Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வினைகளைத் தீர்த்து வெற்றியை அருளும் விநாயகர்

விநாயகர் சதுர்த்தி 14.9.2026

1. முன்னுரை

சதுர்த்தி நான்காவது திதி. அமாவாசைக்கு அடுத்த வளர்பிறையில் வரும் நான்காவது திதி விநாயகர் சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்த தேய்பிறையில் வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தி. இரண்டுமே விநாயகருக்குரிய நாட்கள்தான். ஆனால், அவற்றில் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. வளர்பிறை சதுர்த்தி விநாயகர் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தேய்பிறை சதுர்த்தி மாதந்தோறும் சங்கடங்களைப் போக்கும் விரதநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி 28, செப்டம்பர் 14, திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் நாடெங்கும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

2. என்றைக்கு விநாயகர் சதுர்த்தி?

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். சென்னை பஞ்சாங்கக் கணக்கின்படி செப்டம்பர் 14, அன்று காலை 7.07 மணிவரை திருதியை. அதற்குப் பிறகுதான் சதுர்த்தி தொடங்குகிறது. சதுர்த்தி மறுநாள் செப்டம்பர் 15 காலை 7.44 மணி வரை இருக்கிறது. எனவே, சதுர்த்தி திதி இரண்டு நாட்களையும் தொடுகிறது என்றாலும் செப்டம்பர் 14, அன்றே விநாயகர் சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று இன்னொரு சிறப்பும் இருக்கிறது. சித்திரை நட்சத்திரம். சித்திரை நட்சத்திரம் பிற்பகல் சுமார் 1.55 மணி வரை இருக்கிறது. அதன்பிறகு சுவாதி தொடங்குகிறது. இங்கேதான் நம்முடைய பழைய ஜோதிட ஞானத்தில் இருக்கும் ஒரு சுவையான தொடர்பைக் கவனிக்க வேண்டும்.

3. செவ்வாய் நட்சத்திரம், சந்திர நாள்

சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகப் பதவியைப் பெற்றவன். வீர்யம், துணிவு, செயல் வேகம், முயற்சி, போராடும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடையவன். அதனால், விநாயகர் சதுர்த்தி நாளில் சித்திரை நட்சத்திரம் வருவது ஒரு சுவாரஸ்யமான ஜோதிடத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதோடு இன்னொரு அழகான விஷயம். திங்கள் என்பது சந்திரனுக்குரிய நாள். அதாவது, ஒரே நாளில் வளர்பிறை சதுர்த்தி, திங்கள்கிழமை, சித்திரை நட்சத்திரம் என்று மூன்று அம்சங்கள் ஒன்றாக வருகின்றன.

* சதுர்த்தி - விநாயகருக்குரியது.

* சித்திரை - செவ்வாயின் நட்சத்திரம்.

* திங்கள் - சந்திரனின் நாள்.

4. இத்தனை விஷயங்களா?

நம்முடைய பஞ்சாங்கம் என்பது வெறும் தேதி பார்க்கும் காலண்டர் அல்ல. ஒரு நாளை எடுத்துக் கொண்டால் அதில் திதி ஒன்று. நட்சத்திரம் ஒன்று. வாரம் ஒன்று. யோகம் ஒன்று. கரணம் ஒன்று. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட பொருள் இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் வெறுமனே ஒரு தேதியில் வைத்து விடவில்லை. அந்த நாளின் திதி என்ன? நட்சத்திரம் என்ன? வாரம் என்ன? அந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்? என்று அனைத்தையும் சேர்த்துப் பார்த்தார்கள். விநாயகர் சதுர்த்தியும் அப்படிப்பட்ட ஒரு திருநாள்தான்.

5. விக்னங்களை நீக்குபவர்

விநாயகர் என்றாலே விக்னங்களை நீக்குபவர்.எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் விநாயகரை வழிபடுவது அதனால்தான். இது வெறும் ஒரு சமய சம்பிரதாயம் மட்டுமல்ல. மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னால் மனதை ஒரு முகப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். விநாயகருடைய உருவமே அதைத்தான் நமக்கு

சொல்லிக் கொண்டிருக்கிறது.

பெரிய தலை - சிந்தனை.

பெரிய காதுகள் - அதிகமாகக் கேட்பது.

சிறிய கண்கள் - கவனமாகப் பார்ப்பது.

தும்பிக்கை - நுட்பமாகச் செயல்படுவது.

பெரிய வயிறு - வாழ்க்கையில் வரும் நல்லதையும் கெட்டதையும் தாங்கிக்கொள்வது.

ஒரு கையில் பாசம்.

ஒரு கையில் அங்குசம்.

அன்பால் அழைத்துச் செல்வதும், தேவைப்பட்டால் கட்டுப்படுத்து வதும்.இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் விநாயகர் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியக்கூடிய ஒரு தத்துவ வடிவம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்னொரு காரணத்திற்காகவும் சிறப்பானதாகத் தோன்றுகிறது.

6. சதுர்த்தி சிறப்பு

* வளர்பிறை என்றால் வளர்ச்சி.

* சதுர்த்தி என்றால் விநாயகர்.

* சித்திரை என்றால் செவ்வாயின் சக்தி.

* திங்கள் என்றால் சந்திரனின் மனம்.

வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் வளர வேண்டும். மனதில் இருக்கும் தடைகள் அகல வேண்டும். செயலில் துணிவு வேண்டும். மனதில் அமைதி வேண்டும். இதற்கெல்லாம் அதிபதியாக இருப்பவர் விநாயகர்.அதனால்தான் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி வந்துகொண்டே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாங்க அமைப்பு சிறிது மாறுகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியைப் புதிதாகப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு நமக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சேர்க்கைகளும் அப்படிப்பட்ட ஒரு அழகான நினைவூட்டல்தான்.

7. பக்திதான் முக்கியம்

விநாயகர் சதுர்த்தி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது விநாயகர் சிலை, அறுகம்புல், கொழுக்கட்டை, சந்தனம், குங்குமம், பூஜை, ஊர்வலம் ஆகியவைதான். ஆனால், விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் ஒரு பண்டிகை அல்ல. அது நம்முடைய உடலையும் மனதையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஒரு நாளை முழுமையாக விநாயகர் சிந்தனையில் செலவிடுவதற்கான ஒரு வாய்ப்பு.

விரதம் என்றால் பட்டினி கிடப்பது என்று நினைத்து விடக்கூடாது.

விரதம் என்பது ஒரு வாக்குறுதி. இந்த நாளில் மனதை இறைவனிடம் வைத்துக் கொண்டு, தேவையில்லாத எண்ணங்களிலிருந்து விலகி, எளிமையாக வாழ்வது. விநாயகர் சதுர்த்தி விரதத்தில் பக்திதான் முக்கியம். விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து, பூஜை அறையைச் சுத்தம் செய்து, விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு விரதத்தைத் தொடங்குவது சிறப்பு.

8. உபவாசம்

விரதம் இருப்பவர்கள் பொதுவாக உணவு உட்கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், எல்லோராலும் முழுமையான உபவாசம் இருக்க முடியாது. உடல்நிலை, வயது, வேலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சிலர் பால், பழம் போன்ற எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள். விரதத்தின் நோக்கம் உடலை வருத்துவது அல்ல. மனதை இறைவனிடம் திருப்புவதுதான். அதனால் உணவு உண்ணாமல் இருந்து நாள் முழுவதும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தால் அந்த விரதத்தால் என்ன பயன்?

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது இதுதான். குறைவாகப் பேசுவது. கோபப்படாமல் இருப்பது. தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது. மனதில் விநாயகரை நினைப்பது. அவருடைய நாமத்தைச் சொல்வது. முடிந்தால் விநாயகர் மந்திரம், விநாயகர் அகவல், கணபதி அதர்வசீர்ஷம் போன்றவற்றைப் பாராயணம் செய்வது.

9. களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுவது

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது நம் நாட்டின் பழமையான மரபுகளில் ஒன்று.சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட விநாயகர் சிலையை வைத்திருக்கும் பழக்கம் இருக்கலாம். சிலர் ஆண்டுதோறும் புதிதாக களிமண் விநாயகரை வாங்கி வந்து பூஜை செய்வார்கள். அவரவர் குடும்ப வழக்கம் பின்பற்றுங்கள்.

இங்கே முக்கியமானது சிலையின் விலை அல்ல. அதன் அளவும் அல்ல. நாம் அதில் விநாயகரை ஆவாஹனம் செய்து பக்தியுடன் வழிபடுகிறோமா என்பதுதான். விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்படும் சிலை இயற்கையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருப்பது சிறந்தது. பூஜை முடிந்த பிறகு அதை நீரில் கரைப்பது நம்முடைய மரபு. அதனால் எளிதில் கரையக்கூடிய இயற்கை களிமண் சிலையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

10. ஏன் களிமண் பிள்ளையார்?

மனிதன் உட்பட இந்த உலகில் உள்ள அனைத்தும் இறுதியில் இயற்கையிலிருந்தே உருவாகின்றன. நம்முடைய உடல் கூட மண்ணிலிருந்து வந்தது. ஒரு நாள் மீண்டும் மண்ணுக்கே செல்கிறது. விநாயகர் சிலையை களிமண்ணால் செய்து, அதில் இறைவனை ஆவாஹனம் செய்து, சில நாட்கள் பக்தியுடன் பூஜை செய்கிறோம். பிறகு அதே சிலையை நீரில் கரைக்கிறோம். இதில் ஒரு மிகப் பெரிய வாழ்க்கை உண்மை இருக்கிறது. உருவம் வந்தது.வழிபட்டோம்.

மீண்டும் உருவமற்ற நிலைக்குச் சென்றது. இதைத்தான் இந்த உலக வாழ்க்கையும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நாம் பிறக்கிறோம். வளர்கிறோம். ஒரு காலத்தில் நம்முடைய பெயர், புகழ், பணம், பதவி என்று எல்லாவற்றையும் பெரிதாக நினைக்கிறோம். ஆனால், இறுதியில் இந்த உடல் மண்ணோடு மண்ணாகிறது. அதனால் களிமண் பிள்ளையார் நமக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

11. ஒரு கைப்பிடி மண்ணும், ஒரு பிடி அறுகம்புல்லும் போதும்

விநாயகரை களிமண்ணால் செய்கிறோம். அதே களிமண் நீரில் கரைகிறது. அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியிலிருந்து உருவானது மீண்டும் இயற்கையோடு கலக்கிறது. இது நம் முன்னோர்களின் இயற்கை பற்றிய புரிதலையும் காட்டுகிறது. அதனால்தான் விநாயகர் சதுர்த்தியின் பாரம்பரிய வழிபாடு இயற்கையோடு இணைந்திருக்கிறது. பெரிய பிள்ளையார் தேவையில்லை - ஆடம்பரமும் தேவையில்லை.

