Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்திரனால் உண்டாகும் அதியோகம்!

வானில் உள்ள ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு துணைக் கோள் உண்டு. அதனை நிலா என்று கூறுவோம். அவ்வாறே, பூமியின் துணைக் கோள் நிலா; புதன் மற்றும் சுக்ரனிற்கு துணைக் கோள்கள் இல்லை. ஆகவே, அங்கு நிலவு இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலாக்கள் உள்ளன. ஒன்றின் பெயர் ஃபோபோஸ், மற்றொன்றின் பெயர் டைமோஸ் ஆகும். வியாழன் கிரகத்திற்கு நூறு நிலாக்கள் உண்டு. அதே போல டைட்டன் என்று சொல்லக்கூடிய சனி கிரகத்திற்கு 150 கோள்கள் நிலாக்களாக உள்ளது எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறே, ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய துணைக் கோளான நிலாக்கள் அந்தக் கோள்களில் இருக்கக்கூடிய உயிர்களை உற்பத்தி செய்வதும் இயக்கச் செய்வதுமாக உள்ளது. பூமியின் துணைக் கோளான நிலவை அடிப்படையாகக் கொண்ட யோகங்கள் பல இருந்தாலும், அவற்றில் சந்திர அதியோகம் சிறப்புறுகிறது, நன்மையைத் தரும்.

சந்திர அதியோகம் என்பது என்ன?

ஜோதிடத்தில் சந்திரன் இருக்கின்ற ராசியிலிருந்து ஆறாம் பாவகம் (6ம்), ஏழாம் பாவகம் (7ம்) மற்றும் எட்டாம் பாவகம் (8ம்) ஆகியவற்றில் சுப கிரகங்களான வியாழன், சுக்ரன், புதன் ஆகியவை இருக்கப் பெற்றால் அதனை சந்திர அதியோகம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் சுப கிரகங்கள் ராகு மற்றும் கேது தொடர்பு பெற்றிருந்தால், அதியோகத்தில் சில குறைபாடுகள் உடையதான சந்திர அதியோகம் இருக்கும்.

சந்திர அதியோகத்தின் சிறப்புகள்

* சந்திரனுக்கு சுபகிரகங்களின் பார்வைகள், சேர்க்கைகள் உண்டாகுமெனில் அவர்களுக்கு நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள் தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

* சந்திரன் பாதிக்கப் படாதவாறு இருக்கும் பட்சத்தில் நல்ல மனோநிலையை ஜாதகருக்கு கிரகங்கள் கொடுக்கும்.

* சந்திரனே உணவிற்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும். ஆகவே, நல்ல சுவையான உணவுகளை தேடி சுவைக்கும் பாக்கியம் உள்ள நபராக இருப்பார்.

* சரீரம் ஒரு ஈர்ப்புத் தன்மையுடன் இருக்கும். யதார்த்தமாக பழகும் மனோ நிலையில் இருப்பார்.

* பொருள் ஈட்டும் சிந்தனையை தனக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

* சந்திரன் சில சமயங்களில் நீசம் பெற்றிருந்தால்கூட பௌர்ணமி சந்திரனாக இருந்தால், சூரியனின் முழு ஒளியையும் பெறுவதற்கான அமைப்பை சந்திரன் பெறுவதால் சந்திர அதியோகம் சிறப்புறும். ஏனெனில், சுக்ரனுக்கு அருகில்தான் சூரியன் இருக்கும். ஆகவே சிறப்பான அமைப்பாகும்.

* சந்திரன் தன் சொந்த வீடுகளில் இருந்தாலோ அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் இந்த யோகம் சிறப்புற்று காணப்படும்.

* மனமானது நன்மையோ தீமையோ எதைப் பற்றியும் அச்சமின்றி முன்னேறிக் கொண்டே இருக்கும்.

சந்திர அதியோகப் பலன்கள்

* சமூகத்தில் செல்வாக்கு பெற்ற நபராக இருப்பார். இவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். தன் செல்வத்தை இவர்களுக்கு வாரி வழங்கும் தன்மை கொண்டவராக இருப்பதால் சுற்றத்தார் சூழும் நபராக திகழ்வார்.

* எந்த ஒரு விஷயத்தையும் சமயோசிதமாக பேசும் திறன் படைத்தவராகவும் அதற்கு தகுந்தாற் போல் சூழ்நிலைைய மாற்றிக் கொள்ளும் அமைப்பை உடையவராக இருப்பார்.

* இதுவும் ராஜயோகத்திற்கு ஈடான அமைப்பைக் கொண்ட யோகமாகும்.

* எந்த ஒரு விஷயத்தையும் வெற்றிக் கொள்வதற்கு வியூகத்தை உருவாக்கி வெற்றி பெறுவார்கள். சாதாரணமாக தோன்றினாலும் அசகாய சூரர்கள். வெளியே பசு போல இருப்பார்கள். ஆனால், உள்ளே புலி போன்று இருப்பார்கள்.

* வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றியை எளிதாக பெறுவதற்கான அமைப்பை பெற்றவர்களாக இருப்பர்.

* முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் வாய்ப்பையும் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொள்வார்கள்.

சந்திர அதியோகப் பரிகாரங்கள்

* திங்கட்கிழமை தோறும் சந்திரனை வழிபடுவது சிறப்பை தரும். அன்று அசைவத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது வலிமை சேர்க்கும்.

* புனித நதிகள் மற்றும் கடலில் நீராடுவது சிறப்பை தரும். புனித நதிகளின் நீரை எடுத்துவந்து வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், அந்த புனித தீர்த்தத்தை வீட்டில் தெளித்து விடுவது நன்மைகளை பயக்கும்.

* பெளர்ணமி தோறும் சந்திரனுக்கு மாலை வேளையில் பால் வைத்து வழிபட்டு, சந்திரனுக்குரிய மந்திரங்களை ஜெபிப்பது புத்துணர்வு தரும்.

* ஒவ்வொருவரும் அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளுதல். அவர்களிடம் ஆசி வாங்குதல் நற்பலன்கள் தரும்.

* முத்துமாலை அணிந்து கொள்ளுதலும், சந்திரனின் சக்தியை பலப் படுத்துவதற்கு எளிமையான செயலாகும்.

* பசித்தவர்களுக்கு உணவை வழங்குவதால் சந்திரனின் ஆசியை நாம் பெறுகிறோம்.