வரலட்சுமி விரதம்: 21.8.2026 - வெள்ளிக்கிழமை
ஒருவருடைய வாழ்வு எல்லா விதத்திலும் சிறக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அவசியமானது செல்வம். “பொருளாதாரம்” என்றால் வாழ்வின் ஆதாரமாக பொருள் இருக்கிறது என்று பொருள். அந்தப் பொருளுக்கு ஆதார சக்தியாக விளங்குவதால் மகாலட்சுமியை எல்லோரும் வணங்குகிறார்கள். ‘‘வந்தாள் மகாலட்சுமியே’’ என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். அதிகாலையில் நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து கோலம் இட வேண்டும்.
கலசம் வைத்து, மஞ்சள், குங்குமம், மாவிலை, தேங்காய் கொண்டு மகாலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும். அம்மனுக்கு பட்டாடை, மலர் மாலை, நகைகள் அணிவித்து அலங்கரிக்கலாம். ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை, பலவகைப் பழங்கள் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாம்பூலம் வழங்குவது வழக்கம்.
வேதத்தில் மகாலட்சுமி
மகாலட்சுமியை அழகான தமிழில் “திரு” என்று அழைப்பார்கள். மகா லட்சுமியை தன் மார்பில் கொண்ட பெருமாளை திருவாழ்மார்பன் என்று அழைப்பார்கள். திரு என்பதற்கு இணையான சொல் ஸ்ரீ என்கின்ற சொல். பெருமாளை ஸ்ரீ நிவாசன் என்ற திருநாமம் இட்டு அழைக்கிறோம். ஆழ்வார்கள் கூட திருமகளோடு இல்லாத தனிப்பெருமாளை ஏற்பதில்லை. திருவில்லாத தேவர் என்று கூடச் சொல்லுவார்கள். அந்த “திரு” என்கிற ஒலிக்கும், “ஸ்ரீ ” என்கிற ஒலிக்கும் பலப் பல அர்த்தங்கள் உண்டு.
தைத்திரீய உபநிடதம்
தைத்திரீய உபநிடதம் மகாலட்சுமியை குறித்து அற்புதமாகப் பேசுகிறது. மகாலட்சுமி பகவானை விட்டு பிரியாமல் அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவள். திருமாலின் துணைவி. சாந்த சொரூபி. ஒருவருக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் கொடுப்பவள். அதனாலே எல்லோராலும் பூஜிக்கப்பட்டவள். தேவர்கள் கூட இவளை பூஜித்துதான் தங்கள் பதவிகளை அடைகிறார்கள். நாட்டிலுள்ள அத்தனை வளங்களும் இவளால் தான் மலர்ச்சி பெறுகின்றன. பூமி, சொர்க்கம் போன்ற உலகங்களை இவள்தான் தாங்குகிறாள். எல்லா உலகங்களுக்கும் இவளே தலைவி. மங்களகரமான இவள், தம்மைச் சரணடைந்தவர்க்கு சகல மங்கலங்களும் செய்கிறாள். உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசி களுக்கும் தாயைப்போல தயை புரிகின்றாள்.
பதினாறு பேறும் தருபவள்
பொதுவாகவே நாம் செல்வத்துக்கு அதிபதியாக மட்டும் மகாலட்சுமியை கருதுகிறோம். ஆனால் அவள்தான் எல்லாவற்றையும் தருபவள். புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரப்பேறு, தைரியம், தனம், தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என அனைத்தையும் அவள்தான் தருகின்றாள்.
யஸ்யாம் யஸ்யாம் திஶி விஹரதே தேவி த்ருஷ்டிஸ்த்வதீயா
தஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தன்வதே ஸம்பதோகா:
- என்று ஒரு ஸ்லோகத்தை சுவாமி தேசிகன் பாடுகிறார். அந்தச் ஸ்லோகத் தின் பொருள் இதுதான்.
அவள் பார்வை எங்கே விழுகிறதோ அந்த இடம் வளர்ச்சி பெறுகிறது. விருத்தி பெறுகிறது.