இன்றைக்கு பண்டிகை என்றாலே பெரியது என்ற எண்ணம் வந்துவிட்டது.பெரிய சிலை.பெரிய பந்தல்.பெரிய அலங்காரம். பெரிய ஒலி.-இப்படி எல்லாவற்றையும் பெரியதாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.ஆனால் விநாயகர் மிகவும் எளிமை யானவர்.அவருக்குப் பெரிய மாளிகை வேண்டியதில்லை.விலை உயர்ந்த அலங்காரம் வேண்டியதில்லை.பெரிய சிலை வேண்டியதில்லை.ஒரு கைப்பிடி மண்ணும், ஒரு பிடி அறுகம்புல்லும் போதும்.

12. சுற்றுச்சூழல் முக்கியம்

வீட்டில் வைக்கப்படும் விநாயகர் சிலையை மிகவும் பெரியதாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. நம்முடைய வீட்டில் எவ்வளவு இடம் இருக்கிறது?அந்த இடத்திற்குத் தகுந்த அளவில் ஒரு சிறிய அழகான களிமண் விநாயகரை வைத்தாலே போதும். அதிலும் முக்கியமாக சுற்றுச்சூழலை நாம் மறந்து விடக்கூடாது. ரசாயன வண்ணங்கள், பிளாஸ்டர் போன்ற இயற்கைக்கு ஒவ்வாத பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்ப்பது நல்லது. பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சி மற்ற உயிர்களுக்கும் இயற்கைக்கும் தொந்தரவாக மாறக்கூடாது. விநாயகரை வணங்கிக் கொண்டே விநாயகருடைய படைப்பான இயற்கையை அழிப்பது எப்படி சரியாகும்?

13. அறுகம்புல், மலர்கள், கொழுக்கட்டை - எளிய நைவேத்தியம்

விநாயகரை அலங்கரிக்க அறுகம்புல் மிகவும் முக்கியமானது. அதோடு பலவிதமான மலர்களையும் சமர்ப்பிக்கலாம். சந்தனம், குங்குமம், மஞ்சள் வைத்து அலங்கரித்து, தூபம், தீபம் காட்டி, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். பழங்களையும் நைவேத்தியமாக வைக்கலாம். பூஜை முடிந்தவுடன் உடனே விரதத்தை முடித்து விடாமல், மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது பல குடும்பங்களின் வழக்கம். இங்கே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விரதத்தின் நடைமுறைகள் குடும்பம், சம்பிரதாயம், பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அதனால் அவரவர் குடும்பத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் முறைக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

14. ஏன் விநாயகருக்கு அறுகம்புல்?

விநாயகர் பூஜையில் அறுகம்புல்லுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது.இதற்குப் பின்னால் ஒரு அழகான புராணக் கதை சொல்லப்படுகிறது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தினான். அவனுடைய உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் அனைவரையும் வாட்டியது. தேவர்கள் விநாயகரைச் சரணடைந்தார்கள். விநாயகர் அனலாசுரனை விழுங்கி விட்டார். ஆனால், அவனை விழுங்கிய பிறகும் அனலாசுரனுடைய வெப்பம் விநாயகருடைய உடலுக்குள் அதிகமாக இருந்தது.

தேவர்கள் பலவிதமான வழிகளில் அந்த வெப்பத்தைத் தணிக்க முயன்றார்கள். சில புராணக் கதைகளில் பல பொருட்களை வைத்து முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் அறுகம்புல்லை விநாயகரின் மீது சமர்ப்பித்தபோது அவருடைய வெப்பம் தணிந்ததாகக் கதை கூறுகிறது. அதனால் அறுகம்புல் விநாயகர் வழிபாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது என்று ஒரு புராண விளக்கம் கூறுகிறது.

15. அறுகம்புல் தத்துவம்

இதை வெறும் கதையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அறுகம்புல் என்பது இயற்கையில் மிக எளிதாக வளரும் ஒரு புல். வெயிலையும் தாங்கும். மீண்டும் மீண்டும் வளரக் கூடியது. எளிமையானது. விலை உயர்ந்தது அல்ல. அதனால் விநாயகருடைய எளிமையான வழிபாட்டுடன் அறுகம்புல் இயற்கையாகவே இணைந்து விட்டது. பெரிய செலவு தேவையில்லை. பெரிய பொருட்கள் தேவையில்லை. இயற்கையில் கிடைக்கும் ஒரு சிறிய அறுகம்புல் கூட போதும். இதுதான் விநாயகர் வழிபாட்டின் எளிமை. விநாயகருக்கு பலவிதமான மலர்களைச் சமர்ப்பிக்கலாம். பொதுவாகப் பயன்படுத்தப்படும் மலர்களில் சில:

செம்பருத்தி, எருக்கு மலர், அரளி, மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, தாமரை, செண்பகம், கனகாம்பரம், நந்தியாவட்டை, வில்வ இலை, அறுகம்புல் இவற்றில் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கிடைக்கக்கூடிய தூய்மையான மலர்களில் அன்போடு அர்ச்சனை செய்வதே முக்கியம்.

