Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைசாய்ந்த ஈசன்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

பகுதி 2

குங்கிலிய கலய நாயனார் சரிதம்

ஓதுவார் சொல்லி முடித்தவுடன், கலயருக்கு ஒரு பெரும் தவிப்பு உண்டாயிற்று. அவருக்கு அங்கு தரிக்கவேயில்லை. திருக்கடவூர் ஈசனைத் துதித்தார். குங்கிலியப் புகையிட்டபடி, ஓதுவாரையும் அழைத்துக்கொண்டு திருப்பனந்தாள் புறப்பட்டார். மன்னருக்குச் செய்தி சொல்லப்பட்டது. திருப்பனந்தாள் கோயிலில் மன்னருடன் பக்தர் கூட்டம் குழுமியது.குங்கிலியப் புகையை சமர்ப்பித்தபடி கலயரும், பதிகம் பாடியபடி ஓதுவாரும் நின்றிருந்தார்கள். மன்னர் ஈசனைத் துதித்தார். கலயர் சிவனுக்கருகில் சென்றார். குங்கிலியப் புகையிட்டார். ஒரு வலிவான அதே சமயம் மெலிதான கயிற்றைச் சிவனின் பீடத்தில் இழுத்துக் கட்டினார். மறு முனையைத் தனது கழுத்தில் கட்டிக் கொண்டார்.

‘`நமசிவாயா! எனக்குத் தெரிந்த வகையில் குங்கிலியப் புகையிட்டு என் சிறிய சிவத்தொண்டைச் செய்துவருகிறேன். இதில் எந்த கர்வமும் என்றுமே எனக்குத் தோன்றியதேயில்லை. திருக்கடவூர் ஆனாலென்ன திருப்பனந்தாள் ஆனாலென்ன! நீ என் ஈசன் அல்லவா! தலையைச் சாய்த்து மாலையை ஏற்றுக்கொண்டது வரை சரிதான். ஆனால், அதே கோலத்தில் இருந்தபடியே இருப்பது எங்களுக்கு எவ்வளவு மன வலியைத் தருகிறது என்பதை நீ உணராமலா இருப்பாய்! இங்கிருப்போர் எல்லோரும் உன்னைத் துதிக்கிறோம். சாய்ந்த தலை நிமிரட்டும். இந்தக் கயிறோ அல்லது என் வலிமையோ உன்னை நிமிர்த்திவிடாது என்பதை நான் அறிவேன். ஆனாலும், என் மூச்சு உள்ள வரையிலும் முயற்சிப்பேன். இந்தக் கயிறின் ஒரு முனையில் நீ! மறுமுனையில் ஒரு சிவனடியான் மாண்டு கிடப்பதை நீ விரும்புவாயா என்ன?’’ கண்களை மூடினார்.

கைகளில் குங்கிலியப் புகைப் பாத்திரத்தை ஏந்தினார். குங்கிலியப் புகையும் கலயரின் பிரார்த்தனையும் சிவனைத் தொட்டது. ஓதுவார் பதிகம் பாடினார்.``கலயர் திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!’’ என்று கோஷமிட்டார். மன்னர் மற்றும் குழுமியுள்ளோர் அனைவரும் `‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!’’ என்று குரலெழுப்பினர். சிவன் அங்குலம் அங்குலமாக தன் சாய்ந்த தலையை நேராக்கிக் கொண்டான். கயிறின் இறுக்கம் குறைய, கலயர் கண் திறந்தார்.

நிமிர்ந்த தலையுடன் சிவனைக் கண்டார். ஆனந்தக் கூத்தாடினார். அரசர் முதல் கூடியிருந்தோருக்கு மகிழ்ச்சி வானத்தின் எல்லையைத் தொட்டது. இதற்குக் காரணமான குங்கிலிய கலயரை நன்றியுடன் வணங்கினார். சிவனருளால் குங்கிலிய கலயர், நாயன்மார் ஆகிப்போனார். பல காலம் சிவத்தொண்டு புரிந்து, பின் சிவனடி சேர்ந்தார்.

கோதண்டராமன்