அதனால்தான் மகாலட்சுமியை வித்தையை தரும் வித்யா லட்சுமி யாகவும், சந்தானத்தை தரும் சந்தான லட்சுமி ஆகவும், வெற்றியைத் தரும் விஜயலட்சுமியாகவும், தானியத்தை தரும் தானிய லட்சுமியாகவும் தைரியத்தை தரும் தைரிய லட்சுமியாகவும் பல வடிவங்களில் கொண்டாடுகின்றோம். அவளிடம் கிடைக்காத செல்வம் எதுவுமே இல்லை என்பதால் ஒரு ஹோமமும் யாகமும் அல்லது பிரார்த்தனை செய்யும்பொழுது சங்கல்ப மந்திரத்தின் மகாலட்சுமியின் பேரருளை வேண்டி சங்கல்பம் செய்வது வழக்கமாக இருக்கும்.
கோ பூஜையும் மகாலட்சுமியும்
மகாலட்சுமியின் பூஜைகளில் ஒன்று கோ பூஜை. ஒரு பசுவின் பின் பகுதியில் மகாலட்சுமியின் சாந்நித்யம் இருக்கிறது. வேத மந்திரங்களில் உலகம் செழிக்க வேண்டும் என்று சொன்னால், பசுக்கள் செழிக்க வேண்டும். கோ ப்ராமணேப்ய சுபம் பவது: வாழ்க ஆனினம் என்பது தமிழ் வாழ்த்து கூட.
தமிழிலும் பசு என்றாலே செல்வம் என்ற ஒரு பொருள் உண்டு. மகாலட்சுமியும் செல்வம்தான். பசுமாடும் செல்வம்தான். எனவே பசுவை வணங்குவது மகாலட்சுமியை வணங்குவது போல. அதனால் தான் பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் வணங்கப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் அடக்கம். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. மகாலட்சுமியின் பேரருளைப் பெற வேண்டும் என்று சொன்னால், பசுவைக் காப்பாற்ற வேண்டும். பசுவை வணங்க வேண்டும். மகாலட்சுமிக்கு உரிய பூஜைகளில் ஒன்று கோமாதா பூஜை. பசுவைப் போலவே யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது). அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.
தாமரை
மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை.
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
என்று மந்திரமுண்டு. ஆதலின் அவளை மலர் மகள் என்பர். பாற்கடலில் தோன்றியதால் அலைமகள் என்றும் அழைப்பார்கள். தாமரை மலரில் அமர்ந்த அவளுக்கு இரண்டு யானைகள் அபிஷேகம் செய்வது போன்ற காட்சி இருக்கும். இந்த கஜலட்சுமி திருவுருவ அமைப்பு மிக மிகச் சிறப்பானது. இந்த உருவத்தை வணங்குவதன் மூலம் ஒருவருக்கு சகல செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவிளக்கு
விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை மகாலட்சுமியாகக் கருதுவது நம் மரபு. எந்தப் பூஜையும் மகாலட்சுமி பூஜையிலிருந்துதான் தொடங்கும்.
விழாவில் முதலில் ஏற்றுவது திருவிளக்கு. வெறும் விளக்கு என்று சொல்வதில்லை. திருவிளக்கு என்றுதான் சொல்லுகிறோம். திரு என்றால் செல்வம் என்பது தெரியும். எனவே மகாலட்சுமிக்கு உரியது விளக்கு.
விளக்கு ஏற்றி விட்டாலே மங்கல கரமான மகாலட்சுமி அந்த இடத்தில் தோன்றிவிட்டாள் என்று பொருள். திருவிளக்கு பூஜை என்பது ஒரு வகையில் மகாலட்சுமி பூஜை தான். அந்தியும் சந்தியும் சந்திக்கும் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி தீபத்தை வழிபடுவது சகல புண்ணியங்களையும் தரும் என்று விரத சூடாமணி கூறுகிறது. தீபத்தில் மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்று பாகதேய பூஷணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது
தீபஜ்யோதி: பரப்ரம்ஹ
தீப ஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்ஜோதி நமோஸ்துதே
என்பது திருவிளக்கு மந்திரம்.
சந்தனம், தாம்பூலம்
மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுப காரியங்களில் சந்தனம் அவசியம். தாம்பூலம் மங்களகரமானது. சுப காரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள். இதிலும் மஹா லட்சுமி சொரூபம் உண்டு. பசுவைப்போலவே பசுவிடமிருந்து பெறப் படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர்.
