Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொற்றாமரைக் குளம்

மலர்களில் சிறந்தது தாமரையாகும். இது வெண்டாமரை, செந்தாமரை, பொற்றாமரை என்று பலவகைப்படுகிறது. இந்திரலோகத்தில் பொன்மலர் மலரும் தாமரைக்குளம் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்திரன் பூவுலகில் வந்து சிவவழிபாடு செய்தபோது பொற்றாமரைக் குளங்களை உண்டாக்கினான். மதுரை, திருநெல்வேலி, குடந்தை, திருச்செங்கோடு முதலிய அனேக தலங்களில் பொற்றாமரைக் குளங்கள் உள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மீனாட்சி அம்பிகைக்கு முன்பாக பெரிய திருக்குளம் பொற்றாமரைக் குளம் உள்ளது. இதில் பொன்முலாம் பூசிய பெரிய உலோகத்தால் செய்த தாமரைப்பூ மிதக்க விடப்பட்டுள்ளது. இதன் கரையில் சிவபெருமான் நக்கீரருக்கு அருள் செய்தான். அவர் ‘‘கோபப் பிரசாதம்’’ எனும் நூலைப் பாடி அருளினார். திருச்செங்கோட்டில் பொற்றாமரை மலரும் பொய்கை இருந்ததாகப் பூந்துறைப் புராணம் குறிக்கின்றது. தேவாரத்துள் குடந்தையிலுள்ள புனித நீர்நிலைகளில் ஒன்றாகப் பொற்றாமரையும் குறிக்கப்பட்டுள்ளது.

தீர்த்தமும் - விருட்சங்களும்

தீர்த்தங்கள் யாவும் மரக்கூடம், செடிகொடிகளின் அடியிலிருந்தே உற்பத்தியாகின்றன. கங்கை மானசரோவரம் எனும் சரவணப் பொய்கை (சரவணம் என்பது நாணல் காடு)யிலிருந்து உற்பத்தியாகிறது. அகத்தியர் தருப்பையை மந்திரித்து அனுப்ப அதன் மூலம் உற்பத்தியானதே கொசஸ்தலை ஆறு. காவிரி (கன்னடதேச) பிரம்மகிரியில் நெல்லி மரத்தடியிலிருந்து உற்பத்தியாகி ஓடுகின்றாள். சுவர்ணமுகி (பொன்முகலி) ஆறும் ஆந்திர மாநிலத்திலுள்ள பிரம்மகிரி நெல்லிக்காட்டில் உற்பத்தியாகின்றாள்.

கோதாவரி பஞ்சவடி (நாசிக்) அருகிலுள்ள குசாவர்த்தம் (தருப்பை வனம்) எனுமிடத்தில் தோன்றுகின்றாள். தென்னாட்டில் ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் ஒரு விருட்சம் உள்ளது. சில தீர்த்தங்கள் மரங்களின் பெயரால் மருதையாறு, கடம்பை தீர்த்தம், மூங்கிலடி தீர்த்தம் என்ற பெயர்களைப் பெற்றுள்ளன. ஆறுகளின் துறைகள் அங்குள்ள மரங்களின் பெயர்கள் ஆலந்துறை, கடம்பன்துறை என்ற பெயர்களைப் பெறுகின்றன. புராணங்களில் ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் ஒவ்வொரு மரம் தீர்த்த மரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

பேரூர் நச்சுப் பொய்கையும் ரசவாத தீர்த்தமும்

கோயம்புத்தூரின் ஒரு பகுதியாக திகழ்வது பேரூர். இது கொங்குநாட்டுச் சிதம்பரம், அரசம்பலம், பட்டீச்சரம் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. இங்கு முப்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவற்றில் ஒன்று நச்சுப் பொய்கைத் தீர்த்தமாகும். இதன் தண்ணீரை அருந்தினால் மரணம் உண்டாகும். அதனால் அதனை மூடி அதன்மீது பட்டி விநாயகர் சந்நதியை அமைத்துள்ளனர்.

மேலும், பேரூர் பட்டீசர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள வடகயிலாயம் எனும் கோயிலில் பிரம்ம தீர்த்தம் என்ற கிணறு உள்ளது. இதில் செப்புக்காசுகளை இட்டு வைத்தால் அதன் களிம்பு நீங்கிப் பளபளப்பாக மாறுகிறது. சித்தர்கள் இக்கிணற்று நீரை விட்டு மூலிகைகளை அரைத்துச் செம்போடு சேர்த்துப் புடமிட்டு பொன்னாக்கினர் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

திருவடியில் ஊறி வரும் தீர்த்தம்

ஏறத்தாழ 1075 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலை திருச்செங்கோடாகும். இதன் உச்சியில் உமையொரு பாகனாக சிவபெருமான் (அர்த்த நாரீசுவரர் கோலத்தில்) எழுந்தருளியுள்ளார். இவருடைய பாதத்தடியில் ஒரு அடி நீளம் ஒரு அடி அகலம் ஒரு அடி ஆழம் கொண்ட சிவ பள்ளம் உள்ளது. இதில் எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதைச் சங்கால் முகந்துப் பிரசாதமாக அளிக்கின்றனர். அள்ள அள்ளக் குறையாத அமுத ஊற்றாக இப்பள்ளம் உள்ளது. இது மருத்துவ குணங்கள் நிரம்பியதாகும். நெடிய மலையில் முகட்டில் சுரந்து வரும் இந்த நீர் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். இதனைத் தேவ தீர்த்தம் என்றழைக்கின்றனர்.

ஜெயசெல்வி