Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மை ஆளும் ஆண்டாள்

பகுதி 3

‘ஊர் உலகத்திற்கு நீ ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார்! ஆனால் நீ, எனக்கு என்றுமே கோதை! என்னுடன் ஆயர்பாடியில் வளர்ந்த ப்ரியமான தோழி கோதை!’

இனி...

பங்குனி உத்திரத்தின் முதல் நாள்.

``வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்ட....’’

ஆயிரம் யானைகள் சூழ, இந்திரன் முதலான தேவர்கள் குழாமுடன் அரங்கன் ஊர்வலமாக நடந்து வந்தார். பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார். அவரின் முகத்தில் சூரியனை ஒத்த பூரிப்பு திகழ்ந்தது! பாளையோடு கூடிய பாக்கு மரங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பந்தலின் கீழ் நிச்சயதார்த்தம் நடந்தேறியது.

விவாகத்தின் முதல்நாள் சடங்குகளை விமரிசையாக செய்தார்கள். அந்தணர்கள், எல்லா நதிகளிலிருந்தும் கொணரப்பட்ட நீரை கலசங்களில் நிரப்பினார்கள். வேத மந்திரங்கள் முழங்கினார்கள். கலசங்களிலிருந்து புனித நீர் எங்கும் தெளிக்கப்பட்டது. திருமண நாளில் ஒவ்வொரு சடங்காக நடந்தது. ஆண்டாள் பச்சைப் பட்டுடுத்தியிருந்தாள். மாட்டின் திமில் போன்று, இடது புறத்தில் கொண்டையுடன் கூடிய தலையலங்காரம் மேலும் அழகு சேர்த்தது.

மூக்குத்தியின் மின்னலடிக்கும் வைரத்தில் ஆண்டாளின் கண்கள் ஒளிர்ந்தது. மருதாணியிட்ட கை விரல்களையும், பாதங்களையும். நாராயணன் அவ்வப்போது பார்த்து ரசித்தான். அடுத்த நிகழ்வாக நாராயணரும் ஆண்டாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு துவங்கியது. சுதாமயி ஆண்டாளின் காதில் ரகசியமாக, `‘மாலை மாற்றுதல்தான் ஏற்கனவே நடந்தேறிவிட்டதே! இந்த முறையாவது உன் குழல்கற்றை இல்லாமல் மாலை மாற்றிக்கொள்’’ என்றதும், ஆண்டாள் வெட்கத்தில் முகம் சிவந்தாள். சுதாமயி தோழியருடன் பாடத்துவங்கினாள்.

``மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்,

மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை

ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!’’

பாடலுக்கு ஏற்றாற்போல் இசைக் கலைஞர்கள் வாசிக்க, தோழிகள் நடனமாட எங்கும் ஆனந்தம் நிறைந்திருந்தது. பெற்றோர்கள் எல்லோருக்குமே, தங்கள் மகளை மணக்கோலத்தில் பார்க்கையில், ஆண்டாள் போல் திகழ்கிறாள் என நெகிழ்ந்து போவார்கள். ஆண்டாளே மணமகளாகப் பார்க்கையில் விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தன் துணைவியை அருகில் அழைத்து, `‘பார்! பார்! நமக்கு எவ்வளவு கொடுப்பினை. நம் கோதை கொள்ளை அழகு. அந்தப் பரந்தாமனையே அவள் கரம் பிடிக்கப் போகிறாள். நாம் மிகவும் பாக்கியசாலிகள்’’ எனச் சொல்லச் சொல்ல இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அடுத்து,

``மத்தளம் கொட்ட வரி - சங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன், ஆண்டாளின்

கைத்தலம் பற்ற கூடியிருந்தோரும் வானோரும்

வாழ்த்தொலி முழங்கினார்கள்’’

விஷ்ணுசித்தரின் மடியில், கோதை அமர்ந்திருக்க, அரங்கன் திருமாங்கல்யம் ஆண்டாளுக்குப் பூட்டினார். பூக்களும், மங்கல அட்சதையும் தூவப்பெற்றன. பின் வேதியர்கள் சப்தபதி மந்திரங்கள் ஓத, இருவரும் ஹோம வேள்வியைச் சுற்றி வந்தார்கள்.

``இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாரயணன் நம்பி’’

செம்மை உடைய திருக்கையால் ஆண்டாளின்தாள் பற்றி அம்மி மிதிக்கையில், கோதை விம்மினாள். மனதில் அரங்கனின் பாதம் பணிந்தாள். நெகிழ்ச்சியில் கண்களில் நீர் கசிந்தது. இதை உணர்ந்த அரங்கன், ஆண்டாளின் கரங்களை மெலிதாக அழுத்தி, புன்னகைத்தார். ஆண்டாள் கண்களால் நன்றி சொன்னாள். ஆண்டாளின் திருமணம் நிறைவடைந்தது. அன்றிரவு, சுதாமயி, கோதையின் தந்தை பெரியாழ்வாரை எங்கும் தேடினாள். அவரின் இல்லத்து முற்றத்தில், எங்கு தினமும் கோதைக்குக் கதை சொல்வாரோ, அங்கு அவரைக் கண்டாள். அருகில் சென்றாள். அவர் வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். அவரைத் தொட்டுத் திருப்பினாள். அவர் கை களில் ஒரு பெரிய மாலை. கண்களில் கண்ணீர் எந்த நேரமும் வெளியே வந்துவிடும் என்பதுபோல். சுதாமயியைக் கண்டவுடன் அவருக்கு அழுகை பொங்கியது.

ஆனந்தமாக இருக்க வேண்டிய தருணத்தில் ஏன் கண்களில் கண்ணீர் என்பதுபோல், சுதாமயி அவரைப் பார்த்தாள். பெரியாழ்வார் தரையில், மாலையை மடியின் வைத்தபடி அமர்ந்தார். அருகில் சுதாமயியை அமர வைத்தார்.`‘சுதாமயி! நான் பாசுரங்கள் படைத்தவன்தான். அந்தப் பரமன் மேல் பரம பக்தியுடையவன்தான். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் பெற்றவன்தான். அந்தப் பெருமாளுக்கே கன்னிகாதானம் செய்துகொடுத்தவன்தான். ஆனால் எனக்குள் இருக்கும், ஆண்டாளின் தந்தை எனும் ஸ்தானம் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.

என் துணைவியிடம், ஏன், என் கோதையிடம்கூட இதுவரையில் நான் பகிர்ந்து கொள்ளாதது, உன்னிடம்கூற வேண்டும்போல் உள்ளது. இதோ இந்த மாலையைப் பார். இந்த மாலையில் எல்லா வாசனை மலர்களும் இருக்கும். செண்பகம், மல்லிகை, பாதிரி, உகந்திவை, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை என எல்லா மலர்களையும் இணைத்துக் கட்டிய மாலை. வடபெருங்கோவிலுடையானுக்கு நான் தொடுத்து வைத்திருந்த மாலை. இதைத்தான் கோதை எனக்குத் தெரியாமல் அணிந்து கொண்டுவிட்டாள். நான் பதறி, மற்றொரு மாலையுடன் போய் அந்தப் பெருமாளிடம் நின்றேன்.

கோதை சூடிக்கொடுத்த அந்த மாலைதான் வேண்டும் என்று அந்த வடபெருங்கோவிலுடையான் அடம்பிடித்த நாள் என் நினைவில் என்றும் இருக்கும். கோதை சூடி, அதே மாலையை அவரும் சூடிய பின், நான் எடுத்து வந்தேன். அந்த மாலைதான் இது! என்னை விட்டு என் உயிர் பிரிந்தால்கூட என்னால் ஏற்க முடியும். என்னைவிட்டு என் கோதை பிரியப்போவதை எண்ணியெண்ணி இந்த மாலையிடம் என் புலம்பலைச் சொல்லுவேன்.