16. 21 இலைகளால் பூஜை

விநாயகருக்கு 21 வகையான இலைகளால் அர்ச்சனை செய்யும் மரபும் சில சம்பிரதாயங்களில் உள்ளது. இதனை ஏக விம்சதி பத்திர பூஜை என்று குறிப்பிடுகிறார்கள். அதற்காக ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து இலைகளையும் தேடி அலைய வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள வழக்கத்தைப் பின்பற்றலாம். மலர் குறைவாக இருந்தாலும் பக்தி குறையக் கூடாது.

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டின் பூஜை அறையைச் சுத்தம் செய்து அழகாக அலங்கரிக்கலாம். முதலில் பூஜை அறையையும், வீட்டின் வாசலையும் சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் அழகான கோலம் போடலாம். வீட்டின் வசதிக்கு ஏற்ப இருபுறமும் வாழைக் கன்றுகளை வைக்கலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். பூஜை இடத்தில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதன்மீது விநாயகரை வைக்கலாம். விநாயகருக்குப் பின்னால் சுத்தமான துணி அல்லது அலங்காரத் திரையை அமைக்கலாம். முன்புறத்தில் விளக்கு ஏற்றலாம். குத்துவிளக்கை வைத்து ஏற்றுவது மிகவும் சிறப்பு. சந்தனம், குங்குமம், மஞ்சள், பூக்கள், அறுகம்புல், பழங்கள், தேங்காய், கொழுக் கட்டை போன்ற நைவேத்தியப் பொருட்களை ஒழுங்காக வைத்து பூஜை செய்யலாம்.

17. அலங்காரம்

அலங்காரம் அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுத்தம், எளிமை, பக்தி - இந்த மூன்றும் இருந்தால் அந்த இடமே விநாயகர் ஆலயமாகி விடும். நிறைவாக ஒரு விஷயம். விநாயகர் சதுர்த்தி அன்று நாம் விநாயகரை வீட்டிற்கு அழைத்து வருகிறோம். அவரை அலங்கரிக்கிறோம். அவருக்கு பூஜை செய்கிறோம். கொழுக்கட்டை படைக்கிறோம். அறுகம்புல் சாத்துகிறோம். மந்திரம் சொல்கிறோம். பிறகு அவரை நீரில் கரைக்கிறோம்.

ஆனால், இந்த எல்லா சடங்குகளுக்கும் பின்னால் ஒரு மிகப்பெரிய செய்தி இருக்கிறது. இறைவன் நம்முடைய வீட்டிற்கு வர வேண்டும் என்றால் முதலில் நம்முடைய மனம் ஒரு நல்ல இடமாக இருக்க வேண்டும். மண்ணால் செய்த விநாயகர் சிலையை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. நம்முடைய எண்ணங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.வீட்டை மட்டும் அலங்கரித்தால் போதாது.

நம்முடைய மனதையும் அலங்கரிக்க வேண்டும். விரதம் என்ற பெயரில் உணவை மட்டும் தவிர்த்தால் போதாது. தீய எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும்.விநாயகருக்கு அறுகம்புல் மட்டும் சமர்ப்பித்தால் போதாது. நம்முடைய அகங்காரத்தையும் அவருடைய பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையான விநாயகர் சதுர்த்தி. விநாயகர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை மட்டும் நீக்குபவர் அல்ல. தடைகள் ஏன் வருகின்றன என்பதை நமக்குப் புரிய வைப்பவரும் அவரே.

18. எப்போது பூஜையை தொடங்குவது

விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6.10 முதல் 7.10 மணி வரை நல்ல ஹோரை இருக்கிறது. அந்த நேரத்தில் விநாயகர் சிலையை பூஜை அறையில் அல்லது அதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர், அறுகம்புல் ஆகியவற்றால் அலங்கரிக்கலாம். விநாயகரை அந்த சிலையில் ஆவாஹனம் செய்து வழிபடுவது இந்த பூஜையின் தொடக்கம். ஆவாஹனம் என்றால் இறைவனை அன்போடு அழைத்து வந்து, இந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக் கொள்வது.

இதற்காகத் தெரிந்தவர்கள் முறையான கணபதி மந்திரங்களையும், கணபதி அதர்வசீர்ஷம் போன்ற பாராயணங்களையும் செய்யலாம். தெரியாதவர்கள் எளிமையாக, “ஓம் கம் கணபதயே நம:” என்று பக்தியுடன் சொல்லலாம். மந்திரம் தெரியவில்லை என்பதற்காக பூஜையைத் தவிர்க்க வேண்டியதில்லை. உச்சரிப்பைக் காட்டிலும் பக்திதான் முக்கியம். தீபம் ஏற்றி, தூபம் காட்டி, மலர் மற்றும் அறுகம்புல் சமர்ப்பித்து, விநாயகர் அகவல், விநாயகர் துதிகள், தோத்திரங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய்யலாம்.

