Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்!

ஒரு அன்பான அப்பா தனது சிறிய மகனுக்குப் மூன்று உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அவற்றை மகனிடம் கொடுத்து, “இவை சாதாரண உண்டியல்கள் அல்ல; உன் வாழ்க்கையை நடத்த கற்றுக் கொடுக்கும் மூன்று நல்ல பாடங்கள்” என்று கூறினார்.

முதல் உண்டியலைக் காட்டி அப்பா சொன்னார்: “இது கடவுளுக்கானது. நாம் பெறும் ஆசீர்வாதங்களில் இருந்து முதலில் கடவுளுக்கு கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். அது நன்றியுள்ள இதயத்தின் அடையாளம்.” பின்னர் இரண்டாவது உண்டியலைக் காட்டி, “இது உன் எதிர்காலத்திற்கானது. இன்று கிடைத்ததை எல்லாம் செலவு செய்யாமல், நாளைக்காக கொஞ்சம் சேமிக்கக் கற்றுக்கொள். அதுவே புத்திசாலித்தனமான வாழ்க்கை” என்றார்.

மூன்றாவது உண்டியலை மகனின் கையில் கொடுத்து, “இது பிறருக்கானது. உலகத்தில் உதவி தேவைப்படுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் பெற்ற ஆசீர்வாதத்தில் இருந்து கொஞ்சம் பகிர்ந்து கொள்வது தேவனுக்குப் பிரியமானது” என்று கூறினார்.

அந்த நாள்முதல் அந்தச் சிறுவன் எப்போது பணம் கிடைத்தாலும் அதை மூன்று பாகங்களாகப் பிரித்தான். தேவனுக்கான பங்கை தேவனுக்காக வைத்தான். எதிர்காலத்திற்கான பங்கை சேமித்தான். மற்றொரு பங்கை உதவி தேவைப்படுகிறவர்களுக்காக வைத்தான்.

ஆண்டுகள் கடந்தன. அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானான். ஒருநாள் தன் அப்பாவிடம் வந்து, “அப்பா, நீங்கள் கொடுத்த அந்த மூன்று உண்டியல்கள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. தேவனுக்குக் கொடுத்தது என் விசுவாசத்தை வளர்த்தது. சேமித்தது என் வாழ்க்கையை பாதுகாத்தது. பிறருக்காக பகிர்ந்தது என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது” என்று சொன்னான்.

அதை கேட்ட அப்பா சிரித்துக் கொண்டு, “மகனே, பணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவன் வாழ்க்கையையும் சரியாக வாழ கற்றுக் கொள்வான்” என்று கூறினார். இறைமக்களே, “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1 தீமோ. 6:10) என்றும் “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.” (லூக். 16:10) என்றும் இறைவேதம் கூறுகிறது.

எனவே, நமது வருமானம் குறைவாயிருந்தாலும் நமது மனம் குறைய வேண்டியதில்லை. கொடுக்க விருப்பம் உள்ள இதயத்தை தேவன் அதிகமாக மதிக்கிறார். தேவனுக்குக் கொடுக்கும் மனமும், தனக்காக சேமிக்கும் புத்தியும், பிறருடன் பகிரும் இதயமும் இருந்தால் நமது வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும்.

- அருள்முனைவர். பெவிஸ்டன்.