Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கும்பகோணத்தை காத்த கும்பகோணம் மகான்!

ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்

கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, வாழும் - வாழ்ந்த மக்கள், ``மகான் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரை’’ அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். அப்படி அங்குள்ள மக்களுக்கு விஜயேந்திர தீர்த்தர் ஏதோ ஒரு விதத்தில் நன்மைகளை அருளிவருகிறார்.

கல்வி, வேலை, திருமணம், குழந்தை என விஜயேந்திர தீர்த்தரிடத்தில் கும்பகோணம் மக்கள் நின்றால் போதும், உடனே வாரி வழங்குகிறார், விஜயேந்திரசுவாமி! கும்பகோணம் மக்கள் மட்டும் இல்லாமல், அனைத்து ஊர்களிலும் இருக்கக்கூடிய பக்தர்கள் வேண்டினால் அதனையும் உடனே நிறைவேற்றுகிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கும்பகோணமும், கும்பகோணம் மக்களுக்கும் விஜயேந்திர தீர்த்தர் கொஞ்சம் ஸ்பெஷல்தான். காரணமென்ன... விரிவாக பார்ப்போம்.

கர்வம் கொண்ட லிங்க ராஜேந்திரன்

16-ஆம் நூற்றாண்டு சமயம். கும்பகோணத்தில், லிங்க ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மிகவும் பாண்டித்தியம் (வேத - சாஸ்திரத்தில் சிறந்து விளங்குபவர்) உடையவர். மேலும், இவரிடத்தில் யாருமே கற்றிடாத மந்திர சக்தியையும், கற்றறிந்தார். ஆகையால், கும்பகோணத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து அனைவரையும் அடிமைப்படுத்தினார். தான் வைத்ததுதான் சட்டம் என்பதுபோல் லிங்க ராஜேந்திரன் செயல்பட்டார்.

கும்பகோணத்தில் வாழ்ந்த பல ஞானிகள், லிங்க ராஜேந்திரனிடத்தில் தோல்வியுற்று, அவமானமடைந்து, தங்களது உடைமைகளையெல்லாம் இழந்து, கூனிக்குறுகி நிராயுதபாணியாக நின்றார்கள். மேலும், கும்பகோணத்தில் இருக்கும் ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீ சக்ரபாணி, ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர், ஸ்ரீ ராமஸ்வாமி, ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி, ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ நாகேஸ்வரர், ஸ்ரீ பாணபுரிஸ்வரர், ஸ்ரீ ஏகாம்பேரேஸ்வரர், ஸ்ரீ அமிர்தகலசநாதர் ஆகிய கோயிகள் லிங்க ராஜேந்திரனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இதனை அறிந்த மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தர், இந்த பிரச்னையை தீர்த்து வைக்க ஆயக்கலை 64-யையும் கற்றறிந்த தன் சீடனான ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரால் மட்டுமே முடியும் என்று எண்ணி, கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து விஜயேந்திரரை கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

18 நாட்கள் விவாதம்

கும்பகோணத்திற்கு சென்ற ஸ்ரீ விஜயேந்திரஸ்வாமிகள், சாட்சாத் சிவன் - பார்வதி ஆகிய இருவரின் அம்சமான கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆதிகும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்தார். அதன் பின்னர், நேராக வாதம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். (வாதம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நடைபெறுகிறது)

புலவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள், அதிகாரிகள், என சபை நிறைந்து காணப்பட்டது. சலசலவென மக்களின் பேச்சுக்கள் ஒலித்தன. விஜயேந்திரர் சபைக்குள்ளே நுழைந்தார்.``ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தருக்கு ஜே..’’ என கோஷங்கள் எதிரொலித்தன. இனி நம் பிரச்னைக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரு மகான் வந்துவிட்டார் என சிலரின் ஏக்கம் கண்ணீர் வடிவில் தென்பட்டது. இவைகளையெல்லாம் கவனித்தபடி தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார், ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்.

ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி, கம்பீர தோற்றத்தோடு சபைக்குள் நுழைந்தார், லிங்க ராஜேந்திரன். அவர் நுழையும் போது யாரும் பேசாமல், ஜே கோஷமின்றி அமைதியாக காணப்பட்டனர். ``இந்த சந்நியாசியா... என்னிடம் மோதுவது? நல்ல திடகாத்திரமான கிரகஸ்தனாக இருந்தால் என்னிடம் பேசிபேசி வாதாடி கொஞ்சநேரம் தாக்குபிடிப்பான். சந்நியாசி சந்தேகம்தான். ஹா..ஹா..’’ என ஏளனம் செய்தான், லிங்க ராஜேந்திரன். சபையே அமைதியாகின. விஜயேந்திரர் மெல்லிய சிரிப்போடு காணப்பட்டார்.

