ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்
விஜயேந்திரருக்கும், ராகவேந்திரருக்கும் என்ன தொடர்பு என்பதனைப்பற்றி அடுத்த இதழில் காணலாம் என்பதோடு முடித்திருந்தோம். கலியுகத்தில் வேண்டும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் காமதேனுவாகவும், கற்பக விருட்சமாகவும் விளங்கும், மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் பரமகுருவான நவபிருந்தாவனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் குருதான் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் மகான் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்.
குருகுலத்தில் வேங்கடநாதன்
ஸ்ரீ ராகவேந்திரரின் முற்பிறவிதான் ஸ்ரீ வியாசராஜர். மேலும், ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தருக்கு அடுத்தபடியாக ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், அவருக்குபின் ஸ்ரீ ராகவேந்திரதீர்த்தர் என ராகவேந்திர மடத்தின் குருபரம்பரை தொடர்கிறது. ரஜினிகாந்த் நடித்த ``ஸ்ரீ ராகவேந்திரா’’ படத்தில், வேங்கடநாதனை (ராகவேந்திரர்) ஸ்ரீ சுதீந்திரதீர்த்தர் கண்டெடுத்து ராகவேந்திரர் என்று பட்டம் வழங்கியதாக கதை நகரும். ஆனால், உண்மையில் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தரே வேங்கடநாதனை கண்டெடுக்கிறார். ஆம்! ஸ்ரீ விஜயேந்திரரின் வயோதிகம் காலம். அப்போது, கும்பகோணத்தில் ``வித்யா பீடம்’’ அதாவது, வேதங்களை கற்றுக் கொள்ள குருகுலத்தை கட்டமைத்தார். அந்த சமயத்தில், தாய் - தந்தையை இழந்த வேங்கடநாதன், தன் பெரியப்பாவோடு இந்த குருகுலத்திற்கு வருகிறார்.
``சுவாமி.. தாய் - தந்தையை இழந்த வேங்கடநாதனனுக்கு வேதங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகம். ஆகையால், நீங்கள்தான் இவனுக்கு குருவாக இருந்து வேதங்களை கற்றுத்தர வேண்டும்’’ என்று வேங்கடநாதனின் பெரியப்பா, சுதீந்திரதீர்த்தரிடத்தில் வேண்ட, அருகில் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர், வேங்கடநாதனின் முகத்தை காண்கிறார். முகத்தில் பிரகாசமான தேஜஸ்!
``உனக்கு பின் வேங்கடநாதன்தான் பீடத்தை அலங்கரிப்பவர். இவர் வேறு யாருமில்லை, முற்பிறவியில் வேங்கடநாதன்தான் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்தவர். ஆகையால், இவருக்கு வேத சாஸ்திரங்களை கற்றுக் கொடு’’ என்று ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடத்தில் கட்டளையிடுகிறார். ஆக, சுதீந்திரரிடத்தில் வந்த வேங்கடநாதனை, விஜயேந்திரரே கண்டெடுக்கிறார்.
சுதீந்திரர் பாடம் எடுத்தல்
சுமார் 11 ஆண்டுகள் ராகவேந்திரர், கும்பகோணத்திலேயே இருந்து குருகுலவாசம் பயின்றார். ஒரு முறை, ``மதம் என்பது ஒற்றுமையாக உள்ள மனிதர்களை பிரிக்கின்ற காரியமில்லை. மதம் என்பது ஒரு மார்க்கம். பகவானை அடையக்கூடிய பல்வேறு மார்க்கங்கள். ஒரு ஊருக்கு செல்ல வண்டிப்பாதை வழியாக செல்லலாம். ஆற்றில், படகு வழியாகச் செல்லலாம். இப்படி பல வழிகள் இருப்பது போல, மதங்கள் ஆண்டவனை அடையக் கூடிய பல வழிகள்.
இதில், ``மத்வ மதம்’’ ஒரு வழி. ஸ்ரீ மத்வாச்சாரியரால் உருவாக்கப்பட்ட மார்க்கம். துவைதம் என்றால் என்ன? ``த்வி’’ என்றால் இரண்டு. பிரம்மமான பரமாத்மா ஒன்று. ஜீவாத்மா ஒன்று. பகவானை தியானம் செய்தால் மட்டும் போதாதா? தூபம், தீபம், நிவேதனம் இவையெல்லாம் எதற்கு? இதுயெல்லாம் நியாயப்படுத்தி சொல்லணும். அபிஷேகம் எதற்கு? மூல சக்தியான அந்த தெய்வம் மனம் குளிர்ந்தால், அவனுள் அடங்கிய அண்டமும் குளிரும். மேகம் குளிர்ந்தால் மழை பொழிவது போல்.