19. மதியம் பிரதான பூஜை (12.10 முதல் 2.10 வரை)

விநாயகர் சதுர்த்தி பூஜையில் மதிய நேரப் பூஜைக்கு முக்கியத்துவம் உண்டு. பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் சதுர்த்தி திதி மற்றும் மத்தியான காலத்தைப் பார்த்து குடும்ப வழக்கப்படி பிரதான பூஜையைச் செய்யலாம். அதிகாலையில் செய்த ஆவாஹன பூஜையைத் தொடர்ந்து, மதியத்தில் விரிவான பூஜை செய்வது வழக்கம். அபிஷேகம் செய்யும் குடும்பங்கள் தங்கள் சம்பிரதாயப்படி அபிஷேகம் செய்யலாம். பின்னர் சந்தனம், குங்குமம், மலர், அருகம்புல் சாத்தி அலங்கரிக்கலாம். தூபம், தீபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.

கொழுக்கட்டை, மோதகம், பழங்கள், தேங்காய் போன்றவற்றை நிவேதனமாக வைக்கலாம். அதற்குப் பிறகு கற்பூர ஆரத்தி காட்டி, விநாயகர் அகவல் அல்லது தெரிந்த ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். பூஜையின் இறுதியில், “விக்னங்கள் எல்லாம் நீங்கி, நல்ல காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேற வேண்டும்” என்று வேண்டிக்கொள் வது நம் வழக்கம்.

20. மாலை மற்றும் இரவு

மதியப் பூஜை முடிந்துவிட்டது என்பதற்காக விநாயகர் சதுர்த்தி முடிந்து விடுவதில்லை. மாலையிலும் விளக்கேற்றி விநாயகரை வணங்கலாம். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து விநாயகர் பாடல்கள் பாடலாம். குழந்தைகளுக்கு விநாயகர் கதைகளைச் சொல்லலாம். விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யலாம். விநாயகருக்கு நைவேத்தியம் செய்த கொழுக்கட்டை மற்றும் பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கலாம். இரவு நேரத்திலும் சுருக்கமான பூஜை செய்து ஆரத்தி காட்டலாம். காலை முதல் இரவு வரை இந்த நாளை விநாயகர் நினைவோடு செலவிடுவது மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.

21. புனர் பூஜை

விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் காலையில் மீண்டும் விநாயகருக்கு புனர்பூஜை செய்வது வழக்கம். மீண்டும் விளக்கேற்றி, தூபம் காட்டி, மலர், அருகம்புல் சமர்ப்பித்து, நைவேத்தியம் செய்து ஆரத்தி காட்டலாம். பிறகு விநாயகரிடம், “தாங்கள் எங்கள் இல்லத்திற்கு எழுந்தருளி, எங்கள் பூஜையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. மீண்டும் தங்கள் திருவடிகளை எங்கள் இல்லத்தில் நினைத்துக்கொண்டு வழிபட அருள் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து விசர்ஜனத்திற்கு (கரைப்பதற்கு) தயாராகலாம்.

இங்கே ஒரு நுட்பமான விஷயம் இருக்கிறது. நாம் விநாயகரை நீரில் கரைக்கிறோம் என்பதால் விநாயகர் அழிந்து போய்விட்டார் என்று பொருள் அல்ல. உருவம் மட்டுமே கரைகிறது. இறைவன் கரைவதில்லை களி மண்ணால் உருவாக்கப்பட்ட உருவம் மீண்டும் நீரோடு கலந்து இயற்கைக்குத் திரும்புகிறது. அதுதான் விசர்ஜனத்தின் தத்துவம். எல்லோரும் ஒரே நாளில் விநாயகரை விசர்ஜனம் செய்வதில்லை. சில குடும்பங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜை செய்து பின்னர் விசர்ஜனம் செய்வார்கள்.சிலர் ஐந்து நாட்கள் பூஜை செய்வார்கள்.சில இடங்களில் இன்னும் நீண்ட நாட்களும் விநாயகர் வழிபாடு நடைபெறலாம்.

இதில் எது சரி, எது தவறு என்று பொதுவாகச் சொல்ல முடியாது.குடும்ப சம்பிரதாயம், ஊர் வழக்கம் பொறுத்து இந்த நாட்கள் மாறுபடும். முக்கியமானது எத்தனை நாட்கள் வைத்தோம் என்பதல்ல. அந்த நாட்களில் எவ்வளவு பக்தியுடன் வழிபட்டோம் என்பதுதான். ஒருநாள் வைத்திருந்தாலும் பக்தியோடு வைத்தால் அது நிறைவான வழிபாடுதான். ஐந்து நாள் வைத்திருந்தும் வெறும் அலங்காரம், வேடிக்கை என்றிருந்தால் அதில் வழிபாட்டின் உள்ளார்ந்த நோக்கம் குறைந்து விடும்.

22. விநாயகர் விசர்ஜனம் (கரைத்தல்)

விசர்ஜனம் என்றால் விநாயகர் சிலையை நீரில் கரைப்பது. பழைய காலங்களில் வீட்டு அருகிலிருந்த குளம், ஏரி, ஆறு போன்ற இயற்கையான நீர்நிலைகளில் சிலையை கரைக்கும் வழக்கம் இருந்தது. சில இடங்களில் கிணற்றிலும் கரைத்தனர். இன்றைக்கு நகர வாழ்க்கையில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதனால் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காகத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள் அமைக்கப்படுகின்றன.