``மொத்தம் 18 நாட்கள் விவாதங்கள் நடைபெறும். என்னிடம் இந்த சந்நியாசி தோற்றுப்போனால், அவரின் உடைமை களையெல்லாம் ஒப்படைத்துவிட்டு, என்னிடம் சீடனாக சேர வேண்டும். அப்படி நான் தோற்றுப் போனாலும் இதே நிபந்தனைதான்’’ என்று லிங்க ராஜேந்திரன் கர்ஜித்தான். ஸ்வாமிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.விவாதம் தொடங்கின.. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த விவாதம், நேரம் ஆகஆக, விவாதங்கள் சூடுபிடித்தன. இருவரும் பண்டிதர்கள் என்பதால் வேதம், இதிகாசம், புராணங்கள் என ஆணித்தரமாக விவாதம் நடந்தது. சில சமயங்களில் நகைச்சுவையாகவும் விவாதம் நடந்தேரியது.

மல்லிகை பூமாலை

முதல் நாள், இரண்டாம் நாள் என தொடர்ந்து பத்து நாட்கள் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரே வெற்றி பெற்றார். இதனால் எங்கு, தான் தோற்றுவிடுவோமோ என்கின்ற

அச்சம், லிங்க ராஜேந்திரனுக்கு ஏற்பட்டது. பதினெட்டு நாட்கள் முடிந்தது. இதற்கு பின் லிங்க ராஜேந்திரனால் விவாதிக்க முடியவில்லை. விஜயேந்திரர்தான் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பதற்கு முன்பாக, ``எனக்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் தேவை!’’ என லிங்க ராஜேந்திரன் திக்குமுக்காடியபடி கேட்டுக்கொண்டான்.

சுவாமிகள், மறுப்பேச்சு பேசாது ஒப்புக்கொண்டார். போட்டியில் வெற்றியடை வதற்காக லிங்க ராஜேந்திரன், காட்டிற்கு சென்று விசேஷ மந்திர - தந்திரங்களை செய்ய தொடங்கினான். இந்த தகவலை அறிந்த விஜயேந்திரரின் குருவான ஸ்ரீ சுரேந்திர தீர்த்தரும், ஸ்ரீ வியாசராஜதீர்த்தரும் (வியாசராஜர் சில வேத சாஸ்திரங்களை விஜயேந்திரருக்கு கற்பித்ததால் விஜயேந்திரருக்கு வியாசராஜரும், சுரேந்திரரும் என இரு குருமார்கள்) தஞ்சை மாமன்னர் சிவப்ப நாயகரும், கும்பகோணத்திற்கு விரைந்தனர்.

ஸ்ரீ சுரேந்திர தீர்த்தரும், ஸ்ரீ வியாசராஜதீர்த்தரும், ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரும், மன்னர் சிவப்ப நாயகரும் ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை தாயார் முன்பாக ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டனர். அப்போது, விஜயேந்திரரின் மீது திடீர் என்று மல்லிகை பூமாலை கழுத்தில் காணப்பட்டது. இதனைக்கண்ட அனைவரும் அதிசயித்தனர்.``விஜயேந்திரா... நீ தியானத்தில் இருக்கும் போது, மங்களாம்பிகை தோன்றினாள். தன் கழுத்தில் இருந்த மல்லிகை பூ மாலையினை கழற்றி, உன் கழுத்தில் அணிவித்தாள். இதை என் கண்களால் கண்டேன். ஆனந்தமடைந்தேன். பிறகு என்ன சந்தேகம்? வெற்றி உனதே சபைக்கு செல்வோம்’’ என்று விஜயேந்திரரின் கைகளை பிடித்துக்கொண்டு வியாசராஜர், சபைக்கு செல்கிறார்.

இம்முறை, ஒரு கேள்விகளுக்குகூட லிங்க ராஜேந்திரனால் பதில் சொல்ல முடியவில்லை. லிங்க ராஜேந்திரனின் மந்திர - தந்திரங்கள், சுவாமிகளின் முன்னால் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் விஜயேந்திரரின் பாதத்தில் விழுந்தேவிட்டான்.

