Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

தடைகளை தகர்க்கும் விநாயகப் பெருமான்

முதல் பூஜை பெறுபவர்

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் விழாக்கள் உண்டு. பூஜை உண்டு. ஆனால் எந்த தெய்வத்தின் பூஜையாக இருந்தாலும் முதல் பூஜையாக ஒருவருக்கு உண்டு என்றால் அவர்தான் விநாயகர். வைஷ்ணவத்தில் மட்டும் விதிவிலக்கு. அவர்களுக்கும் பிரதான பூஜைக்கு முன்னால் முதல் பூஜை உண்டு என்றாலும் அது விஷ்வக்ஸேனர் ஆராதனம். ஆனால் மற்ற சம்பிரதாயத்தினர் முதல் பூஜையாக விநாயகர் பூஜையை செய்து விட்டுத் தான் பிரதான பூஜையைச் செய்வார்கள். காரணம் பிரதான பூஜை எதற்காகச் செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறவும் பிரதான பூஜை எந்த விக்னங்களும் இல்லாமல் நிறைவேறவும் விநாயகர் அருள் அவசியம் அல்லவா. எனவே விநாயகருக்கு முதல் பூஜை.

வெற்றியைத் தருகின்ற தலைவன்

விநாயகர் என்றால் வெற்றியைத் தருகின்ற தலைவன் என்று பொருள். கணங்களுக்கு நாதன், தலைவன் என்பதால் கணாதிபன் என்றும் கணநாதன் என்றும் அவருக்கு பெயர். வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு எளிமையான பெயர் பிள்ளையார். நாம் அவருக்கு பிள்ளையாக இருக்கின்றோம். அவரையும் நம் பிள்ளையாக பாவித்து மிகவும் குதூகலத்தோடு, ஒரு குழந்தையின் மனநிலையோடு, சதுர்த்தியைக் கொண்டாடுகின்றோம். பொதுவாகவே சதுர்த்தி என்பது சங்கடங்களை நீக்குவது. எந்தச் செயலும் விரைவாக நடைபெற வேண்டும் என்று சொன்னால், அது இடையூறுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இடையூறை நீக்குகின்றவர்தான் பிள்ளையார். விக்கினங்களை நீக்குகின்ற ஈஸ்வரன் என்பதால் அவருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர்.

எந்தப் பிள்ளையாரைப் பிடிப்பது? படைப்பது

யோக சாஸ்திரத்திலும், மூலாதாரக் கனலை மூட்டி தியானத்தின் உச்ச நிலையை அடையச் செய்பவர் பிள்ளையார். அப்படிப்பட்ட பிள்ளையாரை பிள்ளையார் சதுர்த்தி அன்று சிலைவடிவில் ஆவாகனம் செய்து, வீட்டிலே அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மகிழ்ச்சியோடு கொண்டாடி, ஓரிரண்டு நாட்கள் நம்முடைய வீட்டிலே வைத்திருந்து, மூன்றாம் நாளோ, ஐந்தாம் நாளோ, புனர் பூஜை செய்து அவரை நீரில் கரைத்து விசர்ஜனம் செய்ய வேண்டும். எந்தப் பொருளிலும் பிள்ளையார் உருவம் செய்து படைக்கலாம். கரைப்பதற்கு எளிது என்பதால் களிமண் சிறப்பு. செவ்வாய்க்கு உரியவர் பிள்ளையார். செவ்வாய் பூமியைக் குறிக்கும். எனவே களிமண்ணால் செய்த பிள்ளையாரைப் பிடிப்பது சிறந்தது. இந்த முறையில்லாமல், சிலர் பரம்பரையாக படைக்கக்கூடிய சிலையையோ, விக்ரகத்தையோ, வைத்திருப்பார்கள். அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து படைப்பார்கள். அதுவும் சரியான வழிமுறைதான்.

பிள்ளையாருக்கு நிவேதனங்கள்

பிள்ளையாருக்கு என்னென்ன நிவேதனங்கள் படைக்க வேண்டும் என்பது முக்கியம். எத்தனை நிவேதனங்கள் படைத்தாலும் மோதகம் எனப்படுகின்ற கொழுக்கொட்டையைக் கட்டாயம் படைக்க வேண்டும். இது தவிர என்ன படைக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அவ்வையார் ‘‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்’’ என்று, பால், தேன், வெல்லப்பாகு, பருப்பு, இவைகளைக் கலந்து தருவதாக சொல்கிறார். இந்தக் கலவையானது மோதகம் என்று தெரிகிறது. அதைப்போலவே அருணகிரி நாதரும் தம்முடைய திருப்புகழ் பாடலில் விநாயகருக்கு படைக்க வேண்டியவை பட்டியல் இடுகின்றார். ‘‘கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி’’ என்ற பாடலில், அவருக்கு வைக்க வேண்டிய அப்பம், அவல், பொரிகடலை, கனி வகைகள் என்று பட்டியலிடுகிறார்.