அங்கே கொண்டு சென்று விசர்ஜனம் செய்யலாம். ஆனால், ஒரு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கையான களிமண் சிலைகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. நீர்நிலைகளில் ரசாயன வண்ணங்கள், பிளாஸ்டர் போன்றவை கலப்பது நீருக்கும் நீரில் வாழும் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

23. ஊர்வலம் - மகிழ்ச்சியும் பக்தியும்

பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கு முன்பு ஊர்வலமாக எடுத்துச் செல்வது பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது. மேளதாளம், நாதஸ்வரம். பஜனை, விநாயகர் பாடல்கள். ஆட்டம். கொண்டாட்டம் என அத்தனை விஷயங்கள் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அது இருக்கும். அது ஒரு சமூக விழாவாகவும் மாறுகிறது. பல நாட்கள் ஒரே இடத்தில் கூடி விநாயகரை வழிபட்டவர்கள், இறுதியில் அவரை வழியனுப்பும்போது ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதில் தவறு ஒன்றுமில்லை.

பண்டிகை என்றால் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சி அளவைக் கடக்கக்கூடாது. ஒலி மாசு ஏற்படுத்துவது, பிறருக்கு இடையூறு செய்வது, சாலையில் செல்லும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, இயற்கையை மாசுபடுத்துவது ஆகியவை பக்தியின் பெயரில் செய்யப்படக் கூடாது. மேளதாளம் இருக்கட்டும். ஆட்டம் இருக்கட்டும். மகிழ்ச்சி இருக்கட்டும். கொண்டாட்டம் இருக்கட்டும். ஆனால், அதன் அடிப்படையில் சிரத்தையும் பக்தியும் இருக்க வேண்டும்.

24. விநாயகரை அழைத்தோம் - வழியனுப்புகிறோம்

விநாயகர் சதுர்த்தியின் தொடக்கத்திலும் ஒரு அழைப்பு இருக்கிறது. “விநாயகரே, எங்கள் இல்லத்திற்கு வாருங்கள்.”விசர்ஜனத்தின் போது ஒரு வேண்டுகோள் இருக்கிறது. “மீண்டும் எங்கள் இல்லத்திற்கு வந்து அருள் செய்ய வேண்டும்.” அதனால் விசர்ஜனம் என்பது பிரிவு அல்ல. அது ஒரு வகையான வழியனுப்புதல். மண்ணிலிருந்து உருவாக்கினோம். அதில் இறைவனை ஆவாஹனம் செய்தோம். பூஜை செய்தோம். அன்போடு நைவேத்தியம் படைத்தோம். சில நாட்கள் வீட்டில் வைத்திருந்தோம். இறுதியில் மீண்டும் இயற்கையோடு சேர்த்து விட்டோம். இதில் வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை ஒன்று இருக்கிறது. வந்தது போக வேண்டும்.

உருவானது கரைய வேண்டும். ஆனால், பக்தி மட்டும் மனதில் தொடர்ந்து இருக்க வேண்டும். விநாயகர் சிலை நீரில் கரைந்து விடலாம். ஆனால் அந்த விநாயகர் நமக்குள் விதைத்த நல்ல எண்ணங்கள் கரையக் கூடாது. அவர் முன் வைத்த வேண்டுதல்கள் மறந்து போகக் கூடாது. அவர் கற்றுக் கொடுத்த பொறுமை, அறிவு, பணிவு, முயற்சி ஆகியவை நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க வேண்டும். அதுதான் உண்மையான விநாயகர் சதுர்த்தி. விநாயகர் வருகிறார். நம்முடைய வீட்டை மட்டும் அல்ல, நம்முடைய மனதையும் புனிதமாக்குகிறார். பிறகு திரும்பிச் செல்கிறார். ஆனால், அவர் விட்டுச் செல்லும் அருள் நம்முடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.

25. விநாயகர் சதுர்த்தியில் கணபதி ஹோமம்

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்வது மட்டும் போதாது. விநாயகரை நினைத்துப் பாட வேண்டும். அவருடைய நாமத்தைச் சொல்ல வேண்டும். மந்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். விநாயகர் பற்றிய கதைகளைக் கேட்க வேண்டும். குழந்தைகளுக்கு அந்தக் கதைகளைச் சொல்ல வேண்டும். ஒரு குடும்பத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றால், அந்த வீட்டில் அந்த நாளில் ஒரு சில மணி நேரமாவது விநாயகர் பற்றிய பேச்சு இருக்க வேண்டும். அதுதான் அந்தப் பண்டிகையின் உண்மையான பயன். விநாயகர் வழிபாட்டில் பலவிதமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் உள்ளன. வேத மந்திரங்களை முறையாக அறிந்தவர்கள் கணபதி மந்திரங்கள், கணபதி சூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம்.முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் கணபதி ஹோமம் செய்யலாம்.

