கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 58 கி.மீ., தூரத்தில் பயணித்தால், உடுப்பி என்னும் திவ்ய ஷேத்திரம் இருக்கிறது. கன்னட மொழியில் "கடகோலு" என்று சொல்லக் கூடிய தயிர்கடையும் மத்து ஒன்றை கையில் ஏந்தியவாறு அழகாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார், கிருஷ்ணர்.
பர்யாயம் தட்சனின் சாபத்தால் தனது அழகை இழந்த சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து, இழந்த அழகை திரும்பப் பெற்றார், என்கிறது துவைத சித்தாந்தம். அப்படி சந்திரன் தவம் புரிந்து சாபவிமோட்சனம் பெற்று சந்திரனால் நிர்மாணம் (உருவாக்கிய) செய்யப்பட்ட திருக்குளம்தான் `சந்திர புஷ்கரணி’. இன்றும் உடுப்பியில் இந்த சந்திர புஷ்கரணியை காணலாம். இந்த புஷ்கடணியை "மத்வ சரோவர்" என்றும் கூறுகிறார்கள் "உடு" என்றால் சந்திரன்; "பா\” என்பது அதிபதி ஆக, நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன், தவம் புரிந்த இந்த இடத்திற்கு, முதலில் "உடுபா" என்றே பெயர் பெற்றது. காலப் போக்கில் அது மருவி, உடுப்பி என்று ஆகிவிட்டது.
அஷ்ட மடங்களான பலிமார் மடம், பேஜாவர் மடம், அத்மார் மடம், சோதே மடம், கணியூர் மடம், புத்திகே மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என உடுப்பி கோயிலை சுற்றி எட்டு மடங்கள் இருக்கின்றன. அதன் நடுவில் உடுப்பி கிருஷ்ணர் அழகாக கோயில் கொண்டிருக்கிறார். கோயிலின் எதிர்புறத்தில் புஷ்கரணி உள்ளது. அழுக்கு இல்லாது தூய்மையாக பராமரித்து வருகின்றார்கள். இந்த எட்டு மடங்களை சேர்ந்த பீடாதிபதிகள் சுழற்சி முறையில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை உடுப்பி கிருஷ்ணனை பூஜை செய்து வருகின்றார்கள். இதற்கு, "பர்யாயம்" என்று பெயர்.
சிறப்பு மிக்க உடுப்பி கிருஷ்ணர் கோயிலை ஸ்ரீ மத்வாச்சாரியார் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மத்வாச்சாரியார் என்பவர் யார்? அவர் எப்படி உடுப்பியில் கிருஷ்ணரை ஸ்தாபிக்கிறார் என்பதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்!
பிற்பிறவியில் அனுமன் ஸ்ரீ மத் மத்வாச்சாரியார், இவரின் காலம் சுமார் பொ.ஊ.1238 - ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே உள்ள பஜகா க்ஷேத்திரம் என்னும் இடத்தில் பிறக்கிறார். முதலில் இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், வாசுதேவன். வாசுதேவன் பிறந்தது அத்வைத குடும்பத்தில். தனது தாய் - தந்தையினரின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்தார் வாசுதேவர். அதனால், தாய் - தந்தை என்ன சொன்னாலும் அதை மீறாது உடனே செய்து முடித்துவிடுவார். வாசுதேவரின் குடும்பத்தார், பஜகா க்ஷேத்திரத்தில் மலையின் மீது வசித்து வந்தார்கள். ஒரு முறை வாசுதேவரின் தாய் மலையின் அடிவாரத்தில் இருந்து தனது மகனை அழைக்க, உடனே மலையில் இருந்து கீழே குதித்துவிட்டார், வாசுதேவர். எப்படி மலையில் இருந்து குதித்தான் என்று.. தாய்க்கு ஒரே ஆச்சரியம்! (மலை மேலே இருந்து குதித்த மத்வரின் கால் தடயத்தை இன்றும் பஜகா க்ஷேத்திரத்தில் காணலாம்)
ஆனால், இதைக் கண்ட தாயானவள் தன் பிள்ளைக்கு ஏதோ அமானுஷங்கள் தாக்கிவிட்டதாக எண்ணி தினம் தினம் வருந்துகிறாள்.