உள்ளங்கைகளில் மஹாலட்சுமி
திருமணமாகும் பெண்களை மகாலட்சுமியாக பாவிப்பது வழக்கம். மந்திரங்களிலும் சாட்சாத் மகாலட்சுமி சொரூபிணீ: என்று தான் வரும். பொதுவாகவே ஒவ்வொரு பெண்ணையும் மகாலட்சுமியாக நினைக்க வேண்டும். வழக்கிலும் பெண்களைச் சொல்லுகின்ற பொழுது ‘‘மகா லட்சுமி போலவே இருக்கிறாய்’’ என்று சொல்வது உண்டு. எனவே, சாஸ்திரம் கன்னிப் பெண்களிடம் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என்று சுட்டிக் காட்டுகிறது. அதைப்போலவே வேள்விப் புகை, உள்ளங்கைகள், பசு மாட்டின் கால் தூசு, சங்கு போன்றவை மகாலட்சுமியின் இடங்களாக சொல்லப்படுகின்றன. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கை களைப் பார்ப்பது என்பது மகாலட்சுமி தரிசனம் தான். அதன் மூலம் அந்த நாள் நல்ல படியாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு.
வில்வமரம்
வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத்தலமான ஸ்ரீ ரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திரு நகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள். மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. அதைப்போலவே நெல்லி மரம்: அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள்.
நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசி விரத பலன் உண்டு. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
இரக்கமே மகாலட்சுமியின் குணம்
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களையும் பொருட்களையும் சாஸ்திரம் விவரிக்கிறது. கடுக்காய்,பவளமல்லி,மாதுளை,திருநீற்றுபச்சை,அத்திக் கட்டை, அறுகம்புல், விளா மிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம் பழம், வரகு, நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, பாகற்காய், அகத்திக்கீரை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, மூங்கில், குளவிக் கூட்டு மண், நண்டுவளை மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப் பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், நுனி முடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, நாயுருவி, வாசல் நிலை, கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக் கற்பூரம், கலசம், கமண்டலநீர், தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம், வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், கலகமில்லாத மகளிர் வாழும் இடம், தானியக் குவியல், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல், பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர், பகிர்ந்துண்டு வாழும் மனிதர், நாவடக்கம் உள்ளவர், இனிமையாக பேசுபவர், பிறருக்கு உதவுபவர். மிதமாக உண்பவர், பெரியோர்களின்
ஆசிபெற்றவர், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்,அழுக்கில்லாத தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களில் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.
மகாலட்சுமி உறையும் இன்னும் சில இடங்கள் நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, ஜெபமாலை, வலம்புரிச் சங்கு, மாவிலை, தர்ப்பை, குலைவாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவதாரு, அகில், பஞ்ச பாத்திரம்.
ஸ்ரீ சூக்தம்
வேதத்தில் மகாலட்சுமியின் பெருமையை நேரடியாகச் சொல்லும் பகுதி கள் குறைவு. வழிபாடுகளிலும் ஹோமங்களிலும் வேத பாகங்களான சூக்த மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ச்ரத்தா சூக்தம், மேதா ஸூக்தம், அதிதி சூக்தம், ஸ்ரீ சூக்தம், பூ சூக்தம் முதலிய சூக்த மந்திரங்கள் உண்டு. அதில் மகாலட்சுமிக்கு உரியது ஸ்ரீ சூக்தம். திருமால் ஆலயங்களில் திருமஞ்சனம் முதலிய வைபவங்கள் நடக்கின்ற பொழுதும், ஹோமங்களின் பொழுதும் இந்த ஸ்ரீ சூக்த மந்திரங்களை ஓதுவார்கள். ஸ்ரீ சூக்தம் 15 மந்திரங்களைக் கொண்டது. மகாலட்சுமியை அழகாக வர்ணிக்கின்றது.
* பொன் மயமானவள்(ஹிரண்யவர்ணாம்),
* மான் விழிகளைக் கொண்டவள். (ஹரிணீம்)
* பொன் மாலைகளையும் வெள்ளி மாலை களையும் அணிந் தவள். (ஸ்வர்ணரஜதஸ்ரஜாம்),
* சந்திரனைப் போல ஆனந்தமானவள் (சந்த்ராம்)
- என்று அந்த அழகான மந்திரம் மகாலட்சுமியை வர்ணிக்கிறது. இந்த 15 மந்திரங்களையும் (ரிக்) தினசரி பாராயணம் செய்பவர்களுக்கு மகா லட்சுமியின் பேரருள் நிச்சயமாக கிடைக்கும். அதில் பன்னிரண்டாவது மந்திரத்தின் அர்த்தம் அற்புதமானது.
