Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகானும் மன்றோவும்

மகான் ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி, சுமார் 1671ல், கர்நாடக மாநிலம் மந்திராலயத்தில் பிருந்தாவனமானவர். அதன் பின், பல மகிமைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்றுதான் நாம் இந்த தொகுப்பில் காணயிருக்கிறோம். 1820 - ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் நம் இந்திய நாடு சூழப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம், பெல்லாரி என்னும் பகுதியில் `சர் தாமஸ் மன்றோ’ என்ற ஆங்கிலேயர், கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்தார். `மந்திராலயத்திற்குப் பல பக்தர்கள் சென்று வருகின்றார்கள், மடத்திற்கும் அதிகளவில் காணிக்கைகள் வந்திருக்கும்.

ஆகையால், இந்த மந்திராலயத்தை எப்படியாவது அரசாங்கத்திற்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்’ என்று திட்டமிட்டு, மந்திராலயத்திற்கு தனது அதிகாரிகளோடு வருகின்றார், சர் தாமஸ் மன்றோ. அதற்குள் ஊர் முழுவதிலும், மன்றோவின் வருகை பரவுகிறது. மடமானது, ஆங்கிலேய அரசாங்கத்திற்கு சொந்தமானால், அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் முதலியவை நின்று போய்விடுமே என்று பயந்து, ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர்களும், மந்திராலய வாசிகளும் கூட்டங்கூட்டமாக மடத்திற்குள் வரத் தொடங்கினார்கள்.

ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தர்களாகவும், அதே சமயத்தில் மன்றோவிடம் அதிகாரி களாக வேலை செய்து கொண்டிருக்கும் சில அதிகாரிகளிடத்தில், மக்கள் முறையிட்டனர். ராகவேந்திரரை பற்றி தாமஸ் மன்றோவிற்கு எடுத்து சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டனர்.`ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை ஒவ்வொன்றாக தாமஸ் மன்றோவிற்கு சொல்லத் தொடங்கினார்கள், அதிகாரிகள்.

* ஸ்ரீநிவாஸாச்சாரின் மந்திரஅட்சதை நிறம் மாறியது.

* அப்பண்ணாச்சாரியாருக்கு அருளியது.

* வெங்கண்ணாவிற்கு படிப்பறிவைக் கொடுத்தது.

* அதோனி நவாப் வைத்த மாமிசத்தை மலராக மாற்றியது.

இது தவிர ராகவேந்திரர், பிருந்தாவனம் ஆன பின்னர் செய்த மகத்துவத்தையும் மன்றோவிற்கு சொன்னார்கள். இதைக் கேட்ட தாமஸ் மன்றோ, நக்கலாகச் சிரித்தார். `அவர் உயிரோடு இருக்கும்போது செய்த மகிமைகளை சொன்னீர்கள். அதையாவது நான் நம்புவதாக வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்த பிறகு (மன்றோவின் பார்வையில்) பல மகிமைகளை செய்வதாக சொல்வதை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்? என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார், தாமஸ் மன்றோ. `ராகப்பா.. இவருக்கு சொல்லி புரியவைக்க முடியாதுபோல் இருக்கிறதே... இந்த மந்திராலயம் உன் இடம். இனி நீ மனது வைத்தால் மட்டுமே தாமஸ் மன்றோவின் மனம் மாறும்’’. என்று அங்கு கூடியிருந்த பக்தர்கள், ராகவேந்திரரை வேண்டிக்கொண்டிருந்தனர்.

ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தா வனம் அருகில் தாமஸ் மன்றோ நிற்கிறார். தன் இருகைகளையும் கூப்பி வணங்குகிறார். அனைவருக்கும் ஆச்சரியம்!

பிருந்தாவனத்தில் இருந்து ஒரு ஒலிவடிவில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், மன்றோவிற்கு காட்சியளிக்கிறார்.

``யதோ தர்ம, ததோ ஜய:’’ (எங்கே தர்மம் உள்ளதோ அங்கே ஜெயம்)

- என்று ராகவேந்திரர், மன்றோவுடன் பேசத் தொடங்குகிறார்.

தாமஸ் மன்றோ தலையை ஆட்டியாட்டி ஆங்கிலத்தில் பேசுகிறார். `தான் இங்கு இருப்பது உண்மைதான்’ என்று ஸ்வாமிகளே, ஆங்கிலத்தில் மன்றோவிடம் தெரிவித்து மறைகிறார்.`என்ன நடந்தது?’ என்று தாமஸ் மன்றோவிடம் கேட்கிறார்கள்.`I saw the Saint’ (நான் அவரை பார்த்தேன்) என்று கூறுகிறார். மேலும், தன் கையை திறந்து `What Is This?’ (இது என்ன?) என்று காட்டுகிறார். தாமஸ் மன்றோவின் கையில் மந்திர அட்சதை. அனைவருக்கும் மெய்சிலிர்த்தது. இறுதியில், இந்த மந்திராலயம், மடத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று எழுதிவைக்கிறார், மன்றோ. இன்றும் பெல்லாரி கெசட்டில் சர் தாமஸ் மன்றோ எழுதிவைத்ததை காணலாம்.

ரா.ரெங்கராஜன்