Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வளம் தரும் வடகரை மகாலட்சுமி

புலம்பெயர்ந்த மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அய்யங்கார்குளம் என்னும் பகுதியில் வாழ்ந்த மக்களை, கேரளாவில் நெசவு செய்யும் தொழிலுக்காக ஏமாற்றி அழைத்துச் சென்று அடிமைப்படுத்தினர். அந்த மக்கள் சொல்லமுடியாத பல இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், அவர்கள் அனைவரும் அய்யங்கார்குளத்தில் வாழ்ந்தபோது, வடகரை மகாலட்சுமியை வணங்கி வழிபாடுகள் செய்து வந்திருக்கிறார்கள். இதனால், கேரளாவில் தாங்கள் அனைவரும் குடியேறிவிட்டதால், வடகரை மகாலட்சுமியை வணங்க முடியவில்லையே என்கின்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகையால், கேரளாவிலும் மகாலட்சுமி கோயில் ஒன்றை அமைத்து வழிபட முடிவு செய்தார்கள். அதன்படி, பள்ளிபுரம், வைக்கம் (Vaikom) என்னும் பகுதிக்கு நேர்எதிர் புறத்தில் கோயிலை அமைத்தனர். (பள்ளிப்புரம் என்பது கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலாவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.)

பிரசன்னம் பார்த்த மக்கள்

அதன் பிறகு, மகிழ்ச்சியோடு தினமும் மகாலட்சுமியை வழிபட்டுவந்தார்கள். ஆண்டுகள் பல கடந்தன. காலப்போக்கில் நெசவுத் தொழில்கள் எல்லாம் மாறின. அடிமையிலிருந்து மக்கள் விடுபட்டு, அவரவர் வெவ்வேறு தொழில்களை செய்யத் தொடங்கின திடீரென்று பள்ளிபுரத்தில் காரணமே தெரியாமல் பல ஆண்கள் இறந்துபோனார்கள். இதனால் பெண்களுக்கு மாங்கல்ய பிரச்னை ஏற்பட்டது. அதே போல், பல ஆண்களுக்கும் - பெண்களுக்கும் திருமணம் ஆகாமலேயே மரணிக்கும் கொடூரமும் நடந்தேறியது. இவையெல்லாம் பல ஆண்டுகளாக அரங்கேறி, சுமார் 2014-ஆம் ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக தாக்கம் குறைந்தபோதிலும், இந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. ஆகையால், ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி தேவ பிரசன்னம் பார்த்தார்கள். அதில்;

``பள்ளிபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலின் ஆதிமூலக் கோயிலாக, காஞ்சிபுரத்தில் உள்ள வடகரை மகாலட்சுமி திகழ்கிறாள். இவளைத் தேடி கண்டு பிடித்து வழிபட்டால், மக்களின் துயரங்கள் தீரும்’’ என்று பிரசன்னம் பார்த்தவர்கூற, 2014-ஆம் ஆண்டில் கேரள மாநிலம் பள்ளிபுரத்தில் உள்ள சில மக்கள், காஞ்சிபுரம் அய்யங்கார்குளத்தைத் தேடி வந்தார்கள். மனமுருகி வடகரை மகாலட்சுமியை வழிபட்டனர். இதனால், முற்றிலுமாக பள்ளிபுரம் மீண்டது. அதன் பிறகு பள்ளிபுரம் மக்கள், ஆண்டுதோறும் வடகரை மகாலட்சுமியை தரிசித்து செல்கிறார்கள். இந்த நிகழ்வு, வடகரை மகாலட்சுமியின் பழமையையும், சாநித்தியத்தையும் காட்டுகிறது.