தனது தாய் வருந்துவதை வாசுதேவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தாய் எண்ணுவதுபோல் தனக்கு ஏதோ அமானுஷம் தாக்கிவிட்டதாக வாசுதேவனும் நம்புகிறார். இதற்கு தீர்வு காண திருப்பதி ஏழுமலையானை வேண்டுகிறார், வாசுதேவன். வேங்கடவனின் அருளால், வாசுதேவன் எடுத்த முப்பிறவிகளான அனுமா, பீமா, ஆகியவை நினைவிற்கு வருகிறது. ஆகையால்தான் தனக்கு சிறுவயதிலே இத்தகைய பராக்கிரம பலம் வந்திருக்கிறது என்பதனை வாசுதேவன் அறிகிறார்.
அதுமட்டுமா! வேதங்களும், சாஸ்திரங்களும், புராணங்களும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. தனது 8வது வயதிலேயே துறவியாகிறார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர், "பூர்ணப் பிரக்ஞர்". அத்வைதம், விசிஷ்டாத்வைதம் உட்பட 37 மார்கத்தை கண்டனம் செய்து "துவைதம்" என்றும் புதிய மார்க்கத்தை உருவாக்கினார். அதிலிருந்து பூர்ணப் பிரக்ஞரை, "ஸ்ரீ மத் மத்வாச்சாரியார்" என்றும் அழைக்கப்பட்டார்.
கடலில் தத்தளித்த படகு இப்படியாக இருக்க, ஒரு முறை உடுப்பி நகரில் சூறைக்காற்று வீசி பலத்த மழை பொழிகிறது. இதில், உடுப்பி அருகே இருக்கும் மால்பே கடற்கரையில் கலங்கரை விளக்கம் எது என்று தெரியாது ஒரு மிக பெரிய ஆங்கிலேயரின் வணிக படகு ஒன்று இதில் சிக்கிக் கொள்கிறது. அந்த படகு தடுமாறுவதை மத்வாச்சாரியார் கவனிக்க்கிறார். தனது ஷாட்டியை (காவி துணியை) எடுத்து தன் தலைக்கு மேலுயர்த்தி வீசுகிறார். அந்த ஷாட்டி, சூரியனை போல் மிக பிரகாசமான ஒளியை தருகிறது.
அதை கவனித்த படகோட்டிகள், அதன் ஒளியின் திசையினை நோக்கி படகை செலுத்துகிறார்கள். பத்திரமாக படகு கரைக்கு ஒதுங்குகிறது. அதில் பயணித்த ஆங்கிலேயர்கள் அனைவரும் படகில் இருந்து கீழே இறங்கி மத்வருக்கு நன்றி தெரிவித்து, தாங்கள் வணிகம் செய்வதற்காக படகில் வைத்திருந்த விலை மதிப்பற்ற வைர - வைடூரியங்களை மத்வருக்கு வழங்குகிறார்கள்.
"இதெல்லாம் எனக்கு வேண்டாம். இதைவிட விலை மதிப்புடைய ஒன்று உங்களிடத்தில் இருக்கிறது, அதுதான் எனக்கு வேண்டும்" என்று மத்வாச்சாரியார் பொன் சிரிப்போடு ஆங்கிலேயர் இடத்தில் சொல்கிறார்.
"இந்த வைரங்களைவிட உயர்வானது எது இருக்க முடியும்? உலகில் வைரங்கள் அல்லவா விலை மதிப்புடையது? இதைவிட எங்களிடத்தில் வேறு எதுவும் இல்லையே?" என்று சோகமாக ஆங்கிலேயர்கள், மத்வரிடத்தில் தெரிவிக்க; "அதோ பாருங்கள்..." என்று ஒரு கல்லை காட்டுகிறார், மத்வர்.