விநாயகர் வழிபாட்டில் முக்கியமான பாராயண நூல்களில் ஒன்று கணபதி அதர்வசீர்ஷம்.இது கணபதியைப் பரம்பொருளாகப் போற்றும் காணாபத்ய (கணபதியை முதன்மையாக கொண்ட மரபு) மரபின் முக்கியமான நூலாகும். இதில் கணபதியின் தத்துவம், அவரது மந்திர வடிவம், தியானம், கணபதி காயத்ரி ஆகியவை இடம்பெறுகின்றன. சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் முறையாகப் பாராயணம் செய்யலாம். தெரியாதவர்கள் கேட்டுக் கொண்டே கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். மந்திரத்தை வேகமாகச் சொல்வது பாராயணம் அல்ல. உச்சரிப்பை முடிந்தவரை சரியாகக் கற்றுக்கொண்டு, பொருளைத் தெரிந்துகொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி சொல்வதுதான் சிறப்பு.

26. கணபதி காயத்ரி

ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வீட்டில் எளிமையாக விநாயகர் பூஜை செய்து பாராயணம் செய்வதே போதுமானது. அதில் முக்கியமானது கணபதி காயத்ரி.

கணபதி காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்

இந்த மந்திரம் கணபதியைப் பற்றிய மூன்று அழகான எண்ணங்களை நமக்குத் தருகிறது.

ஏகதந்தாய - ஒரே தந்தம் உடையவரை.

வித்மஹே - நாம் அறிந்து கொள்ளட்டும், உணர்ந்து கொள்ளட்டும்.

வக்ரதுண்டாய - வளைந்த துதிக்கையை உடையவரை.

தீமஹி - நாம் தியானிக்கிறோம்.

தன்னோ தந்தி - அந்த ஏகதந்தனாகிய விநாயகர்.

ப்ரசோதயாத் - நம்முடைய புத்தியைத் தூண்டி, நல்ல வழியில் செலுத்தட்டும்.

அதாவது, “ஒரு தந்தத்தை உடைய விநாயகரை நாம் அறிந்து கொள்வோம். வளைந்த துதிக்கையை உடைய அவரை தியானிப்போம். அந்த விநாயகர் நம்முடைய புத்தியைத் தூண்டி, நம்மை நல்ல வழியில் செலுத்தட்டும்.” என்பதே இதன் அடிப்படைப் பொருள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? விநாயகரிடம் நாம் முதலில் கேட்பது பணம் அல்ல. பதவி அல்ல. புகழ் அல்ல. புத்தி வேண்டும் என்று கேட்கிறோம். நல்லதை அறிந்து கொள்ள வேண்டும். அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அறிந்ததை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். இதுதான் கணபதி காயத்ரியின் உள்ளார்ந்த பிரார்த்தனை. குழந்தைகள் இந்த ஒரு மந்திரத்தையாவது மனப்பாடம் செய்து தினமும் சொல்லத் தொடங்கினால் மிகவும் நல்லது.

27. விநாயகர் அகவல்

விநாயகர் சதுர்த்தி என்றால் தமிழில் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது விநாயகர் அகவல். இதை அருளியவர் ஔவையார். தமிழில் விநாயகர் வழிபாட்டை மிக எளிமையாகவும் அதே நேரத்தில் மிக ஆழமாகவும் எடுத்துச் செல்லும் அற்புதமான பக்தி நூல் இது. விநாயகரைப் போற்றுவதில் தொடங்கி, அவருடைய அருளைப் பெற்று, உடல், மனம், அறிவு ஆகியவற்றைக் கடந்து ஆன்மிக அனுபவத்தை நோக்கிச் செல்லும் ஒரு நீண்ட ஆன்மிகப் பயணமாகவே விநாயகர் அகவலைப் பார்க்கலாம்.

அதனால், இது வெறும் விநாயகர் துதி அல்ல. ஒரு ஆன்மிகப் பாதை. விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் அனைவரும் சேர்ந்து விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. ஒருவருக்குத் தெரிந்தால் அவர் படிக்கலாம். மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய பகுதிகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். அதன் பொருளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தை ஒரு பாடலை மனப்பாடம் செய்வதைவிட, “நான் யாரை வழிபடுகிறேன்? ஏன் வழிபடுகிறேன்?” என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம்.

28. எளிய தமிழ்ப் பாடல்கள் - குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றவை

விநாயகர் சதுர்த்தி அன்று எல்லோருக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.தமிழில் எளிமையாகப் பாடக்கூடிய விநாயகர் பாடல்கள் பல உள்ளன. குழந்தைகளுக்குக் குறிப்பாக அவற்றைக் கற்றுக் கொடுப்பது நல்லது.

அதில் மிகவும் பிரபலமானது:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

மாமலராள் நோக்குண்டாம்

மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

இந்தப் பாடலின் அழகு என்னவென்றால், குழந்தை எளிதாகச் சொல்லிவிட முடியும். விநாயகரை வணங்குபவருக்கு நல்ல வாக்கு வேண்டும். நல்ல மனம் வேண்டும். அவருடைய அருள் பார்வை வேண்டும். உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டுகிறது. அதேபோல் விநாயகர் வழிபாட்டில் அனைவருக்கும் பரிச்சயமான மற்றொரு பாடல்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா.