தினமும் மலர்கள் பறித்து கைங்கர்யம் செய்வதனால் சொல்கிறேன். பறிக்கும் வரையில் மட்டுமே, மலர்கள் செடிக்குச் சொந்தம். ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்கும் வரையில்தான், மகள் என்பவள் தந்தைக்குச் சொந்தம். எனக்கு அந்த பரந்தாமன் மாப்பிள்ளை என்ற புது உறவு சேர்ந்ததில் மகிழ்ந்த எனக்கு, இன்று மகள் என்கிற உறவு பிரிவதை எண்ணி நெஞ்சம் சுடுகிறது’’

``ஒருமகள் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

செங்கண்மால் தான்கொண்டு போனான்’’

- என்று பாசுரமாய் பாடி அந்த மாலையில் முகம் புதைத்துக் கலங்கினார். சுதாமயி அவரைத் தேற்றும் வண்ணம்

`‘இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி’’

``அவர் தங்களுக்கு, ஆண்டாளுக்கு, நம் எல்லோருக்கும் பற்றானவன். நம்மையுடையவன் நாராயணன் நம்மைக் காப்பான். எல்லாமும் நன்றாகவே நடக்கும்’’ என்று கூறினாள்.

மேலும் அவரைச் சாந்தப் படுத்தும் வண்ணம் பேச்சைத் தொடர்ந்தாள்.`‘உங்கள் பெண், நம் கோதை மிக மிகப் பெரியவள். அதுவும் சீதாவைவிட! ஆச்சர்யமாய் இருக்கிறதா? ராமாயணத்தில் ராமன், பெருமாளின் அவதாரம் ஆனபோதும் மனிதனாக அவதரித்தான். சீதாதேவியும் மானுடப் பெண்ணாக அவதரித்தாள்.

இருவரும் மணம் புரிந்தது பெரிய வியப்பில்லையே! ஆனால், நம் கோதை பெண்ணாகப் பிறந்து, தெய்வமாகிய அரங்கனைக் கைபிடித்தவள்! அதைவிட சுவாரசியம் தெரியுமா? ராமன், சூர்ய வம்சத்தின் குலதெய்வமான அரங்கனைத் தொழுகின்ற ஒரு மனிதன். இன்னமும் சொல்லப் போனால் அரங்கனைத் துதிக்கும் ஒரு பட்டர். நம் கோதையின் நாயகன் அரங்கனைத் தொழுபவர்கள், அவன் நாயகி ஆண்டாளையும் தொழத்தானே வேண்டும்’’பெரியாழ்வார் சுதாமயியைச் செல்லமாகக் கோபித்து, அவள் தலையில் குட்டினார்.

`‘பெருமாளின் வெவ்வேறான அவதாரங்களை வணங்க வேண்டும். இப்படியெல்லாம் பேசாதே’’

`‘அப்படியே ஆகட்டும். தங்கள் மாப்பிள்ளையை என்று அவர் ஆனபின்...’’ பொய்யான பணிவுடன் அவரை வணங்கினாள்.மறுநாள், ஆண்டாள் சமேதராக அரங்கன் திருவரங்கம் நுழைந்தார். பெரியாழ்வாரும் துணைவியாரும் உடனிருந்தார்கள். ஆண்டாளின் கரம் பற்றி அரங்கன் ஒவ்வொரு பிரகாரமாக வலம் வந்தார். இறுதியில் கர்ப்பகிரகத்தை அடைந்தனர். அரங்கன், பெரியாழ்வாரையும் அவர் துணைவியையும் நமஸ்கரித்தார். பெரியாழ்வார் அரங்கனின் கரத்தை இறுகப் பற்றினார். அரங்கன் பெரியாழ்வாரின் மனதோடு பேசினார். பெரியாழ்வார் மெலிதாக தலையசைத்தார்.

பின், அரங்கன் மறைந்தார். ஆண்டாள் எல்லோரையும் வணங்கினாள். பெரியாழ்வாரின் பாதம் தொட்டாள். பெரியாழ்வார் அவளைத் தூக்கிப் பிடித்தபடி, கண்களால் ஆசி கூறினார். ஆண்டாள் அரங்கனுடன் கலந்தாள்.

பெரியாழ்வார் ஓங்கிய குரலில்,

“வையத்து வாழ்வீர்காள்!’’

``ஓங்கி உலகளந்த உத்தமன் நாமம் சொல்லுங்கள். தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள், நீங்காத செல்வம் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்’’ என்றுகூறி எல்லோரையும் வணங்கினார்.அனைத்து ஆழ்வார்களின் ஆசியும் எல்லோரும் பெற நாலாயிரத் திவ்ய பிரபந்த வேதத்தை முழங்கி, வாழ்வோம் வளர்வோம்!

கோதண்டராமன்