“மகாலட்சுமி! எப்பொழுதுமே நீ என்னுடைய வீட்டில் நிலையாக வசிக்க வேண்டும். என் குலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும்என்று பிரார்த்திக்கிறது.
செல்வத்தை விரும்புகிறவர்கள் தினந்தோறும் ஸ்ரீ சூக்தத்தை ஜெபிக்க வேண்டும். தாமரை அல்லது வில்வ பழங்களைக் கொண்டு மகாலட்சுமியை நினைத்து அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.
ய: ஸ்ரீ சூக்தம் ஜபேந் நித்யம் ரிக்பிஸ்தாம் அர்ச்சயேத் ச்ரியம்:
ஸ்ரீ காமோ ஜுஹூயாத் அக்நௌ பத்மைர் பில்வைஸ் ததாபலை
துளசியும் மஹாலட்சுமியும்
மதன துவாதசி விரதம் என்று சொல்லுவார்கள். 31 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். வீட்டில், துளசி மாடம் இருப்பவர்கள் தவறாது செய்ய வேண்டும். துளசி மாடத்தை அலங்கரித்து மஞ்சள், குங்குமம் பூசி, விளக்கேற்றி தினம் வணங்க வேண்டும். அப்போது கிருஷ்ண பகவானையும் சேர்த்து வணங்க வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலமாக, பாவங்கள் நீங்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறும். தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம்
எல்லோரும் அனுஷ்டிக்கும் பிரசித்தி பெற்ற விரதம் வரலட்சுமி விரதம். பெண்கள் சகல சௌபாக்கியங்களுடன் இருக்கவும் தீர்க்கசுமங்கலிகளாக வாழ்வதற்காகவும் கடைபிடிக்கப்படும் விரதம். ஆவணி மாதத்தில் கஜ லட்சுமி விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தால் அரசாங்கத்தினுடைய, ஆதரவும், சகல செல்வங்களும் வெற்றியும் கிடைக்கும். புரட்டாசி மாதம் பௌர்ணமி முழுவதும், லட்சுமி பூஜை செய்ய, கௌமதி ஜாகர விரதம் என்ற விரதத்தை, இருப்பார்கள். இந்த விரதம் இருந்தால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம். ஐப்பசி மாதத்திலே, வட நாட்டிலே ராதா ஜெயந்தி என்று, ஒரு விழாவைக் கொண்டாடுவார்கள். இதன் மூலமாக கிருஷ்ணபக்தி ஏற்படும். வீட்டில் சகல விதமானசெல்வம் சேர, ஐப்பசி மாதத்தில், தீபாவளியைக் கொண்டாடும் பொழுது, லட்சுமி குபேர பூஜை செய்வார்கள்.
எல்லாவற்றிலும் மஹாலட்சுமி
எம்பெருமானையே போற்றும் புருஷ சூக்த மந்திரங்களை எடுத்துக் கொண்டாலும் கூட, நிறைவாக, “ஹிரீச்சதேச லட்சுமீ பத்நௌ” என்று, இருக்கிறது. அதாவது பகவான் அத்தனைச் சிறப்புகளும், திருமகளால் அடைகிறான் என்று பொருள். ஸ்ரீ நரசிம்மரைச் சொன்னாலும், ஸ்ரீ வராகப் பெருமானைச் சொன்னாலும், ஸ்ரீ நாராயணனைச் சொன்னாலும், லட்சுமி நரசிம்மன், லட்சுமி ஹயக்ரீவன், லட்சுமி வராகர், லட்சுமி நாராயணன், என்று மஹாலட்சுமியோடு பெருமாளை இணைத்து, பேசும் மரபு, வைணவத்தில், உள்ளது. பெருமாளை “ஸ்ரீ : பதி” என்று கொண்டாடுவார்கள்.
