Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயம் போக்குவார் பைரவர்

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீட்சன பைரவர், சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்களை தோற்றுவித்தார்.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோயிலின் வட கிழக்குப்பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.

கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கருதப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப்பலனும் கிட்டும் என்பது விதியாகும். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலையும், சந்தன அபிஷேகமும் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது.

வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.

எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால், தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது.

மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால், எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால், எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை.

பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.