Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஷாட நவராத்திரியில் வாராஹியை துதிப்போம்!

ஆஷாட நவராத்திரி என்பது, பொதுவாக ஆனி - ஆடி மாதங்களின் சந்திப்புக் காலத்தில், சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஆஷாட நவராத்–திரி, 15.7.2026 (புதன்கிழமை) தொடங்கி 23.7.2026 (வியாழக்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த தொகுப்பில், ஸ்ரீ வாராஹி அம்மனின் பல ரூபங்களை தியானிப்போம்!

ஆஷாட நவராத்திரியின் சிறப்பு

இந்த நவராத்திரி ``குப்த நவராத்திரி’’ (Gupta Navaratri) என்றும் அழைக்கப்படுகிறது. ``குப்த’’ என்றால் ரகசியமானது அல்லது மறைவானது என்று பொருள். மேலும், பொதுமக்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்படாமல், பெரும்பாலும் சக்தி உபாசகர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகண்டா, வாராஹி, குஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய சக்திதேவியின் பல்வேறு அம்சங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாக ஆஷாட நவராத்திரி கருதப்படுகிறது.

ஆஷாட நவராத்திரியில், வாராஹி வழிபாடு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், தேவி மஹாத்மியம் (துர்க்கா சப்தசதி) பாராயணம், காயத்ரி ஜபம், அன்னதானம் ஆகியவற்றைச் செய்வது சிறப்பான பலன்களை தரும்.இந்தாண்டு ஆஷாட நவராத்திரி, 15.7.2026 (புதன்கிழமை) தொடங்கி 23.7.2026 (வியாழக்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த தொகுப்பில்,ஸ்ரீ வாராஹி அம்மனின் பல ரூபங்களை தியானிப்போம்!

ஆதிவாராஹி

நீலநிறம் கொண்டவள். சந்திரன், சூர்யன், அக்னி மூவரையும் த்ரிநேத்ரங்களாகக் கொண்டவள். தேவர்களாலும், மூவராலும் பணிவிடை செய்யப்படுபவள். சகல மாத்ருகா தேவதைகளும், சதுஷ்ஷஷ்டி கோடி பைரவர்களாலும் பாதுகாக்கப்படுபவள். சர்வாலங்கார பூஷிதையாக பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் சாத்திரங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தி கலப்பை உலக்கையுடன் காட்சி தருபவள்.

லகுவாராஹி எனும் உன்மத்த பைரவி

பக்தர்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் பயத்தை நீக்கியருள்பவள். அவர்களின் எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவரின் அறிவுத்திறனை உன்மத்தமாக்குபவள். வாராஹியின் அங்கதேவி. திருமாலின் ஆத்மசக்தியாய் திகழ்ந்து கடலிலிருந்து பூமியை மூக்கின் நுனியில் சுமந்து வந்த மகாசக்தி. இத்தேவியை மிகப்பெரிய கொம்புகள் கொண்ட சரீரமுடையவளாக தியானிக்க வேண்டும்.

பஞ்சமி வாராஹி

லலிதா திரிபுரசுந்தரியைத் தாங்கும் பஞ்சமூர்த்திகளில் சதாசிவனின் பத்தினி இந்த பஞ்சமி. அவருடன் இணைந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிபவள். சாலோக்யம், சாமிப்யம், சாருப்யம், சாயுஞ்யம், மற்றும் கைவல்யம் எனும் ஐந்து மோட்சம் நிலைகளில் கடைசியதான கைவல்ய நிலையை அருள்பவள் இவளே. பக்தர்களை, தந்தையைப் போல் காப்பவள். மனிதனின் எலும்புக்கு அதிதேவதை இவள். எலும்பு உறுதியாக இருந்தால்தானே அதைச்சுற்றி ரத்தமும் சதையும் நன்றாக நிலைபெறும். பஞ்சமி, பஞ்சபூதேசி என லலிதா ஸஹஸ்ரநாமம் இவளைத் துதிக்கிறது. அபிராமிபட்டரோ, பஞ்சமி பைரவி பாசாங்குசை எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலில் இவளை போற்றி மகிழ்ந்தார்.

அஸ்வாரூடா வாராஹி

அபராஜிதம் எனும் யாராலும் வெல்லமுடியாத குதிரையின் மீதேறி வருபவள் அஸ்வாரூடா வாராஹி. இவள் லலிதாபரமேஸ்வரியின் குதிரைப் படைத்தலைவி. ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தி, மறு கரத்தில் பாசம், மற்றொரு கரத்தில் அங்குசம், மேலுமொரு கரத்தில் சாட்டை ஏந்தி பறக்கும் கூந்தலுடன் கருணை மழை பொழியும் கண்களுடன், சர்வாலங்கார பூஷிதையாய் இவளை தியானம் செய்தால், கிட்டாததுதான் ஏது?

