பகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் வாமன திருவிக்ரம அவதாரங்களை, மிகவும் சிறப்பாக ஆழ்வார்களும் ரிஷிகளும் போற்றுவார்கள். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு.
யார் இந்த வாமனப் பெருமாள்?
தேவர்களும் அசுரர்களும் அதிதியின் பிள்ளைகள். தந்தை கஸ்ய பிரஜாபதி. அசுரர்களின் ராஜாவும், பிரகலாதனின் பேரனுமான மகாபலிச் சக்கரவர்த்தி, மிகப்பெரிய பலத்தோடு யாகங்கள் பல செய்தான். அதன் மூலம் பெற்ற பல்வேறு வரங்களும் ஆயுதங்களும் கொண்டு போர்புரிந்தான். தேவர்களை விரட்டிவிட்டான். தேவர்களுக்கு நாடு நகரம் இல்லாமல் போயிற்று.தன் பிள்ளைகள் துன்பப்படுவதைக் கண்டு தாயான அதிதி தேவி மிகவும் துக்கப்பட்டாள் . இதற்கு ஒரே வழி பகவானை சரணடைவது தான் என்று சொல்லி பயோ விரதம் என்ற ஒரு விரதத்தை கஸ்ய பிரஜாபதி அனுஷ்டிக்கச் சொன்னார்.
அந்த விரதத்தின் பலனாக பகவான் மன் நாராயணன் காட்சி தந்து “மகாபலி சக்கரவர்த்தியை போர் புரிந்து வெல்ல முடியாது. அடுத்து அவன் பிரகலாதன் வம்சத்தில் தோன்றியதால், பிரகலாதனுக்கு தந்த வரத்தின்படி, அவனைக் கொல்ல முடியாது. இந்திரனுக்கும் வாழ்வு தர வேண்டும். மகாபலி சக்கரவர்த்திக்கும் வாழ்வு தர வேண்டும். எனவே நானே உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்” என்று சொல்லி கஸ்ய பிரஜாபதிக்கும் அதிதிக்குக்கும் மகனாக அவதரித்தார்.
அவர் அவதரித்த காலம் புரட்டாசி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம் துவாதசி நாள்.ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது போலவே, ஒவ்வொரு துவாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. புரட்டாசி மாத வளர்பிறை துவா தசிக்கு வாமன துவாதசி என்று பெயர். விஜய துவாதசி என்றும் பெயர். இந்த துவாதசியில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றி அடையும்.
எப்படி அவதரித்தார்?
அவருடைய அவதார விசேஷத்தை மத் பாகவதம் அற்புதமாக விவரிக் கிறது. மதுராவில் பின்னால் கண்ணன் எப்படி அவதரிக்கப் போகிறாரோ , அதற்கு முன்னோடியாக வாமனன் அவதரித்தார்.
இரண்டு காதுகளிலும் அற்புதமான பொற்குண்டலங்கள் அசைந்தாடின. தோள்வளை, கங்கணமும் தோள்களில் ஜொலித்தது. மார்பிலே வத்ஸம் பிரகாசித்தது. கால்களிலே தண்டையும் சிலம்பும் அசைந்து பிரணவாகார ஒலியை எழுப்பியது. மார்பில் அழகான வன மாலை தவழ்ந்தது. கொள்ளைகொள்ளும் புன்னகையுடனும், நான்கு கரங்களுடனும், சியாமள மேனி வண்ணனாக பகவான் அவதாரம் செய்தார்.
இந்திரனுக்கு தம்பியாக அவதாரம் செய்ததால் அவருக்கு உபேந்திரன் என்கிற திருநாமமும் உண்டு
அவர் அவதாரம் செய்த பொழுது தேவ துந்துபிகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் அவரை வரவேற்று தோத் திரங்கள் பாடினர். சித்தர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும் மங்கலமான பாடல்களை இசைத்தனர்.
திருவோண நட்சத்திரத்தின் சிறப்பு
அவர் அவதாரம் செய்த திருநட்சத்திரம் சிரவண நட்சத்திரம் என்று அழைக்கப்படும் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம் என்ற இரண்டு நட்சத் திரங்கள் மட்டும் திரு என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நட்சத்திரங்கள். திருவோண நட்சத்திரம் இருக்கக்கூடிய ராசி மகர ராசி. பத்தாவது ராசி. கர்மாவைக் குறிக்கக்கூடிய ராசி. செயலைக் குறிக்கக்கூடிய ராசி. கௌரவத்தைக் குறிக்கக் கூடிய ராசி. புகழைக் குறிக்கக்கூடிய ராசி
திருவோண நட்சத்திரம் வானத்தில் மகர ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும் போதும் மூன்று பாதங்கள் போலவும், அம்பு போலவும், அன்னப் பறவை போலவும், முழக்கோல் போலவும் காட்சி அளிக்கும். திருவோணம் இருக்கக்கூடிய ராசியில் சனி மற்றும் செவ்வாய் பலம் பெறுகிறது. செவ்வாய் பூமிகாரகன் அல்லவா.