திருந்திய புலவர்

``ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்தான் இந்த போட்டியில் வென்றார்’’ என்று அரசவையில் அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள். தோற்றுப்போன புலவர், ஸ்வாமிகளை வணங்கியபடி;``சுவாமி... சூரியனை காணமுடியுமா? அல்லது அதன் அருகில் செல்லத்தான் முடியுமா? நீங்கள் சூரியன் போன்ற மிகவும் பிரகாசம் கொண்டவர். சூரியன் போன்ற உங்களோடு போட்டிப்போட நினைத்தேனே.. என்னை மன்னியுங்கள்!

நான் இதுவரை போட்டியில் வெற்றி பெற்ற செல்வத்தையும், அதிகாரத்தையும், உடைமைப் பொருட்களையும் உங்கள் பாதாரவிந்தத்தில் சமர்ப்பிக்கிறேன்’’ என்றான் லிங்க ராஜேந்திரன். மெல்லிய புன்னகையோடு கேட்ட விஜயேந்திரர், லிங்க ராஜேந்திரனை அருகில் அழைத்து, அவரின் இருகரங்களையும் அன்போடு பற்றிக்கொண்டு;‘‘புலவரே.. நீங்கள் மிக பெரிய பண்டிதர். உங்கள் வாதத் திறமையும் அபாரம். நான் உங்களைப் பெரிதும் மதிக்கிறேன். நீங்கள் கைப்பற்றி வைத்திருக்கின்ற எங்கள் கோயில்களையும், அதன் நிர்வாகத்தையும் மட்டும் எங்களிடம் கொடுத்தால் போதுமானது. மற்றபடி, உங்கள் செல்வங்களோ உடைமைகளோ எங்களுக்குத் தேவையில்லை. அதே போல், உங்கள் கொள்கைகளை விட்டுவிட்டு, நீங்கள் எனக்குச் சீடராக வரவேண்டியதும் இல்லை’’ என அன்போடு ஸ்வாமிகள் கூறினார். அதை கேட்ட லிங்க ராஜேந்திரனின் மனம்மகிழ்ந்தது.

கும்பகோணத்திலேயே தங்கிய மகான் `‘சுவாமி! நீங்கள் இமயமலையைப் போல உயர்ந்த மகான். ஆகாயம் போலப் பரந்துவிரிந்த ஞான பண்டிதர். உங்களிடம் தோற்றுப் போனதற்காக, நான் கவலைப் படவில்லை. ஞானியிடம் தோற்றத்தை நான் பெருமையாக கருதுகிறேன். இனி யாரிடமும் விவாதம் செய்து, அவர்களை அவமானப்படுத்த மாட்டேன். எனக்கு பொன் - பொருள் எதுவும் வேண்டாம். எனது பூஜைப் பெட்டியை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி கொடுங்கள். அதுவும் உங்கள் திருக்கரங்களினால் பூஜை பெட்டியினை கொடுத்தால், அது நான் செய்த பெரும் பாக்கியமாக கருதுவேன். அதன் பின், தங்கள் அனுமதியோடு ஊர் திரும்புகிறேன்’’ என்று வணங்கினார்.

ஒரு பெரிய வெள்ளித் தட்டில், விலை உயர்ந்த இரு சால்வைகள், பூஜைப் பெட்டி ஆகியவைகளை ஸ்வாமிகளின் முன்னர் வைத்தார், மடத்தின் திவான். இரு சால்வைகளையும் எடுத்த சுவாமிகள், மிகுந்த பரிவோடு லிங்க ராஜேந்திரனுக்கு போர்த்தினார். அதோடு அவரின் ஆசைப்படி, தன் கைகளினாலே பூஜைப் பெட்டியை எடுத்து புலவருக்கு கொடுத்தார்.

இதனைக் கண்ட கும்பகோணம் மக்கள், ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தரை போற்ற தொடங்கினர். மேலும், அவரை மீண்டும் ஹம்பிக்கு அனுப்ப மனமில்லாது, கும்பகோணத்திலேயே தங்க விருப்பம் தெரிவித்தார்கள். அதன்படி, ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர் தங்குவதற்கு ஏதுவாக, கும்பேஸ்வரரின் கோபுரத்திற்கு அருகில் மடம் அமைத்து தரப்பட்டது. அந்த இடத்தில்தான் விஜயேந்திரதீர்த்தர் பல காலம் வாழ்ந்து வந்தார்.

(அடுத்த இதழில் தொடரும்...)

ரா.ரெங்கராஜன்