இதில் ஔவையார் விநாயகரிடம் என்ன கேட்கிறார்? பால். தேன். பாகு.பருப்பு.இவற்றை நைவேத்தியமாகத் தருகிறேன்.நீ எனக்கு என்ன தர வேண்டும்?சங்கத் தமிழ் மூன்றும் தா.என்று கேட்கிறார். அதாவது எளிய பொருள்களை நாம் விநாயகருக்குக் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக அவர் நமக்கு அறிவையும் தமிழையும் வழங்க வேண்டும். இது குழந்தைகளுக்குச்

சொல்லிக் கொடுக்க வேண்டிய மிக அழகான பாடம்.

மற்றொரு பிரபலமான விநாயகர் துதி:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

குழந்தைகள் கூட்டமாக இதைப் பாடுவது மிகவும் அழகாக இருக்கும். அவர்களுக்கு மந்திரம் புரியாவிட்டாலும் பரவாயில்லை. முதலில் பாடட்டும். பிறகு அதன் பொருளைச் சொல்லிக் கொடுக்கலாம்.ஐந்து கரங்கள் உடையவர், யானை முகம் உடையவர். இளம்பிறை போன்ற தந்தம் உடையவர். நந்தியின் மகன். ஞானத்தின் கொழுந்து. அவரை என் மனதில் வைத்து வணங்குகிறேன் என்று பொருள் சொல்லும்போது குழந்தைக்கு விநாயகருடைய உருவமும் தத்துவமும் மனதில் பதியும்.

29. விநாயகர் சதுர்த்தி - குழந்தைகளின் பண்டிகை

நான் மிகவும் முக்கியமாகச் சொல்ல விரும்புவது இதுதான். விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் பங்கேற்க வேண்டிய பண்டிகை. பெரியவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்து விடக்கூடாது. குழந்தைகளே பிள்ளையாரை அலங்கரிக்கட்டும். அறுகம்புல் எடுத்து வைக்கட்டும். பூக்களைத் தொடுக்கட்டும். கொழுக்கட்டை செய்யும்போது அருகில் இருந்து பார்க்கட்டும். நைவேத்தியத் தட்டைக் கொண்டு வரட்டும். விநாயகர் பாடல்களைப் பாடட்டும். மந்திரங்களைச் சொல்லட்டும். ஆரத்தி காட்டட்டும். இப்படி பண்டிகையில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் பண்டிகை அவர்களுடைய நினைவில் வாழ்நாள் முழுவதும் இருக்கும். இதற்கு நமக்கு மிக அழகான உதாரணம் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி.

30. நம்பியாண்டார் நம்பியும் பிள்ளையாரும்

திருநாரையூரில் உள்ள பிள்ளையார் கோயிலுடன் தொடர்புடையதாக நம்பியாண்டார் நம்பியின் குழந்தைப் பருவ பக்திக் கதை சொல்லப்படுகிறது. அவருடைய தந்தை கோயிலில் பூஜை செய்து வந்தவர்.ஒரு நாள் தந்தையால் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் சிறுவனான நம்பியாண்டார் நம்பியிடம் பூஜைப் பொறுப்பை ஒப்படைத்தார். சிறுவன் தந்தை சொல்லிக் கொடுத்தபடி கோயிலுக்குச் சென்றான்.

பூஜை செய்தான். விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தான். அவன் மனதில் ஒரு மிக எளிய எண்ணம். அப்பா தினமும் பிள்ளையாருக்குப் படைக்கிறார். பிள்ளையார் அதைச் சாப்பிடுகிறார்.” அந்தக் குழந்தைக்கு நைவேத்தியத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பது வெறும் சடங்கு என்பது தெரியாது. அவன் உண்மையாகவே பிள்ளையார் சாப்பிடுவார் என்று நம்பினான். ஆனால், அன்று பிள்ளையார் சாப்பிடவில்லை.

நம்பியாண்டார் நம்பி காத்திருந்தான். காத்திருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது. “நான் பூஜையில் ஏதாவது தவறு செய்து விட்டேனா?” என்று குழந்தை கவலைப்பட்டது. இறுதியில் அவனுடைய பக்தி எல்லை கடந்தது. “நான் படைத்த உணவை நீங்கள் சாப்பிட வேண்டும். இல்லை யென்றால் நான் உயிரை விட்டுவிடுவேன்.” என்று அழுதான். அவனுடைய பக்தியின் உண்மையை உணர்ந்த விநாயகர் அவனுக்கு அருளியதாக இந்த மரபுக் கதை கூறுகிறது. விநாயகர் நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டார்.

சில மரபுக் கதைகளில் விநாயகர் நேரில் தோன்றி நைவேத்தியத்தை உண்டதாக விரிவாகச் சொல்லப்படுகிறது. திருநாரையூர் பிள்ளையார் தொடர்பான இந்தக் கதை பல பக்தி மரபுகளில் நம்பியாண்டார் நம்பியின் சிறுவயது பக்திக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது பிள்ளையார் உண்மையில் உணவை உண்டாரா என்பதைக்காட்டிலும் அந்தக் குழந்தையின் நம்பிக்கை. அவன் பூஜையை ஒரு சடங்காகச் செய்யவில்லை. அவன் விநாயகரை உயிருள்ள இறைவனாகவே பார்த்தான். அதுதான் குழந்தையின் பக்தி.அதனால்தான் விநாயகர் சதுர்த்தியில் குழந்தைகளை நாம் பங்கேற்கச் செய்ய வேண்டும்.