Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஏழரைச் சனியில் திருமணம் செய்யலாமா?

?யமுனைத்துறைவன் என்பது யாருடைய திருநாமம்?

- கோபால கிருஷ்ணன், தர்மபுரி.

பகவான் கண்ணனுடைய திருநாமம். யமுனை நதி அவன் விளையாடிய நதி. கண்ணன் அந்த நதியோடு கொண்ட தொடர்பையே அவனுக்கு நாமமாக இட்டிருக்கிறார்கள். இந்த நாமம் நாதமுனிகளுக்கு மிகவும் பிடித்த நாமம். அவர் வடக்கே யாத்திரையில், யமுனைத் துறையிலே தங்கியிருந்த பொழுது பேரன் பிறந்த செய்தி கிடைத்தது. அப்பொழுது யமுனைத் துறைவன் என்கிற பெயரை தன்னுடைய பேரனுக்குச் சூட்டினார். யமுனைத் துறைவன் பின்னால் ஆளவந்தார் என்று பெரும் புகழோடு விளங்கினார். ஆளவந்தார் ராமானுஜருக்கு குரு என்பதிலிருந்து இவர் பெருமை வழங்கும்.

?வைணவத்தில் 108 திவ்ய தேசம் என்று சொல்வது எந்தக் கணக்கு? இந்தியாவில் 108 திருமால் ஆலயங்கள் தான் இருக்கிறதா?

- ராமச்சந்திரன், சங்கரன்கோவில்.

இந்தியாவில் பல நூறு திருமால் ஆலயங்கள் இருக்கின்றன தமிழ்நாட்டிலே புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும், இந்தியா முழுவதும் 108 திவ்ய தேசங்கள் என்று ஒரு கணக்கு வைணவ சமயத்தில் உண்டு. இதற்கு என்ன காரணம் என்றால், எந்தந்த திருத்தலங்கள் ஆழ்வார்களால் பாடப் பெற்றதோ அந்தத் திருத்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைக்கும் மரபு வைணவத்தில் உண்டு. ஆழ்வார்களால் பாடப்படாத தலங்கள் எத்தனைதான் புராணப் பிரசித்தி பெற்றதாக இருந்தாலும் திவ்ய தேச கணக்கில் வராது. ஆழ்வார்கள் பாடிய தமிழ் பாசுரங்கள் அத்தனை பெருமை மிக்கது என்பதுதான் இதில் இருந்து நமக்குத் தெரிகிறது.

?ஆக்னேயம் என்பது எந்த திசை?

- சாரதா, பெங்களூரு.

அக்னி மூலைக்கு அதாவது தென்கிழக்கு திசைக்கு ஆக்னேயம் என்று பெயர் வாஸ்து சாஸ்திரப்படி அங்கு தான் சமையலறை அமைக்க வேண்டும்.

?எந்த மூர்த்தியை வணங்கினால் கலைகளில் வளர்ச்சி அடையலாம்?

- திவ்யா, சேலம்.

விடாத பயிற்சியோடும் முயற்சியோடும் நீங்கள் விரும்புகின்ற மூர்த்தியை வணங்கினாலே உங்களுக்கு கலைகளில் மிகச் சிறந்த வளர்ச்சி கிடைக்கும். அதைவிட, சொல்லித் தந்த குருவை முக்கியமாக வணங்க வேண்டும். சரஸ்வதியை எப்போதும் வணங்குங்கள்.

?திதி தர்ப்பணம் போன்ற தினங்களில் முதலில் எந்த பூஜையைச் செய்ய வேண்டும்?

- பரமேஸ்வரி, கரூர்.

முதலில் முன்னோர்களுக்கான பூஜையைச் செய்து விட்டுப் பிறகுதான் தெய்வத்தின் பூஜையைச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் இதுகுறித்து ஒரு அழகான குறட்பா பாடி இருக்கிறார். “தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்ற திருக்குறள், இல்லறத்தாரின் கடமைகளாக முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர் மற்றும் குடும்பம் என ஐந்திடத்தும் அறநெறி தவறாமல் காத்து நடக்க வேண்டும் என்கிறது. இதில் உள்ள வரிசையைக் கவனித்தால் முதலில் தென்புலத்தார் அதற்குப் பிறகு தெய்வம் என்று தான் வருகிறது. பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு, பிறகு வீட்டில் பூஜை செய்து படைத்துவிட்டு சாப்பிடுகின்றார்கள். எனவே, முதல் பூஜை முன்னோர்களுக்கே.!