தாயார் சந்நதி
தாயார் சந்நதியை, அதாவது லட்சுமித் தாயாரை தரிசித்து விட்டுத்தான், பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற நியதியும், வைணவ கோயில்களில் உண்டு. அது எந்த கோயிலாக இருந்தாலும், அந்த கோயிலில், மகாலட்சுமியினுடைய பேரருள் சிறக்கும் என்பதால், மகாலட்சுமித் தலமாகவே சொல்வார்கள்., திருத்தலம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றபோது அதிலுள்ள திரு என்ற சொல் மஹாலட்சுமியைத்தானே குறிக்கிறது. திரு இல்லாவிட்டால் தலம் ஏது? மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
சைவத்திலும் மஹாலட்சுமி
சைவக் கோயில்களிலும் கூட, பிராகாரத்தில், மகாலட்சுமிக்கு, தனிச் சந்நதி இருக்கும். மஹாலட்சுமியினுடைய எந்திரமுமோ, மகாலட்சுமியினுடைய பிரதி பிம்பமோ வைக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தால் தான் அந்தக் கோயில், மிகச் சிறப்பான நிலையை அடையும் என்கின்ற நம்பிக்கை இந்து சமயத்தில் உண்டு. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணெயில் வாசம் செய்கிறாள்.
திருப்பதி என்பதன் பொருள் என்ன?
திருப்பதி, என்று சொல்லுவோம். அதில், பதி என்பது பெருமாளையும் திரு என்பது, மகாலட்சுமித் தாயாரையும் குறிக்கும். திருவாகிய மஹாலட்சுமிப்பு பதி என்பதுதான் பெருமாளுக்குச் சிறப்பு. திருவும் பதியும் சேர்ந்தால்தான் ஒரு தலம், திருப்பதி ஆகும். மகாலட்சுமியின் அருள் வேண்டும் என்பதால்தான், வைணவத்தில் எல்லாவற்றிலும் திரு என்ற முன்னொட்டை சேர்த்துக் கொள்வார்கள். திரு ஆராதனம், திருமாளிகை, திருப்பணியாரம், திருமஞ்சனம், திருமாலை. திருப்பரி வட்டம் (ஆடைகள்), திரு ஆபரணம், திருக்கண்ணமுது, திருக்காப்பு, திருமொழி, திருப்பல்லாண்டு, திருவிழா, திருத்தேர், இப்படி ‘‘திரு’’ சேர்ந்து வரும். எல்லா திவ்ய தேசங்களின் பெயரோடு திரு என்கிற பெயரும் இணைந்தே இருக்கும்.
கண்ணபுரம் என்று சொல்லும் பழக்கம் கிடையாது. திருக்கண்ணபுரம் என்று சொல்வர். திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருத்தங்கல், திரு மதுரை, திரு வாய்ப்பாடி, திருவண்பரிசாரம், திருவனந்தபுரம் என்று 108 திவ்ய தேசங்களிலும் திரு என்கின்ற அடைமொழி இருக்கும். இதன்மூலம் மகாலட்சுமி இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்பது தெரியவரும்
தாயின் உள்ளம்
ஒரு குழந்தை தந்தையிடம், வேண்டுகோளை (விருப்பத்தை) வைத்தாலும் கூட, தாயாரிடம் அந்த வேண்டுகோளைச் சொல்லுகின்ற பொழுது, சீக்கிரமாக நிறைவேறி விடும். என்கின்ற நம்பிக்கை, நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் உண்டு. சரியான சமயத்தில், பெருமானுக்கு, ஜீவன்களாகிய குழந்தையின், வேண்டுதலை, ஒரு தாயின் உள்ளத்தோடு, பரிவோடு சொல்லி செய்யக்கூடியவள் என்பதால் அவளை தாயார் என்று அழைக்கிறார்கள். தந்தை என்று தனிச் சொன்னால் பெருமாளைக் கூப்பிடுவது மரபு இல்லை என்றாலும் கூட, வைணவத்தில் பிராட்டியை தாயார், தாயார் சந்நதி, தாயார் கோயில் என்கின்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் உண்டு., லோக மாதா அல்லவா அவள்.
நிறைவுரை
இப்படி மகாலட்சுமியினுடைய பெருமையை விவரித்துக் கொண்டே போகலாம். இப்படிப் பெருமை மிக்க மஹாலட்சுமியின் பேரருளை தினம் தினம் சிந்தித்து வழிபட்டு வளமான வாழ்வு பெறுவோம்.
மகாலட்சுமி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாலஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!
அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அனைத்தையும் பெறலாம்!



