Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

யந்திர ரூபமாக சனீஸ்வரர்

கொடுப்பதில் வல்லவரான சனி பகவான் அந்த பரமேஸ்வரனிடம் வரம் பெற்று, சனீஸ்வரனாகவே அனைத்து ஜீவராசிகளையும், மனிதர்களையும், தேவாதி தேவர்களையும், ஆளுமை புரிந்து வருகிறார். அந்த வல்லமையினை பூவுலகில் பறை சாற்றிட சிலா ரூபமாகவும் எழுந்து அருள் புரிகின்றார். இம்மூர்த்தி, வடநாட்டில், சிங்கனாப்பூர் என்னுமிடத்தில் ரூபமின்றி சுயம்புவாய் கல்லுருவில் எழுந்து கருணை புரிந்து வருகின்றார். அதுபோல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகேயும் யந்திர வடிவாய் எழுந்து ஏற்றமளித்து வருகின்றார். பலரது எண்ணங்களை செயலாக்கியும், செயல்களை சிறப்பாக்கியும் வருகின்றார்.

பரிகாரத்திற்காக சுமார் 472 வருடங்களுக்கு முன்பு தலைசிறந்த ஆன்றோர்களால் வடிக்கப்பட்ட இந்த யந்திர ரூப சனீஸ்வரர் இன்றும் பலரது வாழ்வில் பல திருப்பங்களையும் முன்னேற்றங்களையும் அளித்து வருகிறார்.இந்த யந்திர சனீஸ்வரர் கோயில்கொண்டுள்ள தலம் ஏரிக்குப்பம் ஆகும். 1535ம் ஆண்டு, ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத் தளபதிகளில் ஒருவரான வையாபுரி, இவ்வூர் வழியே குதிரையில் சென்று கொண்டிருந்தார். திடீரென மிரண்டு ஓடிய குதிரையில் இருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலை தடுமாறி விழ, அதற்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை ஒட்டி, அரசவை ஜோதிடரின் ஆலோசனைப்படி யந்திர வடிவில் சனீஸ்வர பகவானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பிட திட்டமிட்டார் தளபதி. சைவாகம விதிமுறைப்படி மந்திர - யந்திர வடிவங்களால் சனீஸ்வர பகவானுக்கு தனிச் சிறப்புள்ள சிலாரூபம் உருவாக்கப்பட்டு, ஸ்தாபனம் செய்யப்பட்டது. இந்த யந்திர ரூப சனீஸ்வரருக்கு நித்திய ஹோம அனுஷ்டானங்களோடு,4 கால பூஜைகள் செய்யப்பட்டு, யந்திரத்திற்கு பலமூட்டினர். அதன் பிறகு தன்னுடைய அனைத்து தோஷங்களும் நீங்கி, எலும்பு முறிவும் முற்றிலும் குணமடைந்து, பூரண சுகம் பெற்றார், தளபதி. இதையொட்டி சுற்றுப்புற ஊர் மக்களும் சனி பகவானை வணங்கி, வாழ்வில் பிணிகள் நீங்கி, வளமோடு நலமுடன் வாழ்ந்தனர்.

இவ்வாறு சிறப்பாக நடந்து வந்த இந்த சனீஸ்வர யந்திர வழிபாடு நாளடைவில் பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்றுப் போனது. கோயில் சிதைவுற்று யந்திரச் சிலை முட்புதர்களால் மூடப்பட்டது. சமீபத்தில் இந்த யந்திரச்சிலை தொல்பொருள் துறையினரால் கண்டறியப்பட்டது. ஊர்மக்கள் ஒன்றுகூடி அதனை வெளிக்கொணர்ந்தனர்.ஐந்தரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டு, நீள வாக்கில் அமையப்பெற்ற இந்த யந்திரக் கல்லின் மேல்பாகத்தில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும், இதன் நடுவே காகமும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுபாகத்தில் ஷட்கோணமும், அதை சுற்றிலும் 12 இதழ்களைக் கொண்ட கமலமும் (தாமரை) காணப்படுகின்றன. ஷட்கோணத்தின் ஆறு முனைகளில் திரிசூலமும், நடுவே சனீஸ்வரரின் பீஜாட்சரமும் வடிக்கப்பட்டுள்ளன. இதன் கீழே லட்சுமி கடாட்ச வசிய மந்திரமும், பஞ்ச பூத ஆகர்ஷண மந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

யந்திரமயமான இந்தச் சிலா ரூபத்திற்கு இடப்புறம், தனியாக ஒரு சிறு சதுரக் கல்லில் சனிபகவானின் தாயாரான சாயாதேவியின் யந்திரமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இந்த யந்திராலயத்திற்கு அருகேயுள்ள பாஸ்கர தீர்த்தக் குளத்தில் நீராடி, யந்திர ரூப சனீஸ்வரருக்கு எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் மற்றும் நெய் தீபம் ஏற்றி பிரார்த்திக்க, திருமண பாக்கியம், குழந்தை பேறு, நோய் நிவர்த்தி, லட்சுமி கடாட்சம், வியாபார அபிவிருத்தி, தான்ய விருத்தி, கல்வியில் மேன்மை, ஆயுள் பலம் அதிகரிப்பது போன்ற அனேகநற்பலன்களை பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.இந்த யந்திராலயம் அமைந்திருக்கும் ஏரிகுப்பம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆரணி படவேடு வழித்தடத்தில் ஏரி குப்பம் கூட்ரோட்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த யந்திராலயம் அமையப்பெற்றுள்ளது.