"இந்த கல்லா வேண்டும்? இதுவா வைரத்தைவிட மதிப்புடையது?" என்று மத்வர் இடத்தில் வினா எழுப்பினர், ஆங்கிலேயர்கள்.
"என் மீது போற்றியுள்ள இந்த காவி ஷாட்டி (காவி வஸ்திரம்) உங்களை காப்பாற்றியது என்று வெளி நபர்களிடத்தில் நீங்கள் சொன்னாலே யாரும் நம்பப்படமாட்டார்கள். ஆனால், உண்மை எது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா! அதுபோலத்தான், அது உங்களுக்கு வெறும் கல். எனக்கு அது, கருமை நிறம்கொண்ட கிருஷ்ணர்" என்கிறார் மத்வர். அந்த ஆங்கிலேயர்களுக்கு, கல்லை பார்த்தால் கிருஷ்ணர் போல் தெரியவில்லை. இருந்த போதிலும் மத்வரின் மீது அதீத நம்பிக்கைக்கொண்ட அவர்கள், கல்லினை எடுத்து மத்வரிடத்தில் ஒப்படைக்கின்றார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டு, ஆங்கிலேயர்களை ஆசீர்வதிக்கிறார்.
அதை பெற்றுக் கொண்ட மத்வர், ஆங்கிலேயர்களை ஆசீர்வதிக்கிறார். பெற்றுக் கொண்ட கல்லை கீழே வைத்த மத்வர், அதன் மீது தண்ணீரை ஊற்றுகிறார். தண்ணீர் ஊற்ற ஊற்ற அதனுள் சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய கிருஷ்ணனின் (கடகோலு கிருஷ்ணர்) உருவம் தெரிகிறது. இதனைக் கண்ட படகில் வந்த ஆங்கிலேயர்கள் வியப்பில் ஆழ்ந்து, மண்டியிட்டு இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி "ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா..." என்று முழக்கமிட்டனர். கிருஷ்ணனின் முகத்தில் அளவில்லா தேஜஸ். பிறகு மத்வர், தானே அந்த கிருஷ்ணனைத் தலையின் மீது வைத்து கொண்டு, அவர் பிறந்த பஜகா என்னும் இடத்தின் அருகிலேயே இருக்கும் உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். அந்த கிருஷ்ணர்தான் தற்போது உடுப்பி கோயிலில் மூலவராக இருக்கிறார்.
கனகன கிண்டி முன்னொரு காலத்தில், உடுப்பி கிருஷ்ணனை காண கனகதாசர் என்னும் தாசர் வருகிறார். கிருஷ்ணனை தரிசிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. புரந்தரதாசரை போல், இவரும் பல கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். ஆகையால், கனகதாசரும்கூட சங்கீத பிதாமகர்தான். மனம் வெதும்பி, கிருஷ்ணனை மனதில் தியானம் செய்து, ஒரு ஆக்ரோஷமான வைராக்கிய பாடல் ஒன்றை பாடுகிறார்;
"பாகிலனு திறது சேவேயனு கொடு ஹரியே" (கதவுகளை திறந்து எனக்கு தரிசனம் தரமாட்டாயா?) என்னும் கன்னட பக்தி பாடலை மிக ஆவேசத்துடன் பாடிமுடித்ததும், மத்வர் பிரதிஷ்டை செய்த இடத்தில் இருந்து, கனகதாசர் இருக்கும் இடத்தை நோக்கி கடகோலு கிருஷ்ணர், திரும்புகிறார். கனகதாசரின் முன்பாக இருக்கும் சுவர், சுக்கு நூறாக உடைந்து அதினுள் கிருஷ்ணர், கனகதாசருக்கு காட்சிதருகிறார்.
அனைவரும் வியப்படைகிறார்கள். கனகதாசரிடம் மன்னிப்பை கேட்கிறார்கள். இன்றும் உடுப்பி கிருஷ்ணனை காண நாம், கனகதாசர் தரிசித்த ஒன்பது துவாரம் (ஒன்பது ஓட்டை) வழியாகத்தான் காண வேண்டும். அதற்கு "கனகன கிண்டி" என்று பெயர்.


