Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வெளிநாடு செல்ல அருளும் முருகன்

*விராச்சிலை

சுப்ரமணியர் திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத மூலவராக காட்சி தரும் தனி ஆலயங்கள், நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருக்கிறது. அப்படி ஓர் ஆலயம், விராச்சிலை எனும் தலத்திலும் அமைந்துள்ளது. அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் ஆலயம் என்பது ஆலயத்தின் பெயர். ஆலயம் கிழக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகான ஐந்து நிலை ராஜகோபுரம் இருக்கிறது.

அதன் உள்ளே நுழைந்ததும், விஸ்தாரமான பிராகாரம். நடுவில் கொடிமரம், மயில், பலிபீடம் ஆகியவைகளைத் தொடர்ந்து அழகான வண்ண முகப்பைக் கடந்ததும், சிறப்பு மண்டபமும் அதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் முன்னே மயிலும் பலிபீடமும் காட்சி தர, கருவறையில் முருகப் பெருமான் கல்யாண சுப்ரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வானையுடன் புன்னகை தவழ அருள்பாலிக்கிறார்.

முருகனுக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்கள் தண்டத்தையும் சூலத்தையும் ஏந்தி நிற்க, கீழ் இரண்டு கரங்கள் அபயஹஸ்த முத்திரைகளுடன் காட்சி அளிக்க, இறைவன் அருள்பாலிக்கும் அழகே அழகு. பிராகாரத்தின் தென் திசையிலும், சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையோடு தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார். வடக்குப் பிராகாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நதியும், நடராஜர், சிவகாமி சந்நதிகளும் உள்ளன.

கார்த்திகை சோமவாரங்களிலும், கார்த்திகை நட்சத்திர நாட்களிலும், சஷ்டி தினத்தன்றும் இறைவன் இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகையில், சொக்கபனை தீபம் ஏற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும். இந்த ஆலயம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி தருவது கண்களுக்கு ரம்மியமான காட்சியாகும்.

வெளிநாடு பயணம் செய்ய என்னுவோர், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் பயணம் உறுதியாவதுடன் நல்லபடியாகவும் நடந்தேறுவதாக இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். ஒரு பழத்திற்காக தந்தை தாயுடன் கோபம் கொண்டு பழனி மலை நோக்கி பயணம் செய்த முருகன், தன் பக்தர்களின் பயணக் கோரிக்கைகளை நிறைவேற்றி அருள்புரிவதில் வியப்பென்ன இருக்கிறது!

விராச்சிலை எனும் இத்தலம், புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.