பகவான் மனம் குளிரச் செய்தால், அவனுடைய கருணை மழை பொழியும் என்பது தாத்பரியம்’’ என்று ஸ்ரீ சுதீந்திரதீர்த்தர் பாடங்களை நடத்திக் கொண்டிருக்க, ஒரு சீடன் எழுந்து;
``சுவாமி... கோலம் போடுவது, குத்துவிளக்கு ஏற்றுவது ஆகியவற்றுக்கும் ஏதாவது விளக்கம் இருக்க வேண்டுமே?’’ என்று கேள்வி கேட்க;``இதன் விளக்கத்தை சீடர்கள் அனைவரும் யோசித்து நாளை கூறவேண்டும். யாருக்கும் விளக்கம் தெரியவில்லை என்றால், நாளைக்கு நான் விளக்கத்தை சொல்லுகிறேன்’’ என்று கூறிவிட்டு, ஸ்ரீ சுதீந்திரர் சென்றுவிடுகிறார்.
திருட்டுப் பட்டம்
இரவுநேரம்.. அனைத்துச் சீடர்களும் உறங்கிக்கொண்டிருக்க, வேங்கடநாதன் மட்டும் குரு கேட்ட கேள்விக்கு, ஓலையில் விடை எழுதிக் கொண்டிருந்தார். அனைத்துச் சீடர்களும் உறங்கிவிட்டார்களா... என்று பார்வையிடுவது, சுதீந்திரரின் வழக்கம். அப்படி சுதீந்திரர் பார்த்து வரும்போது, வேங்கடநாதனை காணவில்லை. எல்லா இடத்திலும் தேடுகிறார். வேங்கடநாதனை காணவில்லை. பிறகு நான்கு கால் தூண் மண்டபத்தில், வேங்கடநாதன் உறங்கியிருக்க, அவர் கையில் இருக்கும் ஓலையினை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கிறார், சுதீந்திரர்.
படிக்க படிக்க ஆனந்தப்படுகிறார். வெறும் உடலில் படுத்திருக்கும் வேங்கடநாதனைக் கண்ட சுதீந்திரர், தன் மீதுள்ள சால்வையை எடுத்து போத்துகிறார். மறுநாள் காலையில், சுதீந்திரரின் சால்வையை திருடி வேங்கடநாதன் தன் மீது போத்திக்கொண்டதாக சீடர்கள் சுதீந்திரரிடத்தில் தெரிவிக்க, அங்கு வேங்கடநாதன் பயபக்தியோடு வருகைபுரிந்தார்.``என்ன வேங்கடநாதா... கலக்கமாக வந்திருக்கிறாய்?’’ என்று எதுவுமே தெரியாததைப் போல், கேட்க;``சுவாமி... உங்கள் சால்வை என் மீது போர்த்தியிருந்தது. இதை யார் போர்த்தினார்கள் என்று தெரியவில்லை’’ என்று பணிவோடு வேங்கடநாதன் தெரிவிக்க, மற்ற சீடர்களை பார்த்த சுதீந்திரர்;``இவர்கள் அனைவரும் களவு என்கிறார்கள். நான் உன் அறிவு என்று சொல்கிறேன்’’ என்று வேங்கடநாதன் எழுதிய ஓலையை எடுத்து சுதீந்திரர் காட்டுகிறார்.
``உன்னுடைய அபார ஞானத்திற்கு, ஆசையாய் நானே போர்த்திய பொன்னாடைப்பா இது’’ என்றதும் வேங்கடநாதன், ஸ்ரீ சுதீந்திரதீர்த்தரிடத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறார்.
``சிவனுக்கு முருகன் உபதேசம் செய்ததைப்போல், சம்பந்தர் - அப்பருக்கு உபதேசம் செய்ததைப்போல், நீ எனக்கு உபதேசம் செய்துவிட்டாய். கோலத்திற்கும், குத்துவிளக்கிற்கும் நீ எழுதிய விளக்கம் இருக்கிறதே...! இந்த குரு, உன்னிடம் பாடம் கேட்க வேண்டும்ப்பா.. நீ எழுதியதை, நீயே படி. சீடர்களோடு நானும் அமர்ந்து, நீ எழுதிய விளக்கத்தை கேட்கிறேன்’’ என்று சுதீந்திரர், பூரிப்போடுகூற, வேங்கடநாதன், தான் எழுதிய விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தார்.