திருப்புகழில் நைவேத்யம்

அருணகிரிநாதர். “பக்கரை விசித்ரமணி” என்ற திருப்புகழ் பாடலில் விநாயகருக்கு படைக்க வேண்டியவை பட்டியல் இடுகின்றார்.

“இக்கவரை நற்கனிகள்

சர்க்கரைப ருப்புடனெய்

எட்பொரிய வற்றுவரைஇளநீர்

வண்டெச்சில்பயறப்பவகை

பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்

வகைதனிமூலம்மிக்கஅடி

சிற்கடலை பட்சணமெனக்கொளொரு

விக்கிநச மர்த்தனெனும்அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடையபெருமாளே.”

“கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பவகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பலவகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்ல அருட் கடலே! கருணை மலையே! வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான சிவபிரான் பெற்றருளிய விநாயகனே! ஒற்றைக் கொம்பு (ஒரு கொம்பு மஹாபாரதம் எழுத உடைத்து விட்டார்) உடைய பெருமாளே!” என்பது பொருள்.

என்ன சொல்லி அர்ச்சனை செய்வது?

சங்கடஹர சதுர்த்திக்கு நிறைய மந்திரங்கள் இருக்கின்றன.

*கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

*விநாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

*அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

எத்தனை பிள்ளையார்?

பிடித்து வைத்தால் பிள்ளையார். கையில் மட்டுமல்ல. மனதில் பிடித்து வைக்க வேண்டும். செய்யும் பொருளினால் அவருக்குப் பல பெயர்கள். மண் பிள்ளையார், சந்தனப் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார், வெல்லப் பிள்ளையார், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். அத்துடன், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து நாம் வழிபட்டு வந்தால், எல்லா வசதி வாய்ப்புகளும் கிட்டுவதோடு, எடுத்த காரியங்களில் வெற்றி வசமாகும். மண்ணை எடுத்து பிள்ளையார் பிடித்து வழிபட்டு வந்தால், நல்ல பதவிகளைப் பெற்று சமூகத்தில் அந்தஸ்தும், வருவாயும் உயர்வது நிச்சயம்.

உப்புப் பிள்ளையார்

விபூதியைக் கொண்டு விநாயகர் பிடித்து வணங்கினால், உடலில் நோய்கள் நீங்கும். வேலையில் பதவி உயர்வுகள் கிட்டும். புற்று மண்ணைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்து வந்தோமெனில், நம் தொழிலில் லாபம் பெருகும். அத்துடன், ஆரோக்கியம் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் கிட்டும். சந்தனத்தைக் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வெல்லத்தில் செய்து வைக்கும் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், எல்லாவித செளபாக்கியமும் கிட்டும். மிகக் குறிப்பாக, நம் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வரச் செய்வார். உப்பு வைத்து பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், எப்பேர்பட்ட எதிரியின் தொல்லையும் விட்டொழியும்வேப்ப மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபடுவதாலும் இத்தகைய பலன்கள் கிட்டும்.

வெள்ளெருக்கு பிள்ளையார்

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்துச் செய்து வழிபட்டு வந்தால், தோஷங்கள் அனைத்தும் அகலும் என்றும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்றும் ஞான நூல்கள் சொல்கின்றன. வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் பட்சத்தில் நம்மிடம் தீய சக்தி ஏதும் அண்டாமல், நல்ல சிந்தனைகள் மேலோங்கி, சொத்துகள் பெருகுவது நிச்சயம். உங்களை வாட்டி வதைக்கும் நோய்களும், கடன்களும் தீர்ந்து உடலும் உள்ளமும் நலம் பெற வாழ வேண்டுமெனில், வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டு வாருங்கள்.

