயர். அது பிறகு மாசி மாதமாக மாறியது.

மாசி, மகம் பெருமையை வசிஷ்டரிடம் கேள்

மாசி மகத்தின் சிறப்பு குறித்து ஒரு கதை உண்டு. இதனை சூத புராணிகர் முனிவர்களுக்குக் கூறுகின்றார். ஒருமுறை திலீப மகாராஜன் வேட்டை யாடுவதற்கு காட்டுக்குச் சென்றான். அவன் நிறைய நேரம் அங்கு செலவழித்தான். களைத்துப் போய், விடியல் காலையிலே நகரத்திற்குத் திரும்பினான். அப்பொழுது வழியில் வ்ருத்த ஹாரித முனிவரை பார்த்தான். அவர், ``இன்றைக்கு மாசி மகமாயிற்றே, புனித நதியில் நீராட வேண்டிய நேரம் ஆயிற்றே.. நீ அதை விட்டுவிட்டு என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டவுடனே திலீபன் சொன்னான். ``எனக்கு மாசி மகத்தின் பெருமை தெரியாது. அதனால் நான் வேட்டையாடச் சென்று விட்டேன்’’ என்று சொல்ல அப்பொழுது முனிவர் ``அரசே, உன்னுடைய குல குருவான வசிஷ்டரிடம் போய்க் கேள்; அவர் அந்தப் பெருமையைச் சொல்லுவார்’’ என்று மாசி மக ஸ்நானத்திற்குக்

கிளம்பிவிட்டார்.

குரூரமான உருவத்தை அழகாக மாற்றிய மாசி மகம்

மகாராஜா திலீபன் புலம்பினான். நமக்கு ஏன் வசிஷ்டர் மாசி மகத்தின் பெருமையைச். சொல்லவில்லை என்று குழம்பி வசிஷ்டரிடம் போய்க் கேட்டான். அப்பொழுது அவர் மாசி மகத்தின் பெருமைகளை சாஸ்திர ரீதியாக எடுத்துரைத்தார். மாசி மகம் அன்று விடியற்காலையிலே பகவானை நினைத்து நீராடுவதன் மூலமாக அதுவரை செய்த அத்தனை பாவங்களும் போய் விடும் என்றார். அதோடு குருதபஸ் என்ற மகாராஜாவின் கதையையும் சொன்னார். குருதபஸ் பலவிதமான பாவங்களைச் செய்து கர்ம வினையால் குரூரமான உருவத்தை அடைந்தான். அவன் எத்தனையோ பிராயச்சித்தங்கள் செய்தும், அந்த தோஷத்தை போக்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் மாசி மகம் விரதமிருந்து காலையில் சுவாமி தீர்த்தவாரியின் போது, ஸ்நானம் செய்து, நாராயணனை பூஜித்தான். பாவங்களைப் போக்கிக் கொண்டு அழகான உருவத்தை அடைந்தான் என்றார் வசிஷ்டர். இதைக் கேட்டவுடன் திலீப மகாராஜா மாசி மக உற்சவத்தை மிகப் பெரிதாக நடத்தியதோடு தானும் நீராடி, ஐஸ்வரியங்களையும் கீர்த்தியையும் பெற்றான்.

தேவ மாதர்களும் கொண்டாடும் மாசி மகம்

இப்படி பல புராணக் கதைகள் மாசி மகத்தின் மகத்துவத்தைப் பற்றி உண்டு. தேவ உலகத்தில் உள்ள ஒரு பெண் காஞ்சனமாலை. அவள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் அன்று பூலோகத்தில் இறங்கி பிரயாகையில் நீராடிவிட்டுச் செல்வாள். ஒருமுறை அவள் மாசி மக நீராடிவிட்டு, கைலாய மலை சென்று, அங்கு ஒரு பூங்கொடிக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவள் அருகிலே ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருந்தான். காஞ்சன மாலை ``நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டவுடன், அந்த இளைஞன் பேசினான். ``அம்மா, நான் ஒரு ராட்சசன். நீ நீராடி விட்டு வரும் பொழுது உன்னுடைய ஆடை யில் இருந்து ஒரு சொட்டு நீர் என் மீது விழுந்தது. என்னுடைய ராட்சச உருவம் மாறிவிட்டது’’ என்று சொன்னவுடன், ``நீ சொல்வது உண்மைதான். நான் பல காலமாக மாசி மகம் அன்று பூமிக்கு வந்து பிரயாகையில் நீராடி வருகின்றேன். அதன் மகிமை தான் உனது ராட்சச உருவத்தைப் போக்கி நல்ல உருவத்தைத் தந்தது என்றாள். தன்னுடைய ஆடையை பிழிந்து அந்த நீரால் அரக்கனுக்கு புண்ணிய பலனைத் தர, அவன் உயர்ந்த பிறவியை அடைந்தான்.

எல்லாக் கோயில்களிலும் தீர்த்தவாரி

இப்படி மாசி மகத்தின் பெருமை பற்பல புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்றைய தினம் எல்லா திருக்கோயில்களிலும் 10 நாள் இறைவனுக்கு பெருவிழா நடத்துவார்கள். விழா நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரி உற்சவம் என்பது பெருமாள் கோயில்களில் மட்டும் நடைபெறுவது அல்ல; சிவாலயங்களிலும் நடைபெறும். முருகன் ஆலயங்களிலும் நடைபெறும். அம்மன் ஆலயங்களிலும் நடைபெறும். காரணம் இறைவன் தீர்த்த வடிவாக இருக்கின்றான். மாசி மகம் திருநாளன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய பன்னிரெண்டு சிவன் கோயில்களில் இருந்து உத்ஸவ மூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளுவார்கள். அப்போது கோயிலின் அஸ்திர தேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெறும். அஸ்திர தேவர்கள் மகாமகக் குளத்தில் நீராடிய பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்வார்கள்.

நீர் நிலைகள் தூய்மை பெறுகின்றன

மனிதர்களுடைய பாவங்களை புண்ணிய நதிகளும் கடல்களும் தீர்க் கின்றன.ஆனால், இந்தப் பாவங்களை அந்த நீர்நிலைகள் சுமக்கின்றன. இதனால் சேரும் பாவங்களை எல்லாம் அந்த நதிகளும் நீர் நிலைகளும் போக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா. அது. அமலன் என்று எல்லா குற்றங்களையும் நீக்குகின்ற இறைவனால் மட்டுமே முடியும். அதற்காகவே ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகம் அன்று தீர்த்தவாரி நடக்கிறது. இறைவன் திருவடி விளக்கத்தாலும்,திருமஞ்சனத்தாலும் நீர் நிலைகள் பாவங்கள் தீர்ந்து தூய்மை பெறுகின்றன. தீர்த்தவாரியால் கடல், ஆறுகள், என அனைத்து நீர் நிலைகளும் தூய்மை பெறுகின்றன.