பரிமளாச்சாரியார்
``எளிமையான ஜீவன்களுக்கும், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கும் நாம் பரோபகாரம் (பிறருக்கு உதவி செய்தல்) காட்டவேண்டும் என்பதே ``மாகோலம்’’. வாழ்க்கை என்பது நெளிவு சுளிவு நிறைந்தது. நிதானமாக, அமைதியாக, சதா ஆண்டவனின் நினைவோடு இருந்து, புள்ளிகளான துன்பத்தை கடந்து போனால், பூரணத்துவமான (Perfection / Wholeness) வாழ்க்கை அமையும், என்பதை காட்டுவதே கோலம்.
தாமரைபோல பீடம், பிரம்மா. நடுத்தண்டு விஷ்ணு, நெய், எறியும் அகல் ஆகியவை சிவன். தீபம் திருமகள், சுடர் கலைமகள், திரி, தியாகம். பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களே.. ஐந்து முகங்கள்’’ என்று கோலத்திற்கும், விளக்கிற்கும் விளக்கம் கொடுத்தார், வேங்கடநாதன். இதில் மெச்சிய ஸ்ரீ சுதீந்திரர், வேங்கட
நாதனுக்கு ``பரிமளாச்சாரியார்’’ என்று பட்டம் சூட்டினார்.இதனை மிக அழகாக ராகவேந்திரா படத்தில் காட்சியமைத்திருப்பார்கள்.
அனுமனை பிரதிஷ்டை செய்த ராகவேந்திரர்
வேங்கடநாதன் அதாவது ராகவேந்திரர், அன்று எழுதிய நான்கு கால் தூண் மண்டபம், ``பவ தீபா’’ என்னும் பெயரில் இன்றும் கும்பகோணத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு சான்றாக ``பவ தீபா ஆஞ்சநேயர்’’ என்கின்ற பெயரில் தனியாக ஆஞ்சநேயர் சந்நதியும் உள்ளது. இந்த சந்நதி, தற்போதுள்ள விஜயேந்திரரின் மடத்தை கடந்து சென்றால், சற்று தூரத்தில் காவேரி நதி வந்துவிடும். அதன் அருகில் ஒரு கொட்டகை அமைந்துள்ளது.
அதுதான் ``பவ தீப ஆஞ்சநேயர்’’ சந்நதி. இந்த ஆஞ்சநேயரை, ``மிரர் ஆஞ்சநேயர்’’ என்றும் சிலர் கூறுவதுண்டு. காரணம், கும்பகோணம் விஜயேந்திரர் மடத்தில் அருள்பாலித்து வரும் லட்சுமி நாராயணரையும், ஸ்ரீ விஜயேந்திர மூல பிருந்தாவனத்தையும் எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ஆஞ்சநேயரை இடத்துபுறத்தில் இருந்து வலதுபுறம் அதாவது நாம் கண்ணாடியில் நம் உருவத்தைக் கண்டால் எப்படி இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக காட்டுகிறதோ அதுபோல், ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்திருக்கிறார், மகான் ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி! கும்பகோணம் விஜயேந்திரர் மடத்தில், பலருக்கும் பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறார், ஸ்ரீ ராகவேந்திரர்.
``குருராஜரு ஓடியாடித ஜாகா’’ என்று கன்னடத்தில் கூறுவார்கள். அதாவது ராகவேந்திரஸ்வாமி, நடந்து, ஓடி, அமர்ந்து வேதங்களையும், புராணங்களையும் பயின்ற இடமாக கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திரரின் மடம் திகழ்ந்துள்ளது என்பதனை இன்றும் நினைக்கும் போது நம்மை அறியாமல் உடல் சிலிர்க்கிறது. இனி எப்போதெல்லாம் கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திரர் மடத்திற்கு செல்கிறோமோ, அப்போதெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரரின் திருப்பாதங்கள் பதித்த இடமாக நாம் மனதில் நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு அடி வைத்து நாம் நடந்து மடத்திற்குள் செல்லும் போதும், மகான் ஸ்ரீ ராகவேந்திரரை தியானிப்போமாக!
(அடுத்த இதழில் தொடரும்...)
ரா.ரெங்கராஜன்