எனவே, பூமியை அளந்து பெற இந்த நட்சத்திரத்தை தன்னுடைய அவதார நட்சத்திரமாக பகவான் தேர்ந்தெடுத்தார். திரு என்பது ஐஸ்வர்யத்தைக் குறிக்கும். எனவே, சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தருவதற்காக திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்.திருவோண நட்சத்திரத்தின் பெருமையை பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் மிக அற்புதமாகப் பாடுகின்றார்.
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண் “திரு
வோணத் தான் உலகாளும்” என்பார்களே.
கண்ணனைப் போலவே வாமனரும் அவதார காலத்தில் நான்கு கரங்களோடு பிறந்தார். குழந்தையின் அழகைப் பார்த்து தேவர்களும் ரிஷிகளும் ஆச்சரியப் படுகிறார்கள். வாமன அவதாரத்தின் இன்னொரு முக்கியமான சிறப்பு, அவர் பிறந்து, அந்தக் காட்சியைத் தாய் தந்தையருக்கு காட்டிய அடுத்த நிமிடமே, ஐந்து வயது பாலகனாக மாறி உபநயனத்திற்குத்(பூணூல் சடங்கிற்கு) தயாராக இருந்தார். அதாவது வாமனன் பிறந்த நாளன்றே உபநயனமும் ஆகி விடுகிறது என்பது வாமன அவதாரத்திற்கு ஒரு சிறப்பு.காரணம் என்னவென்றால் வாமன அவதாரம் எடுத்த காலத்தில், பலிச் சக்கரவர்த்தி, நர்மதை ஆற்றின் வடக்குக் கரையில் அசுவமேதயாகம் செய்து வந்தான். அந்த யாகம் நிறைவேறுவதற்குள், யாசகம் கேட்டு, பூமியைப் பெற வேண்டும் என்பதற்காகவே, பிறந்த அதேநாளில் ஐந்து வயது பாலகனாக வாமனன் வளர்ந்து விட்டார். ஐந்து வயதாகிய பொழுது, அவருக்கு உபநயனம் செய்து வைக்கிறார்கள்.
பொதுவாக வாமன அவதாரத்தின் கதை ஒரே விதமாகவே புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டு இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் இந்தக் கதைகளின் அமைப்புக்கள் வேதங்களிலும் புராணங் களிலும் வெவ்வேறு விதமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.அதில் பிரதானமான கதைதான் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு திரிவிக்கிரம அவதாரமாக மாறி மண்ணையும் விண்ணையும் அளந்தது.
பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்தி சகல லோகங்களையும் வென்றான். 100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழு மையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனை வரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். இந்திரன் தன்னுடைய உலகத்தை தனக்கு எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்திக்க, அவர் “ மகாபலி பிரக லாதனின் பேரன் ஆக இருப்பதால், சண்டை செய்ய விரும்பாது, பிரம்மச்சாரியாக சென்று யாசித்து, இந்திரனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.
பிறகு அவன் பலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்று அடி மண் கேட்க, அவரும், “ இந்த சிறு பிள்ளை பாவம், மூன்று அடி மண் தானே கேட் கிறான். தந்தால் என்ன குறைந்து விடப் போகிறது” என்று தானம் தரச் சம்மதிக்கிறான். பகவான் திரிவிக்கிரமமனாக ஓங்கி உலகளந்தான். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு, பலிச் சக்கரவர்த்தியின் தலையில் திருவடியை வைத்து, பாதாள உலகத்துக்கு அனுப்பினார் என்பது கதை. மகாபலி கேரள தேசத்தை ஆண்ட மன்னனாகவும், அவன் பாதாள உலகத்தில் இருந்து, வருடம் ஒரு முறை தன்னுடைய மக்களைப் பார்ப்பதற்காக வருவதாகவும், அவன் வரும் நாளே திருவோண நன்னாள் என்றும் கேரள மக்கள் கருதி, பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
குருவிற்கு உகந்த அவதாரம்
தசாவதாரங்களுள் வாமன அவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று சொல் கிறார்கள். காரணம் எதிரே மகாபலி சக்கரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார் இருந்தார். அவருக்குத் தான் “குரு” என்ற அகந்தை இருந்தது. வாமனரைக் கண்டு கொள்ளாமல் அவமதித்தார். “தானம் தராதே” என்று தடுத்தார். அந்த அகந்தையை பகவான் அழித்தார்.
