மதுராந்தகம், கடப்பேரி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முக்கிய கோயிலாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் வளாகத்தில், அபிராமி அந்தாதி மணிமண்டபம் அமைந்துள்ளது. இம் மணி மண்டபத்தில் அபிராமி அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.இந்த மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளன்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அச்சமயம் அபிராமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிராமி அந்தாதி முற்றோதல் நடக்கும். இதில் அந்தாதியின் 79வது பாடலில் குறிப்பிட்டுள்ளபடி, பக்தர்களுக்கு நிலவு காட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்கும். பக்தர்கள் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து வழிபடுவர்.
சென்னை மத்திய கைலாக்ஷ் திருக்கோயில்
மத்திய கைலாசம் (மத்திய கைலாக்ஷ்) எனும் கோயிலானது தென்சென்னையில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, அடையாறு சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய முச்சாலைகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இது நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் எதிரிலும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.இக்கோயிலின் மூலவர் வெங்கட ஆனந்த பிள்ளையார் (விநாயகர்). கருவறையைச் சுற்றி சிவன், திருமால், சூரியன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
இத்திருக்கோயிலில் அன்னை அபிராமி தனிச் சந்நிதி கொண்டு அருளாட்சி செய்கிறாள். மேலும் அனுமன், சுவர்ணபைரவர், நவகிரகங்கள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோயிலின் சிறப்பு. பிள்ளையார் ‘‘ஓம்’’ எனும் மந்திரத்திற்குரியவர் என்பதாலும் இசையின் ஏழு கரங்களையும் குறிக்கும் வகையில் இங்கு எட்டு மணிகள் நிறுவப்பட்டுள்ளன. (ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று முடிவதால் எட்டு என்று கொள்ளப்பட்டது.) இக்கோயிலிலுள்ள அத்யந்த பிரபு எனும் அனுமனுப் பிள்ளையாரும் சேர்ந்த கடவுள் உருவம் புகழ் பெற்றது.
திப்பிராஜபுரம் அபிராமி சமேத சோளேஸ்வரர் திருக்கோயில்
கோயில் நகரமான குடந்தைக்குத் தெற்கே ஏழு கி.மீ. தொலைவில் காவிரியில் கிளை நதியான திருமலைராஜன் ஆற்றின் கரையில் உள்ளது திப்பிராஜபுரம். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்த திப்பையா, இங்கிருக்கும் அந்தணர்களின் மூதாதையர்களுக்கு தானமாகக் கொடுத்ததால் இக்கிராமம் திப்பையாராஜபுரம் என அழைக்கப்பட்டது என்று காஞ்சி ஸ்ரீ பரமாசார்யாள் கூறி உள்ளார்கள். திப்பையாராஜபுரம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி திப்பிராஜபுரம் ஆனது. சதுர வடிவில் நான்கு தெருக்கள் அழகாக உள்ளன.
அருள்மிகு அபிராமி சமேத அருள்தரு சோளேஸ்வரரின் திருக்கோயில் அக்ரஹாரத்தின் வடக்கிழக்கு மூலையிலும் பெருமாள் கோயில் தென்மேற்கு மூலையிலும் அமைந்து உள்ளது. ஸ்ரீ அபிராமி அம்பிகை சமேத விக்ரம் சோளேஸ்வரர் கோயில் விக்ரம் சோழனால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவதற்காகக் கட்டப்பட்டது. பூமி, நீளா சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் தீபாராதனையை தெற்கு வீதி தொடங்கும். இடத்திலிருந்து எங்கு நின்றாலும் பா்க்கலாம். வருடாவருடம் சங்காபிஷேகம், தேவசேனா கல்யாணம், ராதாகல்யாணம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற உத்ஸவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


