Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி

*வஹ்னி முனிவரின் புதல்வர்களான கோபிலர், கோபிரளயர் போன்ற இருவருக்கும் பிருந்தாவனத்தில், தான் நிகழ்த்திய 32 லீலைகளையும் கண்ணன் நிகழ்த்திக் காட்டிய தலம் மன்னார்குடி.

*அவற்றில் கடைசியாக கண்ணன் காட்டிய 32வது கோலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன் திருக்கோலம். கோபிலர், கோபிரளயர் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அத்திருக்கோலத்திலேயே இத்தலத்தில் நிலைகொண்டார் என்கிறது தலபுராணம்.

*இதனாலேயே இத்தலம் தட்சிணதுவாரகை என அழைக்கப்படுகிறது.

*இத்தலம் 154 அடி உயர ராஜகோபுரம், 7 பிராகாரங்கள், 16 கோபுரங்கள், 24 தெய்வ சந்நதிகள், நெடிதுயர்ந்த மதில்கள், அழகான மண்டபங்கள் கொண்டு கலைப் பொக்கிஷமாய் திகழ்கிறது.

*நான்கு வேதங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதால் ராஜாதி ராஜ சதுர்வேதமங்கலம் எனவும், செண்பக மரங்கள் நிறைந்திருந்த இடமாதலால் செண்பகாரண்யம் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

*இத்தலத்தில் காணப்படும் ஒற்றைக் கல்லினாலான கருடகம்பம் வியப்புடன் தரிசிக்க வேண்டிய ஒன்று.

*மூலவர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வாசுதேவர் எனவும் உற்சவர் ஸ்ரீவித்யாராஜகோபாலன் என்றும் வணங்கப்படுகிறார்.

*உற்சவ மூர்த்தி, கோபாலசுந்தரீ எனும் அம்பிகை உபாசனையில் போற்றப்படும் லலிதையும் கண்ணனும் சேர்ந்த வடிவில் திரிபங்க நிலையில் தரிசனம்அளிக்கிறார். இவர் பாதத்தில் தேவிக்குரிய ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

*மூல தாயார், செண்பகலட்சுமி என்றும், உற்சவர் செங்கமலத்தாயார் எனும் பெயரிலும் அருளும் தலம் இது.

*தாயாரின் தோழிகளாக ராஜநாயகி, துவாரகா நாயகி என இருவர் அருள்கின்றனர்.

*இக்கோயிலிலுள்ள சந்தான கோபாலன் விக்ரகத்தை மழலை வரம் வேண்டுவோர் மடியில் ஏந்தி பிரார்த்தனை செய்தால் தட்டாமல் அவர்களுக்கு பிள்ளைப்பேறு அருள்கிறான் கண்ணன்.

*தலவிருட்சமாக புன்னைமரமும், பத்து தல தீர்த்தங்களில் முக்கியமானதாக ஹரித்ரா தெப்பக்குளம் விளங்குகிறது. இது 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 23 ஏக்கர் பரப்பளவும் கொண்டு பிரமாண்டமாக வியாபித்திருக்கிறது.

*இத்தலத்தில் தினமும் ஏதாவது உற்சவம் நடந்து கொண்டே இருப்பதால் இப்பெருமாள் நித்யோற்சவப் பெருமாள் என பக்தர்களால் போற்றப்படுகிறார்.

*இத்தல பிரம்மோற்சவத்தை பிரம்மாவே தொடங்கி வைத்ததாக ஐதீகம்.

*பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் பஞ்சமுக ஹனுமார் வாகனமும், ஆறாம் திருநாள் இருதலை ஒரு உடல் கொண்ட கண்டபேரண்ட பட்சி வாகனமும் இத்தலத்தின் விசேஷ வாகனங்களாக பவனி வருகின்றன.

*16ம் திருநாளான வெண்ணெய்த்தாழி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

*இந்த பெருமாள் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் அருள்புரிந்து வருவதாக நம்பப்படுவதால் சதுர்யுகம் கண்ட பெருமாள் எனவும் இவர் போற்றப்படுகிறார்.

*ராஜகோபாலன் ஒரு காதில் குண்டலத்தையும், மறு காதில் தோட்டையும் அணிந்து வித்தியாசமாக அருட்காட்சி தருகிறார்.

*தாயாரின் உற்சவங்கள் அனைத்தும் ஆலயத்திற்குள்ளேயே நடக்கின்றன.