உலக சம்சாரபந்தத்திலிருந்து குடும்பத்தை தர்மமார்க்கத்தில் நடத்த அஸ்வாரூடாவின் ஆசிபெற்று, நான் எனும் மமதையை அழித்து பழக்கப்பட்ட யானையைப் போல் ஸம்பத்கரி தேவியின் அருளால் இந்த உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு, அதை ஆட்டிப்படைக்கும் இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்தி, சத்சங்கத்தாரோடுசேர்ந்து வாராஹி தயவால் கர்மாக்களை ஒழுங்காகச் செய்து, அம்பிகையின் அருளைப் பெற வேண்டும்!

ஸ்வப்ன வாராஹி

கருநிறமேக நிறங்கொண்டவள். முக்கண்கள், வராஹமுகம் கொண்டவள், புன்னகை பூத்த முகத்தினள், கத்தி, கேடயம், பாசாங்குசம் ஏந்தியவள். உலகை உய்விக்க குதிரையில் ஏறி வருபவள் என மந்த்ரமஹோததி எனும் நூலும்,ஸ்ரீ தத்வநிதி எனும் நூலும் இத்தேவியை போற்றிப் பணிகின்றன. இத்தேவியின் மந்திரத்தை குருமூலமாக உபதேசம் பெற்று ஜபித்து வந்தால், அவர்களின் கனவில் தேவி தோன்றி நற்பலன்களை உரைப்பாள்.

கோர்ட், வழக்கு என அலைந்து கொண்டிருப்பவர்கள், இத்தேவியை வழிபட, சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராஜராஜசோழன் எந்த காரியத்தைத் தொடங்கினாலும், வாராஹியை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பது வழக்கம். வாராஹியை வெற்றி தெய்வம் என்றே போற்றினார், அவர்.மேலும் சில வாராஹிகள்...

* காசியில் பாதாள வாராஹியாகவும், திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி வடிவில் மகாவாராஹியாகவும், பள்ளூரில் அரசாலை அம்மனாகவும், தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் ஆதிவாராஹியாகவும், இலுப்பைக்குடியில் சிம்ஹாரூடாவாகவும், பூந்தமல்லியில் மஹிஷாரூடாவாகவும், நார்த்தாமலையில் ஆதிவாராஹியாகவும், தேவி அருள்கிறாள். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

* மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின், தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும் மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் களையும் இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது. கிரி சக்ரம் என்கிற வாராஹி யந்த்ரம்.

* உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாக அருள்கின்றனர். இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.

* ‘கோலாம்பா’ என்றும் வாராஹி தேவியை அழைத்து வழிபடுவோர் உண்டு. பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி, வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார்.

அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல் புரிவதை ‘தேவிஸ்ரீ சஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது. வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும்.

* திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி, வாராஹியின் அம்சமே. இரவு அர்த்தஜாம பூஜையின் போது அகிலாண்டேஸ்வரியின் திருமுகம் வாராஹியைப் போல் தோற்றமளிப்பதாக பக்தர்கள் கூறுவதுண்டு. அஷ்டோத்ரம், சஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகளால் அன்னையை வழிபடலாம். வாராஹி மந்திரத்தில் வார்த்தாலீ, வாராஹி, வராஹமுகீ, அந்தினீ, ருந்தினீ, ஜம்பினீ, மோஹினீ, ஸ்தம்பினீ போன்ற எட்டு தேவதைகளும் அடங்கியுள்ளனர்.

* காசி - திரிபுரபைரவி காட் அருகில் முன்பு பாதாள பைரவி என்று வணங்கப்பட்ட வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களேஸ்வரர் ஆலயம் அருகில் அருளும் வாராஹி, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலய வாராஹி, சென்னை - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலய வாராஹி, ஆந்திரா - பிரொடத்தூர் ராமலிங்கேஸ்வரர் ஆலய வாராஹி, பூரி ஜகன்நாதர் ஆலயம் அருகில் வாராஹி தெருவில் வீற்றிருக்கும் வாராஹி என நாடு நெடுக கோயில் கொண்டு அன்னை வாராஹி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள். ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி, நம் பாதகமலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்!

ந.பரணிகுமார்