Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருக்குறளில் மகாபாரதம்!

பகுதி - 1

அழுக்காறு எப்படி வேலை செய்யும் தெரியுமா?

மகாபாரதம் எப்பொழுது நடந்தது என்று நாம் கேட்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்று ஒரு பதில்

வருகிறது.

ஆனால் எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. மகாபாரதம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

அன்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும். பெயர்கள் மட்டும் மாறுகின்றன. இடங்கள் மட்டும் மாறுகின்றன. ஆயுதங்கள் மட்டும் மாறுகின்றன. மனிதனுடைய மனம் மட்டும் பெரிதாக மாறவில்லை.

மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறி விட்டான். ஆகாயத்தில் பறக்கிறான். கடலுக்குள் செல்கிறான். இன்னொரு கிரகத்திற்கே கருவிகளை அனுப்புகிறான். உடலுக்குள் இருக்கும் நோயைக் கண்டுபிடித்து அறுவைச் சிகிச்சை செய்கிறான்.ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித மனத்தில் இருக்கும் பொறாமையை ஒரு கருவியால் எடுத்துவிட முடியவில்லை. கோபத்தை ஒரு இயந்திரத்தால் சரி செய்ய முடியவில்லை. பேராசையை ஒரு மருந்தால் குணப்படுத்த முடியவில்லை. பழிவாங்கும் எண்ணத்தை ஒரு அறுவை சிகிச்சையால் அகற்ற முடியவில்லை.

அதனால்தான் மகாபாரதம் இன்றைக்கும் பொருந்துகிறது.

மகாபாரதம் ஒரு பழைய கதை அல்ல. அது மனித மனத்தின் மிகப்பெரிய கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் துரியோதனனைப் பார்க்கும்போது அவனை மட்டும் பார்க்கக்கூடாது. நம்மையும் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஒரு மனிதனுக்குள் தருமனும் இருக்கிறான். அதே மனிதனுக்குள் துரியோதனனும் இருக்கிறான். ஒரு நேரத்தில் விதுரன் பேசுகிறான். ஒரு நேரத்தில் சகுனி பேசுகிறான். ஒரு நேரத்தில் கிருஷ்ணன் பேசுகிறான். ஒரு நேரத்தில் துரியோதனன் பேசுகிறான்.

நாம் எந்தக் குரலைக் கேட்கிறோம் என்பதுதான் நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்கிறது. இதற்குத்தான் இலக்கியம் தேவை.

மனிதனுடைய மனத்தை நேரடியாக மாற்ற முடியாதபோது, அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல வேண்டும். ஒரு கதாபாத்திரத்தை அவன் முன்னால் நிறுத்த வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நடந்ததை அவனுக்குக் காட்ட வேண்டும். அதில் அவன் தன்னைக் கண்டுகொள்ள வேண்டும்.

இந்த வகையில் பார்த்தால் நம்முடைய தமிழ் இலக்கியம் அளவிட முடியாத செல்வத்தை வைத்திருக்கிறது. அதிலும் மனித மனத்தைப் பற்றி பேசும் திருக்குறள் அளவு ஆழமான நூல் வேறு இல்லை. மகாபாரதம் ஒரு கதை மட்டுமல்ல. வேதம் முதலிய மறைநூல்களில் சொல்லப்பட்டுள்ள தர்மங்களையும், மனித வாழ்க்கையின் சிக்கல்களையும், அரசியல், குடும்பம், ஆசை, கோபம், அதிகாரம், அறம், வீழ்ச்சி ஆகியவற்றையும் கதாபாத்திரங்கள் மூலமாக விரித்து எடுத்துச் சொல்வது இதிகாசத்தின் ஒரு பெரிய சிறப்பு. அதனால்தான் மகாபாரதத்திற்கு பாரம்பரியத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்படுகிறது. அது பல இடங்களில் ஐந்தாவது வேதம் என்ற சிறப்புப் பெயராலும் போற்றப்படுகிறது.

வில்லிபாரதத்தின் தொடக்கப் பாடலிலேயே, ‘‘நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே...” என்று மகாபாரதத்தின் பெருமை சொல்லப்படுகிறது.

