Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மனநோயை குணமாக்கும் குணசீலப் பெருமாள்

திருச்சியில் அமைந்துள்ள புராதண சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றாக ``குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்’’ பார்க்கப்படுகிறது. குணசீல என்னும் மகரிஷிக்கு திருப்பதி வெங்கடாஜலபதியின் மீது அலாதி அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

நினைக்கும் போதெல்லாம் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். ஒரு முறை திருப்பதிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக, தான் வசிக்கும் காட்டிலேயே பெருமாள் எழுந்தருள வேண்டும் என்று கடும் தவம் புரிந்தார். குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சி, பகவான் நேரில் காட்சியளித்தார். குணசீல மகரிஷியின் காட்டில் நேரில் பிரசன்னமானதால் ``பிரசன்ன வெங்கடாஜலபதி’’ என்ற பெயர் பெற்றார். மேலும், இந்த தலம், குணசீல மகரிஷியின் பெயராலேயே `குணசீலம்’ என்று பெயர் பெற்றது.

குணசீல மகரிஷி தவிர்க்க முடியாத காரணத்தால் வேறு இடத்திற்குச் செல்ல நேரிட்டது. அதன் பிறகு, அந்த காட்டுப் பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் விலங்குகளின் அச்சத்தால், சீடர்களும் வெளியேறினார்கள். நாளடைவில் பிரசன்ன வெங்கடாஜலபதிப் பெருமாளின் திருவுருவச் சிலை மீது புற்றால் மூடப்பட்டது. இப்படியிருக்க, ஞானவர்மன் என்ற சோழ மன்னனின் பசுக்கள், அப்புற்றின் மீது தினமும் பாலை பொழிந்து வந்தது. இக்காட்சியினைக் கண்ட மன்னன், புற்றை அகற்றினார். அதில், பிரசன்ன வெங்கடா ஜலபதியின் திருவுருவச் சிலையைக் கண்டெடுத்தனர். பின்னர், கோயில் கட்டினான்.

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்கள், குணசீலத்திற்கு வந்து ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம் என்பது தொன்று தொட்டுவரும் மரபு. மேலும், சித்தபிரம்மை, மன அழுத்தம், பயம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இக்கோயிலின் மிகப் பெரிய சிறப்பாகும். அதேபோல், மனநோய் உள்ளவர்கள் தினமும் உச்சிக்காலம் மற்றும் அர்த்தஜாம பூஜைகளின் போது, முகத்தில் தீர்த்தம் தெளித்துக்கொள்வார்கள். இதனை உடல் நலத்தோடு உள்ள பக்தர்களும் தெளித்துக் கொண்டு பயனடைவார்கள்.

இக்கோயிலில், தாயார் சந்நதி என்று தனியாக இல்லை. பெருமாளே முதன்மையானவர் என்பதால், தனியாகத் தாயார் சந்நதியோ அல்லது பரிவார தெய்வங்களின் சந்நதியோ கிடையாது. ஆனால், வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த விகனஸ மகரிஷிக்கு மட்டும் இங்குத் தனி சந்நதி உள்ளது. அதே போல், நாள்தோறும் மூலவருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்டு, அந்த திருமஞ்சனத்தை தீர்த்தமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழா வெகுவிமர்சையாக 11 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில், ஸ்ரீரங்கம், உத்தமர்கோயில், துறையூர், முசிறி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு! அதே போல், சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தெப்பத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும், குணசீலத்தில் சனிக் கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை தருவார்கள்.

தரிசன நேரம்: காலை 6:30 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:30 முதல் இரவு 8:30 வரை.

அமைவிடம்: திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் பாதையில் சுமார் 20 கி.மீ தொலைவில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஜி.ராகவேந்திரன்