அசுர குருவாகிய சுக்கிரனின் வார்த்தையைக் கேளாது, பலிச்சக்கரவர்த்தி “தான் பகவானுக்கே தருகிறோம்” என்கின்ற அகந்தையோடு தானம் தந்தான். அந்த அகந்தையையும் பகவான் அழித்தார்.
எனவே இந்த வாமன திரிவிக்கிரம அவதாரங்கள் நவகிரகங்களில் குருவுக்கு உரிய அவதார விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இதில் மிருகண்டு முனிவருக்கு காட்சி தந்த திருத்தலம் திருக்கோவலூர். அங்கே உலகளந்த பெருமாள் சன்னதிக்குப் பக்கத்தில் வாமன சன்னதி இருக்கிறது. திருஉண்ணாழிச் சுற்றில் இருக்கும் இந்தச் சந்நதியை வாமன ஜெயந்தி அன்று அவசியம் சேவிக்க வேண்டும்.
விருட்சம் கண்ணுக்குத் தெரியும். விதை கண்ணுக்குத் தெரியாது. உலகளந்த பெருமாள் கோயிலில் விருட்சமாக ஓங்கி வளர்ந்த பெருமாள் ஆஜானு பாகுவாக நமக்குத் தெரிவார். ஆனால் அதற்கு விதையான வாமன அவதாரம் திருச்சுற்றின் பின்பகுதியில் இருக்கும். அந்த மூர்த்தியை சேவிக்க வேண்டும்.
மூன்றாவது அடிக்கு மண் கேட்டபொழுது தலைகுனிந்து நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. அவனால் திரிவிக்கிரம அவதாரத்தை கண்டு ரசிக்க முடியவில்லை. அவனுடைய ஏக்கம் தீர, மறுபடியும் திரிவிக்கிரம அவதாரத்தை உலகளந்த பெருமாளாகக் காட்டினார். அப்படி காட்டிய இடம் தான் காஞ்சி பு ரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில். அங்கேயும் சென்று பெருமாளை சேவிப்போம்.
இந்தக் கதையின் தத்துவம் என்ன?
செல்வம் நிலையானதல்ல.
அதிகாரம் நிரந்தரமல்ல.
தாழ்மைதான் உயர்வு.
இறைவனிடம் சரணாகதி அடைந்தால் வாழ்வு நிறைவு பெறும்.கொடுக்கும் மனமே மனிதனை உயர்த்தும். இறைவன் மகாபலியை அழிக்கவில்லை. அவரை உயர்ந்த பக்தராக மாற் றினார். அதுவே இந்த அவதாரத்தின் மகிமை.
கேரளத்தில் ஓணம்
கேரளாவில் ஓணம் பண்டிகை மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் முழுவதும் பூக்களால் “பூக்களம்” அமைக்கப்படுகிறது. அனைவரும் புதிய ஆடை அணிவார்கள். ஓணச் சாப்பாடு எனப்படும் பிரம்மாண்டமான சைவ விருந்து தயாரிக்கப்படுகிறது. பலவகையான நிவேதனங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. யானை ஊர்வலங்கள், செண்டை மேளம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனங்கள் ஆகியவை கேரளா முழுவதும் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் வைணவக் கோயில்களில் வாமன ஜெயந்தி, திருவோண உற்சவம், திருமஞ்சனம், புறப்பாடு, வேத பாராயணம், திவ்யப் பிரபந்த சேவை, சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறும். வீடுகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், அக்காரவடிசல், பாயாசம், வெண் பொங்கல், பழங்கள் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.
ஆவணி திருவோண விரதம் இருப்பது எப்படி?
அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டைச் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும். பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு துளசி மாலை, தாமரை அல்லது மணமுள்ள மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சாத்வீகமான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். பலர் உபவாசமாக இருந்து மாலை பூஜைக்குப் பிறகு பிரசாதம் அருந்துவார்கள்.
“ஓம் நமோ நாராயணாய”, விஷ்ணு சஹஸ்ரநாமம், சூக்தம், புருஷ சூக்தம், திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி, நம்மாழ்வார் பாசுரங்கள், வாமன அவதாரத்தைப் போற்றும் பகுதிகளைப் பாராயணம் செய்யலாம்.துளசி அர்ச்சனை செய்து, இயன்ற அளவு அன்னதானம் அல்லது தானம் செய்வது மிகவும் சிறப்பானது. மாலை நேரத்தில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று திருவோண நட்சத்திர வழிபாட்டில் கலந்து கொண்டு பெருமாளின் திருவடிகளைத் தரிசிக்க வேண்டும்.
ஆவணி திருவோணத்தில் பக்தியுடன் விரதம் இருந்து வாமன திருவிக்ரமனை வழிபடுபவர்களுக்கு அகந்தை நீங்கி ஞானம் பெருகும். குடும் பத்தில் ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஒற்றுமை, மன அமைதி, இறையருள் ஆகியவை பெருகும்.