வேதத்தில் உள்ள கருத்தை நாம் நேரடியாகப் படித்து எல்லோரும் புரிந்து கொள்வது சுலபமல்ல. அதை வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக மாற்றினால் புரிந்து கொள்ள முடியும். அதுதான் மகாபாரதம் செய்கிறது. அதேபோல வேதாந்தத்தின் ஆழமான கருத்துகளைச் சுருக்கமாக சூத்திர வடிவில் எடுத்துச் சொல்லும் நூலாக பிரம்ம சூத்திரம் கருதப்படுகிறது.

அப்படியானால் தமிழில் அதற்கு நிகரான ஒரு நூல் இருக்கிறதா?

என் மனதில் உடனே வரும் பதில்: ‘‘திருக்குறள்”.

மகாபாரதம் வாழ்க்கையை கதையாகச் சொல்கிறது. திருக்குறள் அதே வாழ்க்கையின் சாரத்தை இரண்டு அடிகளில் சொல்கிறது.

மகாபாரதம் மனிதர்களை நமக்கு முன்னால் நிறுத்துகிறது.

திருக்குறள் மனித மனத்தை நமக்கு முன்னால் நிறுத்துகிறது.

திருக்குறளின் அமைப்பைப் பாருங்கள்.

அறம், பொருள், இன்பம். இதுதான் முப்பால்.

இதற்கு அப்பால் எப்பாலும் இல்லை.

வாழ்க்கையில் பொருள் வேண்டும். இன்பம் வேண்டும். ஆனால், அவை இரண்டுக்கும் அடிப்படை அறம் வேண்டும்.

அறம் இல்லாத பொருள் ஆபத்தானது. அறம் இல்லாத இன்பம் அழிவைத் தரும். அறத்தின் வழியில் பொருளை ஈட்டி, அந்தப் பொருளின் வழியில் வாழ்க்கையை நன்றாக நடத்தி, இன்பத்தை அடைவது வள்ளுவருடைய வாழ்க்கை அணுகுமுறை.

வள்ளுவர் முதலில் கடவுள் வாழ்த்து வைக்கிறார். அடுத்து வான் சிறப்பு.அடுத்து நீத்தார் பெருமை. அதற்குப் பிறகு நான்காவதாக அறன் வலியுறுத்தல். அறம் என்றால் என்ன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார்.

அதற்குள் அவர் சொல்லும் ஒரு குறள்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற. - குறள் 34.

அறம் மனதில் மாசில்லாமல் இருப்பது. அவ்வளவுதான்.

எவ்வளவு பெரிய வரையறை!

வெளியில் நாம் எவ்வளவு நல்லவர்களாக நடந்து கொண்டாலும் மனத்தில் மாசு இருந்தால் அது அறம் அல்ல.

அந்த மாசு என்ன?அன்புக்கு எதிரானது. அருளுக்கு எதிரானது.நேர்மைக்கு எதிரானது.அதிலும் முக்கியமாக அழுக்காறு.

இந்த அழுக்காறு எனும் சொல்லுக்கு முழுமையான விளக்கம் தான் மஹாபாரத துரியோதனன். துரியோதனனை நான் நல்லவன், கெட்டவன் என்று தீர்ப்பு சொல்லிப் பார்க்க விரும்பவில்லை. அது, இந்தக் கட்டுரையின் நோக்கமும் அல்ல.

துரியோதனனிடம் இருந்த அழுக்காறு என்ன செய்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

திருக்குறளில் வள்ளுவர் அறத்தைச் சொல்லிவிட்டு உடனே ஒரு முக்கியமான குறளைத் தருகிறார்:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். - குறள் 35.

1. அழுக்காறு

2. அவா

3. வெகுளி

4. இன்னாச்சொல்.

இதை வெறும் வரிசையாக மட்டும் பார்க்காமல், மனித மனத்தின் ஒரு வளர்ச்சியாகப் பார்த்தால் மிகப்பெரிய உண்மை ஒன்று தெரிகிறது.

முதலில் அழுக்காறு.அதிலிருந்து அவா.அதிலிருந்து வெகுளி. அதிலிருந்து இன்னாச்சொல்.

இது வள்ளுவருடைய உரைகளில் நேரடியாக “நவீன உளவியல் வரிசை” என்று சொல்லப்படவில்லை. ஆனால், இன்று மனித மனத்தை நாம் ஆராயும் கோணத்தில் இந்த வரிசையை வாசித்தால் வியப்பாக இருக்கிறது.