?ஏழரைச் சனியில் திருமணம் செய்யலாமா?

- ரங்கராஜன், ஸ்ரீரங்கம்.

தாராளமாகச் செய்யலாம். அப்படிச் செய்த பல ஜாதகங்கள் இருக்கின்றன. நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஏழரைச் சனிக்கு ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு ஜாதகத்திலும் சனி ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லி வைத்துப்போய் விட்டார்கள். ஆனால், உண்மையில் அப்படி அல்ல. திருமண காலத்தில் ஏழரைச்சனி வந்துவிட்டால் பயப்பட வேண்டியது இல்லை. குரு பலத்தைப் பார்த்து திருமணத்தைச் செய்யலாம். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

?கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். எனவே, கையெழுத்திற்கும் தலையெழுத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

- சரவணன், மயிலாடுதுறை.

இல்லை. கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பது போல் ஒரு சிலர் தவறான கருத்தினை பரப்பி வைத்திருக்கிறார்கள். கையெழுத்து மற்றும் தலையெழுத்து ஆகிய இரண்டும் நன்றாக இருப்பவர்களும் நம் கண்முன்னே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜோதிடவியல் ரீதியாக தலையெழுத்து என்பது லக்ன பாவகத்தைக் குறிக்கிறது. லக்ன பாவகம் நன்றாக அமைந்திருந்தால் எழுதப் படிக்க தெரியாதவனாக இருந்தாலும் அனுபவ அறிவின் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை எட்டி விடுவான். ஆக கையெழுத்திற்கும் தலையெழுத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

?ஒருவரின் பிறப்பு ஜாதகம் முக்கியமா? அல்லது கர்மா என்பது முக்கியமா?

- ஜி.செல்வமுத்துக்குமார், கடலூர்.

அவரவர் செய்த கர்மவினையின் அடிப்படையில்தான் ஜாதகம் என்பதே அமைகிறது. அதனால்தான் ஜாதகம் எழுதத் துவங்கும்போது ஜோதிடர்கள் முதலில் இந்த வரிகளை எழுதிவிட்டுத்தான் ஜாதகம் கணிக்கத் துவங்குவார்கள். ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்பதே அந்த வரிகள். அவரவர் செய்த பூர்வஜென்ம புண்ணியத்தின் அடிப்படையில் இந்த ஜென்மாவினை அனுபவிக்கிறார்கள் என்பதே அதற்கான பொருள். ஆக கர்மாவின் அடிப்படையில்தான் ஜாதகமே அமைகிறது என்பதால் இரண்டும் ஒன்றுதான். அந்த கர்மாவின் அடிப்படையில் அமைந்த ஜாதகத்தினைக் கொண்டு நாம் பலன்களை அனுபவிக்கிறோம்

என்பதுதான் உண்மை.

?அர்ச்சாவதாரம் என்று உபந்நியாசம் செய்பவர்கள் முதல் பக்தி கதைகளில் எல்லாம் சொல்லப்படுகிறதே, அப்படிப்பட்ட அர்ச்சாவதாரத்திற்கு அப்படியென்ன சிறப்பு?

- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

அர்ச்ச என்றால் வழிபாடு என்று பொருள். அவதாரம் என்றால் அங்கே வருதல் என்று அர்த்தம். அதாவது பூஜை செய்வதின் மூலமாக தெய்வசக்தியை அங்கே வரவழைப்பது என்பதே அர்ச்சாவதாரம் என்ற வார்த்தையின் பொருள் ஆகும். ஆலயங்களில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளை அர்ச்சாவதாரம் என்று புரிந்துகொள்ளலாம். இந்த வார்த்தையானது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் காணப்படுகிறது. பெருமாள் ஆனவர் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளைக் கொண்டவராக உள்ளார் என்றும் இந்த கலியுகத்தில் திருமால் 108 திவ்யதேசங்களில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்றும் வைணவப் பெரியோர்கள் சொல்வார்கள். எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் சிலை வடிவங்களில் தெய்வீக சாந்நித்யம் கொண்டிருக்கும் இறை மூர்த்தங்களே அர்ச்சாவதாரம் என்று பொருள் காணலாம்.