இதையெல்லாம் விட எளிமையானது பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிப்பது. இப்படி பூஜித்தால் எண்ணியது நிறைவேறுவது நிச்சயம். அத்துடன், நோய்களை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார் ‘பசுஞ்சாண பிள்ளையார்’. குறிப்பாக, சித்திரா பௌர்ணமி அன்று இந்தப் பிள்ளையாரை வழிபடுவது நற்பலனைத் தரும். பச்சரிசி மாவினால் பிடித்துச் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயிகளின் விளைச்சல் பெருகுவது நிச்சயம்.

சுக்லாம் பரதரம்...

பிள்ளையார் பூஜைக்கு “சுக்லாம் பரதரம்” என்ற சுலோகத்தைச் சொல்லி பிள்ளையாரை ஆவாகனம் செய்து, மூல மந்திரத்தைச் சொல்லி வழிபடுவார்கள். வைணவத்திலும் இதே மந்திரம் தான். ஆனால் அடுத்த இரண்டு வரி மாறும். அவர்கள் விஸ்வக்சேன ஆராதனம் என்பார்கள். வைணவத்தில் கஜானனர் என்றொரு அமைப்பு உண்டு. தும்பிக்கை ஆழ்வார் என்று பல தலங்களில் மாடங்களில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இனி சுக்லாம் பரதரம் மந்திரம் என்ன என்று பார்ப்போம்.

சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

சுக்லாம் பரதர - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

விஷ்ணு - என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.சசிவர்ண - நிலா போன்ற நிறம் உடையவர். சதுர்புஜ - நான்கு கை கொண்டவர்.

ப்ரஸந்த வதந- மலர்ந்த முகம் உடையவர். அவரை தியானிப்போம் என்பது பொருள்.

விநாயகரின் அறுபடை வீடுகள்

முருகருக்கு அறுபடை வீடுகள் இருப்பது போலவே விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டு.

* திருவண்ணாமலை-அல்லல் போக்கும் விநாயகர்: திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவ்விநாயகரைப் பற்றியே அவ்வையார் அல்லல் போம் வல்வினைப்போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைப்போம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.

* திருமுதுகுன்றம்-ஆழத்து விநாயகர்: திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் ஆழத்து விநாயகர் அருள்புரிகிறார். இவர் நுழைவு  வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.

* திருக்கடவூர்-கள்ள வாரண விநாயகர்: மூன்றாம் படைவீடான திருக்கடவூரில் இவர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.

விநாயகரின் அறுபடை வீடுகள் இரண்டாம் மூன்று

* மதுரை காரிய சித்தி விநாயகர்: மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலுள்ள காரிய சித்தி விநாயகர் நான்காம் படைவீடு விநாயகராக வணங்கப்படுகிறார். அம்மன் சந்நதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் உள்ளார்.

* பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர்: ஐந்தாம் படைவீடு பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலாகும். இரு கரங்களுடன் உள்ள இவர் சிவலிங்கத்தைக் வலதுகையில் தாங்கி சிவபூஜை செய்யும் நிலையில் உள்ளார்.

* திருநரையூர் - பொள்ளாப் பிள்ளையார்: கடலூர் மாவட்டத்தில் சிதம் பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையாரே ஆறாம் படைவீட்டின் அதிபதி ஆவார். சிற்பின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்புவாக தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

தலையில் குட்டிக்கொள்வது ஏன் என்பது தெரியுமா?

நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். விநாயகர் முன்பு பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள். இதை முதலில் அறிமுகப்படுத்தியவர் அகஸ்தியர். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகத்தியர் வடநாட்டில் இருந்து தென் இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த காவிரி நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படிச் செய்ததாகக் கூறினார். தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிபாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

விநாயக விரதங்கள்

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் உண்டு. சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள். சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும், ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷ சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிசேஷமானது.

காரிய சித்தி மாலை

விநாயகருக்கு எத்தனையோ துதி நூல்கள் உண்டு. பாடல்கள் உண்டு. அதில் முக்கியமானது “காரிய சித்தி மாலை”. இந்த காரிய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி வடமொழியில் இயற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள். இவர் எழுதிய விநாயகர் புராண நூலில் உள்ளது காரிய சித்தி மாலை. இதிலுள்ள எட்டு பாடல்களை தினமும் படிப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். கடன், நோய், பகை அண்டாது. செல்வம் சேரும். பதினாறு பேறுகளும் கிடைக்கும். அதில் ஒரு பாடல் இந்த விநாயக சதுர்த்திக்காக கீழே கொடுத்துள்ளோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்

தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்

கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்

தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்

பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.