ஒருவனிடம் இருப்பதை நாம் விரும்புவது மட்டும் பொறாமை அல்ல. ஒருவரைப் பார்த்து கோபப்படுவது மட்டும் பொறாமை அல்ல. ஒருவரைத் திட்டுவது மட்டும் பொறாமை அல்ல. ஆனால் பொறாமை உள்ள மனம் இவற்றை எல்லாம்

உருவாக்கக் கூடும்.

ஆசை பொறாமை அல்ல. ஆனால் பொறாமை ஆசையை உருவாக்கும்.

கோபம் பொறாமை அல்ல. ஆனால் பொறாமை கோபத்தை வளர்க்கும்.

கடுஞ்சொல் பொறாமை அல்ல.ஆனால் பொறாமை கடுஞ்சொல்லை உருவாக்கும்.

அதனால்தான் வள்ளுவர் முதலில் அழுக்காற்றைச் சொல்கிறார் என்று நான் பார்க்கிறேன்.

பொறாமை என்றால் என்ன?

மற்றொருவருக்கு நல்லது நடந்ததைப் பார்த்து நமக்கு சிறிது வருத்தம் ஏற்படுவது மட்டும் முழுமையான பொறாமை அல்ல.

பக்கத்து வீட்டுப் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. அப்போது நமக்கு ஒரு ஆதங்கம் வரலாம்.

“நம்ம பையனுக்கும் அப்படியே கிடைத்திருக்கலாமே” என்று நினைக்கலாம்.இது ஒரு மனித உணர்வு.

அடுத்தவன் பெற்றதை நாமும் பெற வேண்டும் என்ற ஆசையும் மனிதனிடம் இருக்கலாம்.

ஆனால், அது வளர்ந்து,“அவனுக்கு கிடைக்கவே கூடாது”என்ற நிலைக்கு

வந்தால் அது வேறு.

அவன் பெற்ற வெற்றி நமக்கு வலியாகி,.அவன் சந்தோஷம் நமக்கு துக்கமாகி,.அவன் துன்பம் நமக்கு தெரியாமல் ஒரு மகிழ்ச்சியை உண்டாக் கினால் , அங்கேதான் அழுக்காறு தன் முழு உருவத்தைப் பெறுகிறது.

இதைத்தான் துரியோதனனில் பார்க்க வேண்டும்.

பாண்டவர்கள் வந்தார்கள்.,விளையாடினார்கள். பீமன் தன்னைவிட பல சாலியாக இருந்தான்., பாண்டவர்கள் அனைவரிடமும் திறமை இருந்தது.

அவர்களைப் பார்த்து துரியோதனனுக்கு அச்சம் வந்தது.,ஆத்திரம் வந்தது. ஏக்கம் வந்தது. போட்டி உணர்வு வந்தது.

இதையெல்லாம் உடனே முழுமையான பொறாமை என்று சொல்ல முடியாது.

ஆனால், அந்த உணர்வுகள் சரியாகக் கையாளப்படாமல் போனால் அவை எந்தத் திசையில் செல்கின்றன என்பதுதான்

முக்கியம்.

அந்த மனநிலை மெதுவாக வளர்ந்தது.

பாண்டவர்கள் வாழக்கூடாது. அவர்கள் உயரக்கூடாது. அவர்களுக்கு கிடைப்பது எனக்கு கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கக் கூடாது. இறுதியில் அவர்கள் அழிய வேண்டும். இது ஒரு மனநோய் வளர்வதைப் போல துரியோதனனிடம் வளர்ந்தது.

அழுக்காறு முதலில் சிறிய கட்டியாக உருவாகும். கவனிக்கவில்லை எனில் அது பெரிதாகும். பிறகு புற்றுநோயாகும். பிறகு அது உயிரையே எடுத்துவிடும்.

பொறாமை பெரும்பாலும் உண்மையான இழப்பிலிருந்து வருவதில்லை. ஒப்பீட்டிலிருந்து வருகிறது. நான் என்ன வைத்திருக்கிறேன் என்று பார்க்காமல்,அவனிடம் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தவுடன் மனம் சுருங்குகிறது.

துரியோதனனிடம் அது எப்போது

புற்றுநோயானது?

மிகவும் முக்கியமான இடம் சூதாட்டத்திற்குப் பின் வரும் காட்சி.