கவுளி சப்தம்

இக்கோயிலில் மிக முக்கியமாக, பக்தர்கள் யாராக இருந்தாலும் வடகரை மகாலட்சுமி கோயில் கருவறைக்குள் சென்று அமர்ந்து, கண்களை மூடி மனதில் வேண்டுவதை வேண்டிக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டால், சிறிது நேரத்தில் கவுளி அதாவது பல்லியானது சப்தமிடுமாம். அப்படி சப்தமிட்டால், மனதில் வேண்டிக் கொண்ட காரியம் நிறைவேறுமாம். கவுளி சப்தமிட்டதில் பலருக்கும் வேண்டியது நிறைவேறியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் உள்ளதுபோலவே அச்சு அசலாக மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்ய விருப்பம் தெரிவித்தார்கள், லண்டன் தம்பதியினர். அதன்படி, வடகரை மகாலட்சுமி கோயில் அருகே புதியதாக இன்னொரு மகாலட்சுமியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளின் கைகளில், நெற்கதிர், கிளி, சங்கு, சக்கரம் ஆகியவை உள்ளன. ஆக, வடகரை மகாலட்சுமியும், அதன் அருகே கேரளாவில் உள்ள மகாலட்சுமி போலவும், இரு மகாலட்சுமிகளை அய்யங்கார்குளத்தில் தரிசிக்கலாம். இக்கோயிலை தரிசிப்பதற்காக, கேரளாவில் இருந்து அதிகளவில் மக்கள் வருகை புரிகிறார்கள்.

அதிசய நடவாவி கிணறு

காஞ்சிபுரம் அய்யங்கார்குளத்திற்கென்று தனி சிறப்புகள் உள்ளது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னரான கிருஷ்ணதேவராயர், இங்குவந்து சென்றதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சான்றாக, வடகரை அம்மன் கோயில் அருகே மத்வ மகான் ஸ்ரீ வியாச ராஜர் பிரதிஷ்டை செய்த சஞ்சீவிராயன் கோயில் உள்ளது.

இக்கோயிலில், அனுமன் அருளி வருகிறார். இங்கு சுமார் 1000 திருமணத்திற்கு மேல் கிருஷ்ணதேவராயர் தலைமையில் நடைபெற்றதாகவும், அன்னதானங்கள் வழங்கப்பட்டதாகவும் வரலாறுகள் அறுதியிட்டுச் சொல்கிறது. அய்யங்கார்குளத்தில் வாழும் மக்களை பாம்பு, தேள் போன்ற எந்த ஒரு விஷஜந்துக்களும் தீண்டப்படுவதில்லை என்பது வியப்பான செய்தி!

வடகரை மகாலட்சுமி கோயில், பல ஆண்டுகளாக, அருகில் இருக்கும் ``லட்சுமி குமார தாதா சமுத்திரம்’’ என்னும் குளத்தின் புதர்களுக்கு மத்தியில் இருந்துள்ளது. அப்போது, பூஜைகள்கூட சரிவர நடைபெறாத இருந்த காலம். அதன் பிறகு 2012-ஆம் ஆண்டு, புதர்களை தூய்மை செய்து, பூஜைகளை மேற்கொள்ள தொடங்கினார்கள். வடகரை மகாலட்சுமி கோயிலில் இருந்து சுமார் 1கி.மீ., குள் ``நடவாவி கிணறு’’ என்னும் அதிசய கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் அடியில் பல தூண்களாலான மண்டபம் இருகிறது. சித்ரா பௌர்ணமி அன்று இந்த மண்டபத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஆக அய்யங்கார்குளத்தில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சஞ்சீவிராயரும், வடகரை மகாலட்சுமியும், நடவாவி கிணறு இருப்பதும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அய்யங்கார்குளத்திற்கு சென்றால், இந்த மூன்று சிறப்புகளையும் தரிசிக்கலாம். மாற்றுமத தம்பதிக்கு குழந்தைப்பேறு

வடகரை மகாலட்சுமியை ``வளம் தரும் வடகரை மகாலட்சுமி’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய மக்களின் வளத்தை பெருக்கி கொடுக்கிறாள் என்று ஊர் மக்கள் கருதுகிறார்கள். இப்படி மாற்றுமத தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்திருக்கிறது. வடகரை மகாலட்சுமியை வேண்டுவோம் என்று தம்பதியினருக்குள் தோன்றியுள்ளது. அதன்பிறகு குழந்தைபேறு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ந்த தம்பதியினர், வடகரை மகாலட்சுமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த சிறப்பு, கோயில் வளாகத்தில் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருக்கிறது.

*கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 4:00 முதல் மதியம் 12:00 வரை, மாலை: 4:00 முதல் 7:00 வரை.

*அமைவிடம்: காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ., தொலைவில் அய்யங்கார்குளம் உள்ளது. காஞ்சியில் இருந்து பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. கோயில் தொடர்புக்கு: பாபு - 9444661434.